உரை: சக்காயும் சடையனும்

(நியூசர்லாந்தில் 12.11.2022இல் நடந்த தமிழ் மாநாட்டில் ஆற்றிய உரை. எழுத்தின் பொருட்டு சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது)

அனைவருக்கும் வணக்கம்.

‘புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் புனைவுகளில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்’ எனும் தலைப்பு நானாக வடிவமைத்துக்கொண்டதுதான். இந்தத் தலைப்பை நான் எடுத்துக்கொண்டதற்குக் காரணம் எனக்கு நானே சிலவற்றைச் சொல்லிக்கொள்வதற்கும் என் வாசிப்பின் வழி சிந்தனைகளை ஒருவகையில் தொகுத்துக்கொள்வதற்கும்தான்.

அப்படியானால் எங்களுக்கு எதையும் நீ சொல்ல வரவில்லையா எனக் கேள்வி எழலாம். பொதுவாக மேடைப் பேச்சாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பது இதுதான். மேடைப் பேச்சாளர்கள் ஒரு கருத்தை இன்னொருவருக்குக் கடத்த முயல்கிறார்கள். எனவே அவர்கள் குரலில் உள்ள அழுத்தமும் தீர்க்கமும் எழுத்தாளன் குரலில் வருவதில்லை. எழுத்தாளனின் உரை என்பது திசையற்ற நதியைப் போன்றது. ஒரு சிறுகதை எங்கு சென்று எப்படி முடியும் என எழுத்தாளனுக்கு குத்துமதிப்பான முடிவுகளே இருக்கும். கதையின் போக்குதான் அதை பல சமயங்களில் தீர்மானிக்கிறது. உரையும் அவ்வாறுதான். உரை வளர வளர சிந்தனையும் அதனூடே பயணிக்கிறது. சிந்தனை என்பது எனக்குள் நான் செய்துகொள்ளும் உரையாடல். எனவே எனக்குள் நான் செய்துகொள்ளும் உரையாடல்களின் தொகுப்பை இம்மேடையில் வைப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

நான் ஒரு கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவன். அம்மாவின் தம்பி, தங்கை, பாட்டி என பலரும் இருந்த பெரிய குடும்பம். பொதுவாக அந்தக் காலகட்டங்களில் தாய்மாமன்களின் அருகாமைதான் ஓர் இளைஞனை வளர்த்தெடுக்கும். வளர்த்தெடுத்தல் என்பது அவர்களால் பகடி செய்யப்படுவதும்தான். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். எப்போதெல்லாம் நான் அறியாமையில் திகைக்கிறேனோ, எப்போதெல்லாம் நான் பொது ஒழுங்குகளைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறேனோ, எப்போதெல்லாம் எனது உடைகளில் நேர்த்தி இல்லையோ அப்போதெல்லாம் என் மாமா என்னை ‘சக்காய்காரன்’ எனத் திட்டுவார்.

எனக்கு சக்காய்க்காரன் என்றால் என்ன பொருள் எனத் தெரியாது. ஆனால் அதை நாவில் உச்சரித்துப் பார்க்கும்போது ஒருவித அழுத்தமும் ஊடே தூற்றும் பாணியும் பிடிபட்டது. எனவே நானும் அச்சொல்லைப் பிறரை நோக்கி பயன்படுத்தத் தொடங்கினேன். காலம் கடந்தபிறகே ‘சக்காய்’ என்பது மலேசியாவில் வாழும் பழங்குடி இனத்தைக் குறிக்கும் சொல் எனத் தெரிந்தது. பொதுவில் அவர்களைக் குறிப்பிட ‘ஓராங் அஸ்லி’ (அசலான மனிதர்கள்) எனும் சொல் இருந்தாலும் வட்டார மொழியில் ‘சக்காய்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. காட்டுக்குள் வசிப்பவர்களாக, நவீன வாழ்க்கை முறையை அறியாதவர்களாக, நாகரீகம் அற்றவர்களாகக் கருதப்பட்ட அவர்கள் சஞ்சிக்கூலிகளாக வந்த மலேசியத் தமிழர்கள் வாயில் நூறு ஆண்டுகளுக்குள் வசைச் சொல்லாக மாறியிருந்தார்கள். அதுபோல நான் வசித்தது சீனர்களின் கம்பத்தில். சீனர்களைப் பொதுவாக ‘சடையன்’ என்றே அழைத்து வந்தனர். அப்போது அவர்களுக்கு சடை இல்லாவிட்டாலும் ஒரு காலத்தில் முன்மண்டை மழிக்கப்பட்டு சடை போட்டிருந்ததால் அப்பெயர் அவர்களிடம் ஒட்டிக்கொண்டது. நானும் சீனர்களை ‘சடையன்’ என்றே குறிப்பிடத் தொடங்கினேன்.

