சோரம் போனவனின் சொற்கள் : 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்து…

மாநாட்டில் கலந்துகொண்ட முதல் நாளிலிருந்து ‘எதையும் வெளிப்படையாக பேசாதே… உனக்குத்தானே தலைவலி. எல்லாருக்கும் எல்லாவற்றிலும் மாற்றுக்கருத்துண்டு. ஆனால் இப்படிப் பேசிப்பேசி கிடைக்கப்போகும் நன்மைகளை கெடுத்துக்கொள்வதில்லை. நீ ஏன் இவ்வாறு இருக்கிறாய்…’ என்பது போன்ற அறிவுரைகள் தொடர்ந்து பல நலவிரும்பிகளிடமிருந்து வந்துகொண்டிருந்தன. ‘வல்லினம்’ நிகழ்வை தவிர்த்து கடந்த சில ஆண்டுகளாக எந்தப் பொது நிகழ்விலும் அதிகம் கலந்துகொள்ளாததால் பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்தது உற்சாகமாக இருந்தது. பலருக்கும் என்னைப் பார்த்தவுடன் நலன் விசாரிப்பதைவிட அறிவுரை சொல்லவே தோன்றியது. கெட்டு சீரழிந்து போயிருக்கும் நான், அவர்கள் அறிவுரை மூலம் உணர்ந்துகொண்டது முதலில் சோரம் போக பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே இந்தப் பதிவை சோரம் போன மனநிலையில்தான் எழுத வேண்டியுள்ளது.

கீழ் வரும் பகுதிகள் சுவாரசியம் இல்லாமல் இருக்கும் என்பதால் உண்மையை அறிய விரும்புபவர்கள் இதோடு வேறு வேலையைப் பார்க்கச் செல்லலாம். வாசித்து உங்கள் நேரத்தை விரையமாக்க வேண்டாம்.

முதல்நாள் பூங்குழலியுடன் சிறப்புரை கேட்க அரங்கில் நுழைந்தேன். 800 பேர் அமரக்கூடிய அரங்கு நிறைந்திருந்தது. முதலில் எளிதாக வெளியேறும்படியே ஓரமாக அமர்ந்திருந்தோம். கொஞ்ச நேரத்தில் இரு ஆண்ட்டிகள் வந்தார்கள். இடம் கேட்கவே நாங்கள் வெளியேறி அவர்களை உள்ளே செல்லச் சொன்னேன். உள்ளே சென்றவர்கள் , “சின்னப்புள்ளைங்க நீங்க உள்ள போகம எங்கள உள்ளுக்கு அனுப்பிட்டீங்களே ” என்று கடிந்தார்.

“இல்லை நாங்கள் வெளியேறக்கூடும்” என்றேன்.

“நாங்களும்தான் முடிஞ்சதும் வெளிய போவோம்… ராத்திரி முழுக்க இங்கனயேவா தங்கப்போறோம்” என மீண்டும் சத்தமாகப் பேசினார். ஆரம்பமே அமோகமாக இருக்கிறதென நொந்துபோனேன்.

‘தமிழின் தேவைகள்’ என்ற தலைப்பில் முனைவர் ஜெயதேவன் பேசினார். பொதுவான சில விடயங்களைப் பேசினாலும் மொழியை அடுத்தக்கட்ட நகர்ச்சிக்கு எவ்வாறு எடுத்துச்செல்லலாம் என்ற பார்வை அவர் பேச்சில் இருந்தது. அடுத்து சிவ ராஜேந்திரனின் உரை. இளம் பேச்சாளர். (சுங்கைப்பட்டாணி சிவா என முன்பு இலக்கிய உலகில் அறியப்பட்டவர்) பொதுவாக ஒத்த வயது உள்ளவர்களை விமர்சனம் செய்தால் அது பொறாமையில் சொல்லப்படுவதாக எளிதில் புறக்கணிக்கப்படுகிறது. எனவே இதுவும் பொறாமையில் வெம்பிய மனதின் குரலாகவே வாசித்துக்கொள்ள உங்களுக்கு அனுமதி உண்டு.

