பொன்னியின் செல்வன் வரலாற்றின் துளிகளைக் கோர்த்து கல்கி எழுதிய தொடர்கதை. என் பதின்ம வயதில் உற்சாகத்தை ஊட்டிய நாவல். பாயா பெசாரில் இருந்த ‘வீரா நாவல்’ புத்தகக் கடையில் பதினேழு வயதில் வேலை செய்தபோது மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து முடித்த புனைவு அது. இதைச் சொல்லக் காரணம் பதினேழு வயது கொண்டவனுக்குக்கூட புரியும்படியாகத்தான் கல்கி அந்நாவலை எழுதியுள்ளார் என்பதுதான். என் அடுத்தகட்ட வாசிப்பு சுந்தரராமசாமியில் இருந்து தொடங்கியபோது ‘பொன்னியின் செல்வன்’ வணிக இலக்கிய வகையைச் (popular literature) சார்ந்தது எனப் புரிந்தது. காட்சி விவரணைகளற்று, கதாசிரியர் குறுக்கிட்டுப் பேசும் எளிய மொழியிலான நாவல். எனவே பொதுவாசகர்களுக்கு அது அனைத்தையும் எடுத்துக்கூறும் தன்மையில் புனையப்பட்டதை அறிந்துகொண்டேன். தொடர்கதை அம்சம்கொண்ட அந்த நாவலின் பல கூறுகளை வெவ்வேறு எம்.ஜி.ஆர் படங்களில் பின்னாட்களில் பார்த்துள்ளேன். இன்று எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும்போது எவ்வளவு கவனமில்லாமல் அணுகுவேனோ அதே மதிப்புடன்தான் ‘பொன்னியின் செல்வன்’ நாவலையும் இன்று வாசித்தால் அணுகக்கூடும்.
நான் வணிக இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய காலத்திலேயே திரைப்படங்களும் வளர்ச்சி பெற்றுவிட்டன. வீட்டுக்கு வரும் பாக்கெட் நாவல்களின் (pulp fiction) மாற்று வடிவங்களாக சீரியல்கள் வளர்ந்துவிட்டன. எனவே தொலைக்காட்சி வராத காலத்தில் வாழ்ந்த முந்தைய தலைமுறைக்கு ‘பொன்னியின் செல்வன்’ எவ்வாறான கொடையாக இருந்திருக்கும் என என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் வாழ்வுடன் கலந்த ஒரு தொடர்கதையை, நாவலை விமர்சிக்கும்போது தங்களையே விமர்சிப்பதாக பதற்றம் அடையும் ஒரு தலைமுறையை நான் பார்த்துள்ளேன். அது புரிந்துகொள்ளக்கூடியதே. அந்நாவலை விமர்சனத்துடன் அணுகக்கூடிய எனக்கே அப்படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் வரும்போது அதனை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதியவர்கள் திரையரங்கில் கண்களில் ஒளிமின்ன காத்திருந்தது ஆச்சரியமில்லை.
***
இயக்குனர் மணிரத்னம் தனது கற்பனையையும் கொஞ்சம் கலந்து பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கியுள்ளார். தனது முயற்சிக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றம் செய்வதோ, செறிவாக்குவதோ இயக்குனரின் விருப்பம். காரணம் இதன் மூலப்பிரதி வரலாற்றை அப்படியே அடியொற்றி எழுதப்பட்டதில்லை. ‘பொன்னியின் செல்வன்’ ஓர் எழுத்தாளரின் வரலாற்றுப் புனைவு. அந்தப் புனைவை வேறொரு வடிவத்தில் கையாள்வது இன்னொரு கலைஞரின் கலைத்திறன். அவ்வகையில் மணிரத்தினம் அதை சிறப்பாகவே செய்துள்ளார். நாம் நாவலைப் படிக்கும்போது சில காட்சிகளை சிலாகித்திருப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இடம் பிடித்திருக்கலாம். எல்லாவற்றையும் இயக்குனர் நிறைவுசெய்ய முடியாது. இயக்குனர் பார்வையில் எது அவசியமோ அதுவே காட்சியாகிறது.
எனவே இப்படத்தைப் பார்க்கும் முன்பே நான் ஒரு விஷயத்தை முடிவெடுத்துக்கொண்டேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் நாவலின் வரிசையை, அதன் அமைவொழுங்கை தொடர்புப்படுத்தி திரைப்படத்தைப் பார்க்க வேண்டியதில்லை. ஒரு திரைப்படமாக பொன்னியின் செல்வன் கொடுக்கும் காட்சி அனுபவம் போதுமானது.
படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறிய பிறகு எனக்கு நிறைய ஏமாற்றங்களே இருந்தன. ஆனால் உடனடியாக நான் எந்தக் கருத்துக்கும் வரவில்லை. என்னளவில் எழுதுவது மட்டுமே மனதை தொகுத்துப் பார்க்கும் வழி. எனவே அன்று இரவே இக்கட்டுரையை எழுதத் தொடங்கினேன். இது யாருக்கு பயன்தராவிட்டாலும் எனக்குக் கொடுக்கும். என் எண்ணங்களைத் தொகுத்துப் பார்த்த நிறைவை அளிக்கும். ஆகவே, இது திரைப்பட விமர்சனமில்லை. எனக்கு ஏன் இப்படம் பிடிக்காமல் போனது என நானாகச் சிந்தித்து கலவையான எண்ணங்களில் இருந்து விடுபடும் முறை.
***
திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிலாகித்தவர்களிடம் இரண்டு விதமான கருத்துகள் இருந்தன.
அ. நாவலுக்கு திரைப்படம் நியாயம் செய்துள்ளது. படித்தவற்றை காட்சியாகப் பார்ப்பதில் உற்சாகம் எழுகிறது. வாசிக்கும்போது கற்பனையில் கண்ட காட்சிகள் நேரடியாக எழுகின்றன.
ஆ. அவ்வளவு பிரம்மாண்ட நாவலை இந்த அளவுக்குத்தான் திரையில் காட்ட முடியும். அதை சிறப்பாகவே செய்துள்ளது படக்குழு. மணிரத்தினம் சிறந்த உழைப்பாளி.
இந்த இரண்டு கருத்துகளுமே ஒருவகையில் நாவல் வாசித்த அனுபவத்தோடு சேர்ந்தது. திரைப்படம் எனும் அனுபவத்துடன் சேர்ந்தது அல்ல. நமது கற்பனைக்குக் கொடுக்கப்படும் காட்சி வடிவத்தைக்கண்ட மகிழ்ச்சி அது. அதுபோலவே படத்தை நிராகரித்தவர்களிடமும் சில கருத்துகள் இருந்தன.
அ. பிரம்மாண்டம் போதவில்லை. பாகுபலியைக் கொண்டிருந்த திடுக்கிடல்கள் இல்லை.
ஆ. பலவீனமான கதை அம்சம். நாவலின் படி இந்த இடத்தில் இந்தக் காட்சி வராது.
இ. நாவலில் இப்படி இல்லவே இல்லை. மணிரத்தினம் நாவலைக் கொன்றுவிட்டார்.
முதல் இரு கருத்துகள் பெரும்பாலும் நாவலை வாசிக்காதவர்களிடமிருந்து வரும் குமுறல். மேலும் பாகுபலி போன்ற மிகைக்கற்பனையான திரைப்படம் கொடுத்த தாக்கத்தில் இருந்து உருவானவை.
மணிரத்தினம் இயக்கியுள்ளது நாவலைச் சார்ந்த ஒரு திரைப்படம். எனவே பாகுபலி கொண்டுள்ள சுதந்திரம் இப்படத்துக்கு இல்லை. நாவலைவிட்டு அவர் அதிகம் விலகிச் செல்லவும் முடியாது. பனைமரத்தை வளைத்து, கோட்டையைப் பாய்ந்து தாவியெல்லாம் எதார்த்த வாழ்வின் எல்லைகளைத் தாண்டவும் முடியாது. திரைக்கதையில் ஏன் இப்படி நடந்தது என ஒருவருக்குக் கேள்வி எழுந்தால் அப்படித்தான் நாவலில் உள்ளது எனப் பொருள். அதேபோல பொன்னியின் செல்வன் ஒன்றும் தமிழ் செவ்வியல் இலக்கியமல்ல. அது வணிகத்துக்காக எழுதப்பட்ட தொடர்கதை. அதை மாற்றி அமைப்பதும் வணிகத்துக்காகத்தான். அதனாலெல்லாம் அப்புனைவின் மதிப்பு ஒன்றும் குன்றிவிடாது.