நான் மலேசியத் தமிழிலக்கியத்தைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கியபோது சின்ன வயதில் இருந்து நான் வசை பாடிவந்த சக்காயும் சடையனும் எங்குமே காணப்படவில்லை. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நான் முதலில் பார்த்தது கற்பனையாக உருவாக்கப்பட்ட கண்ணியம் மிகுந்த உலகம். இரண்டாவது தோட்டப்புறத்தில் இருண்டுள்ள துக்கம் மிகுந்த உலகம். மூன்றாவது, நாகரீக மோதல்களுக்கும் நன்னெறிப் பண்புகளுக்கும் இடையில் ஊடாடும் மோதல்களின் உலகம். இவை எதிலும் இன்னொரு இனக்குழுவோ, இன்னொரு பண்பாடோ, வேற்று இன மனிதனின் மன உணர்வோ, வாழிடமோ எதுவுமே எளிமையாகக்கூட அறிமுகமாகவில்லை. மாறாக, இன்னொரு இனக்குழு குறித்த கேலிக் குறியீட்டுச் சொற்கள் இயல்பாகவே என்னை வந்து அடைந்தன. இப்படித்தான் தமிழர்கள் குறித்த கேலிச் சொற்களும் இன்னொரு இனத்துக்கு இயல்பாகக் கடத்தப்பட்டிருக்கும். இவ்வாறான சொற்கள் வழியாகவே ஓர் இனம் மற்றோர் இனத்துக்கு அறிமுகமாகியிருக்கும். இந்நிலையில்தான் பண்பாட்டு பன்மைத்தன்மை கொண்ட புனைவுகள் அவசியமாகின்றன. இலக்கியம் இந்த அபிப்ராயங்களை மாற்றுமா என்றால் மாற்றும். இலக்கியம் எனும் அறிவுச் செயல்பாட்டின் வழியாகவே இந்த பகிர்வை உருவாக்குவது சாத்தியம். ஆனால் அப்படியான தமிழ்ப் புனைவுகள் எதையும் வாசிக்கும் வாய்ப்பு மலேசியாவில் எனக்குக் கிடைக்கவே இல்லை.

இங்கு பண்பாட்டுப் பன்மைத்தன்மை என்பதை Cultural Pluralism எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால் பொதுவாக அது Multiculturalism அதாவது பன்முகப் பண்பாடு எனும் அர்த்தத்திலேயே புரிந்துகொள்ளப்படுகிறது. இரண்டுக்கும் இடையில் நிறைய வித்தியாங்கள் உள்ளன.

உதாரணமாக, மலேசியா பன்முகப் பண்பாடு (Multiculturalism) கொண்ட நாடு எனச் சொல்லப்படுகிறது. அது சரிதான். ஒரு பெரும்பான்மைச் சமூகம் மற்ற சிறுபான்மைச் சமூகங்களின் பண்பாடுகளை இணைத்துக்கொண்டுள்ளது என அதைப் பொருள் கொள்ளலாம். பன்முகப் பண்பாடுகொண்ட நாடுகளில் பல சமூகக் குழுக்களின் பண்பாடுகள் பொறுத்துக்கொள்ளப்படுகின்றன என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் பண்பாட்டுப் பன்மைத்தன்மை (Cultural Pluralism) என்பது முற்றிலும் வேறு அர்த்தம் கொண்டது. மலேசியா – சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள புனைவுகளில் காண்பதற்கு அரிதாக உள்ள இந்த அம்சமே இன்று நமது புனைவுகளில் கவனிக்க வேண்டிய முதல் கூறு என நினைக்கிறேன். நியூசிலாந்தில் குடியேறியுள்ள தமிழ் எழுத்தாளர்களும் தங்கள் மனதில் செலுத்திக்கொள்ள வேண்டிய ஆதார அம்சம் இதுதான்.

பண்பாட்டுப் பன்மைத்தன்மை என்பதன் கூறுகள் என்ன?

