தங்காவுடன் சைக்கிளில் வெலிங்டனைச் சுற்றிய அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதது. மென்மழை தூறிக்கொண்டே இருந்தது. வாகனங்களின் இரைச்சலற்ற சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்துகொண்டிருந்தது. எனக்குள் உற்சாகம் ஊறிக்கொண்டே இருந்தது.
சைக்கிளை வெலிங்டன் இரயில் நிலையம் அருகில் விட்டோம். அங்கிருந்த காந்தி சிலையைப் பார்ப்பதாகத் திட்டம். அது ஒரு வெண்கலச்சிலை. 2007ல் இந்திய அரசால் நியூசிலாந்துக்கு வழங்கப்பட்டது. காந்தி ரயிலிலும், பொதுப் போக்குவரத்திலும் பயணிக்க விரும்புபவராக இருந்ததால் அச்சிலை வெலிங்டன் ரயில் நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டது. நாங்கள் சென்றபோது காந்திக்கு யாரோ முகக்கவரி அணிந்து விட்டது தெரிந்தது. நியூசிலாந்தில் கோவிட் பயம் இல்லாததால் யாரும் அதை அணிவதில்லை. எனவே நான் காந்தியின் முகக்கவரியை கலட்டி அவர் நாசியில் குளிர் காற்று ஏற வகை செய்தேன்.
பயணம் தொடர்ந்தது. தங்கா கடலோர சாலைக்கு அழைத்துச் சென்றார்.
ஓர் இடத்தில் சாலையின் ஓரம் அமைக்கப்பட்டிருந்த ஏணிப்படிக்கட்டில் ஏறி கடலைப் பார்க்கலாமா என்றார். ஒரு சமயம் ஒருவர் மட்டுமே ஏறக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டிருந்த இரும்பு படிக்கட்டு அது. நான் முதலில் ஏறினேன். தங்கா பின்தொடர்ந்தார். தொடமுடியாத அளவுக்கு இரும்புப்பிடி ஜில்லிட்டிருந்தது. முதலில் அது கடலை உயரத்திலிருந்து பார்க்க செய்யப்பட்ட ஏற்பாடு என்றே நான் நினைத்தேன். தங்கா சொன்னபிறகுதான் அது உயரத்தில் இருந்து கடலில் குதித்து நீந்தும் இடம் எனப் புரிந்தது.
“குதிக்கிறீர்களா?” என்றார் சிரித்தபடி. அது என்னிடம் “சாகிறீர்களா?” எனக் கேட்பதற்குச் சமம்.
“என்னுடைய ஆசையே உங்கள கடல்ல நீந்த வச்சி அழகு பாக்குறதுதான்,” என்றார்.
நீர் பாதுகாப்பாக தோள்பட்டைவரை இருக்கும் ஆழத்தில் நீந்துவதுபோலவே கைகளை அலையவிட்டு மணலில் நடந்துகொண்டிருப்பவன் நான். எனக்கு நீச்சல் வராது. அதுவும் நியூசிலாந்து கடல், மழையை ஏப்பம்விட்டு மிரட்டியது.
“ஒன்னும் பயம் வேணாம். நீங்க மூழ்கினாகூட என்னால காப்பாத்திட முடியும்,” என்றார் சாதாரணமாக. தங்காவுக்கு கடல் நீச்சல் மிகச்சாதாரணம் எனப்புரிந்தது. ஆனால் அவர் தன் திறமையைச் சோதித்துக்கொள்ள நான் உயிரைப் பணயம் வைக்க முடியுமா? கால்களில் மெல்ல அச்சம் பீடித்தது. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் என்னைத் தள்ளிவிட்டு ‘இதுவும் சுற்றுலா பாக்கேஜில் உண்டு’ எனச் சொன்னாலும் சொல்வார் எனத் தோன்றியது. கிடுகிடுவென கீழே இறங்கினேன்.
அதற்குப் பிறகு தங்கா பேசியதெல்லாம் கடலில் குதிப்பது பற்றியே இருந்தது. “தோ அங்க குதிச்சி… அப்படியே நீச்சல் அடிச்சி… இங்க வந்து ஏறுவேன்,” என ஒவ்வொரு இடமாகக் காட்டிக்கொண்டிருந்தார். கூடவே என்னை எங்கு எல்லாம் நீச்சல் அடிக்க வைக்க ஆசைப்பட்டார் என்பதையும் காட்டினார். கடல் அலைகள் நரகத்தின் தீக்குழம்புபோல கொப்பளித்து தன் உயிர் பசி மிக்க நுனி நாக்கை ஆங்காங்கு நீட்டுவதுபோல உணர்ந்தேன்.