***
சாகசமற்ற தன்மை
என்னை இப்படம் கவராததற்குச் சில காரணங்கள் இருந்தன. அதன் முதல் காரணம் நாவலாக பொன்னியின் செல்வனில் இருந்த ஆர்வமூட்டும் அம்சங்கள் இப்படத்தில் இல்லை என்பதுதான். ஆர்வமூட்டும் அம்சம் என நான் என் பதின்ம வயதில் ஏற்றிக்கொண்டது அதில் உள்ள சாகசத்தன்மை.
மன்னரைக் காணச் செல்லும் வந்தியதேவனுக்கு பட்டத்து இளவரசரான ஆதித்தகரிகாலன் இடும் கட்டளைகளின் ஒன்று வந்தியதேவன் எக்காரணம் கொண்டும் சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது என்பதுதான். அது காரியத்தைக் கெடுக்கும். எனவே தந்திரமாகச் செயலை ஆற்ற வேண்டும். இந்தக் கட்டளையைச் சுமந்துவரும் வந்தியதேவனின் சாமர்த்தியத்தைக் காணும் ஆவலில்தான் நாவல் வாசிப்பு துவங்கும். எதிர்கொள்ளப்போகும் கடுமையான சவால்களுக்கு இடையில் தந்திரங்களையும் மதிநுட்பத்தையும் கடக்கப்போகும் ஆர்வத்துடன்தான் பொன்னியில் செல்வன் வாசிக்கும் ஒவ்வொருவரும் காத்திருந்திப்பர். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மதிநுட்பம் என எங்கும் இல்லாததே (குந்தவை குறுநில மன்னர்களைக் குழப்புவது தவிர) இப்படம் தட்டையாகத் தெரிய முதல் காரணமென நினைக்கிறேன்.
உதாரணமாகச் சில:
அ. வந்தியதேவன் ஒற்றனாக சுந்தரசோழ மன்னனைக் காணச் செல்வான். ஆனால் ரகசியமான முறையிலேயே அவன் தான் கொண்டுவந்த செய்தியைச் சொல்ல முயல்வான். அரண்மனை பழுவேட்டையர்களின் ஒற்றர்களால் சூழ்ந்துள்ளது. எனவே ‘அபாயம்’ எனச் சொல்லி ‘அபயம்’ எனச் சமாளிப்பான். கடைசிவரை மன்னரிடம் தகவலைச் சொல்லியிருக்கமாட்டான். மன்னரும் குழப்பத்தில் இருப்பார். இங்கிருந்தே அவன்மீதான சந்தேகம் சின்ன பழுவேட்டையருக்குத் தொடங்கும். திரைப்படத்தில் இந்த ரகசியத்தன்மை இல்லை என்பதே பெருங்குறை. சொல்லப்போனால் சதிகள் நிறைந்த தளத்தில் நிமிடத்திற்கு நிமிடம் உயிர்க்கவேண்டிய ரகசியத்தன்மை என படத்தில் எங்குமே காண முடியவில்லை. சின்னப்பழுவேட்டையர் உடன் அனுப்பிவைத்த காவலர்கள் சில அடி பின்னால் இருக்க, ரகசியமற்ற குரலில் வந்தியதேவன் பழுவேட்டையர்களின் சதிகளை அரசரின் முன் போட்டுடைப்பான். அதனால் யாருக்கும் எந்த அசௌகரியமும் ஏற்பட்டிருக்காது. பழுவேட்டையர் காவலாளிகள் குனிந்த தலை நிமிர மாட்டார்கள். தலையைக் குனிந்தால் காதுகள் கேட்காதா என்ன?
ஆ. வந்தியதேவனைக் கண்காணிப்பதையும் அவன் தப்பிப்பதையும் நாவலில் ஒரு வன்மம் நிறைந்த விளையாட்டாக நகர்த்தியிருப்பார் கல்கி. திரைப்படத்தில் உள்ளதுபோல பாதுகாப்புக்கு வரும் காவலர்களைத் தள்ளிவிட்டெல்லாம் செல்லமாட்டான். அந்த எண்ணம் வரும்போதுகூட அப்படி செய்ய அவசியம் இல்லை என்றே எண்ணுவான். சரியாகத் திட்டமிட்டு, தப்பிப்பதே தெரியாமல் வேளக்கார படை அணிவகுப்பில் நுழைந்து தப்புவான். அந்த சமயோசிதம்தான் நாவல் கொண்டிருந்த சாகசம். பகையைச் சிரித்தபடியே சமாளிக்கும் தன்மை.
