க்யோரா 2: குளிர் நிலம்

தங்கவேல் மற்றும் ரவீனுடன்

வெலிங்டன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது நண்பர் தங்கவேல் மற்றும் ரவீன் காத்திருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நியூசிலாந்து தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக சிறுகதைப் பயிலரங்கு ஒன்றை நடத்தியபோதே தங்கவேலுவை அறிவேன். திருநெல்வேலிக்காரர். நல்ல இலக்கிய வாசகர். அந்தப் பயிலரங்கில் ஆர்வமாகப் பங்கெடுத்தார். சிறந்த புனைவுகளைத் தேடி வாசிப்பவராக இருந்தார். நேரில் பார்த்தபோது இணையச் சந்திப்பில் பார்த்ததைவிட இளமையாகத் தெரிந்தார். அவர் கையில் என் பெயர் பொறித்த பலகை இருந்தது. அதில் ‘நியூசிலாந்து தங்கள் அன்புடன் வரவேற்கிறது’ எனும் வாசகம். ரவீன் நான் கலந்துகொள்ளும் தமிழ் விழாவை ஏற்பாடு செய்துள்ள தமிழ் சங்கத்தின் தலைவர்; மலேசியர்.

பெட்டி காணாமல் போய்விட்டதை சொல்லிக்கொண்டே அவர்கள் கொடுத்த வரவேற்பு மலர்கொத்தை வாங்கிக்கொண்டேன். இருவரும் சற்று அதிர்ச்சி அடைந்தனர். நான் இயல்பாக இருப்பது காரணமாக இருக்கலாம். பொதுவாகவே நான் எந்தச் சிக்கலின் முடிவையும் கற்பனை செய்து பார்த்துவிடுவேன். பெரும்பாலும் முடிவை நோக்கிய பயணங்களே நம்மை கலங்கடிக்கின்றன. முடிவுகள் எப்போதும் எளிதானவை. ஒரு சவர்க்கார நுரைபோல சத்தமின்றி உடையக்கூடியவை.

என் பெட்டியில் நூல்களும் உடைகளும் மட்டுமே இருந்தன. உடைகளை புதிதாக வாங்கிக்கொள்ளலாம். நூல்களை நினைத்துதான் கவலையாக இருந்தது. பின்னர் எவ்வளவு தாமதமாக பெட்டி வந்து சேர்ந்தாலும் நூல்களை மீட்டுவிடலாம் எனும் நம்பிக்கையில் ஒருவாறு தேற்றிக்கொண்டேன்.

வெலிங்டன் விமான நிலையத்தின் மையத்தில் இரண்டு ராட்சதக் கழுகுகள் பறப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருந்தன. இறக்கையை விரித்த நிலையில் பதினாங்கு மீட்டர் அகலம் இருந்த அவை ஒவ்வொன்றும் ஒரு டன் எடை. The Hobbit திரைப்படத்தில் வரும் காட்சி அது. அப்படத்தின் இயக்குனரான பீட்டர் ஜாக்சன் வெலிங்டனைப் பூர்வீகமாகக்கொண்டவர் என்பதால் அந்த கழுகுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு நாடு எப்படியெல்லாம் தங்கள் தேசத்து உயர் கலைஞனை கௌரவம் செய்கிறது என நினைத்துக்கொண்டேன்.

ராட்சத கழுகுடன்

மூவரும் அமர்ந்து காப்பி பருகினோம். சடங்கான உரையாடல்கள். ரவீன் தனக்குள் ஏதோ சிந்தித்துக்கொண்டே இருந்தார். சிந்தனைக்கு நடுவில் சில கேள்விகள் கேட்டு மீண்டும் நினைவுகளுக்குள் முங்கிகொண்டார். பெரிய நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துபவர்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருப்பார்கள். மலேசியரான ரவீன் நியூசிலாந்தில் குடியேறி தன்னை வலுவாக நிறுவிக்கொண்டிருந்தார். மலேசியத் தேர்தல் நிலவரங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.

கீரைகளை கலந்து செய்த ஏதோ பலகாரம் ஒன்று சாப்பிட்டேன். அதில் கசப்பு இருந்ததால் பாதியிலேயே வைத்துவிட்டேன். அதை பார்த்த தங்கவேல் “நீங்க சாப்பிடலனா நான் சப்பிட்டுவிடவா?” என்றவர் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார். இதை சொல்லக் காரணம் உள்ளது. அது தொடரின் இறுதிப் பாகங்களில் வரலாம்.

கொஞ்ச நேரத்தில் ஹேமா மாலினி மற்றும் யுகேந்திரனும் ஆக்லாந்திலிருந்து வெலிங்டன் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். ஹேமா மாலினியை நான் என் மாணவர் பிராயத்திலேயே அறிவேன். அப்போது அவர் சிங்கை வானொலியில் பிரபல அறிவிப்பாளர். ‘ஜாலிலோ ஜிம்கானா’ எனும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அன்றைய மலேசிய வானொலியின் அறிவிப்பாளர்கள் இராணுவக் கட்டொழுங்குடன் வானொலியில் பேசிக்கொண்டிருக்க ஹேமா மாலினியின் உற்சாகமான அறிவிப்புகள் பலரையும் சிங்கை வானொலி பக்கம் ஈர்த்தது. என் அவதானிப்பில் வானொலி நேயர்களையும் ஈடாகப் பேச வைத்து, சிரிப்புச் சத்தத்தை அதிகம் ஒலிபரப்பியவர் ஹேமா மாலினி. ஆனால் மலேசியவாசியான நான் அவரது நிகழ்ச்சியைக் கேட்க பெரும் சிரத்தை எடுக்க வேண்டும். மதியம் மூன்று மணியானால், அதுவரை வீட்டில் யாராவது கேட்டுக்கொண்டிருக்கும் வானொலியை என் வசமாக்கி, மெல்ல மெல்ல திருகி, சிங்கை வானொலி ஒலிபரப்பு கிடைக்க பெரும் போராட்டம் செய்ய வேண்டியதாக இருக்கும். விசை முள் கொஞ்சம் தவறினாலும் இரைச்சல் தொடங்கும். சில சமயம் வானொலி கம்பியைக் கையில் பிடித்தால் மட்டும் இரைச்சல் இருக்காது.

ஹேமா மாலினியைப் பார்த்து மென்மையாகச் சிரித்து வணக்கம் சொன்னேன். அவர் கணவர் யுகேந்திரனிடம் பெட்டி காணாமல் போனதைச் சொன்னேன். எப்படியோ புதியவர்களிடம் முதல் சந்திப்பில் பேசி வைக்க எனக்கு ஒரு விசயம் கிடைத்திருந்தது. “ரோடு சரியான டிராப்பிக் ஜேம்” , “இது நல்ல மழக்காலமுல்ல” என்பதுபோல.

“சில சமயம் பெட்டி வர ஒரு வாரம்கூட ஆகலாம்” என்றார் ஹேமா மாலினி. பகீர் என்றது. புறப்படும்போது ரவீன் “நாளைக்கு கட்டாயம் ஜிப்பா வேட்டி போட்டு வாங்க” என்றார். அவர் தொடக்கம் முதலே அதை வலியுறுத்தி வந்தார். தமிழுக்கும் ஜிப்பாவுக்கும் அவர் ஏதோ தொடர்பை கண்டிருக்க வேண்டும். பெட்டியைத் தொலைத்த நான் ஜிப்பாவை எங்கே தேடுவது. ஜீன்ஸ் டி- சட்டையுடன் இறங்க வேண்டியதுதான் என முடிவெடுத்துக்கொண்டேன். எல்லாரிடமும் விடைபெற்று தங்கவேலுவுடன் புறப்பட்டேன்.

தங்கவேல் என் வருகையை ஒட்டி மூன்று நாட்கள் விடுப்பு எடுத்திருந்தார். நியூசிலாந்து வங்கியில் கணினி நிபுணராக வேலை செய்கிறார். எனக்கு அது பெருத்த நிம்மதியைக் கொடுத்தது. அவரது எஸ்திமா காரில் ஏறியது முதல் வெலிங்டன் பயணம் ஆரம்பமானது.

வெலிங்டன் எனக்கு தைப்பிங் நகரத்தை நினைவு படுத்தியது. பரபரப்பில்லாத சாலைகள். உயரமான கட்டடங்கள் என எங்கும் இல்லை. எங்குப் பார்த்தாலும் பச்சை படர்ந்த மலை கண்ணுக்குத் தெரிகிறது. இந்நாட்டுக்குச் செல்பவர்கள் ஐரோப்பிய நாட்டுக்குள் நுழையும் மனநிலையுடன் சென்றால் ஏமாற்றமே ஏற்படும். நியூசிலாந்து தனி பூகோள அமைப்பு கொண்ட நிலம்.

ஒரு குடியிருப்பு பகுதி

முதலில் தங்கவேல் வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். போகும் வழியில் Ruth Gotlieb நூலகம் சென்றோம். அது தங்கவேல் வழக்கமாகச் செல்லும் நூலகம். சில தமிழ் நூல்கள் இருந்தன. Ruth Gotlieb என்பவர் வெலிங்டனில் வாழ்ந்த அரசியல் தலைவர். சில நிமிடங்கள் அங்கு செலவிட்டப் பிறகு தங்கவேல் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் வீடு ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தது. அந்த அடுக்குமாடியின் புற அமைப்பு இங்குள்ள மலிவு தங்கும் விடுதிகள் பாணியில் அமைந்திருந்தது. வாசல் என எதுவும் இல்லை. சராசரி உடலமைப்பு கொண்ட இருவர் கொஞ்சமாக உரசி நடக்கும் அளவில் பொது நடைப்பாதை இருந்தது. ஆனால் எங்கும் தூய்மை.

இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடு தங்கவேலுவுடையது. அவரது இரண்டு குழந்தைகள் அந்த வீட்டை அழகாக்கி இருந்தனர். மூத்தவன் நவிலன். இளையவள் நாயகி. கொஞ்ச நேரம் அமர்ந்து என்னென்ன பொருட்களை அவசியமாக வாங்க வேண்டுமென பட்டியலிட்டோம். அதிகம் இல்லை. அவர் மனைவி தேவி சில பலகாரங்களைக் கொடுத்து உபசரித்தார். அவர் பாலர் பள்ளி ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிகிறார். கொஞ்ச நேரத்தில் பொருட்களை வாங்க புறப்பட்டோம்.

நியூசிலாந்து குளிர் தேசம் என்பதால் அங்கு உடைகள் விரைவில் கெடுவதில்லை. எனவே பயன்படுத்திய உடைகளை விற்பனை செய்யும் கடைகள் ஆங்காங்கு உள்ளன. மக்கள் அவற்றை சகஜமாக வாங்கி அணிந்துகொள்வதும் உண்டு. நான் அந்த மாதிரியே வாங்கிக்கொள்கிறேன் என்றேன். சின்ன வயதில் அப்படி பயன்படுத்தப்பட்ட உடைகள் இலவசமாகக் கிடைத்தால் அணிந்துகொண்டதுண்டு. அவை என் உடலுக்கு ஏற்றதாக இல்லாமல் தொளதொளவென தொங்கினாலும் புதியதாக ஒன்றை அணியும்போது ஏற்படும் உற்சாகம் இருக்கும். நன்றாக இருக்கும் உடையை ஏன் ஒருவர் வீசி எறிகிறார்? பல காரணங்கள் இருந்தாலும் முதன்மையானது ஒருவருக்கு உவக்காத நினைவுகள் அந்தச் சட்டையில் இருக்கலாம். நாம் அதை வாங்கி அணிவதன் மூலம் அச்சட்டைக்குள் புதிய நினைவுகளை ஏற்றுகிறோம். அது நீடித்து வாழ உதவுகிறோம்.

தங்கவேல் ஒரு பேரங்காடியைக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றார். உள்ளதில் மலிவானதாகத் தேடி கண்டுபிடித்தேன். கண்களால் அளந்தவை எல்லாமே அணிந்து பார்த்தபோது பொருந்தியது. அங்கு ஆக மலிவான விலை என்பதே மலேசிய தொகைக்குக் கணக்கு செய்தால் ஆடம்பரம்தான். மொத்தமாக எண்பது டாலர் வந்தது. மலேசிய தொகைக்கு 200 ரிங்கிட்டுக்கு மேல். என் பணப்பையை எடுக்கவிடாமல் தங்கவேலுவே அத்தொகையைச் செலுத்தினார். \

பயணம் முழுக்க தங்கவேலிடம் நியூசிலாந்து குறித்தே பேசித்தெரிந்துகொண்டேன். எளிதாக இப்படிப் புரிந்துகொள்ளலாம். வடக்கு – தெற்கு என இரு தீவுகளைக் கொண்டது நியூசிலாந்து. எனவே இது ஒரு தீவு நாடு. மனிதர்கள் ஆகக்கடைசியாகக் குடியேறிய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. 1250களில் மாவோரி கலாசாரத்தைக் கொண்ட மக்கள் பல்வேறு தீவுக்கூட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்து இந்நிலத்தை அடைந்தனர். அதன் பின்னர் ஐரோப்பியர் வருகை நிகழ்கிறது. 1840 இல் பிரித்தானிய அரசும் மவோரியரும் வைத்தாங்கி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி நியூசிலாந்தை பிரித்தானியக் குடியேற்ற நாடாக்கினர். வைத்தாங்கி ஒப்பந்தத்தை பற்றியெல்லாம் அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாகப் பார்க்கலாம். இப்போதைக்கு நியூசிலாந்தில் மாவோயர்கள் சிறுபான்மையினர். அதிகாரம் ஆங்கிலேயர்களிடமே உள்ளது. இந்நாட்டின் ஐக்கிய இராச்சியத்தின் அரசர் என்ற வகையில் இங்கிலாந்து மன்னரே நியூசிலாந்தின் நாட்டுத் தலைவர். இவரது சார்பில் ஆளுநர் ஒருவர் நியூசிலாந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுவாரசியமாக நாட்டு நிலவரங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் செல்வா அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் இரவுணவு உண்ணாமல் எங்கள் வருகைக்காகக் காத்திருந்தார். நாங்கள் சென்றபோது இரவு மணி 8 இருக்கும். நல்ல குளிர். நியூசிலாந்து தென் துருவத்திற்கு அருகில் உள்ள நாடு என்பதால் காற்று மோதும்போதெல்லாம் கை நடுங்குகிறது.

கதவைத் தட்டியபோது செல்வா அவர்கள் கதவைத் திறந்தார். முகநூலில் பார்த்த அதே உற்சாக புன்னகை.

(Visited 142 times, 1 visits today)