அதன் முதன்மையான அம்சம் பல்வேறு பண்பாட்டு மக்களின் சிறந்த அம்சங்களை, தனித்தன்மைகளை அறிந்து வைத்திருத்தல். உதாரணமாக நியூசிலாந்து நாட்டின் பூர்வகுடிகளான மௌரியர்கள் ‘உடு’ என்ற பழக்கம் உள்ளதை அறிகிறேன். இது பண்டமாற்றத்திலிருந்து வித்தியாசப்பட்டது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நம்பியே வாழ வேண்டும் எனும் வழக்கத்தை உண்டாக்குவது இப்பழக்கம். இந்த பண்பாடுகளின் வழியாக மௌரி இனத்துடனான உரையாடல் நிகழ்வதுதான் நாம் இந்த நூற்றாண்டில் வாழும் எழுத்தாளன் என்பதற்கான அடையாளம். பிற பண்பாடுகளின் மீதான இளக்காரமும், ஒப்பீடுகளும், ஓர் இனம் குறித்த மலினமான வரையறைகளும், மன விலகல்களும், நம் படைப்பில் விசாலத்தன்மையைக் குறைக்கிறது. சுய பண்பாட்டு தூய்மைவாதமும், மேட்டிமைவாதமும் புலம்பெயர்ந்த படைப்புகளில் உருவாக வேண்டிய ஆழங்களைச் சுருங்கச் செய்கிறது.

இந்த அடிப்படையான மனநிலையில் இருந்துதான் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து உலக இலக்கியங்கள் உருவாக முடியும். வானவில்லின் ஏழு வண்ணங்களில் நாமும் ஒரு வண்ணம் எனும் நிலையே நாம் நம்மையும் இன்னொரு சமூகத்தையும் பாசாங்கின்றிப் புரிந்துகொள்ள உதவும். நாம் யாருக்கும் மேலும் கீழும் இல்லாததுபோல மற்றவர்களும் நமக்கு மேலும் கீழும் இல்லை என்ற புரிதலும் உலக இலக்கியத்தில் நம் புனைவுக்கான இடத்தை அழுத்தமாகப் பதிக்கச் செய்யும்.

இவ்வாறு பிற பண்பாடுகளை சமமாக கருதத் தெரிந்த ஒரு படைப்பாளனிடம் எவ்வாறான படைப்புகள் உருவாகும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. இன்றைய குறிப்பிடத்தக்க புலம்பெயந்த இலக்கியங்களை வாசிக்கும்போது ‘பண்பாட்டுச் சிக்கல்’ என்பதை அதன் முதன்மையான பேசுபொருளாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. கென் லியு (Ken liu) எனும் அமெரிக்காவில் வசிக்கும் சீன எழுத்தாளரின் புகழ்பெற்ற காகித மிருக சாலை எனும் சிறுகதையின் வழி அதனை உணர்த்து பார்க்கலாம்.

சீன தேசத்துப் பெண்ணை மணமுடிக்கிறார் அமெரிக்காவில் வாழும் அமெரிக்கரான கதைசொல்லியின் அப்பா. கதை சொல்லியின் பெயர் ஜேக். முகவர்கள் மூலம் நடத்தி வைக்கப்படும் அந்தத் திருமணத்தில் பெண் குறித்த நிறைய பொய்கள் உள்ளன. அதில் முக்கியமானது அப்பெண்ணின் வயது, நடனமாடத் தெரிந்தவர், நன்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தவர் என முகவர் கூறுகிறார். கதை சொல்லியின் அம்மாவுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. ஓரிரு வார்த்தைகளை மட்டுமே அறிவார். அவருக்குத் தெரிந்த ஒரே கலை ஓரிகாமி. அந்த ஓரிகாமியால்தான் கதை சொல்லியின் இளவயதை அம்மா இன்பமானதாக மாற்றுகிறாள். முக்கியமாக அவள் செய்துகொடுத்த காகிதப் புலி உயிர் வேகத்துடன் அவனிடம் விளையாடுகிறது. அப்படி அவன் கற்பனை செய்துகொள்கிறான். இப்படி பல மிருகங்களை அவளே காகிதத்தில் உருவாக்குகிறாள். இதற்காகவே கிறிஸ்மஸ் தினத்தில் வீட்டுக்கு வரும் பரிசுப் பொருள்களின் காகிதங்களை நேர்படுத்தி சேர்த்து வைக்கிறாள். அம்மா செய்துகொடுக்கும் காகித விலங்குகள் எல்லாமே சேர்ந்து கதை சொல்லியான ஜேக்கிடம் ஒரு மிருகக்காட்சி சாலையே உருவாகிறது. அதில் அவனுக்கு விருப்பமானது ‘லாஓஹு’. அது ஒரு காகிதப் புலி.

