க்யோரா 9: ‘வைத்தாங்கி’ ஒப்பந்தம்

கொஞ்ச நேரம் ‘தி பாப்பா’ அருங்காட்சியகத்தில் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருந்த மாவோரி கண்காட்சி தளத்தில் அமர்ந்தோம். அத்தளத்தில் இருந்த சிறிய இடைவெளிகள் வழியாக மாவோரிகளின் பொருள்களைப் பார்க்க முடிந்தது. உண்மையில் ஏமாற்றம்தான். மெல்ல நடந்து வெளிச்சுவரில் பிரம்மாண்டமாகத் தொங்கிய மாதிரி ‘வைத்தாங்கி’ ஒப்பந்தத்தைப் பார்த்தேன்.

‘வைத்தாங்கி’ ஒப்பந்தம் என்பது நியூசிலாந்து உருவான ஆவணம். இத்தீவுக்கூட்டம் ஒரு நாடாக நிறுவப்பட்ட ஆவணம் எனலாம். வடக்குத் தீவிலுள்ள வைத்தாங்கி எனும் இடத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதால் இதற்கு இப்பெயர். இந்த ஆவணத்தின்படி நியூசிலாந்துக்கான பிரித்தானிய ஆளுனர் ஒருவரை நியமிக்கவும், மாவோரிகளின் நிலங்களுக்கு பிரித்தானியர்களுக்கு உரிமை வழங்கவும் ஒப்பந்தங்கள் செய்துக்கொள்ளப்பட்டன. மேலும் நியூசிலாந்து பிரிட்டிஷ் காலனியாவதற்கான விதிமுறைகளை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது. பக்கவகிடுகள் கிழிந்த அந்த ஒப்பந்தத்தின் மாதிரி வடிவம்தான் என் முன்னே இருந்தது. நான் அந்த பிரமாண்ட வடிவமைப்பைப் பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தேன்.

சைக்கிள் பயணத்தில்

மழை விடுவதாக இல்லை. மழை நிற்க காத்திருந்தால் திட்டங்கள் அனைத்தும் பாழ்படும் என தங்கா கருதியதால், மழையிலேயே சைக்கிளை எடுத்தோம். பயணத்தைத் தொடரலாம் என முடிவெடுத்தோம். எனக்கு இப்போது சைக்கிளின் மீது கொஞ்சம் பிடிப்பு வந்திருந்தது. தயக்கமெல்லாம் நீங்கி, உள்ளூர சைக்கிள் ஓட்டும் ஆசை துளிர்த்திருந்தது. மெல்ல சைக்கிளை மிதித்தபடி தங்காவை பின் தொடர்ந்தேன். குளிரில் விரல்கள் வலியெடுத்தன.

வெலிங்டன் அருங்காட்சியகம்

நாங்கள் அடுத்து சென்ற இடம் வெலிங்டன் அருங்காட்சியகம். டைம்ஸ் இதழ் உலகில் சிறந்த ஐம்பது அருங்காட்சிகங்களில் ஒன்றென குறிப்பிட்ட இடம்.
சைக்கிளை விட்டு இறங்கியவுடன் கைகளை சட்டைக்குள் விட்டுக்கொண்டேன். குளிர்வலி. குளிர் உஷ்ணத்தின் இன்னொரு வடிவம்தான் போல. அதிகரிக்க அதிகரிக்க பொசுக்கியது.

அருங்காட்சியகத்தில் நுழைந்தவுடன் முதலில் சென்றது நியூசிலாந்து உருவான வரலாற்றை, காட்சி வடிவமாகக் காட்டும் திரையின் முன்தான். ‘உங்களைக் காலங்கள் கடந்து அழைத்துச் செல்லப்போகிறோம்’ எனும் அறிவிப்புடன் அது கதையைச் சொல்ல ஆரம்பித்தது. மாவோரிகளின் வரலாற்றைத் தாண்டி ஐரோப்பியர்கள் நியூசிலாந்தில் நுழைந்த கதை அதில் தெளிவாகக் காட்டப்பட்டது.

