கடிதம்: ஜி.எஸ்.தேவகுமார்

அன்புள்ள ம.நவீன்,

ஒரு முறை உங்கள் பேட்டி ஒன்றை வாசித்தேன்.  கேள்வி கேட்டவர் உங்களின் நேர நிர்வாகத்தைப் பற்றி கேட்டார். எப்படி இவ்வளவு வாசிக்க, எழுத முடிவதோடு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறீர்கள் என்ற வியப்பு அந்தக் கேள்வி கேட்கப்பட காரணம். அந்தக் கேள்விக்கு நீங்கள் கொடுத்த பதிலில் உங்களின் ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையின் சாரமே அடங்கியுள்ளது. இதே கேள்விக்கு பிரையன் டிரேசி போன்ற சுய முன்னேற்ற நிபுணர்கள் மிக பெரிய விரிவுரை, திட்டம், பயிற்சி என்றெல்லாம் அடுக்கிச் செல்வார். ஆனால் நீங்கள் கொடுத்த, ‘‘நான் எப்போதுமே என்னை எழுத்தாளனாகக் கருதுகிறேன். தனியாக நேரம் என்று எதையும் ஒதுக்குவதில்லை…’ (உங்கள் பதில் என் நடையில்) என்ற உங்களின் பதிலே மற்ற எழுத்தாளர்களிடமிருந்த உங்களைத் தனித்து உயர்த்திக் காட்டியது. வேலை ஓய்வுபெற்ற பிறகு இந்த பதில் பலரிடமிருந்து வர வாய்ப்புள்ளது.

இலக்கியத்தில் உங்களின் சேவை அளப்பரியது. தனிப்பட்ட முறையில் பலவற்றை உங்கள் எழுத்துகளிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அ. மார்க்ஸ் கலந்து கொண்ட வல்லினம் நிகழ்ச்சியில் நான் பாலாவிற்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது நீங்கள் பாலாவிடம் பறை அச்சு இதழ் வெளிவருவது பற்றி உற்சாகமாக பேசினீர்கள். உங்களின் அந்த உற்சாகம் வியப்பாக இருந்தது. ‘சீனலட்சுமி’ வாசித்தபோது லதா அவர்களை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது. கடந்த நவம்பர் கூலிம் வல்லினம் நிகழ்ச்சியில் முதல் நாள் உங்களிடம் கேட்டேன். அன்று இரவு உணவருந்தும் போது உங்கள் முன் அமர்ந்தேன். லதாவை சந்திக்கக் கேட்டதை நீங்களே நினைவுப்படுத்தி, உணவு தட்டோடு கிளம்பி, (சாப்பிட்டு முடித்தீர்களா என்று தெரியவில்லை) ஓடி சென்று லதாவை அழைத்து வந்து முன் நிற்க வைத்து அறிமுகம் செய்தீர்கள். மற்ற படைப்பாளிகளின் நல்ல படைப்பை அறிமுகம் செய்வது போல, எழுத்தாளர்களை அறிமுகம் படுத்துவதும் இலக்கிய சேவைதான்.

தனிப்பட்ட முறையில் லதாவோடும், உங்களோடும் அன்று பேச வாய்ப்பு அதிகம் கிடைக்காமல் போனது இழப்பு தான்.

