சரியாக காலை 10 மணிக்கு நியூசிலாந்து அருங்காட்சியகத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ள கட்டடம் செல்ல வேண்டியிருந்தது. அங்குப் பழங்கால கப்பல் மணி ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் மாநாட்டை ஒட்டி ஏற்பாட்டுக்குழு இந்த முயற்சியை முன்னெடுத்திருந்தது.
ஒரு அருங்காட்சியகத்தின் எல்லா பொருள்களும் எப்போதும் காட்சிக்கு வைக்கப்படுவதில்லை. சில சமயம் அவை சுழற்சி முறையில் பொதுப் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. மக்கள் எதைப் பார்க்க அதிகம் விரும்புகின்றனர், நிர்வாகம் எதை மக்கள் முன்வைக்க விரும்புகின்றது, பொருள்களின் வரலாற்றுத் தேவை, ஒளி – காற்று உள்ளிட்ட சீதோஷன நிலைக்கு அப்பொருளின் தாக்குப்பிடிக்கும் திறன், இடக்கட்டுப்பாடு எனப் பல்வேறு காரணங்களைக் கருத்தில்கொண்டே ஒரு பொருள் பொதுப்பார்வைக்கு வைக்க தேர்வு பெறுகிறது. நாங்கள் பார்க்கச் சென்ற கப்பல் மணி கடைசியாக 2014இல் நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதோடு கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தக் கிடங்கில்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒன்பது மணி ஆகியிருந்ததால் நடையை ஒரு ஓட்டம்போல அமைத்து நானும் தங்காவும் அக்கட்டடம் நோக்கிச் சென்றோம். ஒரு காரில் ஹேமாமாலினி, யுகேந்திரன் மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்து சிறப்பு விருந்தினர்கள் பலரும் வந்து சேர்ந்தனர். நேரமாகிவிட்டதால் சடங்காக வணக்கம் சொல்லிவிட்டு கட்டடத்தின் உள்ளே நுழைந்தோம்.
அந்தக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் மோவா பறவையின் மாதிரி உருவம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மோவா ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்தில் வாழ்ந்த பெரிய பறவையினம். மாவோரியர்கள் நியூசிலாந்தில் நுழையும்வரை பறக்க இயலாத இப்பறவை இனமே அந்நிலத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. மக்கள் குடியேறிய நூறு ஆண்டுகளில் வேட்டையாடி உணவாக்கப்பட்டு இன்று முற்றிலும் அழிந்துவிட்ட பறவை இனமது. இதுபோல மோரிசியஸ் தீவில் வாழ்ந்த டோடோ பறவையினத்திற்கும் நிகழ்ந்தது நினைவுக்கு வந்தது. அதுவும் பறக்க இயலாத பறவையே. இன்று நியூசிலாந்தில் மட்டும் காணக்கிடைக்கும் கிவி பறவைகளும் அழிவை எதிர்நோக்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நியூசிலாந்தில் வாழும் யாரும் கிவி பறவையைப் பார்த்திருக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது. ஒரு கோழி அளவில் உள்ள கிவியாலும் பறக்க முடியாது.
நாங்கள் பார்க்கச் சென்ற கப்பல் மணி, கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்தது. ஓர் அறையின் மையத்தில் அந்த மணி ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய இருபது பேர் அந்த மணியைச் சுற்றி அமர்ந்துகொண்டோம். அருங்காட்சியகத்தின் பொருட்களை நிர்வாகம் செய்யும் அதிகாரிகள் இருவர் எங்களுக்கு அந்தக் கப்பல் மணி குறித்து விளக்கத் தொடங்கினர். பத்திரமாகப் பெட்டிக்குள் இருந்த அந்த கப்பல் மணியை கற்பனையாக மனதில் பார்த்துக்கொண்டே அவர் விளக்கங்களைச் செவிமடுக்கத் தொடங்கினோம்.
1841ஆம் ஆண்டில் வில்லியம் கொலென்சோ (William Colenso) என்ற கிறிஸ்துவ மத போதகர், இந்த மணியை மாவோரிகளிடத்தில் கண்டார். அவர்கள் உருளைக்கிழங்கு அவிக்கும் இரும்புப் பாத்திரமாக இதனைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தனர். இந்த வெண்கல மணி பதின்மூன்று சென்டிமீட்டர் நீளமும் ஒன்பது சென்டிமீட்டர் அகலமும் கொண்டிருந்தது. மேலும் அதில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. வில்லியம் கொலென்சோ அம்மணி குறித்து விசாரித்தார். பலத்த சூறாவளியால் ஒரு பெரிய மரம் வீழ, அம்மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து இந்த மணியைத் தங்கள் மூதாதையர்கள் கண்டுபிடித்ததாக பதில் வந்தது. மாவோரிகள் தங்கள் மூதாதையர்கள் வழி கிடைக்கும் பொருட்களை பெறுமதியாகக் கருதுபவர்கள். எனவே அவர்களிடம் அந்த மணியின் தேவையைப் புரியவைத்து, பல்வேறு சிரமங்களுக்கிடையில் வேறொரு இரும்புப் பானையை அதற்கு மாற்றாக வழங்கி பண்டமாற்றம் செய்துகொண்டார். வில்லியம் கொலென்சோ மரணத்திற்குப் பிறகு அவரது சேமிப்பில் இருந்த மணி காலனித்துவ அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. பின்னர் நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டபோது மக்களிடையே நிறைய ஆர்வத்தை இம்மணி உண்டாக்கியது.