புலியுடன் அவன் விளையாடி விளையாடி அது நைந்து போகிறது. அம்மா அதைப் பலவாறு ஒட்டி சரி செய்துகொடுகிறாள். பெரும்பாலும் அதன் உருவம் சிதைந்து போகிறது. ஆனாலும் கதைசொல்லி அதனை ஒரு புலியின் தீவிரத்துடன்தான் கையாள்கிறான். ஒருமுறை வீட்டுக்கு வந்த அமெரிக்க நண்பன் ஒருவன் கேலி செய்யும்வரை அவனுக்கு அது ஒரு குப்பைக் காகிதம் எனத் தோன்றவே இல்லை. அந்த நண்பன் பள்ளியில் பிரபலமானவன் என்பதால் கதைசொல்லி பள்ளியிலும் பிற நண்பர்களால் கேலி செய்யப்படுகிறான். ஜேக்குக்கு முதன்முறையாக தனது அத்தனை அடையாளங்கள் மீதும் ஒவ்வாமை உருவாகிறது. இப்போது அவன் தோற்றம் கேலிக்குரியதாகிறது. அவன் மொழி கேலிக்குரியதாகிறது. அவன் உணவின்மீது ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த அடையாளங்களைக் கொடுத்த தன் அம்மாவை முற்றிலுமாக வெறுக்கிறான்.

அம்மாவும் தன் மகனுக்காக தன்னை மாற்றிக்கொள்ள எவ்வளவோ முயல்கிறாள். அமெரிக்க அன்னையைப்போல மகனைக் கட்டியணைக்க முயற்சித்துப் பார்க்கிறார். அமெரிக்க உணவுகளைச் சமைக்கிறார். சீன மொழி பேசுவதை தவிர்க்க பாவனைகள் வழி குறிப்புணர்த்த முயல்கிறாள். ஆங்கிலம் வராததால் அவர் முற்றிலுமாகப் பேசுவதை நிறுத்தி மௌனியாகிறார். ஜேக் வளர்ந்து இளைஞனானபோது அம்மாவின் ஆங்கிலம் தேறியிருந்தது. ஆனால் அவர் சொல்வதை செவிமடுக்க விரும்பாத வயதுக்கு ஜேக் சென்றிருந்தான். கேன்சர் ஏற்பட்டு மரணப்படுக்கையில் இருக்கும்போதுதான் மீண்டும் அந்த மிருக சாலையை அம்மா ஜேக்குக்கு நினைவூட்டுகிறார். அவன் வெறுத்து ஒதுக்கிய அந்த காகித மிருகங்கள் தான் இல்லாதபோது அவனுக்குத் துணை இருக்கும் என்றும் ‘குயிங்மின்’ தினத்தில் அதனை அவனுடன் வைத்து தன்னை நினைத்துக்கொள்ளும்படியும் கூறுகிறார்.

குயிங்மின் இறந்தவர்களுக்கான சீனப்பண்டிகை. ஆனால் ஜேக் தனக்குச் சீன காலண்டரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்கிறான். உண்மையில் அவனுக்குச் சீனப் பண்பாடுகள் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. அவன் அதை முழுமையாகக் கைவிடத்தான் இத்தனை ஆண்டுகள் போராடினான். அந்த அடையாளங்களை வெறுத்தான். அம்மா இறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் சுறாவைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்க்கும்போது அம்மா செய்துகொடுத்த காகிதச் சுறா நினைவுக்கு வருகிறது. மடிப்புகள் பிரிந்த அவனது காகிதப் புலி அவன் கைகக்குக் கிடைக்கிறது. அதன் உள்ளே சீன எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. கணினியில் தேடி அன்று குயிங்மின் என்று அறிகிறான். சீன எழுத்துகளை வாசிக்கத் தெரியாமல் தெருவில் ஓடி, சீனர் ஒருவரைப் பிடித்து அதனை வாசிக்கச் சொல்கிறான்.

இப்போது அக்கடிதத்தை வாசித்தாலும் நம் கண்கள் கலங்கும். நம் கரங்கள் படபடக்கும். எந்த அடையாளத்துக்கு நாம் எதையெல்லாம் விட்டுவந்தோம் என மனம் வலிக்கும். நண்பர்களே இந்தக் கதையை நீங்கள் வாசிக்கவேண்டும் என்பதால் அந்தக் கடிதம் குறித்து சொல்லாமல் இக்கதையை முடிக்கிறேன். ஆனால் முரண்பட்ட பண்பாட்டுக்குள் தள்ளப்படும் ஒரு பெண் தன் வாழ்நாளை எவ்வளவு கனமாக கடத்தியிருப்பாள், தன் மொழியில் பேச தன்னைப் போன்ற ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்தெடுத்து எவ்வளவு தூரம் ஏமாந்திருப்பாள் என இக்கதையை வாசிக்கும்போது நமக்குப் புரியலாம்.

