மிதிக்க மிதிக்க சைக்கிள் முதலில் கால்களுக்கு வசமானது. பின்னர் கைகளுக்கு. உடலில் அதிகம் இறுக்கம் இல்லாததில் அதை அறியலாம். கியர் போடும் நுட்பம் மட்டும் விரல்களில் வந்துசேர கொஞ்சம் தயங்கியது. எந்தக் கருவியையும் இயல்பாகச் செலுத்துதல் என்பது அதனை ஒரு தனித்த கருவி என மறப்பதும் அதை நம் உடலின் ஒரு பாகமென பொருத்திக்கொள்வதிலும்தான் உள்ளது. காதலில் உடல்களும் அப்படித்தான்.
சைக்கிள் என் மூளைக்குள் இன்னும் இருந்தது. அவ்வப்போது மக்களின் நடைபாதைகளைக் கடக்க வேண்டியிருந்ததால் சிறிது தடுமாற்றம் எழுந்தது. தங்கா சைக்கிளை ஓட்டியபடியே இறங்குவதும் உருட்டிக்கொண்டே ஓட்டுவதுமாக இருந்தார்.
தங்கா என்னை முதலில் ‘தி பாப்பா’ (Te Papa) அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார். இது நியூசிலாந்தின் தேசிய அருங்காட்சியகம். ‘தி பாப்பா’ என்பதை புதையல்களின் கொள்கலன் என அர்த்தம் கொள்ளலாம். 1998இலிருந்து அதிகாரபூர்வமாக இயங்கும் இந்த அருங்காட்சியகம் ஐந்து மாடிகளைக் கொண்டது. உலகில் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் அருங்காட்சியங்களின் பட்டியலில் பதினேழாவது இடத்தில் உள்ளது. நாங்கள் தேர்ந்தெடுத்த சில பகுதிகளை மட்டும் பார்க்கலாம் என முடிவெடுத்தோம். அதில் பிரதானமானது கலிபொலி போர் (Gallipoli) தொடர்பான கண்காட்சிக்கூடம்.
கலிபொலி போர் குறித்து சுருக்கமாகத் தெரிந்துகொள்வது அவசியம். இன்றும் வரலாற்றில் நினைவுக்கூரப்படும் மிக மோசமான போர் இது. முதலாம் உலகப் போரின்போது ஜெர்மன், ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக இருந்த ஒட்டோமான் பேரரசின் (இன்றைய துருக்கி) பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர பிரிட்டன் திட்டமிட்டது. அதற்கு பிரான்சும் உடன்பட்டது. அத்துடன் ரஷ்யாவுடன் கடல் வழி தொடர்புகளை மீண்டும் நிறுவுவதும் மற்றொரு நோக்கம். நேச நாட்டுப்படைகளின் போர்க்கப்பல்கள் கருங்கடலுக்குள் இலகுவாகச் செல்வதற்கு துருக்கியின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியைக் கைப்பற்றுவது இந்நாடுகளுக்கு அவசியமாக இருந்தது.
கருங்கடல் என்பது நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் பகுதி. முதலாம் உலகப் போரில் நேச நாட்டுப்படைகள் அணியில் பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா இருந்தன. கருங்கடலுக்குள் நுழைவதன்வழி முதலாம் உலகப் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது நேச நாடுகளின் திட்டம்.
துருக்கிக்கும் போரில் இறங்கும் தேவை இருந்தது. துருக்கி ஏற்கெனவே இழந்த நிலங்களை மீட்க இராணுவ அதிகாரியும் தேசிய ஹீரோவுமான என்வர் பாஷா, ஐரோப்பாவில் நடந்த போரை சாதகமாக்கிக்கொள்ள நினைத்தார். ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிரான போரில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மூன்றும் வென்றால், ஓட்டோமான் பேரரசின் பெரும்பகுதிகளை இழக்க நேரிடும் என நினைத்தார்.
போர், நேசப் படைகள் நினைத்ததைப்போல அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. துருக்கி இராணுவம் கடும் எதிர்ப்பைக் கொடுத்தது. போர் எட்டு மாதங்கள் வரையில் நீண்டது. 1915 ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கிய போர் 1916 ஜனவரி 9ஆம் தேதிவரை நீடித்தது. நேச நாட்டுப் படையின் 500,000 பேரில் 220,000க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்போரில் இறந்து தோல்வியைத் தழுவின. துருக்கிய தரப்பில் இழப்புகள் அதிகமாக இருந்தபோதிலும், அவர்கள் பல மாதங்களாக கடும் எதிர்ப்பைக் கொடுத்து நேச நாடுகளைப் பின்வாங்க செய்தனர்.
