செகாவின் நாய்

chekhovகல்வியாளர்களுக்கு  நவீன இலக்கியத்தின் மீது எப்போதுமே ஒரு சிக்கல் உண்டு. பல்வேறு கணிதங்களையும் அறிவியலையும் மொழியியலையும் புரிந்துகொள்ள முடிந்த அவர்களால் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை எனும்போது கோபமடைவார்கள். அந்தக் கோபம் அதை எழுதிய படைப்பாளனின் மேல் பாயும். ‘தங்களுக்கே புரியாத’ ஓர் இலக்கியப்பிரதி நிச்சயம் முழுமையடையாதது என புறக்கணிப்பார்கள். சங்க இலக்கியங்களையே புரிந்துகொள்ள முடிந்த அவர்களால் ஒரு நவீன கவிதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என கிண்டல்தொணியில் பேசுவார்கள். உண்மையில் அவர்கள் சங்க இலக்கியங்களை அறிய உதவியது அதன் விளக்க உரைகளின் துணைக்கொண்டே என்ற உண்மை அப்போதைக்கு மறந்துவிடும்.

சங்க இலக்கியப்பாடல்களை உள்வாங்க எவ்வாறான தளர்ந்த மனநிலை தேவையோ அதே மனநிலை நவீன கவிதை வாசிக்கும்போது கிடைக்காமல் அவதியுறுவார்கள். ஒரு மலரை அறிய அதன் இதழ்களைப் பிரித்து எறிந்து , பிழிந்து சாரெடுப்பதுதான் சாத்தியம் என நினைப்பவர்களுக்கு அதை முழுமையாக நுகர்ந்துபார்ப்பதன் மூலமாகவே அறியலாம் என்ற உண்மையை ஏற்பதில்லை. பல கல்வியாளர்கள் பிரேத பரிசோதனை போலவே இலக்கியத்தையும் வெட்டிக்கூறுபோட்டு அறிய முயல்வது வருத்தமே.

இலக்கியம் மொழியின் துணைக்கொண்டு இயங்குகிறது. கலையை வெளிப்படுத்த மொழி ஒரு சாதனமாகப் பயன்படுகிறது. ஆனால் இந்த மொழி இதற்கு முன்பான  உரையாடல்களில் அர்த்தங்களைக் கொடுக்கும் ஒரு மொழியாக இருப்பதில்லை. மொழிக்குள் இயங்கும் ஒரு மொழியாக (மீ மொழி) இலக்கியம் உருவாகிறது. அந்த மொழியை அறிய தொடர்ந்த இலக்கிய வாசிப்புப் பயிற்சிகள் தேவைப்படுகிறது. இந்த மொழியை அறிந்தால் மட்டுமே அதனுள் இயங்கும் கலைத்தன்மையை அறியவும் பின்னர் அதன் அரசியலை, உளவியலை, கோட்பாடுகளை ஆராயவும் முடியும். அந்தப் பயிற்சி இல்லாமையால் மட்டுமே பலரும் மேலோட்டமாக அறிந்துகொண்ட சொற்களின் அர்த்தங்களைப்பிடித்துக்கொண்டு விவாதம் புரிகிறார்கள்.

இந்நிலையில் வைத்தே சிறுகதைகளையும் காணவேண்டியுள்ளது. உலக இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கும் பலரும் அது தங்களுக்கு ஏன் எதையுமே சொல்லவில்லை என வியப்பதைக் கண்டுள்ளேன். ஒருதரம் வாசித்து முடிந்தப்பின் ‘ஓ’ என ஏதோ சம்பவத்தைக் கேட்பதுபோல எளிய எதிர்வினையோடு முடித்துக்கொள்வார்கள். ஏன் அவர்களுக்கு அச்சிறுகதை சென்று சேரவில்லை என வியப்பாக இருக்கும். உண்மையில் அவர்கள் வாசித்தது சொற்களை மட்டுமே. சிறுகதைகளில் சொற்களைவிட அதன் இடைவெளிகளையே கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. அதன் மௌனத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டியுள்ளது. இந்த வாசிப்பு முறை பயிற்சியினால் வருவது. இதற்கு குறுக்குவழி இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் இளம் வாசகர்கள் தங்கள் வாசிப்பை எவ்வாறு உலக இலக்கியத்தை நோக்கி நகர்த்தலாம் என்பதற்கு எளிய வழிக்காட்டலாகவே இந்தத் தொடர் எழுதப்படுகிறது. இயன்றவரை புதிதாக இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் உள்வாங்க ஏதுவாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக நம்புகிறேன்.