சிவ ராஜேந்திரன் பேசத்தொடங்கியபோது என் பின் கழுத்து வலிக்கத்தொடங்கியது. பிரஷர் ஏறும்போது ஏற்படும் வலிதான். குழலியிடம் அரங்கைவிட்டு வெளியேறுவதாகச் சொன்னேன். ஆனால் குழலி அவ்வருமையான உரையைக் கொஞ்சம் செவிமடுக்கச் சொல்லி சிரித்தார். டம் கட்டிக்கொண்டு இருந்தேன். வணக்கம் மட்டும் சொல்லி முடிக்க சிவ ராஜேந்திரன் 15 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். பட்டிமன்றத்தில் வழக்கமான கிச்சு கிச்சுகளைக் கேட்டுப்பழகிய கூட்டம் சிரித்தது; கைத்தட்டியது. குழலிக்கு என்னைப்பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும். ‘பரவாயில்ல போங்க’ என்றார். ஒரே ஓட்டமாக வெளியேறினேன். கொஞ்சம் சாவகாசமாக மூச்சு விட முடிந்தது. இன்னும் பத்து நிமிடம் இருந்திருந்தால் மூர்ச்சையாகி மயங்கியிருக்கலாம். அடடா சிவ ராஜேந்திரனின் தமிழுக்குத்தான் எத்தனை சக்தி என மெச்சி அகன்றேன்.

ஒரு மணி நேரத்திற்குப் பின் வெளியேறிய தமிழ் அறிஞர்கள் பலரும் கழுத்தைப் பிடித்துக்கொண்டு நின்றனர். பிரஷர்தான்! சிவ ராஜேந்திரன் போன்றவர்களை இன்னும் தமிழ் உலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதுபோன்ற உலகலாவிய மாநாடுகளுக்கு வரும் அறிஞர் பெருமக்கள் குஜால் அடைய ஜோக்கு பேச்சாளர்கள் முக்கியம். மூளையை கொஞ்ச நேரமாவது கழற்றி வைக்க போதிய அவகாசம் கிடைக்கலாம்.

இரவில் கலை நிகழ்ச்சி. எல்லாரும் நல்லா பாடினார்கள். நல்லா ஆடினார்கள்.

மறுநாள் கருத்தரங்கம் தொடங்கியது. பேராசிரியர் அ.ராமசாமி மற்றும் எழுத்தாளர் இமையத்துடன் ஏதாவது முக்கியமான தலைப்புகள்20150130_081634 பேசப்படுமா என தேடி அமர்ந்தோம். அற்புதமான கட்டுரைகள். விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் வாசிப்பதென்பது நமக்கு அத்தனை சீக்கிரம் சாத்தியம் இல்லை என்பதால் பல ஆய்வாளர்கள் மூன்று, நான்கு விக்கிப்பீடியா கட்டுரைகளை எடுத்து கசக்கி, கலந்து, கஞ்சியாக்கி வந்திருந்தவர்களின் காதுகளில் ஊற்றி, நிரப்பி வெளியே அனுப்பினர். தொல்காப்பியம் எதைச் சொல்கிறது என்ன சொல்கிறது என பல புதுமை கருத்துகளை ஆசிரியர்கள் போல ஆய்வாளர்கள் போதிக்க, கரம் கட்டி அதை கேட்டு மகிழ்ந்தோம்.

அதிலும் முக்கியமாக ‘தமிழர் பண்பாடு’ என இந்து மதத்தின் சடங்குகளையும் இராமயணம் மற்றும் மகாபாரத்தின் காட்சிகளை விளக்க, முட்டாள்தனமாக நான் அவசரப்பட்டு ‘அவை தமிழர் பண்பாட்டில் தொடர்பற்றவை’ என விவாதம் செய்துவிட்டேன். பின்னர் அதிபுத்திசாலியான அவைத்தலைவர் “எதுவா இருந்தா என்ன? நல்லதா இருந்தா அதை தமிழ் கலாச்சாரத்தில் சேர்த்துக்கலாமே” என்ற முத்தான கருத்துகளை உதிர்க்க அடடா எத்தனை முற்போக்கான சிந்தனை என அமைதியாக வெளியேறி விட்டேன்.

