வாசிப்புப் பழக்கம் உள்ள பலரையும் பார்க்கிறேன். ஆனால் அவர்கள் நுண்வாசிப்பாளர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வியே எனக்கு எப்போதும் உண்டு. வாசிப்பு என்பது ஒரு போட்டியில்லை. அதிகமான நூல்களை வாசித்துவிட்டோம் என்ற பட்டியலைச் சுமப்பதில் என்ன பெருமை இருந்துவிடப்போகிறது? வாசிப்பின் பலன் நமக்குள் நிகழும் மாற்றம். வாசிப்பில் தனி ஒருவன் அடையும் மாற்றமே அவனை எதிக்கொள்ளும் ஒவ்வொருவரையும் தீ போல பற்றுகிறது. இந்த உள் மாற்றம் என்பதை மனவிசாலம் என சுருக்கமாக அடையாளம் காணலாம். தேர்ந்த வாசிப்பாளர்களுக்கு சமூகத்துக்கு இன்னல் தரும், சமுதாயத்தைச் சுரண்டும் நபர்கள் மேல் அறச்சீற்றம் எழுமே தவிர , தனிப்பட்ட வாழ்வில் யாரையும் நல்லவர் – கெட்டவர் எனப் பட்டியலிடமாட்டார்கள். இந்த மனவிசாலம் அடைய வகை செய்யும் நுண்வாசிப்பை பழக்கத்தில் கொள்ளாமல் சுமந்து திரியும் வாசித்த நூல் பட்டியல் என்பது வீண்.
என்னை நெகிழவைத்த அழவைத்த ஒரு சிறுகதை ஏன் பலருக்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற கேள்வியை பலமுறை எதிர்க்கொண்டுள்ளேன். அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம் அவர் அந்தக் கதையை உள்வாங்கவில்லை என்பதுதான். அவ்வாறு தவறவிடும் கதைகளில் ரேமண்ட் கார்வரின் ‘கதீட்ரல்’ என்ற சிறுகதையைச் சொல்லலாம். ‘கதீட்ரல்’ என்பதை பேராலயம் என அர்த்தம் கொள்ளலாம். ‘கனவுகளுடன் பகடையாடுபவர்’ என்ற தொகுப்பில் தமிழில் ஜி.குப்புசாமியின் மொழிப்பெயர்ப்பில் இந்தக் கதையை வாசித்துள்ளேன். என்னை அப்போது அக்கதை பெரிதாகச் சீண்டவில்லை. ஆனால், செங்கதிர் மொழிப்பெயர்ப்பில் வந்துள்ள ‘வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு’ என்ற தொகுப்பில் உள்ள மொழிப்பெயர்ப்பே சிறந்ததாகப் படுகிறது. ஆழமாக ஒரு கதையைப் புரிந்துகொள்ள செரிவான மொழிப்பெயர்ப்பே அவசியமாகிறது.
ஏறக்குறைய 20 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறுகதை கண் பார்வையற்ற மனைவியின் தோழனான ராபர்ட்டுடன் அவள் கணவன் கொள்ளும் நட்பின் தொடக்க பொழுதுகளைச் சொல்கிறது. ராபர்ட் , மனைவி இறந்த பிறகு மனச்சோர்வில் வருகிறான். கண்பார்வையற்றவனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதறியாமல் சலித்துக் கொள்ளும் கணவன், அவன் வருகைக்கு பிறகு மெல்ல மெல்ல அவன் உலகிற்குள் நுழைவதை கதை காட்டுகிறது. கதைசொல்லியின் புலம்பலிலிருந்து தொடங்குகிறது கதை.
கதைச்சொல்லியான கணவனுக்கு நிறைய சந்தேகங்கள் வருகிறது. குறிப்பாக அந்தக் குருடன் ஒரு பெண்ணை மணந்து கொண்டிருந்தான் என்பதும் தனது பிரியமானவரிடமிருந்து தன் தோற்றம் பற்றி எந்த ஒரு பாராட்டுமின்றி தினம் தினம் அந்தப் பெண் எப்படி வாழ்ந்திருப்பாள் என்பதும் அவனது குழப்பங்களில் முதன்மையானது.