ஆபேல் தாஸ்மேன்

1642 டிசம்பரில் நியூசிலாந்தில் தரையிறங்கிய டச்சு மாலுமியான ஆபேல் தாஸ்மேன்தான் (Abel Tasman) நியூசிலாந்தை அடைந்த முதல் ஐரோப்பியர். மாவோரியர்கள் போர் குணம் படைத்தவர்கள். எனவே அந்நியர்களான ஆபேல் தாஸ்மேன் குழுவுடன் சண்டையிட்டு நான்கு மாலுமிகளைக் கொன்றனர்.

ஜேம்ஸ் குக்

பிரித்தானிய மாலுமி ஜேம்ஸ் குக் (James Cook) வழியாகவே நியூசிலாந்து குறித்து பரவலாகத் தெரியத் தொடங்கியது. ‘எண்டவர்’ (Endeavour) என்னும் கப்பலில் ‘தஹிதி’ தீவுகளை நோக்கிச் செல்லும் வழியில் 1769 மார்ச் 6ஆம் தேதி இந்நிலத்தில் அவர் கால்வைத்தார். அப்போது அங்கு ஏறக்குறைய 150,000 மாவோரிகள் இருந்ததாகவும் அவர்கள் பழுப்பு நிறத்தில் உறுதியான உடற்கட்டோடு இருந்ததாக குக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இவர் மூன்று முறை நியூசிலாந்து சென்றார். இவர் வழியாகவே நியூசிலாந்து வெளி உலகுக்கு அறிமுகமானது. வழக்கம்போலவே வணிகக் கப்பல்கள் இங்கு வந்து போயின. தங்களின் உணவு, உலோகக் கருவிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை வழங்கி மரம், கைவினைப் பொருட்கள், நீர் போன்றவற்றை பண்டமாற்றமாகப் பெற்றுச்சென்றனர். ஐரோப்பிய, வட அமெரிக்க திமிங்கில வேட்டைக்காரர்களுக்கும் நியூசிலாந்து லாபம் கொடுக்கும் இடமாக மாறியது. துப்பாக்கிகளின் அறிமுகத்தால் மாவோரி இனக்குழுக்களிடையே அதிகமான போர்கள் மூண்டு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவோரிகள் தங்களுக்குள்ளாகவே செத்து மடிந்தனர். அதற்கு முன்னர் மாவோரிகள் கம்புகளையே ஆயுதங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் ஆயுதம் மரத்தாலும் பச்சைக் கற்களாலும் ஆனவை. புதிய நோய்கள், மேற்கத்திய விவசாய முறைகள், கிறிஸ்துவ மிஷனரி அறிமுகம் போன்றவற்றால் மாவோரி கலாசாரமும் சமூக அமைப்பும் மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியது. 1830களின் பிற்பகுதியில் நியூசிலாந்து ஐரோப்பாவுடன் இணைந்தது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய இடங்களிலிருந்து அதிகமானோர் இங்கு வந்தனர். மீன்பிடிக் கப்பல்கள், மரவியாபாரிகள் மூலம் குடியேற்றம் நடைபெற்றது.

19ம் நூற்றாண்டில் மக்கள்தொகையில் மாவோரி இனத்தவரின் விகிதசாரம் 40% ஆகக் குறைந்தது. ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்ட நோய்களுக்கு மாவோரிகளின் உடலில் இயல்பாகவே எதிர்ப்புச் சக்தி இல்லாததால் அந்நோய்கள் பெரும்பான்மையோரை அழித்தது. தங்கள் நிலம் தங்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த மாவோரியர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர்களைத் தொடுத்தனர். அது நியூசிலாந்தில் அமைதியின்மையை உருவாக்கியது.
இந்தச் சிக்கலை சரிபடுத்த உருவாக்கப்பட்டதே வைத்தாங்கி ஒப்பந்தம். இது பங்காளித்துவம், பங்கேற்றல், பாதுகாத்தல் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