இன்னொரு கட்டுரை வாசிப்பில் யோக முத்திரைகளை பாலியல் குறியீடு என்று விவரித்த தமிழக பேராசிரியர் ஒருவர் கோயில்களில் காணப்படும் பாலியல் சிற்பங்கள் ஆன்மிகத்திற்குச் செல்லும் வழியைக் காட்டுகிறது எனப் புதிதாக ஒரு கண்டுப்பிடிப்பைக் கூற அவர் ஞானத்தை எண்ணி நாங்கள் வியந்தோம். அந்த முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்று சொல்லவே இல்லை. ஒருவேளை இறைவனே கனவில் வந்து சொல்லியிருக்கலாம். ஆண்டவன் சொன்னப்பிறகு ஆதாரங்கள் எதற்கு? ஆனால் எழுத்தாளர் அ.ராமசாமிக்கு இது புரியவே இல்லை. உலகுக்கு பண்பாடு சொல்லிக்கொடுத்தது தமிழர்கள்தான் என்ற அவரது கருத்தை முன்வைத்து கேள்வி எழுப்பினார். “என்னா சார் எல்லாரும் அப்படித்தானே சொல்றாங்க… புக்கெல்லாம் இருக்கே” என கட்டுரை வாசித்தவர் கூறியது சரியென்றே பட்டது. “எல்லாரும் சொல்லிட்டா ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே… எதற்கு சும்மா கேள்வி கேட்கிறார் முனைவர் ராமசாமி” என நொந்துகொண்டேன்.

போகும் அரங்கில் எல்லாம் திரும்பத் திரும்ப பழம் இலக்கியங்களின் பெருமை, அவற்றில் காணப்படும் வாழ்வியல் கூறு, நன்னெறி கூறு போன்றவற்றோடு தமிழர்கள் தமிழில் பெயர் வைப்பதில்லை, தமிழ் பேசுவதில்லை போன்ற கட்டுரைகள் அதிகமாக படைக்கப்பட்டது மெத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால் இதுபோன்ற தலைப்புகளில் கட்டுரைகளை நான் பல வருடங்களுக்கு முன் கேட்டது. தமிழன் அன்று ஒன்றையும் இன்று ஒன்றையும் பேசாமல் என்றுமே ஒரே கருத்தில் நின்று உரையாடுவதுதான் எத்தனை உவகையானது.20150201_083330

ஆயிரம் பேருக்கு மேல் இருந்த மாநாட்டுக்கு உணவு வழங்க இரண்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கிசுகிசுப்பை ஏற்படுத்தியது. ஏன் இதற்கெல்லாம் கோவப்பட வேண்டும். கொஞ்சம் வரிசை நின்றால் உணவு கிடைத்துவிடப்போகிறது. இவ்வளவு செய்தவர்களுக்கு உணவுக்காக கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்யவா தெரிந்திருக்காது. நாமெல்லாம் ஒரே இடத்தில் ஒன்னு மண்ணா இருக்க வேண்டும் என்ற முயற்சிதானே இதெல்லாம். கொஞ்சம் கூட பொறுமை இல்லாதவர்கள் என நொந்துக்கொண்டேன். அதோடு காப்பி கொடுக்கும் இடத்தில் காப்பியைத் தமிழ்ப்படுத்தி ‘குழம்பி’ என குழம்பி எழுதப்பட்டிருந்ததைக் கண்டு மெய்சிலிர்த்தேன். எங்கெங்கு காணினும் தமிழடா என உற்சாகம் கொண்டேன். என் தமிழ் ரத்தம் குளிர்ந்தது.