மிக மோசமான போர்களங்களில் ஒன்றாக கலிபோலி போர் வீரர்களால் நினைவுகூரப்படுகிறது. சண்டையினால் மட்டுமின்றி, சுகாதாரமற்ற சூழலாலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. உயிரிழந்ததாகக் கூறப்படும் 213,000 பிரிட்டிஷ் படையினரில், 145,000 பேர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். உயிர் பிழைத்த வீரர்கள் கடுமையான வெப்பம், தண்ணீர் – உணவுப் பற்றாக்குறை, ஈக்கள், உடல் பேன்கள், போதுமான பொருட்கள் கிடைக்காமை போன்ற மோசமான நிலைமையை விவரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவையும் நியூசிலாந்தையும் பெரும் போருக்கு அறிமுகம் செய்தது இந்தப் போர்தான். ஏராளமான ஆஸ்திரேலியர்களும் நியூசிலாந்தியர்களும் இறுதிவரையில் சண்டையிட்டனர். இப்போரில் 8556 நியூசிலாந்துக்காரர்கள் பங்கேற்றதாகவும் 2721 பேர் உயிரிழந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி, நியூசிலாந்தில் போர் நிறுத்த நாளுக்கு ஈடாக நினைவுகூரப்படுகிறது. இரு நாடுகளிலும் இந்நாள் ANZAC நாளாகக் குறிக்கப்படுகிறது.
இந்த வரலாற்றை நிகழ்த்திக்காட்டும் இடம்தான் கலிபொலி கண்காட்சிக்கூடம். அதன் நுழைவாயிலே பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வேறொரு உலகினுள் செல்லப்போகிறோம் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. Gallipoli: The Scale of Our War எனும் பிரமாண்ட வடிவமைப்பில் துப்பாக்கி ஏந்திய மனிதன் சட்டென ஜேம்ஸ் பாண்டை நினைவுபடுத்தினான். உண்மையில் 2015இல் தொடங்கப்பட்ட இந்த இலவசக் கண்காட்சி 2019இல் முடிந்திருக்க வேண்டும். ஆனால், மில்லியன் கணக்கானோரை இது ஈர்த்து வருவதால், 2025 ஏப்ரல் 25 வரை கண்காட்சியை நீட்டித்துள்ளனர்.
ஆர்வமாக உள்ளே நுழைந்தோம். முதல் சில அடிகளிலேயே நான் உரைந்து நின்றுவிட்டேன். சராசரி மனிதனைவிட 2.4 மடங்கு பெரிய மெழுகு பொம்மை ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. பலத்த காயங்களுடன் இடது கையில் துப்பாக்கியுடன் லெப்டினன்ட் ஸ்பென்சர் வெஸ்ட்மகோட் (Lieutenant Spencer Westmacott) யாரையோ நோக்கி சுடும் காட்சி. முகத்தில் வெளிப்படும் உணர்ச்சியில் அவ்வளவு துல்லிதம். நன்றாக உற்றுப்பார்த்தால் உடலின் ஒவ்வோர் அம்சத்திலும் நிஜத்தன்மை. மெல்லிய ரோமங்கள் வரை அசைந்த அந்த மெழுகுச் சிற்பத்தை ஆச்சரியமாகச் சுற்றி சுற்றி வந்தேன்.