1840ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பிரித்தானிய அரசுப் பிரதிநிதிகளுக்கும் (கேப்டன் வில்லியம் ஹோப்சனும் அவரது சகாக்களும்) 500க்கும் மேற்பட்ட மாவோரி தலைவர்களுக்கும் இடையில் கையெழுத்தான வைத்தாங்கி ஒப்பந்தம் குறித்து தங்கா ஏற்கனவே என்னிடம் விளக்கியுள்ளார். அது சுவாரசியமான வரலாறு. அதுவே ஒரு புனைவுக்கான வாசல்போல இருந்தது.

இந்த ஒப்பந்தம் ஆங்கிலத்திலும் மாவோரி மொழியிலும் எழுதப்பட்டது. ஆனாலும், இரண்டு மொழிகளிலும் உள்ள ஒப்பந்தங்களில் பெரும் வேறுபாடுகள் காணப்பட்டன. எனவே ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகள் எவை என்பது குறித்து தெளிவான கருத்திணக்கம் இருக்கவில்லை என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் சுவாரசியம்.
இந்த வைத்தாங்கி ஒப்பந்தம் மாவோரி மொழியில் எழுதப்பட்டதற்கும் ஆங்கிலத்திலத்தில் எழுதப்பட்டதற்குமான வித்தியாசத்தை வாசித்தேன்.

அதன் சுருக்கம்:

முதல் ஒப்பந்த சுருக்கம்

நியூசிலாந்தில் ஓர் ஆளுநரை நியமிக்கும் உரிமையை மாவோரி இங்கிலாந்து ராணிக்கு வழங்குகிறார்கள்

ஆங்கில மொழிப்பெயர்ப்பு: அனைத்து நியூசிலாந்துக்கான இறையாண்மையை மாவோரியர் ராணிக்கு வழங்குகிறார்கள்.

இரண்டாவது ஒப்பந்த சுருக்கம்

மாவோரி தங்கள் சுதந்திரத்தைப் பேணி, தங்கள் நிலங்கள் மற்றும் அவர்களுக்கு முக்கியமான எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ராணி ஒப்புக்கொள்கிறார். ஒருவேளை அவர்கள் நிலத்தை விற்க விரும்பினால், அதை வாங்குவதற்கான உரிமையை ராணிக்கு வழங்குகிறார்கள்.

ஆங்கில மொழிப்பெயர்ப்பு: மாவோரிக்கு நிலம், காடுகள், மீன்பிடித்தல் ஆகியவற்றின் உரிமைகளை வழங்க ராணி உத்தரவாதம் அளிக்கிறார். ஒருவேளை அவர்கள் நிலத்தை விற்க விரும்பினால், அதை ராணிக்கு மட்டுமே விற்கலாம்.

மூன்றாவது ஒப்பந்தம்

ராணி, மாவோரி மக்களுக்கு பிரிட்டிஷ் மக்களைப் போலவே உரிமைகளையும் வழங்குகிறார்.

ஆங்கில மொழிப்பெயர்ப்பு: ராணி மாவோரி மக்களுக்கு பிரிட்டிஷ் மக்களைப் போலவே உரிமைகளை வழங்குகிறார்.

கொஞ்சம் கவனமாக ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்தாலே மாவோரி மக்களுக்கு நிகழ்ந்துள்ள அநீதி புரியும். ராணியே அனைத்திற்கு அனுமதி கொடுக்கும் கடவுளாகக் காட்சி தருவது அப்பட்டமாக வெளிப்படும்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய வேண்டும், அதாவது சட்ட, ஒழுங்கு உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே மாவோரிகள் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இறையாண்மை’ என்பதற்கான மாவோரி மொழிச் சொல் அதில் பயன்படுத்தப்பட்டிருந்தால் பெரும்பாலான மாவோரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க மாட்டார்கள் என்று வைத்தாங்கி ஒப்பந்தம் குறித்து வாசித்தபோது தெரியவந்தது.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தத்தில் 13 பெண்கள் கையெழுத்திட்டுள்ளனர். அந்த நேரத்தில் பிரிட்டனில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. அல்லது முக்கியமான பிரச்சினைகளில் கருத்துக்கூற அவர்களுக்கு உரிமை இல்லை. மாறாக, மாவோரி இனத்தில் பெண்கள் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது. (அதே சமயம் பெண்களுக்கு வாக்குரிமை நியூசீலந்தில் 1893இல் வழங்கப்பட்டது. உலகில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து.)