20150130_104006அவகாசம் இருந்தபோது கண்காட்சி நடத்தப்பட்ட அரங்குக்குச் சென்றேன். ‘மலேசியத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும்’ என்ற தலைப்பின்கீழ் கண்காட்சி நடத்தப்பட்டதை கண்டு ஒரே மகிழ்ச்சி. உள்ளே நுழைந்தேன். 5000, 4000, 3000, என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை படங்களாக இருந்தன. அதற்கும் மலேசியத்தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் என தெரியாமல் விழித்தேன். ஓ! அங்கிருந்து தொடங்குறாங்க போல… எல்லாம் ஒரே ரத்தம்தானே என புரிந்துகொள்ள எனக்கு அப்போது அறிவு வேலை செய்யவில்லை. கொஞ்சம் முன்னே சென்றால் தமிழர்களின் வாத்தியக்கருவிகள் என அடுக்கிவைக்கப்பட்டவைகளில் ‘பறை’ இல்லை. தமிழர்கள் தொல்குடிகள் என்பதற்கான ஆதாரமான ஒரு கருவியைப் பார்வைக்கு வைக்காதது சாதிய உணர்வாலா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் அப்படியெல்லாம் சிந்திக்கக்கூடாது என ஏற்கனவே சபதம் எடுத்துவிட்டதால் அப்படியே கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்தேன். அங்கு,

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண20150130_103951

நன்னயம் செய்து விடல்’

என்ற குறள் பின்வருமாறு எழுதப்பட்டு அச்சாகியிருந்தது.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல்

அவர் நாண நன்னயம் செய்து விடல்’

20150130_104829அதனால் என்ன?  என்ன எப்படி வரிசைப்படுத்தினால் என்ன? படித்தால் புரிகிறது அல்லவா என அமைதியாக அகன்றேன். ஆனால் மீண்டும் சுவரின் இரு படங்கள் எதிர்க்கொண்டன. ஒன்று தமிழர் பாரம்பரிய உடை என்ற தலைப்பிடப்பட்டிருந்தது. மற்றுமொரு படத்தில் செட்டியார்கள் பாரம்பரிய உடை என இருந்தது. தமிழர்களும் செட்டியாரும் வெவ்வேறனவர்களா? அவர்கள் தனி இனமா? அவர்கள் தமிழர்களில் அடக்கம் இல்லையா? தனித்த ஜாதி அடையாளத்துடன் அவர்களை உலகத்தமிழராய்ச்சி மாநாட்டில் காட்ட வேண்டிய நோக்கம் என்ன? அப்படியானால் சாதி முறையை அங்கீகரிக்கலாம் என இந்த கண்காட்சி தலைவர் நினைக்கிறாரா என யோசித்தபோதுதான் யார் இந்த அரங்கின் தலைவர் என தெரிந்தது. ஆம் ! சீ. அருண். ஏற்கனவே சீ.அருண் ஓர் அரை ஆய்வாளர் என கட்டுரை எழுதியிருந்ததும் (http://vallinam.com.my/navin/?p=1584) வரலாறுக்கு சம்பந்தமே இல்லாத அவரை இந்த அங்கத்திற்கு தலைவராகப் போட்டது முரண்நகையாக தோன்றி கலகலப்பாக்கியது. அதற்கு மேல் அங்கு இருக்க விருப்பம் இல்லாமல் வெளியேறினேன். பின் கழுத்து வலித்தது.

