க்யோரா 4: வண்ணங்களின் உலகம்

நியூசிலாந்துப் பயணம் உறுதியானபோது, நான் பார்க்க ஆசைப்படுவதாக தங்கவேலிடம் விரும்பிக்கேட்ட இடம் ஒரு தொடக்கப்பள்ளி. நான் செல்லும் நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு பள்ளிக்குச் சென்று பார்த்திருக்கிறேன். அனுமதி கேட்டு அங்குள்ள பாட நூல்களை எடுத்து வந்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் மனம் தொடக்கப்பள்ளியில்தான் வடிவமைக்கப்படுகிறது. அதை ஒவ்வொரு நாடும் எவ்வாறு திட்டமிட்டு உருவாக்குகிறது, தன் குடிமக்களின் மனம் எவ்வாறு இயங்க வேண்டும் என ஓர் அரசு விரும்புகிறது என்பதை தொடக்கப்பள்ளிக்குச் செல்வதன் மூலம் அறியலாம்.

போர் நினைவு சதுக்கத்தின் அருகில்தான் தங்கவேலுவின் குழந்தைகள் பயிலும் தொடக்கப்பள்ளி இருந்தது. மலேசியாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் போல தங்கவேல் அப்பள்ளி நிர்வாகத்தில் ஒரு பொறுப்பில் இருந்தார். அப்பள்ளியின் பெயர் Mt Cook School.

நான் தங்கவேலுவைச் சரியாகப் புரிந்துகொண்டது அங்குதான். அவரது உடல் மொழி, பேச்சு, செயல் என அனைத்துமே நியூசிலாந்து வாழ்வியலுக்கு ஏற்ப இயங்கியது. பணிவு, பாராட்டும் குணம், சிறிய செயல்களில் வியக்கும் பண்பு என அவர் பிற ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் உரையாடுவதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். உச்சரிப்பில் இந்திய சாயல் இல்லை. பொதுவாக தமிழர்கள் சத்தமிட்டுப் பேசக்கூடியவர்கள். நமது உச்சரிப்பை மலேசியாவில் இன்னொரு சமூகம் பாவனையாகச் செய்துகாட்டும்போது தலையை ஆட்டியபடி ‘ற’ எனும் எழுத்தை அதிகம் அழுத்திச்சொல்வதைக் காணலாம். அது கேலியல்ல. அவர்கள் தமிழர்களை அவ்வாறே முதல் பார்வையில் உணர்ந்துகொள்கின்றனர். மலேசியாவில் மலாய்க்காரர்களின் மொழி மென்மையானது. ஒருவகையான வாட்டம் கொண்டது. அவர்களின் பண்பாட்டை அறியும்போதே அத்தகைய மொழி வடிவம் ஒரு தமிழனுக்குக் கைகூடி வரும். அதுவே நல்லிணக்கத்தை உருவாக்கும்.

Mt Cook School பள்ளி வளாகத்தில் நுழைந்தபோது நான் இரண்டு ஆச்சரியங்களை எதிர்கொண்டேன். முதலில் குழந்தைகள் பள்ளிச்சூழலில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தனர். இரண்டாவது ஆசிரியர்களும் கூடுதல் உற்சாகத்தோடு இயங்கினர். கோப்புகளைத் தூக்கிக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியரையும் ‘என்னைய இங்கன புடிச்சி தள்ளுறீங்களேடா பாவிகளா’ எனும் கலங்கிய கண்களுடன் பள்ளியில் நுழையும் மாணவர்களையும் பார்க்க முடியவில்லை. விருப்பமான உடையில் பள்ளிக்கு வரவும் விரும்பும் வகையில் சிகையலங்காரம் செய்துகொள்ளவும் பள்ளியில் அனுமதி இருந்தது. ஒரு சிறுவன் எங்களைக் கடந்து ஓடிச்சென்றான். காதுகளை மறைத்த அவனது செம்பட்டை கேசம் காற்றில் அலைவதை ஏக்கமாகப் பார்த்தேன்.