இந்த ஒப்பந்தம் மாவோரி நிலத்தை வாங்குவதற்கு பிரிட்டிஷ் அரசிற்கு பிரத்யேக உரிமையை வழங்கியது. சில நேரங்களில் தனியார் தரப்பினர் நிலம் வாங்கவும் அனுமதித்தது.

வைத்தாங்கி ஒப்பந்த மீறல்கள் குறித்து மாவோரிகளிடமிருந்து 1960களின் பிற்பகுதியில்தான் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. மொழிபெயர்ப்புகளில் இருந்த வேறுபாடுகள் ஆராயப்பட்டன. பல வழக்குகளில் தாம் ஒப்பந்தத்தை மீறியிருந்ததாக அரசு ஒப்புக்கொண்டது. இதனால், பல மில்லியன் டாலர்கள் இழப்பீடுகள் வழங்கப்பட்டதோடு, மன்னிப்பும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தங்காவிடம் இன்று புலம்பெயர்ந்த ஐரோப்பியர்கள் தங்களை எப்படி முன்வைக்கிறார்கள் எனக்கேட்டேன். ‘அவர்கள் தங்களை நியூசிலாந்தினர் என்று தனி அடையாளம் காட்டிக்கொள்ளவே விரும்புகின்றனர். ஆங்கிலேயர் என்றோ ஐரிஷ்காரர் என்றோ கூறிக்கொள்ள விரும்புவதில்லை. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இங்கு குடியேறியவர்கள் இந்த நாட்டை தங்கள் நாடாகவே கொண்டுள்ளனர். வழிவழியாக வாழ்பவர்கள், புதிய குடியேறிகளிடம் எத்தகைய வேறுபாட்டையும் காட்டுவதில்லை’ என்றார். மேலும் ஆங்கிலேயர் மாவோரிகளை வஞ்சித்த வரலாற்றை பாட நூல்களிலேயே சொல்லித்தருவதைக் கூறினார். தன் மகனுக்குக் கூட அந்த வரலாறு தெரியும் என்றார். ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பூகோளவியலையும் புராணக்கதைகளையும் பார்த்தால் நியூசிலாந்து தொன்மையான ஒரு நாடு. ஆனால் கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கும் குறைவான வரலாற்றையே இது கொண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதனால் உலகின் ஒரு புது நாடாக, இளம் மக்களை அதிகம் கொண்ட நாடாக இளமையோடுள்ளதாகத் தோன்றியது.

TEV Wahine

வெலிங்டன் அருங்காட்சியகத்தில் ஆங்கிலேயர்கள் கப்பல் வழி வெலிங்டனுக்குக் கொண்டு வந்த பொருட்களைப் பார்க்க முடிந்தது. மேலும் 610 பயணிகளை சுமந்து வந்த TEV Wahine எனும் ஆடம்பரக் கப்பல் 1966ல் நியூசிலாந்து கரையோரம் புயலில் சிக்கி மூழ்கியது தொடர்பான ஆவணப்படத்தையும் பார்த்தோம்.

வெளியே மழை விட்டிருந்தது. தூரல் இருந்தது. பயணத்தைத் தொடர சைக்கிளை எடுத்தபோது அது ஒரு தனித்தக் கருவியென்ற எண்ணம் இல்லாமல் முழுவதுமாக என் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.

  • தொடரும்
(Visited 111 times, 1 visits today)