இரவில், கணவனும் கண்பார்வையற்ற நண்பனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தற்செயலாக ‘கதீட்ரல்’ (பேராலயம்) என்று கணவன் உரையாடலின் போது சொல்கிறார். பிறவியிலேயே கண் தெரியாதவருக்கு அந்த சொல் புரியவில்லை. இவர் விதவிதமாக விளக்கிப்பார்க்கிறார். கடைசியில் குருடரின் ஆலோசனைக்கு ஏற்ப இவர் ஒரு பென்சிலை எடுத்துக்கொள்கிறார். அவர் கையை கண் தெரியாதவர் பற்றிக்கொள்கிறார். கணவன் இப்போது கதீட்ரலை வரைகிறார். குருடரும் கூடவே மனதால் வரைகிறார். இடையில் கண்களை மூடிக்கொண்டு வரையும்படி குருடர் பணிக்க எதற்கோ கட்டுப்பட்டவர் போல அவ்வாறே செய்கிறார். அவருக்கு எல்லாமே புதிதாய் இருக்கிறது. இருவரும் கதீட்ரலை பார்த்துவிடுகிறார்கள். கண் தெரியாதவருக்கு இவர் ஒரு பேராலயத்தைக் காட்டுகிறார். இவருக்கு அவரும் ஒரு பேராலயத்தைக் காட்டுகிறார். இருவரும் ஒரு மையத்தில் சந்திக்கிறார்கள். அது ஒரு உரையாடல். மொழியில்லா உரையாடல்.
இந்த உரையாடலோடு கதை முடிகிறது. ஆனால் நல்ல புனைவு அதோடு முடிவதில்லை. அதன்பின் அக்கதை வாசிப்பவரின் மனதில் வளர்கிறது. கணவனின் அத்தனை கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கும். அறிதல் என்பது பார்வையால் மட்டுமானதல்ல என்பதும் பார்வையற்ற புரிதல் இன்னும் விசாலமானது என்பதும் தன் மனைவியை அந்தக் குருடன் இன்னும் ஆழமாக ரசித்திருப்பான் என்பதையும் கதைச்சொல்லியான கணவன் புரிந்திருப்பார். கண் தெரிந்தவர்களைவிட தெரியாதவரின் ரசிப்புத்தன்மை இன்னும் விரிவானதாகவும் சலிப்படையாததாகவும் இருக்கும் என உணர்ந்திருப்பான். அதனால் அவர்கள் அன்பும் காதலும் எத்தகைய மகத்துவமானதாக இருக்கும் என்பதையும் உணர்ந்திருப்பான். எல்லாவற்றையும் மீறி கண் பார்வையுள்ள தன்னுடைய வாழ்வு சுவாரசியம் இல்லாமல் இருப்பதும் அவனை நோக வைத்திருக்கலாம். வாழ்வு கண்முன் நிகழ்வதல்ல அது உணர்தலில் மூலம் நகர்வதை அவன் அணு அணுவாக அறிந்திருப்பான்.
தன் கதைகளைப் பற்றி அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர்(Raymond Carver) இவ்வாறு சொல்கிறார், “வெற்றி அடையாத மனிதர்களை பற்றி தான் நிறைய எழுதியிருக்கிறேன், அவர்கள் எனது சகாக்கள், எதை அடைவதற்காக வாழ்க்கையில் உயிரை கொடுக்கவும் தயாராக இருந்தோமோ, அது ஒரு அற்ப விஷயம் என்று பின்னாளில் தோன்றுகிறதில்லையா, அந்த முரண் தான் எனது கதைகளை உருவாக்குகின்றன”
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவின் முக்கியமான சிறுகதையாளராகவும் கவிஞராகவும் விளங்கியவர் கார்வர். உலகச் சிறுகதை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்குகிறார். பெரும்பாலான இவரது சிறுகதைகள் சந்தோஷமில்லாத குடும்பங்களைப் பற்றிதான் உள்ளது. அவரது வாழ்க்கையும் அவ்வாரானதுதான். அவரின் ஒவ்வொரு கதைகளைப் படிக்கும் போது வீட்டின் நான்கு பக்க சுவர்களுக்குள் அடைப்பட்டதாகவே மூச்சு முட்டுகிறது. வீடுகள்தான் அவர் கதைகளின் மையம்.
ஆனால் அது முடியும் இடம் மனித மனங்களாக இருக்கிறது.