ஓரிடம் வந்ததும் ஒரு நிர்வாண மனிதன் கடலில் சரிந்து விழுவதற்கு முன்பான பாவனையில் நிற்பதைப் பார்த்தேன். தங்கா தரையில் சைக்கிளை படுக்க வைக்கச்சொன்னார். அந்த மனிதன் எப்படி சாய்கிறாரோ அதேபோல பாவனை செய்து கடலில் குதிப்பதை படம் பிடித்துக்கொள்வது அங்கு வழக்கமாம். தானும் அப்படிச் செய்திருப்பதாகச் சொன்னார். நான் எட்டிப் பார்த்தேன். அந்த மனிதன் நிர்வாணமாக இருந்தாலும் அவனது குறி ஒடுங்கி தொடையிடுக்கில் இருந்தது. கடலில் குதிப்பவர்களால் மட்டுமே பார்க்கக்கூடிய மறைவிடத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தது. அதை பார்க்கவெல்லாம் நான் கடலில் குதிக்க முடியாது என்பதால் பயணத்தைத் தொடர்ந்தேன்.
தங்கவேலைப் புரிந்துகொள்ள இந்தச் சைக்கிள் பயணம் உதவியது. அவர் உண்மையில் ஒரு சாகசப் பிரியர். பல நாடுகளுக்குத் தனியனாகப் பயணம் செய்பவர். எல்லாவற்றையும் தாண்டி அவர் பனிச்சறுக்கிலும் ஈடுபடுபவர் எனத்தெரிந்தபோது, நான் அவரிடம் சைக்கிள் ஓட்டுவதற்கு காட்டிய தயக்கத்தை எண்ணிக் கூச்சம் அடைந்தேன். அவர் பனி சறுக்கிய அனுபவங்கள் குறித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் சாதாரணமாகவே சொன்னார். அதெல்லாம் யாரும் செய்யலாம்; எளிது என்பதுபோல. நான் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தையே ஒரு பாகம் எழுதுகிறேன் என்றால் பனியில் சறுக்கி விளையாடினால் ஒரு புத்தகம்கூட எழுதுவேன்.
தொடர்ந்து கடல் ஓரமாக வெவ்வேறு இடங்களில் நின்றோம். ஓரிடத்தில் குறுகலான குதி பலகையில் மெல்ல நகர்ந்து நிற்க முயன்றேன். காற்று தள்ளியதும் ஓடி வந்துவிட்டேன். தங்கா சாதாரணமாக அதன் விளிம்புவரை சென்று நின்றார். அவருக்கு எல்லாமே சாதாரணமாக இருந்தது. நேரம் ஆக ஆக கண்ணினுள் குளிர் புகுந்து வலித்தது. தங்கா வைத்திருந்த நீல நிற கண்ணாடியை அணிந்துகொண்டேன். அவர் முகத்துக்கு மட்டுமே அது நன்றாக இருந்தது தாமதமாகவே புரிந்தது.
ஒரு சமயம் திடீர் என சைக்கிளை ஓர் ஓரமாகச் சாய்த்து நிறுத்திவிட்டு ஐந்தடி உயரச் சுவரில் எகிறி குதித்து அமர்ந்தார். நானும் எதையும் யோசிக்காமல் அப்படியே செய்தேன். உடனடியாக அப்படிச் செய்ய முடிந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தங்கா என்னிடமிருந்து மெல்ல மெல்ல என் இளமையின் துள்ளலை மீட்டுக்கொண்டிருந்தார். அதற்கேற்பவே என் உடலும் மனமும் இயங்கியது. அவ்விடம் சிறிய படகுகளை நிறுத்துவதற்காகச் செய்யப்பட்டிருக்கும் பகுதியின் கூரை என ஏறிய பிறகுதான் தெரிந்தது. நீள் முக்கோணக் கூரைகள் வரிசையாகத் தெரிந்தன. அதில் ஒன்றில் அமர்ந்தேன்.
தங்கா என்னை ஜெயமோகன் வழியாகவே அறிவார். அவர் முதன்மையாக ஜெயமோகனின் வாசகர். எனக்குத் தெரிந்து மலேசியாவுக்கு வெளியில் உள்ள என் வாசகர்கள் பெரும்பாலோர் ஜெயமோகன் வழியாகவே என்னை அடையாளம் கண்டவர்கள். பின்னர் வாசித்து பின் தொடர்பவர்கள். இதுபோல பல எழுத்தாளர்கள் ஜெயமோகன் வழியாகவே வெளி உலகுக்கு அறிமுகமானவர்கள் உண்டு. ஆனால் அதைச் சொல்வதில் தயக்கம் காட்டுபவர்களையும் சந்தித்துள்ளேன். இதை முழுமையான நன்றியுணர்ச்சியுடன் என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னவர் யுவன். இருவரும் ஒரே காலத்தில் எழுத வந்தவர்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் தன் சக வயது படைப்பாளிதான் தன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்ததை சொல்வது ஆச்சரியம். நான் அப்படி ஒருவரை பார்த்தது இல்லை என்றே சொல்லலாம்.
தங்கா இவ்வருடம் நடக்கும் விஷ்ணுபுரம் விழாவுக்குச் செல்லும் திட்டத்தைக் கூறினார். ஜெயமோகனை முதன்முறையாகச் சந்திக்கப்போகும் தன் ஆர்வத்தைக் கூறினார். அவசியம் ஜெயமோகனிடம் பேசச் சொன்னேன். தங்காவிடமிருந்து சரளமாக வெளிப்படும் சொல்லாளுமையும் கருத்தை கூர்மையாக முன்வைக்கும் அறிவுத்திறனும் ஜெயமோகனை நிச்சயம் கவரும். அவர் தேர்ந்த வாசகர் என ஓரிரு நிமிடத்தில் அறிந்துகொள்வார். தங்கா எழுத விஷ்ணுபுரம் விழா காரணியாக அமையலாம் எனத்தோன்றியது. நியூசிலாந்தில் இருந்து முதன்முறையாக ஒரு நவீன எழுத்தாளன் உருவாகி வருவதும் இன்னொரு பண்பாட்டை ஆழமாக அறிந்த அவன் எழுதப்போகும் புனைவுகள் தமிழ் இலக்கியத்தில் புதுமைகள் செய்யப்போவதும் மனதில் காட்சிகளாக ஓடின.
சைக்கிளை மிதித்துக்கொண்டே தங்கா என்னை தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த காலத்தில் தங்கா மறுபடி மறுபடி காட்டிய இடங்கள் நூலகங்கள்தான். அவர் அதிகம் செல்லும் இடமும் அதுவாக இருந்தது. குறிப்பாக குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள நூல்களையும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பிரத்தியேக பகுதிகளையும் அங்கு பார்க்க முடிந்தது.
நான் வெளிநாடுகளுக்குச் சென்றால் நண்பர்களுக்கு அவ்வூரில் பிரசித்தி பெற்ற விஸ்கி வகைகளை வாங்கி வருவது வழக்கம். அப்படி ஏதேனும் நியூசிலாந்தில் உண்டா எனக்கேட்டேன். நியூசிலாந்தில் பியர் வகைகள்தான் பிரபலம் என்றார் தங்கா. குடிசைத் தொழில்போல பலரும் தங்கள் ரசனைக்கு ஏற்ப பியர் தயாரிப்பர் என்றும் அந்தச் சுவை மக்களுக்குப் பிடித்துப்போனால் பெரிய அளவில் அவற்றை ஏற்றுமதி செய்வதும் உண்டு என்றார். மற்றபடி அவரவர் தங்கள் ரசனை அடிப்படையில் உருவாக்கிய ஏராளமான பியர் வகைகள் நியூசிலாந்தில் உண்டு என ஒரு பேரங்காடிக்கு அழைத்துச் சென்று அதன் வகைமைகளைக் காட்டினார். அப்போது விமான நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. என் பெட்டி கிடைத்துவிட்டதாம்.
உடனடியாக சைக்கிளை வீட்டில் விட்டுவிட்டு, காரில் விமான நிலையம் புறப்பட்டோம். அவசரத்தில் ரசீதைக் கொண்டு செல்ல மறந்திருந்தோம். ஆனால் எந்தச் சிக்கலும் இல்லை. எந்தக் காகித ஆதாரமும் இல்லாமல் சொற்களை நம்பி பெட்டியை ஒப்படைத்தனர். காரில் சென்று காகிதத்தை எடுத்து வரட்டுமா எனக் கேட்டதற்கும் வேண்டாம் என்றனர். தங்கா சொன்னது உண்மைதான். நியூசிலாந்தில் ஒருவரை ஒருவர் நம்புகின்றனர். யாரும் இன்னொருவரை ஏமாற்ற அவசியம் இல்லை என்பதே அவர்கள் மனப்போக்காக உள்ளது.
பெட்டியை காரில் ஏற்றியபிறகு நிம்மதியாக இருந்தது. இரவு நெருங்கிக்கொண்டிருந்தது. எந்த நாடு சென்றாலும் அங்கு இரவு மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்ப்பது என் வழக்கம். உயிர்ப்பு எந்த நாட்டிலும் அங்குள்ள இளைஞர்களால் உருவாவது. நியூசிலாந்து இளமையின் கோட்டை; எனவே கேளிக்கைகளுக்குப் பஞ்சம் இருக்காது என்பது என் அவதானிப்பு. அதை காண்பது நகரத்தின் மற்றுமொரு முகத்தைக் காண்பதுபோல. தங்காவிடம் அப்படியான இரவுக் கேளிக்கை நகரங்கள் உண்டா எனக்கேட்டேன்.
மென் சிரிப்புடன் ‘உண்டு’ என்றார்.
எங்கள் இருவருக்கும் ஒளிபொருந்திய இரு சிவப்பு நிற மாயக்கொம்புகள் மெல்ல மெல்ல முளைத்தன.