க்யோரா 3: மகத்துவமாகும் குற்றங்கள்

தங்கவேலுடன்

திட்டமிட்டபடி தங்கவேல் சரியாக காலை எட்டு மணிக்கு செல்வா வீட்டுக்கு வந்து சேர்ந்தார். நியூசிலாந்தில் நான் பார்த்தவரை பெரும்பாலும் நேர ஒழுங்கை கடைபிடிக்கின்றனர். அல்லது நான் சந்தித்தவர்கள் அப்படி இருந்தனரா என்று தெரியவில்லை. ஆனால் அக்குணம் எனக்கு உவப்பானது.

காலை பசியாறல் செல்வா வீட்டிலேயே முடிந்திருந்தது. அளவான கசப்புடன் நல்ல காப்பி கிடைத்தது. முதல்நாள் இரவு பதினோரு மணிவரை இலக்கியம் பேசிக்கொண்டிருந்ததில் நான் அவ்வீட்டில் இயல்பாக உணர்ந்தேன். செல்வா மற்றும் அவரது துணைவியார் ராணி இருவருமே நீதித்துறை அமைச்சில் அதிகாரிகளாகப் பணி புரிபவர்கள். இருவருமே மலேசியர்கள். அவர்கள் இருவரிடமும் இருந்த நகைச்சுவை உணர்வு என்னை இயல்பாக்கியது எனலாம். நகைச்சுவை உணர்வு உள்ள இடத்தில் மட்டுமே இலக்கியம் பேச சாத்தியம். ராணி அக்கா கதைகளைக் கேட்பதில் பிரியம் உள்ளவர். செல்வா நாளுக்கொரு கதையென சொல்லி ஒருவாரு சமாளித்துக்கொண்டிருக்கிறார் எனப் புரிந்தது. அவர்கள் மகன் பயணத்தில் இருந்ததால் எனக்கு அவர் அறையைக் கொடுத்திருந்தனர். மெத்தையைச் சூடு செய்துக்கொள்ளும் கருவி ஒன்று பொறுத்தப்பட்டிருந்தது. எனக்கு அதெல்லாம் தேவைப்படாது என நினைத்துக்கொண்டு படுத்து, நடு இரவில் அதன் விசையைத் தேடி இயக்கிக்கொண்டேன்.


செல்வா மற்றும் ராணி இணையருடன்

நால்வருமாக தங்கவேல் காரில் ஏறிக்கொண்டோம். அந்தக் குடியிருப்பில் வீடுகள் அனைத்தும் வெள்ளை நிறத்திலேயே இருந்தன. பின்னர் பார்க்கும் வீடுகள் எல்லாம் வெண்மை நிறத்திலேயே இருந்ததை உணர்ந்தேன். கண்களில் நிறைந்த வெண்மை மனதில் அரூபமாக குளிரைக் கூட்டியது. பெரும்பாலும் பலகையினால் கட்டப்பட்ட வீடுகள். அதற்குக் காரணம் நிலநடுக்கம். அதிகமாக நிலம் நடுங்கும் தேசம் நியூசிலாந்து. கடந்த பத்து ஆண்டுகளில் பெரிதாகவும் சிறியதாகவும் வருடத்திற்கு 14000 நிலநடுக்கங்களைப் பார்த்துவிடுகிறது. நான் இருந்த தினங்களில் கூட நில நடுக்கம் நிகழ்ந்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. சிறிய அளவான நடுக்கங்களை விலங்குகளே நுண்ணியமாக அறிகின்றன. அவையே பூமிக்கு நெருக்கமானவை.

போர் நினைவிடத்தின் மையம்

தங்கவேல் முதலில் தேசிய போர் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காலையில் திறந்த வெளியில் அமைந்திருந்த அந்த நினைவிடத்தில் நடந்து செல்வதே உற்சாகமாக இருந்தது. மனம் “நீ நியூசிலாந்து வந்துட்டடா” என முதன்முறையாகச் சொன்னது. செல்வா, ராணி தம்பதிகளும் அப்போதுதான் அங்கு முதன்முறையாக வருகின்றனர் எனப் பேசிக்கொள்வதில் தெரிந்தது.

