க்யோரா 12: தமிழ் மாநாடும் தமிழ்க்கல்வியும்

நியூசிலாந்து தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் மாநாட்டுக்கு நவம்பர் 12 காலையிலேயே புறப்பட்டோம். வெலிங்டனில் அமைந்திருந்த Lower Hutt Events Centreல் மாநாடு நடைபெற்றது. செல்வா அவரது துணைவியார் ஆகியோருடன் நானும் காரில் சென்று இறங்கினேன். செல்வா அவர்கள் நியூசிலாந்தில் ஒரு முக்கிய பிரமுகர் என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், இயக்கப் பொறுப்பாளர்கள் என அனைவரும் அவரை அறிந்து வைத்திருந்தனர். அனைவரிடமும் செல்வா என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனது ‘பேய்ச்சி’ நாவல் தடைசெய்யப்பட்டதை பெரும்பாலோரிடம் பகிர்ந்துகொண்டார். புதிய நாவலான ‘சிகண்டி’ திருநங்கைகளை மையமிட்டு எழுதப்பட்டுள்ளதைக் கூறினார். எனக்கு ஆங்கிலம் மந்தம். எனவே தொடர்ந்து உரையாடுவதற்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.

மாநாடு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியது. பல்வேறு தலைவர்களின் உரை, மரியாதை வழங்கும் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் காலை உணவு வழங்கப்பட்டது. நான் அவ்விடத்தை அந்நியமாக உணர்ந்தேன். அதற்கு முன்னனுபவம்தான் காரணம். இதுபோன்ற விழாக்களில் நான் கலந்துகொண்டு சில வருடங்கள் ஆகின்றன. பலவற்றிலும் கசப்பான அனுபவங்கள்தான். 2011ல் ‘மலேசிய சிங்கப்பூர் உறவுப்பாலம் மாநாட்டில்’ பேச வாய்ப்புக் கிடைத்தபோது எனக்கு முன்னர் பேசிய மொழி ஆய்வாளர் திருமாவளவனின் நேரம் குறைக்கப்பட்டதை என் அரங்கில் கண்டித்தேன். அந்த நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கிய அமைச்சரின் தாமதமான வருகையும் உரையும் திருமாவளவனின் நேரத்தைத் திருடியிருந்தது. ‘ஒரு அறிவார்த்தமான செயல்பாடு இப்படி அதிகாரத்துக்கு வளைந்துபோகாது’ எனும் பாணியில் பேசியது நான் அங்குள்ளவர்களை அறிவற்றவர்கள் எனக்கூறியதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அந்நிகழ்ச்சியால் பல கல்வியாளர்களின் வெறுப்புக்கு ஆளானேன்.

பிஜி நாட்டு தமிழ் பேராளர்களுடன்

அதே ஆண்டில் சிங்கையில் நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எம்.ஏ.நுஃமான், சேரன், தமிழவன் போன்றவர்கள் கட்டுரை வாசிப்பதாக அறிவித்த சிங்கைத் தமிழ் எழுத்தாளர் கழகம் பாடலாசிரியர் வைரமுத்துவையும் நடிகர் சிவகுமாரையும் விழாவுக்குத் தலைமை தாங்க அழைக்க இவர்கள் மூவரும் விலகிக்கொண்டதை கண்டித்து கட்டுரை எழுதினேன். அதோடு சிங்கையிலும் சில எதிரிகளைச் சம்பாதித்துக்கொண்டேன்.

கடைசியாகக் கலந்துகொண்டது 2015ல் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில். அம்மாநாட்டுக்கு வரும் அமைச்சர்கள் பின்னால் வாலைப்பிடித்து வரும் ஒரு கூட்டம் இருந்தது. அமைச்சர்கள் புறப்பட்டதும் அந்த ஒட்டுண்ணிகளும் தாவிக் குதித்து ஓடிவிடும். ஏராளமான அரங்குகள். தகவல்களை தவறாகச் சொல்லும் கல்வியாளர்களிடம் கேள்வி எழுப்ப முடியாத நேரக்கட்டுப்பாடுகள், அபத்தமான ஆய்வுக்கட்டுரைகள் என மன உளைச்சலுக்கு உள்ளானதுதான் மிச்சம். இதைக் ண்டித்து எழுதியபோது பிபிசியில் தொடர்பு கொண்டு என் கருத்தைக் கேட்டறிந்தனர். அக்கருத்துக்கு உலக அளவில் கவனம் கிடைத்தது. அது மலாயாப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மத்தியில் என் மீது கசப்பை உருவாக்கியது.