பொறுப்பில் இருந்தவர்களிடம் கண்காட்சிப் பொருள்கள் யாருடைய சேகரிப்பு எனக் கேட்டதற்கு யாரோ மலாக்காவில் உள்ள ஒருவரது என்றார்கள். சில அரிய பொருள்கள் அங்கு இருக்க அவரே பிரதானக் காரணம். ஆனால் அவருக்கு ஒரு நன்றியோ, அவர் குறித்த விபரங்களையோ, அவர் தொடர்பு எண்ணையோ போடாமல் ஓவியர் சொர்ணத்திற்கு பெரிய பதாகைகள் எல்லாம் மாட்டி தடபுடல் செய்திருந்தனர். ஓவியர் சொர்ணம் இரண்டு மூன்று பொருள்கள் கொடுத்தாராம். ஆனால் ஒரு லாரியில் ஏற்கக்கூடிய பொருள் கொடுத்தவருக்கு மரியாதை இல்லை. அதற்கு மேல் இருந்தால் எங்கிருந்தாவது எனக்கு சொரணை பொத்துக்கொண்டு வந்துவிடும் என்பதாலும் நான் ஒரு சோரம் போன பிண்டம் என்பதாலும் மூடிக்கொண்டு வெளியேறினேன். மேலும் யாரையும் விமர்சிக்காமல் இருந்தால் எனக்கும் ஏதாவது கிடைக்க வேண்டியது கிடைக்கும்… நானும் நாலு காசு பார்க்கலாம்… ஏதாவது விருது கிருது கிடைக்கும். குறைந்து குறைந்து எதிர்க்கொள்பவர்கள் என்னை எதிரிபோல பார்க்காமல்; தயங்காமல் பேசுவார்கள் இல்லையா!

மாநாட்டின் சுவாரசியமே டத்தோஶ்ரீ சாமிவேலுதான். அவர் எந்த அரங்குக்குள் சென்றாலும் ஒரு கூட்டம் பின்னாடியே செல்கிறது. அவர் எழுந்தால் அந்தக் கூட்டம் அப்படியே வெளியேறி அரங்கை காலி செய்துவிடுகிறது. அவர் குனிந்தால் எதையோ பிடிக்க தயாராகிறது. அவர் நிமிர்ந்தால் தலை சொறிந்து நிற்கிறது. ஆக மொத்தத்தில் ஒரு படையப்பா படத்தைப் பார்க்கும் பிரமிப்பை அவ்வப்போது ஏற்படுத்தி அகன்றார். பேசாமல் அவர் மெழுகு பொம்மை ஒன்றைச் செய்து எல்லா அரங்கிலும் வைத்துவிட்டால் கூட்டம் அப்படியே இருக்கும் அல்லவா? எவ்வளவோ செலவு செய்பவர்கள் இது குறித்து ஆலோச்சிக்கலாம்.

சனிக்கிழமை என் அமர்வு இருந்தது. தமிழகத்திலிருந்து துணை வேந்தர் ஒருவர் அவைத்தலைவராக இருந்தார். அவர் ஆங்கிலத்தில் பேசத்தொடங்க தமிழில் பேசும்படி முதலில் சத்தம் கிழம்பியது. துணைவேந்தருக்குக் கடும் கோபம். ‘எனக்குத் தெரியும்’ என்பதுபோல பழகிப்போன சொல்விளையாட்டை ஆரம்பித்தார்..

‘வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து… அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து அறிவார்ந்தோர் இடையிலெழும், காதலுக்கு மூன்றெழுத்து… ‘ என ஆரம்பித்து 45 நிமிடங்கள் பேச ‘அறுவை’க்கும் மூன்றெழுத்து எனச்சொல்ல யாராவது வருவார்களா என விழிப்பிதுங்கி நிற்க பின் இருக்கையிலிருந்து எழுத்தாளர் கோ.புண்ணியவானின் குரல் கேட்டது. “உங்கள் பேச்சைக் கேட்க நாங்கள் வரவில்லை. கருத்தரங்கில் பேச வேண்டியவர்களுக்கு வழி விடுங்கள்” என்றார். துணைவேந்தர் தமிழகத்தில் பெரும் ஆளுமை. அப்போதுதான் அவர் இரண்டு மூன்று முனைவர் பட்டம் பெற்றதை ஏதோ கடையில் கத்தரிக்காய் வாங்கிய அலட்சியத்தோடும் பெருமிதத்தோடும் சொல்லி முடிக்க கோ.புண்ணியவானின் சீற்றம் அவரை கடுப்பாக்கிவிட்டது. படபடவென பொறிந்தார். அவர் வாழ்வில் இவ்வாறான ஒரு இக்கட்டை எதிர்க்கொண்டிருக்க மாட்டார். தனது அனைத்து அதிகார பலத்தையும் சொல்லியப்பிறகு மலேசியாவில் ஒரு படைப்பாளி தன்னை அடக்கியதின் விளைவாக எல்லாரையும் பார்த்து ‘ஈ’ என பல்லைக்காட்டிக் கொண்டிருந்தார். அதற்கு அர்த்தம், “அவர் விட்ட அம்பு என்னை குத்தலயே …யே டொய்ங்… டொய்ங்… ” என்பதுதான். பிறகு அரங்கை பேராசிரியர் ம.மன்னர் மன்னனிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல அரங்கம் கைத்தட்டியது.