மேற்சொன்ன இரண்டு அம்சங்கள் வழி ஒன்று புரிந்திருக்கும். இக்கதையில் அடிப்படைத்தன்மையே சூழ்ச்சிதான். தஞ்சை சூழ்ச்சிகளால் ஆன கோட்டை. நடக்கும் சூழ்ச்சியை அறிந்து, அதனை முறிக்கவே அனைத்தும் தொடங்குகிறது. அந்தச் சூழ்ச்சியை வெல்ல நாவலில் இருப்பது ஒரு புத்திசாலித்தனமான ஆட்டம். அந்த ஆட்டம் இந்தப் படத்தில் இல்லை என்பதே ஏமாற்றம்.
துண்டு துண்டாகக் கிடக்கும் காட்சிகளைக் கோர்க்கக்கூடிய அந்த சாமர்த்தியத்தின், சூழ்ச்சியின், சமயோசிதத்தின் நரம்பு எங்கும் தட்டுப்படாமல் நவரத்தினங்களைச் சிதற விட்டுள்ளதுதான் படத்தில் ஒன்ற முடியாமைக்கு முக்கியக் காரணம். ஆட்சியைக் கவிழ்க்கக்கூடிய தந்திரசாலிகள் நிறைந்த களமாக தஞ்சைக்கோட்டை எவ்விடத்திலும் மனதை பதற்றமுற வைக்கவில்லை. சோர்வளிக்கும் நாவலாசிரியரின் நேரடி விவரணைகளுக்கு மத்தியிலும் நாவல் ஏற்படுத்திய படபடப்பை திரைப்படம் உருவாக்கவில்லை என்பதே அதன் போதாமை.
இங்கு ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். நான் நாவலுடன் திரைப்படத்தைத் தொடர்புபடுத்தவில்லை. கதாசிரியராகக் கல்கி தன் வாசகனைத் தக்கவைக்க செய்துள்ள நம்பகமான நுட்பங்களைத் தவறவிடும்போது திரைப்படம் அடைந்திருக்கும் பலவீனங்களையே முன்வைக்கிறேன்.
பேரரசின் தன்மை
இப்படத்தை நான் பாகுபலியுடன் ஒப்பிட மாட்டேன். அதற்கான நியாயமும் இல்லை. ஆனால் பேரரசுகளின் காலம் கொண்டுள்ள திரைப்படம் எனும் அடிப்படையில் இரண்டு திரைப்படங்களும் மனதில் உருவாக்கும் தாக்கத்தை ஒப்பிட வேண்டியுள்ளது. அதாவது ஒரு வரலாற்றை புனைவாகக் கொண்ட படம் மனதில் எவ்வகையான தாக்கத்தை அரூபமாக ஏற்படுத்தும் என்பதை ஒப்பிட பாகுபலி அவசியமாகிறது.
பாகுபலியின் அடிப்படையான வெற்றி ‘மகிழ்மதி’ எனும் கற்பனைப் பேரரசை நம் மனதில் வளர்ந்து நிலைக்கச் செய்வதில்தான் உள்ளது. இல்லாத அந்த பேரரசு நம் மனதில் திரண்டு உருவாகி, அப்படி ஓர் ஆட்சி இருந்ததாய் நம்ப வைக்கும் அதன் திரைக்கதை. அதற்கு ஒரு பேரரசில் இருக்கும் இறுக்கமான அமைப்பு, வலுவான அதன் சட்டங்கள், கெடுபிடியான நடைமுறைகள், மன்னன் எனும் ஒற்றை அதிகாரத்தின் முன் மற்றவர்கள் எப்படி ஒடுங்குகிறார்கள் என்பதை கட்டமைத்திருந்தது முக்கியக் காரணம். அரச குலத்திடையே உள்ள அடுக்குகள், உறவு முறையாக இருந்தாலும் அவரவர் பதவிக்கான கட்டுப்பாடுகள், எளிதில் யாரும் யாரையும் நெருங்க முடியாத வரைமுறைகள் என நிறைந்த காட்சிகள் நம் மனதில் ஒரு பேரரசை கட்டமைக்கிறது. மேலும் அது எவ்வளவு பிரம்மாண்டமான ஆட்சி, எத்தனை வளங்களைக்கொண்ட நிலம், அந்த வளங்களை யாரும் அபகரித்து விடாதவாறு பாதுகாக்கும் அரண்கள், அந்த அரணுக்கு சொந்தக்காரனான மன்னனின் குரலுக்கு அந்நாடு முழுவதும் எவ்வளவு மகத்துவம் உள்ளது என தொடக்கத்திலே மனதில் சின்னச் சின்ன காட்சிகளால் விதைத்துவிடுகிறது பாகுபலி.
