க்யோரா 1: காணாமல் போன கதை

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிட்னி விமானத்தில் ஏறி அமர்ந்தபோதுதான் எனக்கு நடு இருக்கை எனத் தெரிந்தது. கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது சன்னல் ஓர இருக்கை கிடைத்தது. ஆனால் ரசிப்பதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. மலேசியாவைக் கடக்கும்போது தொழுநோய் போன்ற செம்பனை திட்டுகள். சிங்கப்பூரில் இறங்கும்போது கட்டடக்காடுகள். சன்னல் ஓர இருக்கை கிடைப்பது பெரிதல்ல; அது எங்கு கிடைக்கிறது என்பதுதான் தலைவிதி.

என் இரு பக்கமும் வடநாட்டு இந்தியர்கள் அமர்ந்திருந்தனர். இடதுபுறம் அமர்ந்திருக்க பெண் முகத்தைக் கடுகடுவென வைத்திருந்தார். விமானத்தில் கொடுத்த சிறிய தலையணையைக் கொண்டு எனக்கும் அவருக்கும் நடுவில் அணை அமைத்துக்கொண்டார். வலது பக்கம் அமர்ந்திருந்த முதியவர் அன்பாக ஓரிரு வார்த்தைகளைப் பேசிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். எனக்கும் கண்கள் செருகின. ஆனால் தூங்கும்போது அந்த பெண் உருவாக்கி வைத்துள்ள தலையணை அரணை தகர்த்துவிடுவேனோ என தயக்கம் இருந்ததால் கண்களை மட்டும் மூடி வைத்துக்கொண்டேன். இதுதான் தலையணை மந்திரம்போல. ஒரு தருணத்தில் சோர்வில் முதுகு சரிந்ததால் நிமிர்ந்து அமர இரண்டு பக்கமும் கைகளை ஊன்றியபோது ‘ஷ்ஷ்ஷ்’ எனச் சலித்துக்கொண்டார்.

ஒருவன் நிமிர்ந்து அமர்வது அவ்வளவு பெரிய தவறா என்ன? இது தமிழ் தேசியவாதிகளுக்குத் தெரிந்தால் தமிழன் முதுகு நிமிர வடநாட்டவன் தடைவிதிப்பதா என பொங்கிவிட மாட்டார்களா என்ன? ஆனால் எனக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. ஏறக்குறைய எட்டு மணி நேர பயணத்தில் அந்தப் பெண்ணும் கழிப்பறை செல்ல வேண்டியிருந்தது. நான் கண்களை மூடிக்கொண்டு சாய்ந்திருந்தேன். அந்தப் பெண் அதிசயமாக வலது பக்கம் திரும்பி குருகுருவென பார்த்தது தோலை துறுத்தியது. அதெப்படி கண்களை மூடினால் துறுத்தும் என்றால், துருத்தும். அதுவும் பெண்கள் பார்த்தால் நன்றாகவே துறுத்தும்.

நானும்தான் கழிப்பறை போகவேண்டியிருந்தது. ஆனால் நான் வெளியேறினால் அப்பெண்ணுக்கு இலகுவாகிவிடும் என கட்டுப்படுத்தி காத்திருந்தேன். எனக்கு ஆத்திரத்தை அடக்குவது மட்டும்தான் பிரச்சினை. ஒரு கட்டம் முதியவர் வெளியேறவும் அந்தப் பெண் எழுந்து நின்றார். நான் கண்களை மூடியபடியே அமர்ந்திருந்தேன். மனதில் ‘இது என் திருவிளையாடல்களில் ஒன்று’ எனச் சொல்லிக்கொண்டேன்.

அந்தப் பெண் “எஸ்கியூஸ்மி” என்றதும் கண்களைத் திறந்து, கனிவுடன் பார்த்து இருக்கையில் இருந்து வெளியேறி பின்னால் இருந்த இன்னொரு கழிப்பறைக்குள் அவருக்கு முன்பே நான் சென்று புகுந்துகொண்டேன். “யெஸ்” என வெற்றிக்குறி காட்டா அதன் சுற்றளவு போதுமாக இருந்தது. நமக்கு இன்னொருவரின் தேவை எப்போதுமே உண்டு. “எனக்கு யாரும் தேவையில்ல” எனச் சொல்பவர்களையும் பகைமையை நீட்டிக்க விரும்புபவர்களையும் பார்த்துள்ளேன். அவர்களிடம் எப்போதும் இருள் படர்ந்து இருக்கும். மன அழுத்தங்கள் நிறைந்த மனிதர்களாகவே அவர்களை அறிந்து வைத்துள்ளேன். அதை மறைக்க அலட்சியமும் வீராப்பும் சொற்களில் முளைத்தெழும். வேறு வழியில்லை. அவர்கள் உருவாக்கிக்கொள்ளும் இருளில் அவர்களே மூழ்கிச்சாக வேண்டியதுதான். இன்னொரு மனிதர் இல்லாமல் இந்த உலகில் வாழ்வதென்பது இயலாத காரியம். தன் இருக்கையில் இருந்து வெளியேற கூட இன்னொருவரின் ஒப்புதல் அவசியமாக உள்ளது என அவர் புரிந்துகொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் காலம் அதனை கற்பிக்கும்.