நான் வாசித்த உங்களின் முதல் எழுத்து ‘காதல்’ இதழில் நீங்கள் எழுதிய ‘Steve Irwin’ பற்றியது. அது நினைவில் இன்று வரை இருப்பது எனக்கே ஆச்சரியம். எனது முதல் வல்லினம் நிகழ்ச்சி பின் நவீனத்துவம் பற்றி அ.மார்க்ஸ் கலந்து கொண்டது. நிகழ்ச்சியின் முடிவில், உங்களின் முதல் எழுத்து குறித்து உங்களிடம் பகிரும் போது வார்த்தைகள் திக்கியது. நீங்கள் விலகி புத்தக வெளியீடு பேனரை வேகமாக சென்று பிரித்து எடுத்தீர்கள். நான் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரிடம் உங்களை பல முறை பார்க்க வேண்டும் என்று சொல்லியும் அவர் ஆர்வம் காட்டவில்லை. அது முடிந்துப் போன கதை. அந்தந்தக் காலகட்டத்தில் உங்களின் படைப்புகள் மற்றும் விமர்சனங்களை அவ்வப்போது இன்றுவரை வாசித்தே வந்துள்ளேன். அதில் டாக்டர் ஜான்சன் என்பவர் உங்கள் கதைகளை அதிலுள்ள ஆங்கில சொற்கள், கெட்டவார்த்தைகள் என்று குறுகி விமர்சித்ததில் நீங்கள் கோபமாக ‘விமர்சனத்தின் அடி வாசல் வரை கூட நீங்கள் வரவில்லை’ என்று ஒரு லிங்க் கொடுத்தீர்கள். ஜெயமோகன் எழுதிய இலக்கிய விமர்சனம் குறித்தக் கட்டுரை. அந்தக் கட்டுரை எனக்கு உதவியது.

உங்களிடம் நேரடியாக நட்பு 2022 ஜூலை வரை இல்லை என்றாலும் உங்களின் எழுத்தும் அதிலுள்ள கூறுமுறையும் அந்தந்தக் காலகட்டத்தில் வாசிப்பின் வழியில் என்னை செதுக்கியே வந்துள்ளது. உங்களை வாசிக்காமல் இருந்திருந்தால் நான் எழுதுவது வெறும் உப்பில்லாத சாம்பாராகவே இருந்திருக்கும். உங்களின் படைப்பை வாசிப்பதிலிருந்த ஆர்வம் உங்களை நேரில் சந்திப்பதில் குறைவாகவே இருந்தது. பயமாகக் கூட இருக்கலாம். அன்று உங்களோடு இருந்தவர்களை பாண்டியன் சாரை தவிர யாரையும் கடந்த நவம்பர் GTLF & வல்லினம் இலக்கிய விழா பார்க்க முடியவில்லை.

அன்று உங்களோடு இருந்த பலர் இன்று உங்களது இலக்கியம் சார்ந்த லட்சியத்தியத்திற்கு எதிராக உள்ளது போல தெரிகிறது.

Malèna (2000) என்றொரு இத்தாலியத் திரைப்படத்தில் 12 வயது சிறுவன், ஏற்கனவே திருமணமான மலினாவை காதலிப்பான். காதல் என்று சொல்வதை விட அந்த வயதுக்கான வெறும் பருவக் கவர்ச்சி ஈர்ப்பு  மட்டுமே அவனிடம். கதை நடப்பது இரண்டாம் உலப் போரின் காலகட்டம். அவளின் கணவன் போருக்கு சென்றபோது அந்த ஊரிலுள்ள அத்தனை ஆண்களின் குறியும் மலினாவின் மீதுதான். நான் இங்கே குறிப்பிட வருவது அந்த சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் கதையில் அவன் பலமுறை அவள் முன் பின் செல்வான். மற்றவர்களின் வக்கிர பார்வையைப் புரிந்த மலினா இப்படி ஒரு சிறுவன் தன்னைப் பார்த்து பின் தொடர்வதை அறியமாட்டாள். அந்த சிறுவன் போலவே நானும் நேரடியாக உங்களிடம் நட்பில்லாமலிருந்தாலும் , உங்கள் பார்வையில் படாமலிருந்தாலும் உங்களைப் பின் தொடர்ந்தே வந்துள்ளேன். ஈப்போ ஶ்ரீ, வாணி அக்கா வழியாக நேரடியாக உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. ஜெயமோகனை வாசிக்க,  ஆரம்பக் காலத்தில் பாலமுருகன் அறிமுகம் செய்தார். ஆனால் உங்களை, உங்களின் படைப்புகள் வழியாக நானே எனக்கு அறிமுகம் செய்து கொண்டேன். 