அந்த அதிகார ருசியை நோக்கியதே அப்படத்தின் கதை. அதை ஒட்டி நடக்கும் சூதாட்டமே திரைக்கதை.
பொன்னியின் செல்வனின் மையக் கதையும் இதுதான். ஆனால் உண்மையில் இருந்த ஓர் ஆட்சி நம் மனதில் விரியவில்லை. சோழப்பேரரசின் ஓர் அடையாளமாக இருக்கும் மன்னன் ஏதோ கட்டப்பஞ்சாயத்து தலைவர்போல காட்டப்படும் காட்சியிலேயே அந்த ஆட்சியின் மீதுள்ள வியப்புக் குறைந்துவிடுகிறது. பொன்னியின் செல்வன் நாவலில் மன்னர் நோய்வாய்ப்பட்டு தனது சிங்காசனத்தில் படுத்திருப்பார். புலவர்கள்கூட அவரைக் காண வருவார்கள். அரசு வேலைகளை மந்திரிகளும் மற்றவர்களும் செய்வார்கள். இந்தச் சித்தரிப்பு நாவலில் ஓரிரு வரிகளில் வரும். ஆனால் சோழர்கள் அரண்மனை என்னவோ கோவிட் குவாரன்டைனில் இருப்பதுபோல இருண்டு கிடக்கிறது. சுந்தர சோழர் பரப்பளவு குறுகிய ஓர் அறையில் படுத்திருக்கிறார். ஓர் ஆட்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லாமல் இடமே மாண்டு காணப்படுகிறது. மன்னன் நோயுற்றால் ஆட்சி நிர்வாகம் நடக்காதா என்ன? எந்தப் பேரரசும் அப்படித் துவண்டு மடிந்ததில்லை.
உதாரணமாக ஒரு காட்சியைச் சொல்லலாம்.
திரைப்படத்தில் தஞ்சை கோட்டையில் சர்வ வல்லமை படைத்தவர்களாக பழுவேட்டையர்கள் காட்டப்படுகிறார். அவர்களின் மொத்தக் கண்காணிப்பில் அரண்மனை உள்ளது. இப்போது நாம் பழுவேட்டையர்களின் இராஜ தந்திரத்தைச் சிலாகித்துக்கொண்டு இருக்கும்போது இரு பழுவேட்டையர்களுடன் சுரங்கத்தில் நடந்து செல்லும் நந்தினியை மந்திரவாதி மறைத்துப் பிடிப்பான். எப்போது சோழர்களைப் பழிதீர்க்க போகிறாய் என கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவான். அவனுக்கு பழுவேட்டையர்கள் குறித்த அச்சமெல்லாம் இல்லை. அந்த நிமிடமே நமக்கு பழுவேட்டையர்கள் மீதுள்ள மரியாதை சரிந்துவிடுகிறது. தன் உயிருக்கு நிகரானவள் நந்தினி என சற்று முன் கொஞ்சிக்கொண்டிருந்த பெரிய பழுவேட்டையார் சில அடிகள் முன்னால் இருக்கும்போது நடக்கும் இந்த மிரட்டல் காட்சிக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் தஞ்சை கோட்டைக்குள் நுழைந்துவிடலாம் எனும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. உண்மையில் நாவலில் இந்தக் காட்சி நடப்பது நந்தினியின் தனி அறையில். அப்போது பெரிய பழுவேட்டையார் வந்துவிட்டார் என நந்தினி பதற்றத்துடன் மந்திரவாதியை விரட்டி அடிப்பாள். கல்கி இரு பழுவேட்டையர்களையும் இரண்டு சிங்கங்கள் என வர்ணித்திருப்பார். படத்தில் இரண்டு சிங்கங்கள் இருக்கும்போதுதான் இந்த அபத்தம் நடக்கிறது.
