புதிய நிலபரப்புக்குள் செல்வதென்பது என்ன? கண்களை மூடிவைத்திருந்தாலும் பிற அத்தனை புலன்களும் புதுமையை உணர்வது. ஓசையில் காற்றில் வாசத்தில் அந்த பேதம் மூளைக்குள் உணர்த்தப்பட்டுக்கொண்டே இருப்பது. நான் கோலாலம்பூருக்கு வந்த புதிதில் மீண்டும் கெடாவுக்குச் செல்லுதல் என்பது இன்னொரு வகை வாழ்வியலில் நுழைந்துவிட்டு வருவதுதான். இன்று மலேசியா முழுவதும் காட்சியும் சூழலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகிவிட்டதாகவே உணர்கிறேன். அந்தந்த மாநிலங்களில் உள்ள சில சிற்றூர்களின் அதிகாலைகள் கொஞ்சம் வேறாக உள்ளன. மற்றபடி பெரும்பாலான நகரங்கள் தங்களைக் கோலாலம்பூராக மாற்றிக்கொள்ளவே மெனக்கெடுகின்றன. கெந்திங் மலை என்பது குளிரெடுக்கும் கோலாலம்பூர். லங்காவி அலையடிக்கும் கோலாலம்பூர். இன்னும் சில ஆண்டுகளில் இருக்கின்ற அத்தனை காடுகளையும் அழித்துவிட்டு அரசாங்கம் செம்பனையை நட்டுவிடும். செம்பனையை நட முடியாத இடங்களில் கட்டடங்களை நட்டுவிடும். பின்னர் தேசமெங்கும் ஒரே மணம்; ஒரே குணம்.
கப்பல் மணியைப் பார்த்துவிட்டு கட்டடத்தை விட்டு வெளியே வந்தோம். நியூசிலாந்தின் அரூப வடிவம் உடனடியாக அனைத்துக்கொண்டது. எப்போதும் இருக்கும் மெல்லிய குளிர், கட்டட இடைவெளிகளைக் கடக்கும்போது காற்றழுத்தத்தால் கொஞ்சம் அதிகரித்தது. வெயிலைக் கடக்கும்போது அதுவே தோலுக்கு இதமானது. வசந்தகால நியூசிலாந்தில், வெயில் என்பது ஒரு ஜிம்னாஸ்டிக் நாடா.
நான் சென்றது வசந்தகாலம்தான்.
நியூசிலாந்தின் பருவ நிலை மாற்றங்கள் இங்கிலாந்துடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறானது. வசந்தகாலம் செப்டம்பர் தொடங்கி நவம்பரில் முடிகிறது. அக்காலக்கட்டதில்தான் நியூசிலாந்தில் வண்ணமயமான பூக்கள் மலர்கின்றன. ஆட்டுக்குட்டிகள் பிறக்கின்றன. மழை பொழிவதால் நீர்வீழ்ச்சிகள் செழிப்பாகின்றன. எனவே காற்றில் அதிகபட்சம் 18டிகிரி மட்டும் குளிர் இருந்தது. டிசம்பர் நியூசிலாந்தில் கோடைக்காலம் தொடங்குவதால் கடற்கரைகள் உற்சாகமாக இருக்குமென தங்கா சொன்னார். ஆனால் நியூசிலாந்தின் ஓசோன் பகுதியில் விழுந்த ஓட்டை காரணமாக சூரிய வெப்பம் ஆங்கிலேயர்களின் தோல்களை சிவக்க வைக்கிறது. தோல் புற்றின் பாதிப்பும் இங்கு அதிகம் உள்ளது. எனவே தோலில் ஒருவித திரவத்தைத் தடவிக்கொண்டு வெயில்படும் புல்வெளிகளில் குறைந்த உடையுடன் ஆங்கிலேயர்கள் இளைப்பாறுவார்கள் என தங்கா நாங்கள் நடந்துகொண்டிருந்த புல்வெளியைக் காட்டினார். ரவீனிடம் பேசி அடுத்த தமிழ் விழாவை டிசம்பரில் நடத்தச் சொல்லவேண்டுமென எண்ணிக்கொண்டேன். ஓர் எழுத்தாளன் நியூசிலாந்து கோடையை அறிவதும் அவசியம் அல்லவா?