படைப்பில் உங்களைப் பின் தொடர்வதில் நான் கற்றுக் கொள்ள நிறைய இருப்பதாக கருதும் என் சுய நலமே இருந்தாலும், என் வாசிப்பனுபவத்தில் தரமானதையே நான் பின் தொடர்வேன். தரமில்லாத படைப்புகள் தானே என்னை விட்டு ஒதுங்கி விடும். ஆரம்பத்தில் பிடித்த படைப்புகள் காலம் கடந்து புதிய வாசிப்புகள் அறிமுகமான போது பிடிக்காமல் போய்விட்டன. என் வாசிப்பின் படிநிலையில் உயர்வதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உங்களின் படைப்புகளை மறு வாசிப்பு செய்யும் போது அவ்வாறு தோன்றவில்லை.  பிழைப்புக்கு எழுதப்படாத எழுத்து அவ்வாறு தான் இருக்கும்.

புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை படித்தேன். எழுத்துகாக ஒருவன் தன்னையே அழித்து கொண்ட வரலாறு. இதுபோலவே Bruce Lee, Steve Jobs, Alexander the Great, கணித மேதை இராமானுஜம், பாரதி போன்றவர்ளும் தங்களைத் தேடும் பொருட்டு தங்களையே அழித்து கொண்டவர்கள். ஆனால் இன்று வரை வாழ்கிறார்கள்.

புதுமைப்பித்தனையையும், பாரதியையும் கைவிட்ட அன்றைய சமூகத்தின் பாவத்திற்கு, புத்தகங்களைத் தவிர எதையுமே சேர்த்து வைத்திராத மஹாத்மனுக்காக நீங்கள் நிதி வசூல் செய்து எழுத்தாளனைச் சமூகம் எழுத வைக்கிறதோ இல்லையோ, ஆனால் வாழ வைக்கும் என்று முன்னெடுத்தது  பிராயச்சித்தமாக அமையும். புத்தகம் விற்பனை செய்து பொருளாதார ரீதியில் கொஞ்சம் சிரமப்படும் ஒர் அம்மையார் அவர்களுக்கு நீங்கள் செய்த உதவியும் அளப்பரியது.

தமிழாசியா வழி தரமான புத்தகங்களைக் குறைவான விலையில் ரூபாய்க்கு பத்து காசு என்றே கிடைக்கிறது. தமிழ் நாட்டிலிருந்து இணையத்தின் மூலமாக PayPal வழியாக பணம் செலுத்தி புத்தகம் வாங்குவது இங்குள்ள கடைகளில் வாங்குவதை காட்டிலும் மூன்று நான்கு மடங்கு விலை குறைவு. தமிழாசியாவில் வாங்குவது அதை விட குறைவு. 

மலினா திரைப்படத்தில் மலினாவை அந்த சிறுவன் அவளுக்கே தெரியாமல் அவளை நோக்குவது மாதிரி, என் பார்வையில் நோக்கிய உங்களைப் பற்றி நான் புரிந்து கொண்டது;

பல கோவில்களில் நீங்கள் பார்க்கலாம். தைபூசத்தில் இன்னும் அதிகமாக பார்க்கலாம். சேவை செய்கிறவர்கள் என்ற பட்டையைக் கழுத்தில் அணிந்து கொண்டிருப்பவர்கள் தங்களையும் மீறி பொது மக்களின் மீது தங்களின் சலிப்பைக் காட்டியப்படி பாய்ந்து குதருவார்கள். கோவிலில் சேவையில்ஈடுபடும் கர்ம யோகிகள், பொது தொண்டர்கள் அவ்வாறு இருக்க, எந்த நேரத்திலும் இலக்கியம் குறித்து உங்களிடம் பேசினாலும், இலக்கியம் சார்ந்தவற்றை பேசும் போதும் நீங்கள் சலிப்பு என்பதைக் காட்டியதில்லை.

இதில் இன்னொன்றும் ஒளிந்துள்ளது. வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் புத்தகத்தில் விக்டர் பிராங்கில் குறிப்பிடுவது, தான் உயிர் வாழ்வதற்கான ஒரு காரணத்தைக் கொண்டுள்ளவர்கள் எந்த சூழ் நிலையிலும் இட்லரின் வதை முகாமானாலும் வாழ்ந்து விடுவார்கள் என்பதாகும். அந்த வகையில் உங்களுக்கு எழுத்து.