பள்ளி என்பதுதான் எத்தனை வண்ணமயமானது. மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தும் குழந்தைகள் குழுமும் ஓர் இடம் எத்தனை ஆர்வமூட்டக்கூடியது. பல்வேறு சிரிப்புகளும் விளையாட்டுத்தனங்களும் உள்ள ஓர் மையம் எத்தனை ஆனந்தமானது. அப்பள்ளி இதைதான் உணர்த்திக்கொண்டிருந்தது.

மாணவர்கள் காலையில் வந்தவுடனே தங்களுக்குள் விளையாட்டைத் தொடங்கி விடுகின்றனர். “ஏய் ஓடாத கீழ உழுந்துடுவ” எனச் சொல்ல அங்குத் தண்டல்கள் என யாரும் இல்லை. மாணவர்கள் அவரவர் உலகத்தில் இருந்தனர். பள்ளி காலை ஒன்பது மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே உறக்கம் போதாமை இல்லை.

புத்தகப்பை மாட்டும் இடம்

தங்கவேல் என்னை ஒவ்வொரு வகுப்பாக அழைத்துச் சென்றார். சில ஆசிரியர்களிடம் அறிமுகப்படுத்தினார். வகுப்பறைகளுக்கு வெளியே புத்தகப் பைகளை மாட்ட ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் அதிகமான புத்தகங்கள் இல்லை. மாணவர்களின் கற்றல் செயல்பாடு, நூல்களைச் சார்ந்ததாக இல்லை எனப்புரிந்தது. எல்லா வகுப்பிலும் நான் கண்டவை மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள். ஓவியங்களே மொத்தப் பள்ளியையும் நிரப்பி இருந்தன. அறிவியல் போதிக்க தயார் செய்துகொண்டிருந்த ஆசிரியர் ஒருவரின் ஏற்பாடுகள் கலைத்திறன் வழியாகவே வடிவமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

தலைமை ஆசிரியர் Adrianne McAllister உடன்

தங்கவேல் என்னை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றார். தலைமை ஆசிரியர் பெயர் Adrianne McAllister. அவர் மௌரியர் என்பதற்கு அடையாளமாக தாடையில் குலச்சின்னம் பச்சை குத்தப்பட்டிருந்தது. கழுத்தில் ‘ஹேய் திகி’ (Hei Tiki) பதக்கம். அது பூனமு (pounamu) என்ற பச்சைக்கல்லில் அமைந்திருந்தது. மாவோரிகள் குறித்து விரிவாக எழுதும் பகுதியில் இது குறித்து விளக்குகிறேன். இப்போது பள்ளிச் சூழலுக்கு வருவோம்.

தலைமை ஆசிரியர் அறை தொடங்கி அலுவலகத்திலும் மாணவர்கள் வரைந்த ஓவியங்களைக் காண முடிந்தது. அது குளிர் தேசம் என்பதால் காகிதங்களில் விரைவாக நிறம் மாறுவதில்லை. எனவே அனைத்தும் புதுமையாகத் தெரிந்தன. தலைமை ஆசிரியர் ‘க்யோரா’ எனச் சொல்லி வரவேற்றார். பலவிதமான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். சிந்தித்தல் திறன், மொழி அல்லது குறியீடுகளின் பயன்பாடு, சுய நிர்வாகம், சமூகத்துடன் இணைந்து வாழ்தல், பங்கேற்றல் அல்லது பங்களித்தல் இவையே நியூசிலாந்து கல்விக் கோட்பாடுகள். இவற்றை அடிப்படையாகக் கொண்டே அங்கு பாடங்கள் நடக்கின்றன. மனனம் செய்யும் தொந்தரவுகள் இல்லை. ஆனால் சிந்திக்கக் கற்பிக்கப்படுகிறது. வாசிப்பு வலியுறுத்தப்படுகிறது. பத்து வயது மாணவனால் முன்னூறு பக்க நூலை வாசித்து முடிக்கக்கூடிய வாசிப்புப் பயிற்சி அது. தங்கவேலின் மகனே அதற்கு உதாரணமாக இருந்தான்.

நான் ஒருவாரத்திற்கு எத்தனை நிமிடங்கள் ஒரு ஆசிரியருக்கான போதனை நேரம் என வினவினேன். அவர் பதில் சொல்வதற்கும் எனக்கு 900 நிமிடங்கள் என்றேன். “என்ன!!!” என்று அவர் அதிர்ச்சியடைந்தார். கட்டைவிரலால் கழுத்தை அறுத்துக்கொள்வதுபோல செய்கை காட்டினார். அவரால் அதை நம்ப முடியவில்லை.

தலைமை ஆசிரியர் மறுபடியும் எங்களை முறையாக ஒவ்வொரு வகுப்புக்கும் அழைத்துச் சென்றார். எதிர்ப்படும் ஆசிரியர்களிடமெல்லாம், ஒரு வினோத நோயாளியைப் பரிதாபத்துடன் அறிமுகம் செய்து வைப்பதுபோல “இவர் மலேசிய ஆசிரியர். இவரது பாட நேரம் ஒரு வாரத்திற்கு 900 நிமிடமாம்” எனச் சொல்ல அவர்களும் ‘ஐயோ பாவம் யார் பெத்த பிள்ளையோ’ என்பதுபோல பரிதாபமாகப் பார்த்தனர்.

வகுப்பறை காட்சி

ஓர் ஆசிரியர் தொலைக்காட்சியின் வழி பாடம் போதித்துக்கொண்டிருக்க ஒரு மாணவி படுத்த நிலையில் பாடம் கேட்டுக்கொண்டிருந்தாள். எனக்கு அது அதிர்ச்சியாகவே இருந்தது. என் மலேசிய ஆசிரியர் மனம் துடியாய் துடித்தது. ஆனால் தலைமை ஆசிரியர் அவரவர் விரும்பும் வகையில் அவரவர் பாடம் கேட்கலாம் என என்னை ஆற்றுப்படுத்தினார். இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு அனுபவங்கள். எந்த வகுப்பிலும் மாணவர்கள் மாயக்கயிற்றால் கட்டிப்போடப்பட்டு வகுப்பறை முன்புறம் மட்டுமே பார்க்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படவில்லை. யாருடைய உடலும் இராணுவப் பயிற்சி போல விரைப்பாக இல்லை. கலைந்திருந்த ஒழுங்கில் அனைத்துப் பாடங்களும் நடந்தன.

சமையல் பாடம்

சமையல் பாடத்தில் சமையல் செய்யப்பட்டது. மரவேலை பாடத்தில் மரவேலைகள் நடந்தன. விளையாட்டுகள் வழி வாழ்வியல் போதிக்கப்பட்டது. எல்லாப் பாடங்களும் அனுபவங்களாக மாற்றப்பட்டிருந்தன. அனுபவங்கள் விவாதிக்கப்பட்டன. விவாதிப்பதற்கான மொழியும் பண்பும் போதிக்கப்பட்டிருந்தன. விவாவதங்களின் வழியாகவே அறிதல் நிகழ்ந்தது.

ஆசிரியரின் நாய்

பள்ளியைச் சுற்றி வந்தபோது ஓரிடத்தில் நாய் ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு ஆசிரியரின் நாய். வீட்டில் பாதுகாக்க ஆள் இல்லாததால் பள்ளியில் கட்டிப்போட்டிருந்தார். மாணவர்கள் அதனிடம் விளையாடிக்கொண்டிருந்தனர்.

எனக்கு ஒரு பள்ளி எதைச் செய்ய வேண்டும் என Mt Cook School உணர்த்தியது. பள்ளி சமூகத்தில் நடமாடக்கூடிய மனிதனை உருவாக்குகிறது. அதை ஆதாரமாகக்கொண்டே பிற அனைத்துத் திறன்களும் புகுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் அனுபவமாகக் கற்கக்கூடிய மாதிரி உலகமே பள்ளிக்கூடம்.

  • தொடரும்

க்யோரா 1: காணாமல் போன கதை

க்யோரா 2: குளிர் நிலம்

க்யோரா 3: மகத்துவமாகும் குற்றங்கள்

(Visited 131 times, 1 visits today)