***

மனிதன் நம்பிக்கைகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒரு கொடும் துன்பத்துக்குப் பின்னர் எப்படியும் எங்காவது ஒரு நற்செய்தியை வாழ்வின் நீண்ட பயணத்தில் எதிர்க்கொள்வதே சாத்தியம் என்ற இலக்கில் மட்டுமே நிகழ்கால கசப்பிலிருந்து சிந்தனைகளை மடைமாற்று செய்கிறான். நம்பிக்கைக்கு வசப்படாத தொடரும் இழப்புகளின்மீதும்  உளைச்சல்களின் மீதும் அடுக்கடுக்காக நம்பிக்கைகளை ஏற்றி தன் வாழ்வை தானே அழகு செய்துக்கொள்கிறான்.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘The Theory of Everything’ திரைப்படத்தில் அவர் முதன்முதலாக சக்கரநாற்காலியில் அமரும் போது ‘இது நிரந்தரம் இல்லைதானே’ என ஏக்கத்துடன் கேட்பார். அந்த வரி மட்டுமே நமது களைந்துகிடக்கும் வாழ்வின் ஒட்டுமொத்த தத்துவமாக இருக்கிறது.

ஒருவகையில் இந்த நம்பிக்கை மட்டுமே மனித மனம் பிறழாத அளவுக்குக் காக்கின்றது. வழுக்கும் பெரும் பள்ளத்தில் பற்றிக்கொள்ள கிடைத்த கடைசி கிளைபோல சுமந்து திரிகிறது.

ஆண்டன் செகாவின் ‘வான்கா’எனும் சிறுகதையும் நம்பிக்கை தரும் வாழ்வின் கடைசி அர்த்தத்தைச் சொல்கிறது. 1886ல் தமது 26ஆம் வயதில் செகாவால் எழுதப்பட்ட இச்சிறுகதை மனம் வாடி ஏதோ ஒரு நம்பிக்கையில் கடிதம் எழுதும் சிறுவனை நம்முன் கொண்டுவருகிறது.

ஒன்பது வயது  வான்கா எனும் சிறுவன் வேலை பயிலுவதற்காகக் காலணி தொழிற்சாலையில் விடப்படுகிறான்.  மூன்று மாதங்களுக்கு முன்பு அங்கு விடப்பட்டவன் எஜமானர் வீட்டிலிருந்து வெளியேறும் வரை காத்திருந்து தன் தாத்தாவான கன்ஸ்தந்தீன் மக்காடிக்கு ஒரு கடிதம் வரைகிறான். கடிதம் எழுதும்போதே அவன் தாத்தா குறித்த பிம்பங்கள் காட்சியாக அவன் மனதில் ஓடுகிறது. அவன் தாத்தா உற்சாகமானவராக இருக்கிறார். ஒரு பண்ணையில் காவலாளராக வேலை செய்யும் அவர், வேலைக்காரிகளிடம் கிண்டல் செய்வதும் கிள்ளுவதும் கும்மாளமடிப்பதுமாக இருப்பார் என்பது மீண்டும் மீண்டும் அவன் கற்பனையில் வருகிறது.

அவன் தன் தாத்தாவிடன் தன்னை அழைத்துச்செல்லும்படி மன்றாடுகிறான். எஜமான் அவனை அடித்து நொறுக்கிவிட்டார் என்றும் முடியைப் பிடித்து வெளி முற்றத்துக்கு இழுத்துச்சென்று குதிரையின் கடிவாள வாரால் நையப்புடைத்தார் என்றும்  கெண்டை மீனை  தவறுதலாக வால் பக்கத்தில் இருந்து சுத்தம் செய்ததால் எஜமானி அந்த மீனைப் பிடுங்கி அதன் தலையை அவன் முகத்திலேயே தேய்த்துவிட்டாள் என்றும்  ஏனைய வேலைப் பயிற்சியாளர்கள் தன்னைக் கேலி செய்கிறார்கள் என்றும் புகார்களை அடுக்குகிறான். அவன் வேண்டுகோளும் இறுதி நம்பிக்கையும் ஒன்றுதான். தாத்தா அவனை எப்படியாவது மீண்டும் அவரிடமே அழைத்துச்செல்லவேண்டும்.

கடிதம் வான்கா எனும் சிறுவனின் மனநிலையிலேயே பதிவாகிறது. தந்தை , தாய் என இருவரும் இல்லாத அவனை  அவ்வாறு அழைத்துச் சென்றால் அவன் தாத்தாவுக்குச் செய்ய சில விடயங்களை வைத்திருக்கிறான். தாத்தா எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொள்வது, அவரை கருத்துடன் கவனித்துக் கொள்வது முக்கியமாக தாத்தா இறந்த பின் அவருடைய ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்வது என அப்பட்டியல் நீள்கிறது. மறுநாள் கிரிஸ்மஸ் என்பதால் அவனுக்கு ஒரு தங்கப்பழமும் எடுத்துவைக்கச் சொல்கிறான்.