மலேசிய எழுத்தாளர் சங்கம் முன்னெடுக்கும் விழாக்கள் வேறு மாதிரியானவை. சடங்கான முகஸ்துதிகள், பாராட்டுப் பத்திரங்கள், மாற்றி மாற்றி மாலையும் பொன்னாடையும் அணிவித்துக்கொள்ளல், வெற்றி முழக்கங்கள் என தலைவரை எப்படியாவது சூப்பர் ஸ்டாராகக் காட்ட வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டிருக்கும். இப்படி எல்லாமே வெவ்வேறு விதமான ஆடம்பரங்கள். இந்த ஆடம்பரங்களைக் களைந்து பார்த்தால் ஆழமான தாக்கம் கொடுக்கும் எதுவும் நிகழ்ந்திருக்காது. இவ்வம்சம் என்னை எதிர்வினை ஆற்ற வைக்கும்.

கண்காட்சி நூல்கள்

இந்தச் சடங்குகள் நியூசிலாந்து தமிழ் மாநாட்டில் இடம்பெறவே செய்தன. ஆனால் முறைப்படுத்தப்பட்ட அடிப்படைத் தமிழ்க் கல்வி இல்லாத நியூசிலாந்து போன்ற நாட்டில் இதுபோன்ற விழாக்கள் வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன என்றே புரிந்துகொண்டேன். புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மொழியால் ஒன்றிணைய இதுபோன்ற விழாக்கள் துணை செய்கின்றன. தாய் மொழியைக் கற்கவேண்டிய ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மேலும் அங்குள்ள இந்தியர்களை மட்டுமல்லாது ஆங்கிலேயர்கள், மாவோரிகள் ஆகியோரையும் ஒன்றிணைத்து இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் மாவோரிகளின் பாடலும் ஆடலும் இடம்பெற்றது. இந்தியப் பண்பாட்டு நடனங்களில் ஆங்கிலேயர்களின் முகங்களைக் காண முடிந்தது. இது மலேசியாவில் நிகழ வேண்டுமென நினைத்துக்கொண்டேன். தமிழ் நிகழ்ச்சிகளில் மலாய், சீன எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் அரங்குகளை உருவாக்க வேண்டும்.

தங்கா அரங்கில் நுழைந்தபிறகு நான் கொஞ்சம் இயல்பானேன். எனது நூல்களும் வல்லினம் பதிப்பகத்தில் வந்த ஏனைய சில நூல்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. நான் நூல்கள் எதையும் விற்பனைக்குக் கொண்டு செல்லவில்லை. நியூசிலாந்தில் வசிக்கும் நண்பர் மெய்யப்பன் நடத்தும் நூலகத்துக்கு நன்கொடையாகக் கொடுக்கவும் தங்கா, செல்வா ஆகியோரின் வாசிப்புக்கு வழங்கவும் சில பிரதிகள் எடுத்துச் சென்றேன்.

உணவுக்குப் பின்னர் அரங்குகள் தொடங்கின. முதல் அரங்கு பெண்ணிய சிந்தனை சார்ந்தது. கொஞ்ச நேரத்துக்கு மேல் அவ்வரங்கில் அமர்ந்திருக்க முடியவில்லை. இன்று உலகம் முழுவதும் பெண்ணியம் குறித்து பேசப்படும், ஆராயப்படும் அறிவுச்சூழலுக்கும் அந்த அரங்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தோன்றியது. அதன் பின்னர் மீண்டும் மதிய உணவு தொடங்கியது. தொடர்ந்து நான் கலந்துகொள்ளும் அரங்கு என்பதால் பேசுவதற்குத் தயார் செய்துகொள்ளத் தொடங்கினேன். கடந்த ஒன்றரை நாளில் நான் நியூசிலாந்தில் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் வழியாகவே உரையை அமைத்துக்கொண்டேன். அது அங்கு எவ்வகையான பலனை விளைவிக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால் உண்மையான முயற்சிகள் எதுவும் வீண் போகாது எனும் நம்பிக்கை எனக்கு இருந்ததால் முழுமையான அக்கறையுடன் அதைப் படைத்தேன்.