இப்போது யோசித்தால் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ ஏன் பலரால் விரும்பப்பட்டது எனப் புரிகிறது. இயல்பாகவே அதில் இருக்கும் பொதுவாசிப்புக்கான தன்மையால் மட்டுமல்ல; ஒட்டுமொத்தமாக அவர் ஏற்படுத்தும் உணர்வலைகளாலும்தான். அதை எல்லா பாகத்திலும் கடத்திகொண்டு செல்கிறார். கல்கி அரண்மனையை, ஆட்சியை ஒட்டி உருவாக்கும் சித்திரங்கள் புறவயமாகவே மணிரத்தினம் உருவாக்கும் காட்சியில் வந்துபோகிறது. இவ்வளவு சோம்பேறித்தனமான ஆட்சியை யார் கைப்பற்றினால் என்ன எனும் மனநிலையே பார்ப்பவர்களுக்கு வந்துவிடுகிறது. சொல்லப்போனால், பொன்னியின் செல்வன் இன்று எனக்குச் சலிப்பான நாவலாக இருக்கும் என நம்பக் காரணம் அதில் உள்ள சித்தரிப்பு போதாமைகள்தான். இப்படம் அந்த போதாமையைத் தீர்த்திருக்க வேண்டாம். இருக்கின்ற காட்சிகளையும் மாற்றியமைக்கிறேன் என அடிப்படையாக உருவாக்க வேண்டிய மனநிலையை மேலெழச் செய்யாமல் அமுக்கி வைப்பதுதான் திரைப்படத்தின் ஏமாற்றம்.
சோழர்களும் தமிழர்களும்
இளமையில் இந்நாவலை வாசித்தபோது எனக்குள் ஒருவித பெருமிதம் எழுந்தது. ‘தமிழண்டா’ என லுனாஸுக்குள் நெஞ்சைத் தூக்கி திரிந்தவன்தானே நானும். கற்பனையான பெருமிதங்கள் நமக்கு அவசியம் இல்லைதான். வரலாற்றை ஊதிப்பெருக்கி மண்டை வீங்க வேண்டியதில்லைதான். ஆனால் சோழர்கள் தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றித்தவர்கள். இப்படம் அப்படி ஒரு தமிழ்ப் படமாக உருவாகியுள்ளதா என்றால் இல்லை என்றே சொல்வேன். படத்தின் முதல் காட்சியில் மக்கள் பின்னணியில் வருகிறார்கள். குயவர்களாக, இடையர்களாக, வியாபாரிகளாக, விவசாயிகளாக என பாடலில் காட்டப்படுகிறது. அவ்வளவுதானா? சோழ தேசத்தில் மக்கள் என எவரும் வாழவில்லையா?
இப்படத்தின் ஆறுதலான விசயம் பாகுபலியைப் போல மன்னர் எதையும் செய்யும் பராக்கிரமசாளிகளாகக் காட்டாமல் இருந்தது. தேரையெல்லாம் ஒற்றைக்கையால் தூக்கி வீசவில்லை. ஆனால் நம்பகமான உண்மையான ஓர் ஆட்சி முறையைக் காட்ட வேண்டும் என்றால் அதில் மக்களும் இருக்க வேண்டும் அல்லவா? மக்கள் வாழ்ந்த தெரு, வீதி, வீடு என எதுவும் சோழர் தேசத்தில் இல்லையா என்ற ஏக்கமே மிஞ்சியது. சித்தரிப்பு குறைந்த நாவலில் அப்படியான காட்சிகள் இடம்பெறாதது நியாயம்தான். ஆனால் இயக்குனர் இதுபோன்ற இடைவெளிகளில் நுழைந்திருந்தால் படம் இன்னும் பேரனுபவத்தைக் கொடுத்திருக்கும். அப்படிக் காட்சிப்படுத்துவதால் ஓர் உயிர் நிலத்தை நம்முடன் பிணைக்க முடிகிறது.