நியூசிலாந்து வீதிகளில் பெரிய திட்டங்கள் இல்லாமல் நடப்பதே சுகமாக இருந்தது. ஜூன் முதல் ஆகஸ்டுவரை நியூசிலாந்தின் குளிர்காலம். அப்போது வந்தால் இன்னும் அதிகமான குளிரை அனுபவிக்கலாம் என்றார் செல்வா. ‘பனி கொட்டுமா?’ என்றுக் கேட்டேன். பனியைப் பிடித்து விளையாட வேண்டும் என்பதும், அதில் பந்து சுருட்டி எதிரில் உள்ளவர்களின் சட்டைக்குள் போட வேண்டும் என்பதும் என் நெடுநாளைய கனவு. இப்போது வெலிங்டனில் பனி கொட்டுவதில்லை என்றவர் பனி கொட்டும் நாடுகளைவிட நியூசிலாந்துக்குத் தெற்கே 1600 மைல்களுக்கு அப்பால் உள்ள அண்டார்டிக் கடற்பகுதியின் காற்று வந்து தாங்கும்போது எலும்புகளெல்லாம் வலிக்கும் அளவு குளிரெடுக்கும் என்றார்.
இடையில் தங்கா எங்களை ஒரு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு காரை மாற்றி வைக்க வேண்டுமென காணாமல் போனார். அங்கு காரை இரண்டு மணி நேரம் இலவசமாக நிறுத்த மட்டுமே அனுமதி. இரண்டு மணி நேரத்தில் அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். எனவே காரை வேறு இடத்தில் மாற்றி வைக்கவேண்டும். இப்படி காரை நிறுத்தும்போது ஒரு வண்ண சுண்ணாம்புக் கட்டியால் கார் சக்கரத்தில் கோடு கிழிக்கப்படுகிறது. அதுதான் அடையாளம். வேறு இடத்தில் நிறுத்தும்போது வேறு நிறத்திலான வண்ணக்கட்டி. அந்த வண்ணக்கட்டியில் கோடு போடுபவரைப் பார்த்தேன். ஒரு கௌபாய் தொப்பியும் அரைக்கால் சட்டை அணிந்துகொண்டு கார் சங்கரங்களைச் சோதித்தபடியே நிதானமாக நடந்தார்.
எனக்கு இது வேடிக்கையாக இருந்தது. சாதாரணமாக கோட்டை அழித்துவிட்டு காரை இப்போதுதான் நிறுத்தினேன் எனச் சொல்லலாமே என்றேன். நியூசிலாந்து மக்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளதை தங்கா விளக்கினார். “நோய் எனச் சொல்லி ஒருவர் விடுப்புக் கேட்டால் அவருக்கு நோய் என்று மட்டுமே பொருள். யாரும் பொய் சொல்லி விடுப்பு எடுப்பதற்கான கடுமையான வேலையிடச் சூழல் இல்லை. நியூசிலாந்து கலந்துகொள்ளும் அனைத்துலக விளையாட்டுகளிலும் இந்தப் பண்பைப் பார்க்கலாம். நியூசிலாந்தை ஒருபோதும் ஏமாற்றி வெல்ல முயலாது எனும் நம்பிக்கை ரசிகர்களிடம் இயல்பாகவே உண்டு. இங்கு அதிக கெடுபிடிகள் இல்லாமலேயே அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்ற பழகியுள்ளனர்,” என தங்கா விளக்கினார்.