இம்மணியைத் ‘தமிழ் மணி’ என அழைக்க முதன்மைக் காரணம் இந்த மணியின்மீது பதிக்கப்பட்ட எழுத்து தமிழ் என்பதுதான். ‘முகைய்யதீன் பக்சு உடைய கப்பல் மணி’ என்று அவ்வெழுத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
1975ஆம் ஆண்டு தனது ‘The Story of the Tamil Bell’ என்ற கட்டுரைக்காக, பிரட் ஹில்டர் (Brett Hilder) என்பவர் இந்தத் தமிழ் எழுத்துகள் குறித்து வல்லுனர்களிடம் ஆலோசனை செய்தார். அதன்வழி அவர் இம்மணி சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். தமிழ்நாட்டிலுள்ள அறிஞர்களின் இந்த எழுத்துரு 17 அல்லது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கணித்துள்ளனர். ஆனாலும் நியூசிலாந்துக்குள் இந்த மணி எப்படி வந்தது என்பது தீர்க்கப்படாத புதிராகவே இன்றளவும் உள்ளது. இது கப்பல் மணி என்பதால் ஏதேனும் கரையொதுங்கிய கப்பல் வழியாக வந்திருக்கலாம், இந்தியாவுக்குச் சென்ற யார் மூலமாவது நியூசிலாந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம், மாவோரிகள் கடல் பயணம் செய்தவர்கள் என்பதால் அவர்கள் வழியாக இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம், இந்தியர்களுக்கும் மாவோரியர்களுக்கும் வணிகத் தொடர்பு இருந்தது, பல இந்தியக் கப்பல்கள் இக்காலப்பகுதியில் ஐரோப்பியர்களினால் கைப்பற்றப்பட்டன. இதனால் மூழ்கிய கப்பல் ஒன்றின் சிதைவுகள் நியூசிலாந்தில் கரையொதுங்கியிருக்கலாம் என ஏராளமான கருதுகோள்கள் மட்டுமே இந்த மணியைச் சுற்றி உலவுகின்றன.
இந்த விளக்கங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே தமிழ் மாநாட்டுக்குழு தலைவர் ரவீன் அறைக்குள் வந்தார். அனைவருக்கும் உற்சாகமாகக் கைகொடுத்தார். தொடர்ந்து கேள்வி நேரம் வந்தபோது யாரிடமும் கேள்விகள் இல்லை. ஆனால் தமிழ்ப் பெருமைகளை முன்வைக்க சிலரிடம் சில கருத்துகள் இருந்தன. மணி குறித்து விளக்கம் கொடுக்க தயார்நிலையில் இருந்த அதிகாரிகளுக்கு பார்வையாளர்கள் கொடுத்த விளக்கங்கள் எல்லாம் விழிபிதுங்கச் செய்தன. ஆனாலும் முடிந்தவரை முகத்தை சிரித்தவாரே வைத்திருந்தனர். இந்த மணி குறித்து என்னென்ன கோணங்களில் ஆய்வு செய்யலாம் என்றும் ஒருவேளை யாராவது ஆய்வு செய்தால் அருங்காட்சியகம் நிதி கொடுக்குமா என்றும் முன்வைக்கப்பட்ட கருத்தும் கேள்வியும் அவர்கள் வாழ்வில் ஒருபோதும் சந்திக்காததாக இனியும் சந்திக்கவே முடியாததாக இருந்திருக்க வேண்டும்.
இத்தனை களேபரத்துக்கு நடுவில் இதற்கு முன் இந்த மணி குறித்து என்னென்ன ஆய்வுகள் நடந்துள்ளன என நண்பர் செல்வா முன்வைத்த கேள்வி முக்கியமானது. அதன்வழி இந்த மணி குறித்து சிங்கப்பூரில் ஆய்வு செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த ஆய்வின் வழி மணி தயாரிக்கப்பட்டது பதினான்காம் நூற்றாண்டு எனவும் எழுத்து பொறிக்கப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டு எனவும் பதில் கிடைத்தது. இந்தப் பதிலின் வழி நண்பர் செல்வா, அப்படி ஒருவேளை யாரும் இதுகுறித்து ஆய்வு செய்வதென்றால் அந்த சிங்கை ஆய்விலிருந்து தொடரலாம் என்றார். கொஞ்ச நேரம் அறை அமைதி அடைந்து மீண்டும் சோழர் பெருமைகளால் நிறைந்தது.
கப்பல் மணி குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்ட பிறகு அருங்காட்சியக நிர்வாகிகள் அந்தப் பெட்டியைத் திறந்தனர். யாராவது ஒருவர் புகைப்படம் எடுத்தால் போதும் என செல்வா சொன்னார். அக்குரல் எடுபடவில்லை. பெட்டியைத் திறந்தவுடன் எல்லாரும் மணியைச் சூழ்ந்துகொண்டனர். வகைவகையாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. மணி கொஞ்சம் உடைந்து சேதமடைந்த நிலையில்தான் இருந்தது. அது வெண்கலத்தால் ஆன மணி. அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளின் வரிவடிவம் நவீன தமிழ் எழுத்துருவில் இருந்து பெரிய மாறுதல்களை அடையவில்லை. ஆனால் என்னால் அதை வாசிக்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் வேண்டுமல்லவா.
நிர்வாகிகள் கையுறை அணிந்து மணியைத் தொட்டுப் பார்க்கலாம் என்றனர். ஆனால் தமிழ் மேலும் தமிழர் பண்பாட்டின் மேலும் இருந்த தீராத வெறியால் தமிழ் மணி தூக்கப்பட்டு கைக்குக் கை மாறியது. நான் அதனை தூக்கவில்லை. அவசியமில்லை எனத் தோன்றியது. நிர்வாகிகள் அவ்வளவு களேபரத்திலும் வாயில் மென் புன்னகையை பதித்து வைத்திருந்தனர். அந்தப் பழங்காலத்து மணி கீழே விழுந்தால் அருங்காட்சியகத்துக்குப் பெரும் நட்டம். மணி கைக்குக் கை மாறிச்சென்றபடி இருந்தது.
நான் யுகேந்திரனிடம் காணாமல்போன என் பெட்டி குறித்து விசாரித்தேன். விமான நிலையத்தில் அவரது எண்களைத்தான் கொடுத்திருந்தேன். தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றார். மறுநாள் நிகழ்ச்சிக்கு அணிய என்னிடம் சட்டையில்லாததைச் சொன்னேன். நண்பர் செல்வாவிடம் ஜிப்பா இருக்கக் கூடுமென்றார். நான் செல்வாவை ஒரு தரம் ஏற இறங்கப் பார்த்தேன். நண்பர் செல்வா நல்ல உயரம். அவரது கை கால்கள் நீளமானவை. அவர் ஜிப்பாவை நான் அணிந்தால் ‘நடிகன்’ படத்தில் வெண்ணிறாடை மூர்த்தி சத்தியராஜின் ஜிப்பாவை மாட்டிக்கொண்டு “இஸ்லண்டு எஸ்டேட் எங்க இருக்கு?” என ஆவிபோல திரிந்த கதையாகிவிடும் என பயமாக இருந்தது. பார்த்துக்கொள்ளலாம் என அமைதியாகிவிட்டேன்.
எல்லோரும் பார்த்து ஓய்ந்தபிறகு மணி பழைய இடத்திற்குத் திரும்பியது. யாரும் இனி தன்னைச் சீண்டப்போவதில்லை என்ற நிலைக்கு வந்தபிறகு ஒரு மாவோரி பெண் அம்மணியை ஒரு குழந்தையைத் துக்குவதுபோல தூக்கினார். அதுவும் அழகாக அவர் கைகளில் தவழ்ந்தது. மாவோரிகளுக்கே உரிய மரபில் அம்மணியைப் பார்த்து ஒரு பாடல் பாடினார். அந்த மணி அந்நிமிடம் உயிர் பெற்றது. தன் மேல் பூசப்பட்ட அத்தனை தமிழ்ப் பெருமைகளையும் உதறித் தள்ளிவிட்டு ஒரு மாவோரிப் பெண்ணின் உருளைக்கிழங்கு அவிக்கும் இரும்புப் பானையாக தன்னைச் சட்டென உருமாற்றிக்கொண்டது. அதுவே தனக்கு நிம்மதியும் பெருமையும் என்பதுபோல அவளுக்குள் புதைந்துகொண்டது. அந்தப் பெண் மணியை மீண்டும் பத்திரமாக பெட்டியில் வைத்தபோது நான் கீழ்த்தளம் இறங்கினேன்.
மீண்டும் மோவா பறவையைப் பார்த்தேன். வலுவான பறவை, பறக்க முடியாததால் முற்றழிவை எதிர்கொண்டது. வலுவான மரபைப் பேசிக்கொண்டே இருந்தால் அது ஒரு காலத்தில் அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாகத்தால் கிடைக்கும். அது கலையாக மாறி கனமற்றுப் பறக்கும்போதுதான் காலத்தால் நிலைக்கக்கூடும் என்பதற்கான படிமமாக அப்பறவையை வைத்திருக்கிறார்களோ என்னவோ.