மேடையில் பேசும் ஒவ்வொருமுறையும் நான் என் ஆரம்பப் பள்ளிக் காலங்களை நினைத்துக்கொள்வேன். அப்போது எனக்கு ஒரு புனைபெயர் இருந்தது. திக்குவாய் நவீன். சொல்லுக்குச் சொல் திக்குவேன். நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும். ஆனால் எனக்கு பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் தீராத ஆசை இருந்தது. நானாக முண்டியடித்து போட்டியில் கலந்துகொள்வேன். சபைக்கூடலில் பிற மாணவர்கள் சிரிக்க சிரிக்க பேசி முடிப்பேன். எனக்கு அவமானத்தின் தாக்கத்தைவிட எப்படியும் பேச்சுப் போட்டியில் பேசிவிட வேண்டும் என்ற வைராக்கியமே அதிகம் இருந்தது. எங்கள் கம்பத்து வீட்டில் அதிகம் பாம்புகள் வரும். பாம்பை அடிக்க முனை வளைந்த கம்பு ஒன்று வைத்திருப்பார்கள். அதை நாற்காலியில் செருகிக்கொண்டு வளைந்த பகுதியை ஒலிப்பெருக்கியென கற்பனை செய்து பேசுவேன். அப்படி ஒரு போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட ரீதியில் நான்காவது பரிசும் எடுத்தேன்.

நான் திக்கும் காரணத்தை நானே மெல்ல மெல்ல ஆராய்ந்து அறிந்தேன். முதலாவது குளிர்ச்சி என் நாக்கை தடிப்பாக்கும். தடிமன், சொல் வெளிப்படுவதைத் தடுக்கும். தேன், காப்பி போன்ற உடலை உஷ்ணமாக்கும் பானங்களால் நாக்கு இலகுத்தன்மைக்கு மாறி பேச வாய்ப்பைக் கொடுத்தது. இது முறையான மருத்துவமா எனத் தெரியவில்லை. ஆனால் நான் பலவும் செய்து எனக்கான மருத்துவத்தைக் கண்டடைந்தேன். மற்றொன்று பதற்றம். பதற்றமடைந்து பேசும்போது மூளை வேகம் கொள்ளும். ஒன்றை விரைவாகச் சொல்ல முண்டியடிக்கும்போது சொற்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும். அப்படி மோதும்போது பெரும்பாலும் திக்கும். எனவே நான் பதற்றமாகப் பேசுவதைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கினேன். ஒரு படைப்பாளிக்கு அது அவ்வளவு எளிதும் அல்ல. மூன்றாவது உயிர் எழுத்துகளும் ‘அகர’ வரிசை எழுத்துகளும் எனக்கு அதிகம் திக்குவதைக் கண்டடைந்தேன். மெல்ல மெல்ல மாற்றுச் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினேன்.

நான் பேசி முடித்தபிறகு மாநாடு குறித்த மனநிலையில் இருந்து முற்றிலும் வெளியேறினேன். பெரும்பாலும் வந்து சந்தித்து உரை நன்றாக இருந்ததாகக் கூறினர். அப்படித்தான் நானும் உணர்ந்தேன். எங்கள் அரங்கில் மகேஷ் பாபு எனும் கல்வியாளர் பேசிய உரை மட்டும் மனதில் கசந்துகொண்டே இருந்தது. சமீபத்தில் நான் செவிமடுத்த ஆக மொண்ணையான உரை அது. நான் தொடர்ந்து அங்கிருப்பது எதிர்வினைகள் ஆற்ற வழிவகுக்கும். நான் அதற்காக வரவில்லை. என் உலகம் அரங்குக்கு வெளியே இருந்தது.