நியூசிலாந்து எனக்குப் பிடித்துப்போனது. அத்தேசத்தில் தாங்கள் வளர்த்துவிட்டதாகக் நிரூபிக்கக் கட்டப்படும் உயர்ந்த கட்டடங்கள் இல்லை, அகலமான சாலைகள் இல்லை, பேரங்காடிகள் எல்லாம் மினி மார்க்கெட்டுகள் போலத்தான் சிறியதாக இருக்கின்றன ஆனால் நாகரீக வளர்ச்சி என்பது மனிதர்களின் மனங்களில் உருவாகியுள்ளது. மலேசியா போன்ற நாடுகளில் புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ற பண்பட்ட மனங்களை உருவாக்கத் தவறிவிடுகிறோம். தன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மனிதன் சுகமாகத்தான் இருக்கிறானா என்பதை கருத்தில் கொள்ளாத நிலத்தில் ஒவ்வொருவரும் அனாதைகள் போலத்தான் வாழவேண்டியுள்ளது. நியூசிலாந்தில் அப்படி இல்லை என்பதை முற்றிலும் முதுமை தழுவிய உடல்கள் தனியாக சாலைகளில் நடந்து செல்வதில் அறியலாம். அவர்கள் சமூகத்தை நம்பி மட்டுமே சாலையில் இறங்குகின்றனர். இந்த நம்பிக்கைதான் எத்தனை மகத்தானது.
நியூசிலாந்து மக்களில் பெரும்பாலோர் மத நம்பிக்கை அற்றவர்கள். சிறுபான்மையினர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். அப்படி மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர் தன் வேலையிடத்தில் மதம் குறித்து ஒரு வார்த்தை பேசமாட்டார் என தங்கா விளக்கினார். நாங்கள் பேசிக்கொண்டே ஒரு உணவகத்தில் புகுந்தோம். அது Fish and Chips விற்பனை செய்யும் உணவகம். நியூசிலாந்தில் இந்த உணவு மிகப் பிரபலம். காணும் இடங்களில் கண்களுக்குப் படுகிறது. முதலாம் உலகப் போருக்கு முன் நியூசிலாந்தில் பிரிட்டிஷ் குடியேறியவர்களால் மீன் மற்றும் சிப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
உணவுண்டபடியே ‘கப்பல் மணி’ குறித்து பேசிக்கொண்டிருந்தோம். தங்கா விமான நிலையத்திற்கு அழைத்து காணாமல்போன என் பெட்டி குறித்து விசாரித்துக்கொண்டிருந்தார். பெட்டி கிடைத்தால் தனக்கே அழைக்கும்படி கூறிவைத்தார். எனக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
உரையாடலின்போது செல்வா நியூசிலாந்துக்காரர்களை ‘கிவி’ என அழைப்பதை கவனித்தேன். அது நியூசிலாந்துக்காரர்களை அனைத்துலக அளவில் அங்கீகரித்து அழைக்கும் சொல்லாக உள்ளது தாமதமாகவே புரிந்தது. நியூசிலாந்தின் தேசிய சின்னமான கிவி பறவையிலிருந்து இந்த பெயர் வந்துள்ளது. சில நாடுகளில் இப்படி ஒரு இனத்தைக் கேலியாக குறிப்பிட வேறு சொற்களைப் பயன்படுத்துவதுண்டு. உதாரணமாக அமெரிக்காவில் ‘அலிபாபா’ என்றால் குற்றப்பிண்ணனி கொண்ட ஈராக்கியன் எனப் பொருள். ஆரம்பத்தில் இகழ்ச்சிக்காகப் பேசப்படும் சொற்கள் பின்னர் புழக்கத்தில் இயல்பாக வந்தவைகளும் உண்டு. உதாரணமாக டச்சுக்காரர்களைச் சிவப்பு முடிக்காரர்கள் எனக் கிண்டல் செய்ய ஹாக்கியனில் ‘அங் மோ’ என்பதைச் சொல்லலாம். ‘கிவி’ அப்படியானதல்ல. அப்படி அழைப்பதை நியூசிலாந்துக்காரர்கள் கௌரவமாகவே கருதுகின்றனர்.
மதிய உணவிற்குப் பிறகு நானும் தங்காவும் சைக்கிளில் வெலிங்டனைச் சுற்றுவதாக முடிவு. அதாவது அவர் எடுத்த முடிவு. இந்தத் திட்டத்தை அவர் ஏற்கெனவே ஃபோனில் சொல்லியிருந்தார். அப்போது அதைக் கேட்க நன்றாகவே இருந்தது. ஆனால் சமமற்ற சாலைகளையும் சாலை ஓரம் நடக்கும் மனிதர்களையும் பார்த்தபோது தயக்கம் ஏற்பட்டது. மெல்லிய என் தயக்கத்தை வெளிப்படுத்தினேன். மனமாற்றாம் ஏற்பட்டு அவரே அண்ணாமலை சுப்புலட்சுமியை ஏற்றிச்செல்வதுபோல இரும்பில் அமர வைத்து ஓட்டிச்செல்வார் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் விடுவிடுவென இரண்டு சைக்கிள்களுடன் வந்து நின்றார். இரண்டும் Mountain Bike.
நான் மோட்டார் சைக்கிள் ஓட்டியே பல ஆண்டுகள் ஆகியிருந்தன. இதில் சைக்கிளா? அதுவும் நியூசிலாந்து சாலையிலா? எனக்குத் தயக்கமாக இருப்பதை மீண்டும் கூறினேன். அதெல்லாம் ஒன்றும் பயப்படவேண்டாம் என்றார். சைக்கிளில் ஏறி ஒரு மிதி மிதித்ததும் ஹேண்டில் கிடுகிடுவென ஆடியது. அப்படித்தான் நினைத்தேன். என் கைகள் நடுங்கி ஹேண்டிலை ஆட்டியதை தாமதமாகவே உணர்ந்தேன். ‘கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது’ என்றேன். தங்கா எதற்கும் மசியாமல் சக்கரத்தில் காற்றடித்தால் சரியாகிவிடும் என்றார்.
‘அடப்பாவி எப்படி போனாலும் மடக்குறாரே இந்த தங்கா’ என காற்றடித்த பெட்ரோல் நிலையத்திலேயே ஒரு ரவுண்டு அடித்தேன். பள்ளிக் காலத்தில் நான் Mountain Bikeதான் பயன்படுத்தினேன். அதன் கியர் முறைகளை சுத்தமாக மறந்துவிட்டேன். எதற்கும் இருக்கட்டும் என மேலும் கீழும் கியர் அசைத்து டடக் புடக் என மாறும் சத்தத்தைக் கலவரத்துடன் கேட்டு வைத்தேன். சுத்தமாக நம்பிக்கையில்லை. தங்கா அதற்கெல்லாம் அசராமல் தலைக்கவசம் ஒன்றை கொடுத்தார். அது போக்கனக்காய் விதையைப் போல சூம்பிக்கிடந்தது. அடிப்பட்டால் தலையும் அந்த வடிவத்துக்குள் அடங்கிவிடுமோ என்னவோ.
என் நிலையைப் பார்த்து “கஷ்டமா இருக்கா?” என்றார் தங்கா. அப்பாடா மனிதன் மனதில் கொஞ்சம் கருணை இருக்கிறது என மகிழ்ந்து “ஆம்” என்றேன் பரிதாபமாக. அப்படினா சைக்கிள மாத்திக்குவோம் என அவரது உயரம் குறைவான சைக்கிளை எனக்குக் கொடுத்து மாற்றிக்கொண்டார்.
ஆக மொத்தத்தில் இன்றைக்கு ஒரு சம்பவத்தை பார்க்க தங்கா முடிவெடுத்துவிட்டார் எனப் புரிந்தது. நியூசிலாந்து நாளிதழில் தலைப்புச் செய்தியாக வரும் முடிவுடன் சைக்கிளை எடுத்தேன்.
- தொடரும்