இந்தப் போர் நினைவிடம் 1932 ஆம் ஆண்டு அன்சாக் தினத்தன்று (ஏப்ரல் 25) முதல் உலகப் போரின் நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேலும் தென்னாப்பிரிக்கப் போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் கொரியா, மலேசியா, வியட்நாம் போர்களில் தங்கள் உயிரைக் கொடுத்த நியூசிலாந்து வீரர்களை நினைவுக்கூர இவ்விடம் அமைக்கப்பட்டிருந்தது. அன்சாக் தினம் (ANZAC DAY) என்பது, Australian and New Zealand Army Corps என்பதின் சுருக்கப்பட்ட வடிவம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் நாள், ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது. இந்த நாளில்தான் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து இராணுவத்தினர் முதலாம் உலகப் போரின் போது (1915) துருக்கி மீதான போர் தாக்குதலுக்கு கலிப்பொலி என்ற இடத்தில் தரையிறங்கினர். வரலாற்றில் எப்போதும் நினைவு கூறப்படும் கலிப்பொலி போரை பிரித்தானிய அரசும் பிரெஞ்சு கூட்டுப்படைகளும் இணைந்து ஏப்ரல் 25, 1915 முதல் ஜனவரி 9, 1916 வரை துருக்கியில் நிகழ்த்தியது.

லண்டன் சின்னம்


நான் சாவகாசமாக அங்கிருந்த ஒவ்வொரு நினைவுச் சின்னங்களையும் பார்த்தேன். அவ்விடம் அப்படி ஒரு சாவகாசத்தைக் கொடுத்தது எனலாம். ஒரு நிமிடத்தில் அங்கிருந்த ஸ்தூபிகள் எல்லாம் யாரோ ஒருவரின் குற்ற உணர்ச்சியின் பிரமாண்ட வடிவங்களாகத் தோன்றியது. நாம் நாட்டார் தெய்வங்களுக்குக் கல் வைத்து வணங்குவதுபோலதான் போர் நினைவிடங்களும். ஒரு படையில் வீரர்கள் என்பவர்கள் யார்? யாரோ ஒருவனின் கனவுக்காக, அகங்காரத்திற்காக, தீவிரத்திற்காக தங்கள் நிஜங்களைத் தின்னக் கொடுப்பவர்கள். கூட்டாக செய்வதாலேயே கொலைகளை நியாயப்படுத்திக்கொண்டவர்கள். இன்னொருவரின் சொற்களால் தங்கள் உலகை உருவாக்கிக்கொண்டவர்கள். பெரும்பாலும் பெயரற்றவர்கள். அலையலையாக மடிந்த அடையாளமற்றவர்களின் இரைச்சல் யாரையும் நிம்மதியிழக்க வைக்கக்கூடியது. அவர்களை தூண்களாக நிறுத்துவது தங்களுக்குள் எழும் குற்ற உணர்ச்சியைப் போக்கதான். எவ்வளவு பிரமாண்டமோ அவ்வளவு மிகுதியான குற்ற உணர்ச்சி. இன்னொரு காலத்தில் போரின் பெருமிதங்கள் எல்லாம் கரைந்து இவ்விடம் வழிபாட்டுக்குறியதாக மாறலாம்.