இன்றையக் காலத்தில் புகழ் பெற டிக் டாக்கில் ஆணோ பெண்ணோ , அல்லது தம்பதிகளோ மட்டமான ஆட்டம் போதும். அதிலும் அவர்கள் சொல்லும் மலிவுக் கருத்து அதை விட கேவலம் போதும் உள்ளூர் புகழ் பெற. இலக்கியத்தில் புகழ் பெரும் வட்டம் மிக சிறியது. அதிலும் தமிழ்ச் சூழல் அதை விட குறுகியது. தமிழ் சூழலில் ஒர் எழுத்தாளரின் எழுத்து எவ்வளவு காலம் அவருக்கு பிறகு வாழுமோ அதுவே அவரின் மதிப்பு. 

உங்களின் விமர்சனங்கள் குறித்து சர்ச்சையும், பலருக்கு மனக்கசப்பும் ஏற்படுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுவதும் உண்டு. அந்த நேரத்தில் ஜென் மாஸ்டர்கள் தான் என் நினைவுக்கு வருவார்கள். ஜென்னைப் பயிலும் மாணவனை ஜென் மாஸ்டர்ஸ் எவ்வாறு துன்புறுத்துவார் என்பதையும் நாம் சற்று சிந்திக்க வேண்டும்.( நான் அனுப்பிய ‘ஜென் தோட்டத்தில்..’ என்ற கட்டுரையில் இதை குறிப்பிட்டிருப்பேன்.)

உங்களின் ‘உலகின் நாக்கு’ உலகை இலக்கியத்தின் வழியாக சுற்றுலா செய்த அனுபவத்தை தந்தது. ‘மனசிலாயோ’ இலக்கியத்தில் எல்லாவற்றிற்கும் இடமுள்ளது என்பதை சொன்னது. ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ ரௌத்திரம் பழகு என்பதை அறிவுறுத்தியது. கடக்க முடியாத காலம் இன்னும் இடைக்கவில்லை. உங்களின் நாவல்கள் இரண்டும் அடுத்த ஆண்டு தொடக்கத்தின் அட்டவணையில் உள்ளன. சும்மா சாதாரணமாக கடக்க முடியாதது போல தெரிவதால் அதற்கு தனியே நேரமும் இடமும் அவசியம். ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் அச்சத்தால் முடிக்க வேண்டிய தனிப்பட்ட சில வேலையை முடித்து விட்டு தொடங்குவேன்.

நன்றி

ஜி. எஸ். தேவகுமார்

அன்பான தேவகுமார்.

உங்கள் கடிதம் கண்டு மகிழ்ந்தேன். நிகழ்ச்சியில் உங்களை நேரில் சந்தித்து பேசியதில் உற்சாகமாக இருந்தது. முன்பு முகநூலில் நமக்குள் ஒரு விவாதம் நடந்தது. அதன் பின்னர் நாம் பேசிக்கொள்வதில்லை. இப்போது யோசித்தால் அது என்ன விவாதம் என்று கூட நினைவில் இல்லை. முதிர்ச்சியடையாத மனதுடன் நாம் செய்துக்கொண்ட விவாதங்கள் அவை. அப்படித்தான் நீர்த்துப்போகும். நாம் சந்தித்துக்கொண்ட அடுத்த கணமே, நீங்கள் அந்த விவாதத்தைக் குறிப்பிட்டு அதைக் கடந்துவிடலாம் என்றீர்கள். அது எத்தனை அழகான நட்பழைப்பு. எந்தப் பாசாங்கும் இல்லாமல் நேருக்கு நேராக சிக்கலை அணுகுவது மனதை எவ்வளவு இலகுவாக்கிவிடுகிறது. கொஞ்சம் பின்நோக்கினால் என் மனதுக்கு நெருக்கமான நண்பர்கள் அ. பாண்டியன், கி. இளம்பூரணன் போன்றவர்களுடன் தொடக்கத்தில் முரண் ஏற்பட்டு பின்னரே ஒன்றாக இணைந்து இயங்கத் தொடங்கினோம்.