வெளியேறியபோது அந்தப் பெண் திரும்பியிருக்கவில்லை. நானும் முதியவரும் நின்றபடி காத்திருந்தோம். விருட்டென வந்த பெண் சட்டென தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள். நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டோம்.

நிம்மதியாக இருந்தது.

ஆனால் விமான பயணங்கள் அப்படியெல்லாம் யாரையும் நிம்மதியாக விட்டுவைப்பதில்லை. சிட்னி இறங்கியவுடன் குறைந்தது எண்பது பேர் நின்ற நீண்ட வரிசையில் நிற்க வேண்டி வந்தது. நீண்ட வரிசையில் நிற்பது ஒன்றும் சிக்கல் இல்லை. வரிசையில் நீளம் குறைவாக இருந்தபோதே நான் அங்குச் சென்று சேர்ந்திருந்தேன். ஆனால் இதுதான் நான் நிற்க வேண்டிய வரிசையா எனச் சந்தேகம் வந்து, அதை தெளிவுப்படுத்தி திரும்புவதற்குள் பத்து மடங்கு நீளமான வரிசையாக மாறியிருந்தது. இனி வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் என் முகம் இருக்கும் என்பதுபோன்ற முற்றிலும் மலர்ந்த முகத்துடன் நடந்துகொண்டிருந்த ஓர் பெண் அதிகாரியிடம் மீண்டும் டிக்கெட்டை காட்டி இங்குதான் நிற்க வேண்டுமா என விசாரித்தேன். அவள் அதே முகத்துடன் “ஆம்” என்றாள். மெல்ல மெல்ல கடந்த சோதனைப் பகுதியைக் கடந்தேன். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டு பயணிகள் வழி வரும் தாவரங்களையும் மாமிசங்களையும் அனுமதிப்பதில்லை. காலணியில் மண் ஒட்டிக்கொண்டிருப்பதையும் கடுமையாகச் சோதிக்கின்றனர். ஆஸ்திரிலிய கண்டம் தனித்த இயற்கைச் சமநிலையையும் அதற்கே உரிய சுழற்சியையும் கொண்டது. வெளியில் இருந்து நுழையும் ஏதாவது ஒரு உயிரினம் இந்த சுழற்சியை குழைக்கக் கூடும் என்பதில் எச்சரியாக உள்ளனர்.

வெலிங்டனுக்குள் நுழைய எல்லை அனுமதி சிட்டையை இன்னும் எடுக்கவில்லை. எனவே விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். அவரும் விசாரித்து “55ஆவது வாயிலுக்கு செல்” என்றார். அவர் ‘கேட்’ (Gate) என்பதை ‘காட்’ என உச்சரித்தார். ஆஸ்திரிலியர்கள் அப்படித்தான் உச்சரிப்பார்கள் போல. ஏன் நான் பாதுகாவலரைத் தேடிச் செல்ல வேண்டுமென விழிபிதுங்கி நிற்கவும் என் மேல் இரக்கம் கொண்டவராக தான் சொன்னதைப் பொறுமையாக எழுதிக்கொடுத்தார். ‘பாவம் மக்குப்பயல்’ என நினைத்திருக்கக் கூடும். தாமதமாகிவிட்டதோ என்ற பயத்துடன் 55ஐ தேடி ஓடினால் அது நான் செல்லும் விமானம் அல்ல என்றனர். எனக்கு எப்போதும் ஒரு அதிஷ்டம் உண்டு. எல்லாருக்கும் ஒன்று நடக்கும்போது எனக்கு மட்டும் ஏதோ தலைகீழ் வினையாக நடந்து முடியும். மருத்துவமனையில் காத்திருக்கும்போது மற்றா அனைவருக்கும் அனைத்தும் கடகடவென நடக்கும். என் முறை வரும்போது மட்டும் மருத்துவர் மதிய உணவுக்குப் போயிருப்பார். நான் காத்திருக்க வேண்டியிருக்கும். மீண்டும் விசாரித்து 54ஆவது எண்ணில் சென்று எல்லை கடக்கும் சிட்டையை எடுத்தேன். அந்த அதிகாரி உற்சாகமாகப் பேசினார். நியூசர்லாந்துகாரர். எனக்கு முன் சென்ற பிற நியூசர்லாந்து பிரஜைகளிடம் “க்யோரா” என்றார். அப்படியென்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. சிக்கலில்லாமல் விமானத்தில் அமர்ந்தேன்.

சிட்னியிலிருந்து வெலிங்டனுக்கு மூன்று மணி நேர பயணம். ஆனால் என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இரண்டு இருக்கைகளும் காலியாக இருந்தன. எனவே தாராளமாக உடலைத் தளர்த்திக்கொண்டேன். விமான ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உபசரித்தனர். எனக்கு நியூசர்லாந்து பயணத்தில் ஒரு நம்பிக்கைப் பிறந்தது.

அந்த விமானத்தில் ஒரு சேவை இருந்தது. நம் முன் இருக்கும் திரை வழியாக வேறு இருக்கையில் உள்ளவரிடம் ‘சாட்’ செய்யலாம். முன் இருக்கையில் உள்ள இளைஞன் உற்சாக சிரிப்புடன் சிலரைச் சீண்டிக்கொண்டிருந்தான். பெண்களாகத்தான் இருக்கும். அவர்களும் சுணங்காமல் பேசினர். மனம் நிதானமடைந்தது. இது நமக்கான ஊர் எனச் சொன்னது. வெலிங்டனை நெருங்கியபோது தெரிந்த பூமி பரப்பு அந்நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. முதலில் பூஞ்சானம் போல தெரிந்த புல்வெளிகளில் ஒளி பாய்ந்தபோது பச்சை கார்ப்பெட் போல பிரகாசித்தன.

எல்லாம் கொஞ்ச நேரம்.

வெலிங்டனில் இறங்கியவுடன் அடுத்த சிக்கல் காத்திருந்தது. பெட்டியைச் சேகரிக்கும் இடத்தில் ஒரு வட இந்திய பெண் அழுதுக்கொண்டிருந்தாள். பார்க்க சிறுமிபோல தெரிந்தாள். நான் காரணம் தெரியாமல் என் பெட்டிக்குக் காத்திருந்தேன். பெட்டி வரவில்லை என்றதும் அங்கிருந்த பொறுப்பாளர் அறையில் விசாரித்தேன். அவர் மிக நிதானமாக, “இந்த விமானத்தில் வந்த சில பெட்டி வேறெங்கோ சென்றுவிட்டது. உன் குறித்த தகவல்களை எழுதிக்கொடு. நான் அழைக்கிறேன்” என்றார்.

பெட்டி காணாமல் போனதை ரொட்டி காணாமல் போனதுபோல சொல்கிறாரே என எரிச்சலாக இருந்தது. “நான் ஒரு மாநாட்டு வந்துள்ளேன். என்னிடம் சட்டைகள் இல்லையே” என்றேன். “அப்படியானால் நூறு டாலருக்குள் நீ பொருள்களை வாங்கலாம். அப்பணம் மீண்டும் உனக்குத் திருப்பிக்கொடுக்கப்படும்” என்றார். என்னிடம் நூறு டாலர் இருக்குமா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை. கைப்பேசியின் உயிர் தீர்ந்திருந்தது. நல்ல வேளையாக ஏற்பாட்டுக்குழுவில் இருந்த யுவேந்திரனின் (மலேசிய வாசுதேவனின் மகன்) எண்களைத் தாளில் எழுதி வைத்திருந்தேன். அதைக் கொடுத்தேன். மேலும் நான் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் எழுதிக்கொடுங்கள் எனக் கேட்டதும் “வெவரமானவந்தான்” என்பதைப் போல பார்த்தார்.

அழுது கொண்டிருந்த பெண்ணின் இரு பெட்டிகளும் தொலைந்துவிட்டது என அவரிடம் பேசி அறிந்துகொண்டேன். சுமாராக ஆறுதல் கூறினேன். அவள் ஒரு விளையாட்டு வீராங்கனை என்றும் அதற்கான உடைகள் எல்லாம் அந்தப் பெட்டியில்தான் உள்ளது என்றும் சொன்னாள். கவலையாகத்தான் இருந்தது. அதற்காக அவளுடன் சேர்ந்து அழவா முடியும்?

விமான நிலையத்தை விட்டு கைகளை வீசியபடி வெளியேறினேன்.

(Visited 212 times, 1 visits today)