பல்வேறு நாடுகளின் நினைவுச் சின்னங்கள் அங்கே கலை வடிவங்களாக இருந்தன. பெல்ஜியம், பிரஞ்சு, ஜெர்மன், பசிப்பிக் தீவு, துருக்கி, லண்டன், அமெரிக்கா ஆகியவற்றோடு 1918 இல் வந்த இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் நினைவுச்சின்னமும் இருந்தது. தங்கவேல் ஒவ்வொரு சின்னம் குறித்தும் விரிவான விளக்கம் அளித்தார். கொஞ்சம் முயன்றால் அவர் நியூசிலாந்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலா வழிகாட்டியாகிவிடலாம். லண்டன் சின்னம் அபாரமாக இருந்தது. லண்டனின் அடையாளமாக இருக்கும் ராயல் ஓக் (Royal Oak) மரத்தின் கிளையும் நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பொஹுடகாவா (pohutukawa) மரத்தின் கிளையும் ஒன்றோடொன்று இணைந்த நிலையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. பொஹுடகாவா (pohutukawa) மரங்களில் உருவாகும் பூக்கள் குறித்து தங்கவேல் விளக்கிக் கொண்டே இருந்தார். அவை பூத்து உதிரும் காலங்களில் தரையெங்கும் சிவப்பு பட்டுக்கம்பளம் விரித்து கிடக்கும் என்றபோது என்னால் அதனைக் கற்பனை செய்ய முடிந்தது.

ஆஸ்திரேலிய நினைவுச்சின்னம்

என்னை அங்கு அதிகம் கவர்ந்தது பதினைந்து சிவப்பு மணற்கல் தூண்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஆஸ்திரேலிய நினைவுச்சின்னம்தான். பல்வேறு கல்வெட்டுகள், ஆஸ்திரிலிய பழங்குடி அடையாளங்கள், மாவோரிகளின் கலைப்படைப்புகள் என அதில் அடையாளங்கள் இருந்தன. ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான இராணுவ உறவை நினைவுபடுத்தும் சின்னம் அது.

முன்னாள் வீரருடன்

நாங்கள் சென்றிருந்த அத்தினம் விசேடமானது என எங்களுக்கே தாமதமாகத்தான் தெரிந்தது. அன்று Armistice Day. அதாவது 1918இல் முதலாம் உலகப் போரின்போது 11 வது மாதத்தின் 11 வது நாளின் காலை 11 மணிக்கு ஒரு போர்நிறுத்தத்தில் கையெழுத்திடப்பதை நினைவு கூறும் நாள். ஜெர்மனியுடன் அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் நான்கு வருட போர் நிறுத்தத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயின் தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

போர்க்காலங்களில் இயங்கிய பல்வேறு துறை சார்ந்த முன்னால் வீரர்களை அவர்களின் அதிகாரப்பூர்வ உடையில் பார்க்க முடிந்தது. செல்வா அவர்களுக்கு அதில் சிலரை பழக்கம் இருந்ததால் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் என் கவனம் அவர்களிடம் இல்லை. அங்கிருந்த வெண்கலச் சிலை ஒன்று என்னை அதிகம் கவர்ந்தது. அது கழுதையுடன் மனிதன் இருக்கும் சிலை. Richard Alexander Henderson என்பவருடையது. கலிப்போலி போரில் காயமடைந்த சிப்பாயை சுமந்து செல்ல கழுதையைப் பயன்படுத்திய ரிச்சர்ட் அலேக்ஸாண்ட்ராவின் பணி ஓவியமாக உருவாகி, அதிலிருந்து இந்தச் சிலை வடிக்கப்பட்டிருந்தது.

போரின் துயரத்தையும் வீரத்தையும் பதிவு செய்துக்கொண்டிருந்த பெருவெளியில் ஒரு மனிதனிடம் இருந்த கருணையும் ஒரு மூலையில் உருகொண்டிருந்தது. அதுதான் அவ்விடத்தை மகத்துவமாக்கியது. அந்தக் கருணையை நம்பிதான் உலகம் இன்னமும் இயங்குகிறதே தவிர போரின் சாகசத்தையும் வீரத்தையும் நம்பியல்ல என அச்சிலை உணர்த்திக்கொண்டு நின்றது.

  • தொடரும்
(Visited 147 times, 1 visits today)