முரண்பட்டு பின்னர் இணைவதென்பது யாரோ ஒருவர் மனம் திருந்திவிட்டார் எனப் பொருள் அல்ல. அவரவர் கருத்து நிலையில் மாற்றம் ஏற்படாமல் கூட இணைந்து இயங்க முடியும். அதற்கு கருத்து முரண்பாடு கொண்டவர் மீது மதிப்பு உருவாக வேண்டும்.  அவரது நிலைபாட்டில் அவர் எவ்வளவு நேர்மையாக உள்ளார் எனும் எண்ணம் விதைய வேண்டும். உதாரணமாக, மலேசியாவில் நான் மதிக்கும் ஆளுமைகளில் ஒருவர் திருமாவளவன். அவரது தனித்தமிழ் கொள்கை மீது எனக்கு மாற்றுக்கருத்துண்டு. ஆனால் அவர் குறித்து நிறையவே எழுதியுள்ளேன். விரிவான நேர்காணல் செய்துள்ளேன். நாளை அவரது முன்னெடுப்புக்கு யாரேனும் தடையாக வந்தால் அவர் அருகில் நிற்கக்கூடியவர்களில் ஒருவன் நானாக இருப்பேன். மாறாக, புத்திலக்கியத்தை வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு செய்யப்படும் கோமாளித்தனங்களை ஒட்டி விமர்சனங்கள் வைப்பதிலும் எனக்குத் தயக்கமில்லை. சுயநல தேவைக்கு இலக்கியச் சேவையென எவ்வளவு ஒப்பனை போட்டுவைத்தாலும் அச்செயல்பாடுகளுடன் எவ்விதத்திலும் சமரசம் இல்லை.

இந்த நீண்ட இடைவெளியில் நீங்கள் தொடர்ச்சியாக தரமானவற்றை வாசிப்பதும் எழுதுவதும் உங்கள் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. எழுத்தாளனாகத் தன்னை நிறுவ முயல்பவன் செய்யக்கூடியது அது மட்டும்தான். ஆனால் இங்கு பலருக்கு அதுமட்டுமே சாத்தியப்படவில்லை. வாசிப்பும் எழுத்தும் அந்தரங்கமாக நிகழக்கூடியது. அதற்குத் தேவை தனிமை. அந்தத் தனிமையை எதிர்க்கொள்ள இன்று பலரும் தயார் இல்லை. காரணம் தனிமை ஒவ்வொருவரின் அந்தரங்கத்துடனும் உரையாடுகிறது. அவரவர் சமூக வலைத்தளங்களில் செய்துக்கொள்ளும் பாசாங்குகளை எள்ளி நகையாடுகிறது. எழுதத்தொடங்கும்போதே அவர்களை அவர்களுக்கு யாரென புரிய வைக்கிறது. அதிலிருந்து தப்ப மீண்டும் சமூகத்தள கூச்சல்களில் புகுந்து விடுகின்றனர். தாங்கள் பார்க்கவே விரும்பாத தங்களின் உண்மை முகத்துக்கு எதிராக ஒப்பனைகளைப் பூச முனைகின்றனர். நீங்கள் இதற்கு மாறாக உங்களை வாசிப்பில் பதுக்கிக்கொண்டீர்கள். அது உங்களின் பேச்சிலும் எழுத்திலும் வெளிபடுகிறது.