இந்த கண்காட்சியின் சிறப்பு என்பதே இது குவிந்து கிடக்கும் வரலாற்றுத் தகவல்களில் இருந்து வரட்டுத்தனமாக உருவானதல்ல. இதில் உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் போர்ச்சூழலில் சம்பந்தப்பட்ட எட்டு நியூசிலாந்தர்களின் சொற்கள் வழியாகவும் அவர்கள் கண்ட காட்சிகள் வழியாகவும் வடிவமைக்கப்பட்டிந்தன. அதன்வழியாகவே இந்த கண்காட்சி உயிர்ப்பை பெற்றுக்கொண்டது. இதற்குப்பின்னால் சில கதைச்சொல்லிகள் இருப்பதும் அவர்கள் சொற்கள் காட்சிகளாக உருகொண்டுள்ளதுமே இதனைத் தனித்துவமாக்கியது. அந்த எட்டுப்பேரில் போர் வீரர்களுடன் ஒரு மருத்துவர், ஒரு செவிலியரும் அடங்குவர். அவர்கள் வாழ்வின் ஓர் அசாதாரண கணத்தை அப்படியே உரையவைத்து அவர்களை 2.4 மடங்கு பெரியதாக மெழுகு சிற்பங்களாகச் செதுக்கியிருந்தனர். 2,779 நியூசிலாந்து வீரர்கள் மடிந்த ஒரு போர்த் தளத்தின் உயிர்ப்பான பகுதிகளை கடத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம்.
தங்கா எனக்கு ஒவ்வொரு பகுதியாக விளக்கினார். முப்பரிமாண வரைபடங்கள், காலவரிசையிலான நிகழ்வு அடுக்குகள், ஒளிக்காட்சிகள், மினியேச்சர் (சிறியதாக வடிவமைக்கப்பட்ட) உருவங்கள் என அதிநவீன தொழில் நுட்பத்தில் கண்காட்சிக்கூடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. போரில் பயன்படுத்தப்பட்ட உணவு டின்கள், சீருடைகள், ஆயுதங்கள், டைரிகள், ஆடியோ மற்றும் வீடியோ ஆகியவை என எல்லாமே பாதுகாக்கப்பட்டு அது பயன்படுத்தப்பட்ட மாதிரி சூழலிலேயே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழையும் ஒருவன் போர்ச்சூழலின் நிகர் அனுபவத்தை பெற வைக்கும் எல்லா முயற்சிகளும் செய்யப்பட்டிருந்தன. ஓரு பகுதியில் சிறிய மனிதர்களின் உருவங்களையும் பொருள்களையும் கொண்டு போர் நிலமான கலிபொலியின் குறுக்குவெட்டு தோற்றம் முழுமையாக வடிவமைக்கப்பட்டு பிரமிக்க வைத்தது. ‘கலிபோலி’ என்ற பெயர் உண்மையில் கிரேக்க ‘கலலிபோலிஸ்’ என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் ‘நல்ல நகரம்’. இன்று, நவீன துருக்கியின் ஒரு பகுதியாக உள்ள இந்த நகரம் ‘கெலிபோலு’ என்று அழைக்கப்படுகிறது. வளமான வரலாற்றைக் கொண்டுள்ள இந்தப் பழமையான நகரம் பல நூற்றாண்டுகளாக கிரேக்க படைப்புகளில் இடம்பிடித்துள்ளது.
அவ்விடத்திலிருந்து அகன்று மணல் மூட்டைகளை அடுக்கி வீரர்களுக்கு உருவாக்கப்பட்ட சிறிய முகாம்களுக்கு சென்று கொஞ்ச நேரம் அமர்ந்தோம். குறுகலான படுக்கை. ஒரு சிம்னி விளக்கு, சிறிய மேசை இவற்றுடன் மர அலமாரியில் அவர்கள் வாசித்த நூல்களும் இருந்தன. வெளியே பார்வையாளர்கள் அதிகம் இருந்தாலும் முழு அமைதி. எல்லாரும் போரின் கோர முகத்தில் கலங்கியிருந்தனர். நான் அந்த அறையில் இருந்த சிறிய சந்தின் வழியாக முதலாம் உலகப்போரின் ஒரு தளபதியைப் போல வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படிதான் அவனும் அன்று பார்த்துக்கொண்டிருந்திருப்பான். யாருக்காக இதைச் செய்கிறோம்? எதன் பொருட்டு இத்தனை மரணங்கள்? இந்தக் கொலைகளுக்கும் தனக்கும் நேரடியாகத் தொடர்பிருக்கிறதா? எனும் கேள்விகளை அவனை நெருங்கியிருக்குமா? அல்லது போர் எனும் பிரம்மாண்டமாகத் தொகுக்கப்பட்ட ஒற்றை மன அமைப்பில் எல்லாவித மனிதமும் கரைந்திருக்குமா?
எட்டு மாத போர் மெல்ல மெல்ல அனுபவங்களாக உள்ளே செல்வதை உணர்ந்தேன். அரிசி மூட்டைகளுக்கு மத்தியில் மாதிரி எலி ஓடுவதும், துப்பாக்கி விசை குறிப்பிட்ட நிமிடத்திற்கு ஒருமுறை இயங்கும் வகையில் நீர்ச் சொட்டும் உத்தியைப் பயன்படுத்துவதும், தலையை உயர்த்தி சூடுபடாமல் இருக்க செய்யப்படும் கண்ணாடி கண்காணிப்புக் கருவி என இருவழி தொடர்பாக உருவாக்கப்பட்டிருந்தது அந்தக் கண்காட்சி. அசைவுகளும் ஓசைகளும் அதை உயிர்நிலமாக்கியது.
வீரர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள், போர்க்களத்தில் காணப்படும் மது, தேநீர் கின்னங்கள், அடையாள அட்டைகள் என போர் வீரர்களின் பொருள்கள் ஒரு பக்கமும் அவர்களின் பிரம்மாண்ட மெழுகுச் சிலைகள் மறுபக்கமும் என மனதை கலங்கடித்தது. அவை ஏன் அவ்வாறு செய்கிறது என பின்னர் யோசித்துப் பார்த்தேன். அந்தச் சிற்பங்களுக்குப் பின்னால் ஒரு கலைஞன் இருப்பதுதான் காரணம். செய்தியாளனுக்கும் கலைஞனுக்குமான உள்ள வேறுபாடு அதுதான். செய்தியாளன் தகவலைச் சொல்கிறான்; கலைஞன் அந்தச் செய்தியின் வழியாக ஊடுருவி ஒரு மனிதனின் வழியாக ஒட்டுமொத்த வாழ்வைப் பேச முனைகிறான்.
அந்தப் பெரிய உருவச் சிலைகள் எதிலும் போர் வெறி இல்லை. குண்டு வெடிப்புகளும் மரண ஓலங்களும் கொதிப்புகளும் உள்ள நிலத்தில் நாம் பார்ப்பது தன்னந்தனியனாக உள்ள ஒரு மனிதனின் உணர்ச்சி. அது பெரும்பாலும் கண்ணீரும் விரக்தியும் நிரம்பியது. ரத்தம் படிந்த ஈ, கொசு மொய்க்கும் ரொட்டியைப் பார்க்கும் வீரன், மரணித்த தன் பாதுகாப்பில் இருந்த நோயாளியின் பிரேதத்தைப் பார்க்கும் மருத்துவர், பெரிய துப்பாக்கியில் வெறிகொண்டு சுடுபவனுக்குத் துணையாக குண்டுகளை பிடித்தபடி வெறித்தபடி பார்க்கும் இளம் வீரன், மரணமடைந்த செய்தியை வாசித்து கண்ணீர் விடும் தாதி என ஒவ்வொரு சிலையும் துல்லியமான உணர்வுகளைக் கடத்தின. ‘துல்லியம்’ என்பதை நான் மிகவும் அழுத்தமாகச் சொல்கிறேன். ஒரு உதாரணம் சொன்னால் புரியும். சோர்ந்து போய் ரொட்டியைப் பார்க்கும் இளைஞன் அமர்ந்துள்ள தரையில் அதற்கு முன் அவன் நடந்து சென்ற காலடி தடங்கள் இருந்தன. சூடுபட்டவனின் சட்டையில் இரத்தப் பிசுக்கி இருந்தது. அவ்வளது துல்லியம்.
முழுமையாகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். கண்ணாடிச் சன்னல்களில் மழை பொழிவது தெரிந்தது. நியூசிலாந்து மழை. ஒரு நாவலுக்குள் நுழைந்து வந்ததைப் போன்ற அனுபவம். ஆனால் மூளைக்கும் எதையும் தொகுத்துப்பார்க்க நேரமில்லை. மாவோரிகளின் கண்காட்சி கூடத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால் மனதில் அலையலையான எண்ணங்கள். மனம் நிதானமடைந்தபோது என் விரல்களுக்கு சைக்கிளின் கியர் பழகாததுபோல துப்பாக்கியின் விசை பழகாத விரல்கொண்ட ஒருவன் அந்தப் படைத்திரளில் இருந்திருப்பானா எனத்தோன்றியது. அவனுக்கு இந்தப் போர் என்ன அர்த்தத்தைக் கொடுத்திருக்கும்?
- தொடரும்