அதற்கான வாய்ப்பில்லாமல் இருக்கலாம்தான். மலேசியாவின் ஒரு மூளையில் அமர்ந்துகொண்டு இவற்றை இணைக்கலாமே எனச் சொன்ன நான் யார்? ஆனால், கம்சன் வதம் நடனத்திலும் அரச குடும்பத்தினருக்கான வரவேற்பில் வடமொழி மந்திரங்களோடு பூரண கும்ப மரியாதையையெல்லாம் காட்டிய மணிரத்தினம் சிவ பக்தர்களாகிய சோழர்களின் கதையில் ஒரு தேவாரத்தைச் சேர்த்திருந்தால் கூட தமிழ்ப்படம் பார்ப்பதாக ஒரு எண்ணம் தோன்றியிருக்கும். ஒரே ஒரு புலவரின் பாடலைச் சேர்த்திருக்கலாம். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு இடத்தில் மதுராந்தகர் அன்னையிடம் பேசும்போது நந்தியின் பிட்டம் மட்டும் தூரத்தில் தெரிகிறது. இத்தனைக்கும் படத்தில் வரும் மதுராந்தகனின் தந்தையான கண்டராதித்தன் சிவபக்தன். இவன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்றும் பல உள்ளன என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
தமிழ் அடையாளங்களை அழித்த பொதுத்தன்மை இந்தியா முழுவதும் திரைப்படத்தை வணிகம் செய்ய தேவையாக இருக்கலாம். அப்படி இருக்க இந்தத் திரைப்படத்தின் வழி சோழ நாடு, சோழர் ஆட்சி என்பதை உலக மக்களுக்கு அறிவிப்பதுதான் நோக்கமென்று மணிரத்தினம் சொல்ல வேண்டியதில்லை. இது பாகுபலியைப்போல முற்றிலும் ஒரு கற்பனை கதை. இதற்கும் சோழர்களுக்கும் தமிழர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
வணிகமும் கற்பனையும்
முன்பே சொன்னதுபோல ‘பொன்னியின் செல்வன்’ ஒரு வணிக இலக்கியம். அதை ஒட்டி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் முழுக்கவே ஒரு வணிக சினிமா. வணிக சினிமாவுக்கென்றே உள்ள அம்சங்களை கேள்வி எழுப்பி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லைதான்.
காலம் முழுக்க கடல் காற்றில் உழலும் பூங்குழலி அரண்மனையில் உள்ள நந்தினி, குந்தவை போலவே பளபளப்பாக இருப்பதை நாம் மணிரத்தினத்தின் கற்பனை என பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். முதல் போர் காட்சியில் அறிமுகமாகும் கரிகாலச் சோழனின் நெற்றியில் இருக்கும் விபூதி பட்டை அடுத்த ‘ஷாட்டில்’ வாள் வீசும்போது காணாமல் போவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவ்வளவு பெரிய சோழ தேசத்தை கட்டியாழும் சின்னப் பழுவேட்டையரின் படைகள் ஆயுதத்தை வந்தியதேவனை நோக்கி காட்டும்போது துல்லியமாகப் பார்க்க முடிகின்ற அம்பின் அபல நிலையை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். நாளை நாடாளப்போகும் மன்னன் குடித்துவிட்டு சக படைவீரர்கள் மேல் சாய்ந்து ஆடுவதையெல்லாம் ரசிக்கத்தான் வேண்டும்.
இப்படி ஒரு வணிக சினிமாவுக்கே உரிய அம்சங்களை கேள்விகளற்று நாம் ஏற்கலாம். ஆனால் அதே வணிக சினிமாவுக்கு இருக்க வேண்டிய போதுமான அம்சங்கள் இந்தத் திரைப்படத்தில் உள்ளதா என்றும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
எந்த மொழித் திரைப்படம் என்றாலும் அதில் வரும் போர்க்காட்சியில் வரும் வீரனின் போர்ச் சாதனைகளை நம்ப அவனது உடல் கட்டும் பலமும் காரணமாக உள்ளது. இங்கும் பாகுபலியில் உள்ள நடிகர்களின் உழைப்பை குறிப்பிட வேண்டும். அதில் பாகுபலியோ, பல்லவராயனோ, கட்டப்பாவோ வீரர்களாக நம் கண்முன் தெரியக் காரணம் அவர்கள் உடல் பலம். ஆனால் அருண்மொழிவர்மனாக வரும் ஜெயம் ரவி உரையாடல் காட்சிகளில் கொழுக்மொழுக் என்றே காணப்படுகிறார். வரலாற்றுபடி அது அருண்மொழி வர்மனின் இளமைக் காலம். இளமைக் காலம்தானே துடிப்புமிக்கது. இளமைதான் துரிதமானது. ஜெயம்ரவி அப்படி ஏதேனும் செய்கிறாரா? நடிகர்களின் உடல்களை பாத்திரத்திற்கு ஏற்ப தயார் படுத்தியிருக்கலாம். ஆங்காங்கு விழுப்புண்களை ஒட்ட வைப்பதால் மட்டும் அவரை வீரராக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
மற்றொன்று ஒரு மன்னர் காலக் கதையில் அவர்களைத் தனித்துக் காட்டுவது மன்னர்களின் மதிநுட்பம். பொன்னியின் செல்வன் நாவலில் அப்படியான காட்சிகள் இருந்ததாக நினைவில்லை. ஆனால் கல்கி ஆங்காங்கு குறுக்கிட்டு சோழர் பெருமைகளைச் சொல்வார். வந்தியதேவன் அடைத்து வைக்கப்படும் அறையில் உள்ள ஓவியங்கள் வழி பழங்காலச் சோழர் பெருமைகளைச் சொல்வார். அது திரைப்படத்தில் சாத்தியமில்லைதான். ஆனால் அதனை வேறொரு வடிவில் கொடுத்திருந்தால் சோழர்களின் வீர மரபின் மீது மதிப்பு உண்டாகியிருக்கும். ஏதோ கேங் சண்டைபோல போர்கள் நடந்து முடிகிறது.
சோழராட்சி
மணி ரத்தினம் இந்நாவலை வாசித்தவர்களை அதிகம் நம்பியே திரைப்படத்தை இயக்கியிருக்கக் கூடும். அல்லது சோழர்கள் குறித்து போதுமான அறிவு கொண்டவர்களே இப்படத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் முன்னறிவின் வழியே சோழர்களைப் புரிந்துகொள்வார்கள் என நினைத்திருக்கலாம்.
ஒரு மாபெரும் ஆட்சியில் எந்த காலகட்டத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்கின்றன எனும் வரலாற்றுத் துணையை படத்தில் தேவையில்லாமல் இடம்பெறும் பாடல்களுக்கு பதிலாகச் சேர்த்திருந்தால் கூட படம் வலுப்பெற்றிருக்கும்.
தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவர் சுந்தரசோழர். தமிழ்நாட்டின் மிகப் பழமையான அணை, கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாற்சோழன் கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டிய கல்லணை. இதுவே இன்றும் புழக்கத்திலுள்ள மிகப் பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. பிற்காலச் சோழப் பேராசிற்கு கி.பி. 830ல் வித்திட்டு வளர்த்த மாமன்னன் விஜயாலய சோழன். இவன் பழையாறை மாநகரில் தோற்றுவித்த சோழப்பேராசுதான் உலக வரலாற்றில் நீண்டநெடிய காலமான சுமார் 430 ஆண்டுகள் செங்கோல் செலுத்தி கொடிகட்டி ஆண்ட வல்லரசு. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். திரைப்படம் இவற்றைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாபெரும் அரசின் தொடர்ச்சி இது என மனதில் ஓர் படிமம் உருவாக முயன்றிருக்கலாம். அதுதான் இந்த ஆட்சியின் மீது கதாபத்திரங்களுக்கு உள்ள பற்றுதலை பார்வையாளனுக்கும் ஏற்படுத்தும்.
நாவலிலேயே அதற்கான சாத்தியங்கள் இருந்தன. உதாரணமாக, அருண்மொழிவர்மன் இலங்கையில் உள்ள படைக்கு தஞ்சையில் இருந்து அரிசி மூட்டைகளைக் கொண்டுச் செல்வது அரண்மனையில் சலசலப்பை உண்டாக்கியிருக்கும். (இது எந்தப் பாகத்தில் வந்தது என நினைவில்லை. ஒருவேளை அடுத்தப்பாகத்தில் திரையில் வருமா என்றும் தெரியாது) போர் செய்து பிடித்த இன்னொரு நாட்டின் வளத்தை எடுக்காமல் அரிசி மூட்டைகளைக் கடல்கடந்து அனுப்பும் வளமான நாடு தஞ்சை. அந்த வளத்தைக் காட்டினால் கூட சோழ நாட்டின் பெருமையைப் புரிந்துகொள்ள முடியும். அப்படிக் காட்டுவதற்கான அத்தனை சந்தர்ப்பமும் திரையில் இருக்கவே செய்தது.
மொத்தத்தில் இப்படம் சோழர்கள் காலத்தை நமக்கு காட்டவில்லை. மணிரத்னத்தின் உழைப்பைக் காட்டியுள்ளது. அதை எல்லோரும் பாராட்டுகிறார்கள். நானும் பாராட்டுகிறேன். ஆனால் மணிரத்தினம் காட்டியுள்ளது மலை சிகரங்களை. அந்த மலை சிகரங்களும் நவீன கட்டடங்களைப் போல தனித்தனியாக உள்ளன. ஒரு மாபெரும் மலைத்தொடரில் அவை வானுயர்ந்து எழுந்து ஒளிர்வதை காட்டியிருந்தால் எனக்கு அக்காட்சி நிறைவளித்திருக்கக்கூடும்