நிகழ்ச்சியில் எனக்குமே உங்களிடம் கூடுதலாகப் பேச வேண்டுமெனத் தோன்றியது. தொடர் வேலைகளால் சாத்தியமாகவில்லை. ஆனால், லதாவை நீங்கள் வாசித்திருந்ததால் அவரைச் சந்திக்க வேண்டுமென விரும்பினேன். நீங்கள் நிகழ்ச்சியில் பார்த்திருக்கலாம், அங்கு வந்திருந்த ஒவ்வொரு ஆளுமைகளும் தமிழுக்குப் பெரும் சேவை செய்தவர்கள். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி தமிழகத்தில் நடந்தால் அவர்களைச் சுற்றி ஓர் இளம் குழு சேர்ந்திருக்கும். அவர்களுடன் விடிய விடிய உரையாடியிருக்கும். நான் இலக்கியத்தில் நுழைந்த தொடக்கக் காலத்தில் அப்படித்தான் இருந்தேன். ஓர் எழுத்தாளரிடம் உரையாடி அவரிடம் எவ்வளவு முடியுமே அவ்வளவு அறிவைப் பெற முயல்வேன். மலேசியாவில் புதிய தலைமுறைகளிடம் அப்படி நிகழ்வதில்லை. அப்படியே சந்திக்க ஆர்வம் காட்டினாலும் அவர்களை வாசித்து வருவதில்லை. அவர்களுக்குத் தேவை பொதுவெளியில் பதிவிட ஒரு புகைப்படம். ஜெயமோகனையோ, பி. கிருஷ்ணனையோ, லதாவையோ, அருண்மொழியையோ, ஜி. எஸ்.எஸ்.வி நவினையோ அங்கிருந்த இளம் வாசகர்கள் யாரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே என் எண்ணம். அதனால் அந்த ஆளுமைகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.  இந்நிலையில் உங்களைப் போன்றவர்கள் (நீங்கள் இளம் தலைமுறை இல்லைதான்) ஓர் எழுத்தாளரை வாசித்துவிட்டு அவரை சந்திக்க காட்டும் ஆர்வம் எனக்கு முக்கியமாகப்பட்டது.

வல்லினம் குழு குறித்து நீங்கள் சொல்வது உண்மைதான். என்னளவில் நம்முடன் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நம்முடன் நேர்மறையான எண்ணத்துடன் இணைந்துள்ள நண்பர்களைக் கொண்டு நாம் என்னென்ன செய்துள்ளோம் என்பதையே முக்கியமாகக் கருதுகிறேன். ஆனால், இணைந்து விலகிய யாருமே வல்லினத்திற்கு அவரவரால் முடிந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். அதனாலேயே வல்லினம் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் பிரமாண்டம் அடைந்து செல்கிறது. இங்கு இணைந்து என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்.

யாரிடமோ என்னைச் சந்திக்கும் பொருட்டு பேசியதாகவும் அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படி நிறைய பேர் என்னிடம் சொல்லியுள்ளனர். ஒரு சுவாரசியமான சம்பவம். சுங்கை கோப்  நிகழ்ச்சிக்கு தைப்பிங்கில் இருந்து வந்த பெரியவர் ஒருவர், என் பெயரை ஓர் எழுத்தாளரிடம் சொன்னதும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவதூறுகளை செவிமடுத்ததாகச் சொன்னார். அந்த அவதூறுகள் என்னவென்றும் அடுக்கினார். நான் அவரிடம் என் குறித்த எந்த விளக்கமும் சொல்லவில்லை. பின்னர் மறுநாள் மீண்டும் சந்தித்து நான் ஏன் எந்த விளக்கமும் தரவில்லை என்றார். நான் அது அவசியம் இல்லை என்றேன். உங்களுக்கு என்னை எப்படி புரிகிறதோ அப்படியே பழகலாம் என்றேன்.

கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் அவதூறுகளை நம்பி என் நட்பைவிட்டு விலகிச் சென்றவர்களுக்கு என்னை நிரூபிக்கும் வகையில் உரையாடல்களை ஏற்படுத்தியதில்லை. உறவைத் துண்டித்துக்கொண்டவர்களுக்கு அழைத்து என் நிலைபாடுகளை விளக்கியதில்லை. இன்னொருவர் வழியாக அவர்கள் தொடரும் அவதூறுகளையும் வசைகளையும் தடுத்ததும் இல்லை. என்னை வாசித்து அதன் வழியாக என் ஆளுள்ளத்தை அறியும் மிகச்சிலரின் அருகாமை எனக்குப் போதுமானது.  நான் என்னை என் புனைவுகள் வழியாக புரிந்துகொண்டேன். அப்படியே அவர்களும் கண்டுக்கொள்ளட்டும்.

நாம் அதிகம் உரையாடாவிட்டாலும் நீங்கள் தொடர்ந்து என்னை வாசிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அனுப்பி வைத்தால் நானும் உங்கள் புனைவுகளை வாசிப்பேன்.

அன்புடன்

ம.நவீன்

(Visited 185 times, 1 visits today)