மாநாட்டில் என் உரை: சக்காயும் சடையனும்

நான் மீண்டும் பயணச் சிந்தனைக்கு வந்திருந்தேன். புத்தகங்களை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நானும் தங்காவும் அருகில் இருந்த பூங்காவுக்குச் சென்றோம். பசும்வெளிகளைப் பார்ப்பது மனதுக்கு உற்சாகமாக இருந்தது. எப்போதும் காற்றில் இருக்கும் குளிர் வெயிலுக்கு இதமாக இருந்தது. வாத்துக்கூட்டம் ஒன்று குளங்களில் நீந்திக்கொண்டிருந்தது. அது ஒரு அற்புதமான சூழல்.

தங்கா நான் வேண்டாமென வைத்த லட்டைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார். இப்படி அவர் செய்வது இரண்டாவது முறை. முதல் முறை விமான நிலையத்தில் நான் மிச்சம் வைத்த ஒரு கசப்பேறிய பலகாரம் சாப்பிட்டது நினைவிருக்கலாம். நான் தங்காவிடம் புதிய லட்டு எடுத்திருக்கலாமே என்றேன். “அப்படியல்ல… எனக்கு உணவை வீணடிப்பது பிடிக்காது. எங்காவது யாராவது உணவை மிச்சம் வைத்தால் என் கைகள் பரபரக்கும். உடனே அதை எடுத்துச் சாப்பிட்டுவிடுவேன். உணவு கெட்டுப்போன திகதி என்ன எழுதப்பட்டிருந்தாலும் அது சாப்பிடும் பதம் இருந்தால் சாப்பிட்டுவிடுவேன்… எனக்கு உணவு வீணாவது பிடிக்காது” என்றார்.

மெல்ல பேச்சு நியூசிலாந்தில் எதிர்காலத் தமிழ்ச் சூழல் குறித்து போனது. தங்காவுக்கு நியூசிலாந்தில் தமிழ் நிலைக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அவர் அங்கு தன்னார்வ ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கம்பன் தமிழ் பாடசாலை எனும் பள்ளியில் மூன்றாம் ஆண்டு கற்பிக்கிறார். அவர் வகுப்பில் இருபது மாணவர்கள் உண்டு. பாடசாலை என்பது பள்ளிக்கட்டடமல்ல. வாரம் ஒருமுறை இரண்டு மணிநேரம் மட்டுமே நடத்தப்படும் வகுப்பு.

மாணவர்களின் ஆர்வம் எப்படியுள்ளது எனக்கேட்டேன்.

“தொடக்கத்தில் ஆர்வமாக வரும் மாணவர்கள் மேற்கல்விக்கூடங்களுக்குச் சென்ற பிறகு தமிழ்க்கல்வியைத் தொடர்வதில்லை” என்றார். இது மலேசியாவிலும் உள்ளதுதான். யாரோ சிலரது முனைப்பாலும் முயற்சியாலுமே இங்கு இடைநிலைப்பள்ளியில் தமிழ்ப்பாடம் தொடர்கிறது; தமிழ் இலக்கியப்பாடம் வளர்கிறது.

நியூசிலாந்தில் இந்த வகுப்பை நடத்துவது தன்னார்வத் தொண்டர்கள்தான். எப்படியாவது மொழியை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டுமென நினைப்பவர்கள் இப்பணியை மேற்கொள்கிறார்கள். தங்கள் நேரத்தை இப்பணிக்குத் தருகிறார்கள். இதற்காக எந்தச் சம்பளமும் பெற்றுக்கொள்வதில்லை. வகுப்பை நடத்துவதற்கான மண்டப வாடகைச் செலவு தொகை மட்டுமே மாணவர்களிடம் பெறப்படுகிறது. தலைமை ஆசிரியராக உள்ளவர் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் ஒருவர் வகுப்பை நடத்துகிறார்.

வெலிங்டனில் மட்டும் மூன்று தமிழ்ப்பள்ளிகள் இயங்குவது தங்காவிடம் பேசியபோது தெரிந்தது. இரண்டு தமிழக வம்சாவளிகளை பின்புலமாகக்கொண்ட தமிழ்ப்பள்ளி. மற்றும் ஒன்று இலங்கை வம்சாவளிகளைப் பின்புலமாகக் கொண்ட தமிழ்ப்பள்ளி. இலங்கைப் பள்ளியில் 40 மாணவர்கள் வரை பயில்கின்றனர்.

தமிழ் மாநாட்டை நடத்திய ரவீனை தலைமை ஆசிரியராகக்கொண்ட தமிழ்ப்பள்ளியும் ஒன்று இயங்குகிறது என்றார். அதில் ஏறக்குறைய 25 மாணவர்கள் உள்ளனர். இம்மாநாட்டைவிட ரவீன் செய்யும் பெரும் தமிழ்ப்பணியாக அது தோன்றியது. வெலிங்டனைத் தவிர ஆக்லாந்தில் அதிகம் தமிழ்ப்பள்ளிகள் இயங்குவதாக தங்கா கூறினார். ஆக்லாந்து முத்தமிழ் சங்கம், ஆக்லாந்து தமிழ்ச்சங்கம், பூங்கா எனும் அமைப்பின் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் உள்ளன என நினைவு கூர்ந்தார். சிக்கல் என்னவென்றால் இந்தப் பள்ளிகளின் பாடத்திட்டம் மாறுபடுகிறது என்பதுதான். அரசாங்கத்தின் கண்காணிப்பில் நடத்தப்படாத பள்ளிகளின் சிக்கல் இது. அனைத்துப் பாடத்திட்டமும் ஒரு முகப்படுத்தப்படாது. ஒருமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை ஒட்டியே ஆசிரியர்களுக்கான குறுகியகால பயிற்சி வழங்குதல் சாத்தியம். எனவே அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகிறது.

தங்காவின் பள்ளியில், கலிஃபோர்னியா தமிழ் அகாதமி எனும் உலகத் தமிழ்க் கல்விக் கழக அமைப்பின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வகுப்பு நடக்கிறது. நான் பார்வையிட்டவரை பாட நூல்கள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தன. இதுபோல ஐரோப்பியத் தமிழ்க் கல்விக் கழகமும் ஒரு பாடத்திட்டை உருவாக்கி அதன் வழியும் இங்கு பாடம் நடக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தமிழ் சார்ந்த பாடத்திட்டம் ஒன்றும் உள்ளதாகத் தெரிந்தது. எனவே மூன்று வகை பாடத்திட்டம். மூன்று வகை போதனா முறைகள்.

பூங்காவில் அமர்ந்தபடி யோசித்தேன். இந்தத் தமிழ் மாநாடு பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டுள்ளது. என் ஒருவனுக்கு மட்டும் கிட்டத்தட்ட 10,000 ரிங்கிட் செலவு செய்திருப்பர். ஆனால் நான் மாநாட்டில் பேசியது பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. இந்தத் தொகை நியூசிலாந்து நாட்டில் மொழி வளர பாடுபடுவர்களுக்குச் சென்று சேர்ந்தால் இன்னும் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்குமெனத் தோன்றியது. மெல்ல ஒருவித குற்ற உணர்ச்சி ஆட்கொண்டது.

இப்போது நியூசிலாந்துக்கு தேவை நானோ அல்லது அங்கு வந்து உரக்கத் தமிழ் உன்னத்தை பேசும் பேச்சாளர்களோ அல்ல. சுய விருப்பத்தில், தன்னார்வத்தினால் அடிப்படை தமிழ் அந்நிலத்தில் நிலைக்க வேண்டுமென பாடுபடும் தங்கா போன்ற இளைஞர்கள். அவர்களை ஒன்றிணைக்கும் அமைப்பு. ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒற்றைப் பாடத்திட்டம். அதை போதிக்கும் ஆசிரியர்களுக்கான குறுகிய காலப் பயிற்சிகள். ஆசிரியர்களுக்கான குறைந்த பட்ச ஊக்குவிப்புத்தொகை.

கொஞ்சம் சிரமம்தான். ஆனால் முயன்றுப்பார்த்தால் முடிக்கக் கூடியதுதான்.

  • தொடரும்
(Visited 138 times, 1 visits today)