அவன் எழுதிய கடிதத்தில் அவனுக்குப் பரம திருப்தி. கடிதத்தைப் படித்து தாத்தா நிச்சயம் தன்னை மீட்பார் என்றே நம்புகிறான். கடித உறையில் அதையிட்டு மூடி முகவரியை எழுதச்சென்றபோது சிறு குழப்பம். பின்னர் நம்பிக்கையுடன்       ‘கிராமத்தில் இருக்கும் தாத்தா கன்ஸ்தந்தீன் மக்காடிச் ‘ என பெயரை இட்டு தபாலில் சேர்க்கிறான் . அன்றைய இரவு தாத்தா வேலைக்காரியுடன் கிண்டலில் ஈடுபட தான் காலாட்டிக்கொண்டு அதை ரசிப்பதாய் கனவு அவனுக்கு வருவதாய் கதை முடிகிறது.

ஒரு சிறுகதையும் மௌனமே பிராதனமானது. பொதுவாக நம்பப்படுவதுபோல நல்ல சிறுகதை ஒன்றைச் சொல்ல எத்தனிப்பதில்லை. அது ஒன்றை உணர்த்த விரும்புகிறது. இந்தக் கதையில் தாத்தாவின் முகவரி தெரியாமலேயே கடிதம் எழுதி அது மறுநாளே தாத்தாவின் கையில் கிடைக்கும் என்ற குழந்தையின் மனநிலை வாசிப்பவரை உறைய வைக்கிறது. கதை முடிந்தப்பின் வாசிக்கும் ஒவ்வொருவரும் அந்தக் கடிதத்தைச் சேர்க்கும் தபால்காரராகி விடுகிறோம். ஒரு நல்ல கதை அவ்வாறான ஒரு தவிப்பையே நமக்குள் ஊட்டுகிறது. அதோடு ஒரு தேர்ந்த சிறுகதையில் அத்தனைக் கதாபாத்திரங்களுமே கவனம் செலுத்தக்கூடியவைதான். அதிலும் செகாவ் போன்ற உலகப்புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புனைவுகளில் சொற்களை விரையம் செய்வதில்லை.

இந்தச் சிறுகதையில் ஒரு நாய் வருகிறது. அந்த நாய் பணிவு மிக்கதாய்  வாலைக் குழைத்துக்கொண்டு வரும்; தெரிந்தவர்களாயினும் தெரியாதவர்களாயினும் எல்லோரையும் அன்பு ஒழுகும்  பார்வை கொண்டுதான் உற்று நோக்கும்.ஆயினும் யாராலும் அதை நம்ப முடியாது.அதன் அடக்கமும் பணிவும் வெளிவேஷமாக இருக்கிறது. அவ்வப்போது குறும்பு செய்து அதற்கான தண்டனைப்பெற்றதற்கான தடையங்கள் அதன் கால்களில் உள்ளன. ஆனால் அது யாவற்றையும் சமாளித்துக் கொண்டு உயிர் வாழ்வதாகவே கதையில் வர்ணிக்கப்படுகிறது.

சிறுகதையை வாசிப்பவர்கள் இந்த நாயை எளிதில் கடந்து செல்லலாம். ஆனால் இந்த நாய்தான் சமூகத்தில் மனிதன் வகிக்கும் போலிமுகத்தின் படிமமாக கதையில் உலாவருவதாகத் தோன்றுகிறது. சமரசமும் போலி அன்பும் எப்படியோ வாழ்ந்தால் போதும் என்ற இலக்கை நோக்கி பயணிப்பதையும் அதன் மூலம் அதற்கான அனுகூலங்களைப் பெறுவதும் ஒரு முனை என்றால் வான்கா அந்த நசுக்கலில் இருந்து முட்டி வெளியே பிதுங்கி வர முனைவது மற்றுமொரு முனை. வாழ்வு இந்த இருவேறு மனநிலைகளுக்கிடையிலும் ஒரு நதிபோல அர்த்தமின்மைகளை மௌனமாக பிரச்சாரம் செய்து நகர்வதையும் இச்சிறுகதையில் தரிசிக்க முடிகிறது.

ஒரு மருத்துவரான ஆன்டன் செகாவ் சமூக அக்கறையும் கொண்டு வாழ்ந்த ரஷ்யர். ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்ததோடு இரு பள்ளிக்கூடங்களையும் ஒரு மருத்துவமனையும் கட்டியுள்ளார். சிறுகதை இலக்கியம் தோன்றிய முதல் காலகட்டத்து எழுத்தாளரான இவர் அதன் உச்ச சாதனைகளைப் புரிந்தவர். தமிழில் அவரது புனைவுகள் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலும் இணையத்தில் கிடைக்கின்றது. ஒருவகையில் அவரை வாசிக்கும் போது புதுமைப்பித்தன் நினைவுக்கு வந்துக்கொண்டே இருக்கிறார். நுட்பமான அங்கதங்களை நிரப்பிக்கொண்டிருக்கும் அவர் புனைவுகள் காலத்தைத் தாண்டி புதுமையாக இருக்கின்றன.

வான்கா சிறுகதையை வாசிக்க

(Visited 137 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *