தங்கா தன் கைப்பேசியில் முதலில் எங்கு போகலாம் எனத் தேடினார். Library Bar எனப் பார்த்தவுடன் “இதென்ன லைப்ரரி” என திகைத்தார். ‘எனக்குத் தெரியாம எவன்டா இங்கன நூலகத்த கட்டுனது’ எனும் அதிர்ச்சியாக இருக்கலாம். அவரது அத்தனை புலன்களும் சுறுசுறுப்பாகின. கேளிக்கைகளுக்குக்கூட இந்த மனிதருக்கு நூலகம் தேவைப்படுகிறதே என அவரைப் பின் தொடர்ந்தேன்.
நாங்கள் Courtenay Place எனும் பகுதிக்குச் சென்றோம். வெலிங்டனின் கேளிக்கை நகரம் அது. ‘நூலக மது விடுதி’ மேல்தளத்தில் இயங்கியது. அளவான ஒளியும் இசையும் அமைப்பும் அவ்விடத்தை அற்புதமாக்கியது. நூல்கள் சுற்றிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் அட்டைகள் மட்டுமே வெளியே தெரிந்ததால் அவை உண்மையான நூல்கள்தானா என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நூல்கள் அங்கு அழகுப்பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. அடுக்கி வைக்கப்பட்டுள்ள பல்வேறு வண்ண நூல்கள் மங்கிய இரவொளியில் அசாதாரண அழகுடன் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இயக்குனர் மிஷ்கின், இப்படியான நூல்கள் அடுக்கப்பட்ட ஓர் அறையில்தான் நண்பர்களுடன் மதுவை ருசிப்பார் எனக்கேள்விப்பட்டுள்ளேன். தெரியவில்லை. அப்படி இருந்தால் அது ரசனைக்குரியதுதான்.
இந்த மது விடுதியில் நூல்களை யாரும் எடுத்துப் பார்க்க முடியாது. அவை காட்சிக்கானவை. நான் அவ்விடத்தைப் படம் எடுத்துக்கொள்ளலாமா என்றபோது தங்கா அனுமதி கேட்க சுற்றும் முற்றும் தேடினார். நான் முன்னரே சொன்னதுபோல தங்கா அசல் நியூசிலாந்து மனிதர். எதையும் முறையான அனுமதி பெற்று நம்பகமாகச் செய்ய வேண்டுமென விரும்புபவர். அவர் அனுமதி கேட்க ஆட்களைத் தேடிக்கொண்டிருந்த இடைவெளியில் நான் சில படங்களைப் பிடித்துக்கொண்டு “புறப்படலாம்” என்றேன்.
பசித்ததால் கொஞ்ச தூரம் நடந்தே சென்று வேறொரு பகுதியில் அமைந்திருந்த ‘இஸ்தானா மலேசியா’ உணவகத்தில் இரவுணவை முடித்தோம். அது மலேசியர்களால் நடத்தப்படும் மலேசிய உணவகம். மலேசியாவில்கூட கிடைக்காத அளவுக்கு சுவையான மீ கோரிங் கிடைத்தது. தங்கா சைவ உணவுக்காரர். அவர் உணவில் எந்த மாமிசத்துண்டு இருந்தாலும் அதை ஏதோ காய்வகை என எண்ணி சாப்பிட்டுவிடும் அளவுக்கு நல்ல சைவர். அவருக்கு மீகூன் பிரட்டலை அறிமுகம் செய்தேன்.
உணவக உரிமையாளர்கள் அன்புடன் உரையாடினர். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். மலேசிய அரசியல் நிலை குறித்த பேச்சு ஓடியது. அவ்வுணகத்தில் மலேசிய உணவுகள் சமைக்க வேலைக்கு ஆட்கள் வேண்டும் என உரிமையாளர்களில் ஒருவரான மேரி கேட்டுக்கொண்டார். எல்லா ஏற்பாடுகளையும் அவர்களே செய்துகொடுப்பர். அப்படி யாருக்காவது நியூசிலாந்து சென்று வேலை செய்ய விருப்பம் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம். உணவை முடித்துக்கொண்டு மீண்டும் Courtenay Place நோக்கி நடந்தோம். இப்போது நல்ல கூட்டம் இருந்தது. மேலும் உயிர்ப்புடன் நகரம் மாறியிருந்தது.
கீழே வரிசையாக மது விடுதிகள். அதற்கேற்ற கூச்சல்கள். ஓரிடத்தில் ஓர் இளம் பெண் எங்களைப் பார்த்து ‘ஹாய்’ எனக் கத்தினாள். நான் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் அவளை கவனிக்கவில்லை. பின்னர் தங்காவிடம் சொல்லி என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தாள். நான் திரும்பியதும் “நான் ஏன் ஹாய் சொல்லவில்லை” எனச் செல்லமாகக் கோபித்துக்கொண்டாள். நான் “ஹாய்” என்றதும் சமாதானமாகி குடிக்கத் தொடங்கினாள். எத்தனை அன்பு. கேளிக்கை ஒரு மனிதனுக்கு ஏன் அவசியமாகிறது? அது ஒரு தற்காலிக கூட்டின்பத்தை ஏற்படுத்துகிறது. நீயும் நானும் அவனும் ஒன்றுபோலவே இருப்பவர்கள் என்ற கனவை உருவாக்குகிறது. அது கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இந்த நடைபாதை, இந்த வீதி, இந்த நகரம் எல்லாம் நமதே எனும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.
இருளுலகம் இதற்கு முற்றிலும் மாறானது. அதில் ஒருவகை அழுத்தம் இருக்கும். பாதுகாப்புணர்ச்சி இருக்கும். கேளிக்கை நகரங்களில் கிடைக்கும் எல்லாமே இருள் உலகங்களிலும் கிடைக்கும் என்றாலும் இரவில் அங்கு சூழ்ந்திருக்கும் அமைதியும் ரகசியத்தன்மையும் பாதுகாப்பின்மையைச் சொல்லிக்கொண்டே இருக்கும். மலேசியாவில் சௌக்கிட் (ஒரு காலத்தில்) இருளுலகம் என்றால் புக்கிட் பிந்தாங் கேளிக்கை நகரம்.
நாங்கள் பரபரப்பு குறைந்த ஓர் சாலை ஓர உணகவத்தில் அமர்ந்து காப்பி ஆர்டர் செய்தோம். அக்கடை அது ஒளி குறைந்த இடத்தில் இருந்தது. தங்காவின் முகம் நிழல்போல தெரிந்தது. என் முகம் அவருக்குத் தெரியாமல்கூட இருந்திருக்க வாய்ப்புண்டு. அங்கு குறைவான இருக்கைகளே இருந்ததால் காப்பி அருந்த வந்த பெண் ஒருத்தி எங்கள் மத்தியில் அமரலாமா எனக்கேட்டாள். நாங்கள் விலகி அவள் அமர இடம் கொடுத்தோம்.
மிக அழகானவள். உதடுகள் எப்போதும் சிரித்ததுபோன்ற அமைப்பு. உயரத்திற்கு ஏற்ற எடை கொண்டவள். அளவான ஒப்பனையுடன் இருந்தாள். “இளைஞர்களின் கேளிக்கை கிளப்புக்கு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
“இல்லை” என்ற தங்கா என்னை ஒரு மலேசியன் என்றும் நான் இந்த நகரின் உற்சாகத்தைப் பார்க்க விரும்பியதால் Courtenay Place -க்கு வந்ததாகவும் கூறினார்.
“அப்படியே இளைஞர்களின் கேளிக்கை கிளப்புகளுக்கும் வந்து பார்க்கலாம். அது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,” என்றாள்.
அப்போதுதான் கவனித்தோம். அந்தப் பகுதியில் மூன்று கிளப்புகள் இருந்தன. Splash Club, Calendar Girls, Dreamgirls என வெளியே பெயர்கள் தொங்கின. நாங்கள் அதன் மத்தியில் இருந்த கடையில்தான் அமர்ந்திருந்தோம். அவள் கனவுக்கன்னி (Dreamgirls) எனும் கிளப்பைச் சேர்ந்தவள் என அறிமுகம் செய்துகொண்டாள்.
“அந்தக் கிளப்பில் நீ என்ன வேலை செய்கிறாய்?” எனக்கேட்டேன்.
“நிர்வாண நடனம் ஆடுகிறேன்” என்றாள் உற்சாகமாக.
தாய்லாந்தில் பல இடங்களில் இப்படியான நடனங்கள் உள்ளன. அதனை ‘டைகர் டான்ஸ்’ என பொதுவாக அழைப்பது வழக்கம். டைகர் டான்ஸ் என்பது புலி வேடம் போட்டுக்கொண்டு ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ’ என அந்தரத்தில் பல்டி அடிப்பதல்ல. அரங்கின் மையத்தில் இருக்கும் நீளுருளை இரும்புகளைப் பிடித்துக்கொண்டு இளம் பெண்கள் சுற்றிச்சுழன்று ஆடுவார்கள். ஆட்டத்தின் முடிவில் அரை நிர்வாணமாகவோ முழு நிர்வாணமாகவோ இருப்பார்கள். பின்னர் நிர்வாண கோலத்தில் நம்முன் வந்து நிற்கும்போது ஆட்டத்தை ரசித்திருந்தால் அவர்கள் காட்டும் இடத்தில் பணத்தை செருக வேண்டும் எனக் கேள்விப்பட்டுள்ளேன். கேள்விப்பட்டதுதான்… நம்பினால் நம்புங்கள்.
இது அப்படியான ஒரு கிளப் என்பதும் அந்தப் பெண் அதில்தான் நடனம் ஆடுகிறாள் என்றும் புரிந்தது. அந்த கிளப்புகளின் ஒவ்வொன்றின் வாசலிலும் அடியாள் தோரணையில் வாட்டச்சாட்டமான ஆண்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்கள். இங்க வம்பெல்லாம் செய்யக்கூடாது எனும் முன்னெச்சரிக்கை. இவளது Dreamgirls விடுதி கொஞ்சம் பழமைத்தன்மையுடன் காட்சியளித்தது.
அவள் எங்களுக்குத் தொடர்ந்து விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கினாள். கோவிட் காலகட்டத்துக்கு முன்னர் இதுபோன்ற விடுதிகளில் மாலை 6 முதல் 9 வரை இலவசமாக நுழையலாம். இப்போது அப்படியான சலுகைகள் இல்லை. ஒவ்வொரு விடுதிக்குள்ளும் நுழைய வேண்டுமானால் தலைக்கு இருபது முதல் நாற்பது டாலர் வரை செலுத்த வேண்டும். மேலும் உள்ளே கௌண்டரில் டாலரைக் கொடுத்து டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம். நடனம் பிடித்திருந்தால் நடன நங்கைகள் காட்டும் இடத்தில் செருகலாம்.
“எங்கள் விடுதியின் சிறப்பே இதில் நடனமாடும் பெண்கள் யாரும் பணம் கொடுக்கச்சொல்லி வாடிக்கையாளர்களை வற்புறுத்தமாட்டார்கள். கண்ணியமாக நடந்துகொள்வார்கள்,” என்றாள். தாய்லாந்துகளில் அப்படியில்லை. பணம் கொடுக்காதபோது நிர்வாணப் பெண்கள் சில சில்மிஷங்கள் செய்து வாடிக்கையாளர்களை தர்ம சங்கடமாக்கிவிடுவார்கள். பணம் கொடுக்கும்வரை அது தொடரும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். கேள்விப்பட்டதுதான். இதையும் நம்பினால் நம்புங்கள்.
அவள் பெயரைக் கேட்டேன்.
“ஏஞ்சல்” என்றாள். தேவதை என்பது அவளுக்குப் பொருத்தமான பெயர்தான். பொதுவாக நிர்வாண நடனம் ஆடுபவர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள், உடம்புப்பிடி நிலையங்களில் விசேஷ சேவைகளை இணைப்பவர்கள் நினைவுக்கு எளிதான புனைபெயரை பெயரை வைத்துக்கொள்வதுண்டு. அது அவர்களைப் பற்றிய அவர்கள் ஆழ்மனதின் படிமமாக இருக்கலாம்.
“உங்களுக்கு இந்தத் தொழில் பிடித்துள்ளதா?” எனத் தங்கா கேட்டார்.
“ஆமாம். இந்தத் தொழிலால் எனக்கு மேடை பயம் இல்லாமல் போய்விட்டது. நான் ஒரு நாடக ஆசிரியர். எனவே எனக்கு மேடை பயம் இல்லாமல் இருப்பது அவசியம்,” என்றாள்.
தங்காவுக்கு மீண்டும் அனைத்து புலன்களும் சுறுசுறுப்பாகின. நூலகம், இலக்கியம் என்றால் அவர் அப்படி ஆகிவிடுவார். “நீங்கள் எழுத்தாளரா?” எனக்கேட்டவர் என்னையும் எழுத்தாளன் என அறிமுகம் செய்து வைத்தார்.
அவள் உற்சாகமானாள். தான் இதற்கு முன் ‘ஸ்டான்ட் ஆஃப் காமடி’ (stand up comedy) செய்துகொண்டிருந்ததாகவும் தற்போது நண்பருடன் இணைந்து நகைச்சுவை நாடகம் எழுதுவதாகவும் கூறினாள்.
தங்கா மலேசியாவில் நடத்தப்படப்போகும் ஷேக்ஸ்பியர் நாடகம் குறித்தும் GTLF குறித்தும் அவளிடம் விரிவாக விவரித்தார். அவள் உற்சாகமாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏஞ்சலுக்கு எங்களை வாடிக்கையாளராக அழைத்துச் செல்லும் எண்ணமோ எங்களிடம் பணம் கரக்கும் எண்ணமோ சுத்தமாக இல்லை என்பது அவள் பேசுவதிலேயே புரிந்தது. அவள் உரையாடலை விரும்பக்கூடியவளாக இருந்தாள்.
“எனக்கு இந்த நடனம் பொழுதுபோக்குதான். நான் நகைச்சுவை மேடை நாடகத்தைத்தான் அதிகம் விரும்புகிறேன்,” என்றாள்.
“இங்கு வேலை செய்வதை நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்களா?” எனக்கேட்டேன்.
“ஆம். நியூசிலாந்தில் யாரும் யாரையும் அனுமதியின்றி சீண்டுவதில்லை. அவர்களுக்கு எங்கள் உடலைப் பார்க்க அனுமதி உண்டு. ஆனால் தொடுவதற்கான அனுமதி நாங்கள் கொடுத்தால் மட்டுமே சாத்தியம். சாதாரணமாக யாரும் எல்லை மீறுவதில்லை… குறிப்பாக நியூசிலாந்தர்கள்,” என்றாள்.
இதுபற்றி தங்கா என்னிடம் சொல்லியிருக்கிறார். நியூசிலாந்து இடைநிலைப்பள்ளிகளிலேயே ஒருவருக்கு இருக்கவேண்டிய புலன் கட்டுப்பாடுகள் போதிக்கப்படுகின்றன. ஒரு பெண் தன் கரங்களைப் பிடிக்க அனுமதிக்கிறாள் என்றால் கரங்களை மட்டுமே பிடிக்க அனுமதிக்கிறாள் எனப் பொருள். அதை முத்தமிடுவதற்கான அனுமதியாக ஒருவன் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுபோல முத்தம் என்பது கூடலுக்கான அனுமதி இல்லை. எனக்கென்னவோ இந்த வகை போதனையில் அவ்வளவாக உடன்பாடு இல்லை. கூடலில் அனுமதி என்பது சொல்லால் மட்டுமே வழங்கப்படுவதா என்ன? சரி நமக்கெதற்கு வம்பு.
கொஞ்ச நேரத்தில் ஏஞ்சலைத் தேடிக்கொண்டு மற்றுமொரு பெண் வந்து அமர்ந்தாள். அடுத்த சில நிமிடங்களில் ஏஞ்சலின் நடனம் தொடங்கப்பட போவதால் இருக்கலாம். தமிழ் முகம். விசாரித்ததில் தன் பெயர் சஹாரா என்றும் பிஜி நாட்டு இந்தியர் என்றும் அறிமுகம் செய்துகொண்டாள். நீளமான கரிய சிகை. தெற்றுப்பல்லுடன் அழகாகச் சிரித்தாள். அவரும் அங்கு நடனமாடக்கூடியவள் எனத் தெரிந்தது. இந்தியச் சாயல் கொண்ட பெண் நடனமாடுவது கொஞ்சம் கிளர்ச்சியளிப்பதாகவே இருந்தது. எனக்கு பாரதியார் வழியாகத்தான் பிஜி இந்தியர்கள் அறிமுகம். மலேசியாவில் இருந்து ரப்பர் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப்போல கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய பிரிட்டிஷ்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். பிஜி கரும்பு தோட்டங்களில் இந்தியர்கள் படும் அவதியை ‘கரும்புத்தோட்டத்திலே’ எனும் கவிதையில் பாரதியார் பாடியிருப்பார்.
கவிதையின் முடிவில் அவர் கதறி அழும் குரல் எவருக்கும் கேட்கும்.
நெஞ்சம் குமுறுகிறார் – கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் – துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே – அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? – ஹே
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி!
என் முன் அமர்ந்துள்ள பெண்ணுக்கு தன் வம்சாவளியின் மூத்தகுடி பெண்களுக்காக ஒரு தமிழ்க் கவிஞன் கதறி அழுதது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சஹாரா இவ்வகை ஆடலில் சாகசம் புரிபவள் என்றும் கம்பியில் ஏறி உச்சமான உயரம் சென்று சுழன்று சறுக்கிக்கொண்டே வருபவள் என்றும் ஏஞ்சல் கூறினாள்.
அது ஆபத்தானது என அறிவேன். அந்த இரும்புகள் வழுக்கும் தன்மை கொண்டவை. கைப்பிடி விட்டால் கடுமையான காயங்கள் விளையும். அதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் உண்டா எனக்கேட்டார் தங்கா. “இங்கு முதலுதவி பெட்டி என ஒன்று இருக்கிறதா என்றுக்கூட எங்களுக்குத் தெரியாது,” என சஹாரா சிரித்தாள். அழகான சிரிப்பு.
ஏஞ்சல் குறைவான ஆடைகளையே உடுத்தியிருந்தாள். எனவே அவள் இடுப்பில் குத்தப்பட்டிருந்த பச்சையைக் காண முடிந்தது. அது குறித்து கேட்டேன்.
“பொதுவாக இப்படி இடுப்பில் பச்சை குத்திக்கொள்பவர்களை யாருடனும் உறவு வைத்துக்கொள்ளும் பெண் என அடையாளப்படுத்திக்கொள்வர். இது நான் அழகுக்காகக் குத்திக்கொண்டேன். எனக்கு இந்த பச்சைக் குத்தலில் உள்ள அர்த்தங்களில் நம்பிக்கையில்லை. அது அவரவர் அழகுணர்ச்சியையும் விருப்பத்தையும் சார்ந்தது,” என்றாள்.
“உன்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா? ஒரு எழுத்தாளருடன் எடுத்துக்கொண்டதாய் நினைவில் வைத்துக்கொள்வேன்,” என்றேன்.
அவள் நிதானமாக மறுத்தாள். “நான் மறுக்கும் காரணத்தை நீ புரிந்துகொள்வாய் என நினைக்கிறேன். என் தாத்தா கிருஸ்துவ மத பிடிமானம் கொண்டவர். ஒருமுறை என் பெற்றோரிடம் நான் இரவு விடுதியில் நிர்வாண நடனம் ஆடுவதைக் கூறினேன். அது என் தாத்தாவின் காதுகளுக்குச் சென்றுவிட்டது. அவர்கள் என்னை அங்கீகரிக்கவில்லை. ஆனால் எனக்குத்தெரியும்… என் தாத்தா, அப்பா இதுபோன்ற விடுதிகளுக்குச் செல்பவர்கள்தான். அவர்களுக்கு தம் குடும்பத்தில் ஒருத்தி ஆடக்கூடாது,” என்றாள்.
“அதை நீ சங்கடமாக உணர்கிறாயா?” என்றேன்.
“இல்லை. இது ஒரு தொழில். இந்தத் தொழில் செய்யும் நான் ஒரு நாடக ஆசிரியை. இதுபோல மாணவிகள், வணிகர்கள், ஓவியர்கள் என யாரும் இங்கு இருக்கலாம். இந்த கிளப்புக்கு வெளியே சென்றால் அதுதான் நாங்கள். இங்கு ஆடும் சில மணி நேரங்களை வைத்து எங்களை அளவிடுவது சரியில்லை அல்லவா” என்றாள்.
‘சரிதான்’ எனத் தலையை ஆட்டிக்கொண்டோம்.
“இந்தக் கிளப்பில் நடனமாட ஒருவருக்கு என்னத் தகுதி வேண்டும்?” எனத் தங்கா கேட்டார்.
“ஒன்றும் இல்லை. வருகையாளர்களின் தேவை என்ன என்பதை அறிந்து உடலை ஒரு கருவியாக மாற்ற வேண்டும். பின்னர் அது பழக்கமாகிவிடும்,” என்றாள்.
“அப்படி நிர்வாணமாக நடனமாடும்போது உன் மனதில் என்ன இருக்கும்?” என்றேன்.
“ஒன்றும் இருக்காது. இங்கு பாடலுக்கு ஏற்ப உடலை அசைக்கிறோம். ஒரு அசைவு முடிந்து மற்றது என அடுக்குமுறை உண்டு. அந்த அசைவுகளை அவரவர் கற்பனைக்கு ஏற்ப கூட்டிக்குறைக்கிறோம். எனவே எங்கள் மூளையில் அந்த இசையும் அதற்கேற்ற அசைவுகளுமே இருக்கும்” என்றாள்.
“இந்த நடனத்தில் உன்னுடைய சிறப்பு என்ன?” என்றேன்.
“இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புகள் உள்ளன. சிலர் உடல்களை முடிந்தமட்டும் வளைக்கக் கூடியவர்கள். கால்களை மடக்கி தோள்களில் போட்டுக்கொள்வர். சிலர் கம்பிகளில் நெடுநேரம் தொங்கி சாகசம் செய்வர். நான் சிறப்பாக twerking செய்வேன்,” என்றாள். நான் அவள் செய்வதை கற்பனையில் பார்த்துக்கொண்டேன்.
“நீ இங்கு வேலை செய்வதற்கான கட்டாயங்கள் உண்டா? உங்களை யாரேனும் கண்காணித்து கட்டாயப்படுத்தக்கூடுமா?” என தங்கா கேட்டார்.
“இல்லை… அப்படி எதுவும் இல்லை. எப்போது விரும்பினாலும் நான் என் மேல் கோட்டை அணிந்து வெளியேறிவிடுவேன். இங்கு எந்த ஒப்பந்தமும் இல்லை,” என்றாள் சஹாரா.
அவள் ஆடக்கூடிய நேரம் வந்தது. கொஞ்சம் பரபரப்பாக இருந்தாள். எங்களுடன் தொடர்ந்து பேச விரும்பினாள் எனத் தெரிந்தது.
“நீங்கள் வாய்ப்பிருந்தால் உள்ளே வரலாம். நடனத்தைப் பார்க்கலாம். மேல்தளத்தில் மேலும் சிலவகை அறைகள் உள்ளன. அது பாலியல் இன்பத்துக்கான அறைகள். அதில் சேவையாற்றும் பெண்கள் வேறு. அந்த அறைகளை நீங்கள் பார்வையிடலாம். ஒரு அறை முழுவதும் கண்ணாடியால் ஆனது. நீங்கள் முயங்குவதை பல்வேறு கோணங்களில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இன்னொரு அறையில் நீங்கள் விரும்பும் பெண்ணைக் கட்டி வைத்து அங்குள்ள பொருட்களால் சீண்டி விளையாடலாம். ஒருவகையில் பாவனையாகத் துன்புறுத்துதல் என கற்பனை செய்துக்கொள். இன்னொரு அறையில் ஜகூசி, மசாஜ் வசதிகள் இருக்கும். இப்படி ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு விதம். காமத்துக்கும் கேளிக்கைகளுக்கும் எல்லைகள் ஏது?” எனச்சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே பார்வையில் இருந்து மறைந்தாள்.
நாங்கள் அவள் பின்னால் சென்றோமா தொடர்ந்து வீதிகளில் திரிந்தோமா என்பதை இதை வாசிப்பவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். கற்பனைக்கும் எல்லைகள் இல்லை அல்லவா.