மேலோட்டமாக வாசிக்கும்போது இது தாய் – மகன் உறவு குறித்தது எனத் தோன்றலாம். அப்படியல்ல. ஒரு சிறுவன் ஏன் தனக்கான ஒரு அடையாளத்தை தேர்ந்தெடுக்கிறான் என நாம் நம்மை ஆழமாகக் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. ஜேக்கின் முன் அமெரிக்க கலாசாரமும் சீன கலாசாரமும் உள்ளன. அவன் ஒன்றை எடுத்துக்கொள்கிறான். மற்றதை அவன் வெறுக்கிறான். இந்த வெறுப்பு தோன்ற எது காரணமாக உள்ளது? ஏன் தாய் வழியாக வந்த சீனப் பண்பாட்டின் மீது அவனுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது? இந்தக் கேள்விகள் வழியாகத்தான் நாம் அந்தக் கதையை மேலும் அணுகிச்செல்ல முடியும். தன் தாயுடைய அடையாளத்தை வெறுக்கும் அவன் விட்டுவந்தவை எவை என நாம் ஆராயும்போது ‘லாஓஹு’ உஷ்ணக் காற்றை சிந்தி சுவாசிக்கும் உயிர்ப் புலியின் படிமமாக நம் மனதில் தோன்றக்கூடும்.

பண்பாட்டுப் பன்மைத்தன்மை கொண்ட மனம் உருவாக்கும் இலக்கியம் செய்யக்கூடியது இதைத்தான். அது தனது வேரின் பருமனை மட்டுமே தூக்கிப்பிடித்துக் காட்டுவதல்ல. தன் மரத்தில் உண்டாகும் கனியைப் போலவே இன்னொரு மரத்தில் உருவாகும் கனிச்சுவையையும் ரசிக்கிறது.

புலம்பெயர்ந்த எழுத்தாளனின் கடமை என நான் கருதுவது இதைத்தான். இன்னொரு பண்பாட்டைவிட நாம் பெரியவர்கள் எனச் சொல்வது படைப்பாளனின் பணியல்ல. நாம் எதையெல்லாம் விட்டு வந்திருக்கிறோம். எவற்றைச் சடங்குக்காக மட்டும் கையாள்கிறோம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மலேசியாவிலோ சிங்கையிலோ நியூசிலாந்திலோ இப்படி நூறு கதைகளைச் சொல்ல முடியும். பண்டிகைகளின்போது மட்டும் தேடி எடுக்கும் நமது பண்பாட்டு உடைகளின் வழியாக, விழாக்களின் போதுமட்டும் அலங்கரிக்கும் கோலங்கள் வழியாக, சமூக தளங்களுக்குகாகச் செய்யும் வீடியோக்களுக்காக மட்டும் சொல்லும் வாழ்த்துகள் வழியாக நாம் நமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கிறோம் எனச் சொல்லிக்கொள்கிறோம். அதற்கு ஆதாரமாக இருக்கும் கிழிந்து நைந்துள்ள மொழி, முன்பு புலியாக இருந்த ஒரு ஓரிகாமி காகிதம் என எப்போது நாம் அறிந்துகொள்ளப்போகிறோம்?

அழிந்த பறவையினங்களில் டோடோபோல யானைப் பறவைகள் போல நியூசிலாந்திலும் ‘மோவா’ எனும் பறவையினம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளன. இந்த அழிந்த பறவையினங்களுக்கு பொதுவான ஒரு குணம் உண்டு. அவை உருவத்தில் பெரியவை. பிறரை பயமுறுத்தும் பலம் கொண்டவை. ஆனால் பறக்க முடியாதவை. நாம் தொடர்ந்து வலுவான, உறுதியான தமிழின் மரபை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பண்பாட்டு வலுவிலிருந்து உருவாகப்போகும் ஆயிரம் ஆயிரம் பறக்கும் பறவைகளால்தான் இதன் நீட்சி தொடரப்போகிறது. அது இலக்கியத்தின் வழியாகவே சாத்தியம்.

நன்றி

(Visited 160 times, 1 visits today)