மலேசியச் சூழலில் சிற்றிதழ்களின் தேவையும் அதன் மாற்று வடிவமும் என்ற தலைப்பில் இன்று அச்சு ஊடகங்கள் எதை நோக்கி செயல்பட வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தை எவ்வாறு ஆக்ககரமாகப் பயன்படுத்துவது என்றும் வரலாற்றில் சிற்றிதழ் என பார்ப்பனியம் செய்த வரலாற்று முரணையும் அவசரமாகப் பேசி அமர்ந்தேன். கேள்வி பதிலுக்கெல்லாம் நேரம் இல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த அந்த துணைவேந்தர் அபகரித்துச் சென்றிருந்தார்.

இரவில் கலை நிகழ்ச்சியெல்லாம் தொடர்ந்து இருந்தது. மாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்வில் தெலுங்கு கீர்த்தனையில் பரதம் ஆடப்பட்டது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. சோரம் போன மனநிலையில் இருந்த நான் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பிரதமருக்கு தமிழுக்கும் தெலுங்குக்கும் வித்தியாசம் தெரியாது என்றே சமாதானம் சொல்லி வைத்தேன். ஒரு வேளை பிரதமரும் தமிழ் பேசும் போது வேறாகவும் பாடும்போது வேறாகவும் உள்ளதென நினைத்திருக்கலாம்.

மாநாட்டில் மிக மகிழ்ச்சியான தருணம் அ.ராமசாமி மற்றும் எழுத்தாளர் இமையத்தின் அருகாமை. இமையத்தின் உடல் மொழி விசித்திரமானது. எதையாவது சொல்லிவிட்டு நம்மை நோக்கி என்ன என்பதுபோல தலையாட்டுகிறார். என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழிபிதுங்கி நிர்க்க வேண்டியதாய் உள்ளது. அ.ராமசாமி மிக முக்கியமான ஆளுமை என அறிய முடிந்தது. மாற்று கருத்துகள் உள்ள இடத்திலும் அவர் காணும் நல்ல விசயங்கள் குறித்து திறந்த மனதுடன் பாராட்டுகிறார். மூர்க்கமான எதிர்ப்பையோ புறக்கணிப்பையோ பார்க்க முடியவில்லை. ஆய்வாளர்களிடம் உள்ள குணம் அது. அவருடன் ஒரு கலந்துரையாடல் நடத்த சாத்தியமில்லாத சூழலாகிவிட்டது. ஆனால், அவரை மீண்டும் மலேசியாவுக்கு வல்லினம் மூலம் அழைக்க வேண்டியதின் அவசியம் புரிந்தது,

ஞாயிறு காலையில் மீண்டும் வந்து எட்டிப்பார்த்துவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டேன். நன்றாகத் தூக்கம் வந்தது. கனவில் யாரோ ஒரு தாத்தா அழுது கொண்டிருந்தார். அனேகமாக அது தொல்காப்பியனாக இருக்க வேண்டும்.

(Visited 438 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *