க்யோரா 8: மாவோரிகள்

‘தி பாப்பா’ (Te Papa) அருங்காட்சியகத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய மற்றுமொரு பகுதி மாவோரிகளின் கண்காட்சிக்கூடம் என தங்கா சொல்லியிருந்தார். உண்மையில் நான் அதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். சொல்லப்போனால் நியூசிலாந்தில் இறங்கியது முதலே மாவோரிகள் குறித்தே தங்காவிடமும் செல்வா ஐயாவிடமும் தகவல்களைக் கேட்டு பெற்றபடி இருந்தேன். அவர்கள் வாழ்விடத்தில் சென்று நெருங்கிப்பார்க்க வேண்டும் எனும் ஆசையை மலேசியாவிலிருந்து புறப்படும் முன்னரே தங்காவின் கோரினேன். மாவோரிகள் மெல்ல மெல்ல தங்கள் பண்பாடுகளை விட்டு வந்துவிட்டதையும் இன்று அசலான மாவோரி வாழ்வியலைப் பார்ப்பது கடினம் என்றும் கூறியது ஏமாற்றமாக இருந்தது.

மாவோரிகள் நியூசிலாந்து நாட்டின் பழங்குடிகள். இவர்கள் கிழக்கு பாலினீசியாவிலிருந்து வந்தவர்கள். பாலினேசியா (Polynesia) என்பது ஓசியானியாவின் ஓர் உப பிரிவு. சரி ஓசியானியா (Oceania) என்றால் என்ன? அது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயர். அவ்வளவுதான். இந்த ஓசியானியா மூன்று வளையங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் போலினேசியா. பூகோலத்தில் ஆர்வம் உள்ளவர்கள் உலக வரைப்படத்தை எடுத்து ஆராய்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் மாவோரியர்கள் கிபி 1200 – 1300க்கு இடையில் இத்தீவுகளில் குடியேறினர் எனப் புரிந்துகொண்டால் போதுமானது.

நியூசிலாந்தை மாவோரியர்கள் ‘ஆவோதேயாரோவா’ (Aotearoa) என்றே அழைக்கின்றனர். ‘நீளமான வெண்ணிற முகில் நிலம்’ என்பது இதன் பொருள். இப்படிச் சொல்லும்போது இதென்ன கவிதையைப்போல உள்ளது எனத் தோன்றலாம். உண்மையில் மாவோரியர்கள் மொழி கவித்துவமானதுதான். அவர்கள் தங்கள் பெயர்களையே கவிதைபோல சொல்லக்கூடியவர்கள். எல்லா பழங்குடிகளைப் போலவே மாவோரியர்களிடமும் பல்வேறு இனக்குழு உண்டு. ஒவ்வொரு பழங்குடிக் குழுவும் ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டிருக்கின்றன. இந்த வம்சாவளிகள் வெவ்வேறு நிலத்திலிருந்து புலம்பெயந்தே இங்கு ஒன்று சேர்ந்துள்ளனர். எனவே ஒருவர் தன் பெயரைச் சொல்லும்போது தன்னுடைய மலையின் பெயரையும் தன்னுடைய நதியின் பெயரையும் தன்னுடைய காட்டின் பெயரையும் தன்னுடைய மரத்தின் பெயரையும் தனது வம்சாவளியில் வந்த மூதாதையர்களையும் அதன் வழி தன் குலத்தையும் நீண்ட வரிப்பாடல்களாக ஒப்புவித்தப்பின்னரே பெயர்களைச் சொல்வர். இந்தப்பாடல் பெபேஹா (pepeha) என அழைக்கப்படுகிறது. இந்தப் பாடல்கள் வழி ஒருவரால் தன் கொடித்தொடர்ச்சியை எளிதில் நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது.

பழங்குடிகளிடம் எப்போதுமே சுவாரசியமான கதைகள் உண்டு. தங்கா மாவோரி மொழி வகுப்புக்குச் செல்வதால் அவருக்கு போதுமான அளவு அவர்கள் குறித்த புரிதல் இருந்தது. எனவே மாவோரிகள் நியூசிலாந்துக்கு வந்த வரலாற்றையும் அவர்கள் தங்கள் நிலத்தை ஆங்கிலேயர்கள் பறிகொடுத்த கதையையும் விரிவாகவே விளக்கினார். அந்த வரலாறு ஒருபுறம் இருக்க, அவர்கள் மத்தியில் உருவாகி வளர்ந்துள்ள தொன்மக்கதைகள் இன்னும் சுவாரசியமானவை. அதில் முக்கியமானது மாவோரிகள் நியூசிலாந்தை கண்டடைந்த கதை.

மௌய் எனும் தேவதை மீன் பிடிக்கப் போனபோது கடலிலிருந்து கிடைத்ததுதான் நியூசிலாந்து என்கிறது இந்தக் கதை. மாவோரி, பாலினேசியன் தொன்மங்கள், புனைவுகளின்படி, மௌய் எனும் தேவதை புத்திசாலியான, அற்புதப் பிறவி.

ஒரு இரவில் மௌயின் நான்கு சகோதரர்கள் அவரை விட்டு விட்டு மீன்பிடிக்கச் செல்ல திட்டமிடுகிறார்கள். அதையறிந்த மௌய், சகோதரர்களின் படகின் அடிப்பகுதியில் ஒளிந்துகொண்டு, அவர்கள் கரையிலிருந்து வெகு தூரம் கடலுக்குள் செல்லும் வரை காத்திருந்தார். தம் முன்னோர்களின் தாடை எலும்பிலிருந்து செய்யப்பட்ட மந்திர மீன் கொக்கி அவரிடமிருந்தது. அதை கடலின் ஆழத்தில் எறிந்து, மந்திரங்களை உச்சரித்தார். அப்போது மிகப் பெரிதான ஒன்று சிக்கியது. அது ஒரு பெரிய நிலப்பகுதி. அதுதான் நியூசிலாந்தின் வடக்குத் தீவு.

இந்த நிலத்தை பரிசாக அளித்ததற்காக தங்கரோவாவுக்கு (Tangaroa) ( தங்கரோ என்பது கடல் கடவுள்) நன்றி சொல்வதற்கு முன்னர் மௌயியின் சகோதரர்கள் அதைச் செதுக்கத் தொடங்கினர். இன்று வடக்கு தீவில் உள்ள பல பள்ளத்தாக்குகள், மலைகள், ஏரிகள் எல்லாம் அப்படி உருவானவைதான்.

தென் தீவாக தற்போது அறியப்படுவது மௌயியும் அவரது சகோதரர்களும் மீன்பிடித்த படகுதான். தென் தீவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள கைகோரா தீபகற்பம், படகின் இருக்கை அமைந்திருந்த இடம். அதில் நின்றுதான் மௌய் தனது மாபெரும் இரையை பிடித்தார் என்றும் இந்த பழங்குடி கதை சொல்கிறது. மேலும் படகின் நங்கூரம்தான் ஸ்டூவர்ட் தீவாகியது. இப்படி நியூசிலாந்தின் ஒவ்வொரு தீவுக்கும் கதை உண்டு.

நான் இருந்தது தூண்டிலில் சிக்கிய வடக்குத் தீவு. இப்படிச் சொல்வது முழுவதும் கற்பனை அல்ல. நியூசிலாந்தில் பல பகுதிகள் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்தவைதான். வெலிங்டன் விமான நிலையத்திலிருந்து நாங்கள் கடந்துவந்த சாலையே சில நூறு ஆண்டுகளுக்கு முன் கடலுக்கு அடியில் இருந்தது என தங்கா காட்டியபோது ஆச்சரியமாக இருந்தது. நில அதிர்வுகள் உருவாகும்போதெல்லாம் நியூசிலாந்து மேலும் மேலும் தனக்கான புதிய நிலங்களைப் பெற்றுக்கொள்கிறது.

தங்காவிடம் சுவாரசியமாக உரையாடக்கூடியவர். தடையின்றி தகவல் தரக்கூடியவர். அப்படி அவர் நியூசிலாந்து தீவு குறித்து பகிர்ந்துகொண்டபோது ஜீலாண்டியா (Zealandia) குறித்து சொன்னதை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு இரவில் கூகுளில் தேடி வாசித்தேன். ஜீலாண்டியா நீரில் மூழ்கியிருக்கும் கண்டம். கடைசியாக நடந்த ஆய்வின் படி இந்த கண்டம் ஏறக்குறைய ஆஸ்திரிலிய கண்டம் அளவு பெரியது. ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்துள்ளது. இன்று இந்தக் கண்டத்தின் 94% நிலபரப்பு பசிபிக் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்க கடல் மட்டத்துக்கு மேலே தெரிவதுதான் நியூசிலாந்து. மௌய் தேவதை மீன் பிடிக்காமல் இருந்திருந்தால் அதுவும் கடலுக்குள்தான் இருந்திருக்கும்.

பச்சை குத்துவது மாவோரிகளின் தொன்மையான நம்பிக்கைகளில் ஒன்று. தலை உடலின் மிகவும் புனிதமான பகுதி என்று நம்பும் மாவோரிகளுக்கு முகத்தில் பச்சை குத்திக்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்கள் முகத்தில் Mataora எனும் வடிவத்தைக் குத்திக்கொள்வார்கள். Moko kauae என்பது பெண்கள் உதடுகளிலும் கன்னங்களிலும் குத்திக்கொள்வது. இதுதான் ஒரு பெண் சமூகத்தில் பெற்றிருக்கும் தலைமைத்துவத்தைப் பிரதிநிதிக்கிறது. அவளுடைய அந்தஸ்தையும் திறன்களையும் அங்கீகரிக்கிறது.

உடலில் குத்தப்படும் ஒவ்வொரு பச்சையும் ஒரு மாவோரி குறித்து பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக, அவர் எந்த வம்சாவளியைச் சேர்ந்தவர், அவர் எந்த வகையான குடும்பத்திலிருந்து வந்தவர், சமூகத்தில் அவரது அந்தஸ்து என்பதை இப்பச்சை குறி்க்கிறது. சில சந்தர்ப்பங்களில், வென்ற போர்கள் பற்றிய தகவல்களும் இருக்கும். வம்சாவளியைப் பற்றிய தகவல்கள், குழந்தைகளின் எண்ணிக்கையை பெண்கள் பச்சை குத்திக்கொள்வதும் உண்டு.

காலனித்துவத்திற்கு முந்தைய மாவோரிக்கு எழுத்து மொழி இல்லை. இன்றும் ஆங்கில எழுத்துமுறையைத்தான் பயன்படுத்துகின்றனர். அறிவும் மரபுகளும் வாய்வழியாகவே அல்லது கலை மூலம் தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. ஆனால் நான் அங்கிருந்த நாட்களில் அறிந்து கொண்டது மாவோரி மக்களின் தொன்மவியல் இயற்கையுடன் ஆழமான தொடர்பை வலியுறுத்துகிறது என்பதைத்தான். இவர்கள் கதைகள் மறுபிறப்பு பற்றிய கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவது இவர்கள் கலாசாரத்தில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம்.

மாவோரிகளின் தனித்துவமான பழக்கவழக்கங்கள், பல பாலினேசிய பழங்குடியினரின் சிறப்பியல்புகளைக் கொண்டவை எனக்கூறப்படுகிறது. செல்வா அவர்கள் ஒருமுறை அவர்கள் தலைகளை வெட்டக்கூடிய பழக்கத்தை கொண்டவர்கள் எனக்கூறினார். இந்தப் பழக்கம் சரவாக் பழங்குடிகள் மத்தியிலும் இருப்பதால் எனக்கு ஆச்சரியம் இல்லை. இணையத்தில் தேடி வாசித்தபோது மாவோரிகள் கைப்பற்றப்பட்ட எதிரிகளின் தலைகளை துண்டித்து, அவர்களின் உடல்களை சாப்பிட்டார்கள் – இதனால் எதிரியின் வலிமை அவர்களுக்கு கடத்தப்படும் என்பது அவர்களின் நம்பிக்கை எனக் கூடுதலாக எழுதப்பட்டிருந்தது. பொதுவாகவே நவீன கல்விமுறையால் நாகரீக வாழ்வியல் முறைகளால் நெருங்கிச்செல்லமுடியாத பழங்குடி பண்பாடுகள் மீது மிகையான கற்பனைகள் திணிக்கப்படுவதுண்டு. அவற்றுக்கான தரவுகள் இல்லாதபோது புனைவுக்கான கச்சா பொருளாக மாற்றிக்கொள்வதுதான் என் இயல்பு.

ஹக்கா நடனம்

நான் மாவோரிகளிடம் பார்த்து வியந்தது ஹக்கா நடனம். அது மாவோரிகளின் சிறப்பு நடனம். முதல் உலகப் போரின் போது, ​​போர் நடனமான ஹக்கா நடனமாடி, கலிபோலி தீபகற்பத்தில் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் எதிரிகளை பின்வாங்கச் செய்ததாகக் குறிப்புகள் உள்ளன. இந்த நடனம் போர்க்குணமிக்க உணர்வெழுச்சியுடன், எதிரியை மிதிப்பது போன்று பாவனை செய்து, பயமுறுத்தும் முகமூடிகள் அணிந்து ஆடுவதாக அமைந்திருக்கும். போர் நடனமானது கோரல் பாடல் அல்லது வெறுமனே கூச்சலாக இருக்கும். ஆரம்பத்தில், இது இயற்கையின் ஆவிகளை ஈர்க்க உதவும் என்றும் எதிரிகளுடான போரில் வெற்றியைத் தரும் என்றும் மாவோரிகள் நம்பினர். உண்மையில் அந்த நடனத்தைப் பார்க்கும்போது ஒருவித அச்சம் எடுக்கிறது.

மாவோரிகளின் கண்காட்சிக்கூடம் சென்ற நான் அது குறித்து விளக்காமல் கேள்விப்பட்டவைகளையும் வாசித்தவைகளையும் எழுதக் காரணம் உண்டு. நாங்கள் சென்ற தினத்தில் மாவோரிகளின் கண்காட்சிக் கூடத்தை மேம்பாட்டுப் பணிக்காக அடைத்து வைத்திருந்தனர். நுழைய அனுமதி இல்லை. அது ஏமாற்றம்தான். ஆனால் தங்கா போன்ற தகவல் களஞ்சியங்கள் உடன் நடமாடியபோது அது அவ்வளவு ஏமாற்றத்தைத் தரவில்லை. ஒருவர் தரும் தகவல் குறித்த நம்பகம் எங்கிருந்து உருவாகிறது? அது ஒருவர் ஓர் இனத்தின் மீது வைத்திருக்கும் உண்மையான மதிப்பின் வழி எழுகிறது. தங்கா மாவோரி மக்கள் குறித்து ஒருபோதும் குறைவாக மதிப்பிடவில்லை. அதுவே அவர் வழங்கிய தகவல் மீதான நம்பகத்தைக் கூட்டியது. அவர் மீதான மதிப்பையும்.

(Visited 112 times, 1 visits today)