மஹாத்மனின் இன்றைய நிலை – காணொலி
கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுத்தாளர் மஹாத்மனுக்கு வல்லினம் மூலம் நன்கொடை திரட்டத் தொடங்கினோம். மூளையில் ஏற்பட்ட வாதத்தால் மஹாத்மன் சுய நினைவு இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் அவரைப் பராமரித்த அவர் மனைவிக்கும் உதவும் நோக்கில் இந்த நன்கொடை திரட்டப்பட்டது.
10598.56 ரிங்கிட் சேர்ந்தபிறகு நன்கொடை திரட்டுவதை நிறுத்தினோம். ஜூலை மாதம் 1200 ரிங்கிட் வழங்கத் தொடங்கி தொடர்ந்து வந்த மாதங்களில் (ஜனவரி 2023 வரை) 1500 ரிங்கிட் அவர் மனைவியின் வங்கியில் செலுத்தினோம். இம்மாதம் எஞ்சி இருந்த 300 ரிங்கிட்டும் அவர் வங்கியில் செலுத்தப்பட்டது.
அதன் விபரம்:
மஹாத்மன் மெல்ல மெல்ல உடல் தேறி இன்று சுயமாக உணவு உண்ணவும் பேசவும் தொடங்கியுள்ளார். மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் பார்வை இல்லை. எனவே சுயமாக நடமாடுவதில் சிக்கல் உண்டு. நினைவுகள் பெரும்பாலும் இல்லை. ஆனால் ஆழ் மனதில் எஞ்சிய படிமங்களை சொற்களாகக் கொண்டுவர முயல்கிறார். சொற்களுக்கு முன்பே பார்வையில் நினைவு கூற தவிக்கிறார்.
மஹாத்மனைத் தனியாக வீட்டில் விட்டு வேலைக்குச் செல்ல முடியாத சூழல் அவர் மனைவிக்கு. எனவே இன்னமும் பிறர் உதவியை நாடியுள்ளார். இந்நிலையில் மருத்துவர் சண்முகசிவா இலவசமாக அவர்கள் தங்குவதற்கு முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றைக் கண்டடைந்துள்ளார். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளும்போது மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன் பின்னர் மஹாத்மன் இலவசமாக ஒரு இடத்தில் பராமரிக்கப்படுவார்.
இந்நிலையில் எங்களை நம்பியும் மஹாத்மன் மேல் அன்பு செலுத்தியும் நன்கொடை வழங்கிய நண்பர்களுக்கு என் நன்றி. உங்களால்தான் இன்று ஓர் எழுத்தாளர் தன் வாழ்வை மீட்டுக்கொண்டுள்ளார். தன் நினைவுகளை அவரால் மீட்க முடியும்போது அவரது புனைவு முயற்சிகள் மேலும் தொடரக்கூடும்.
நன்கொடை கிடைத்தபோது நாங்கள் வாக்களித்தபடி பணம் முழுமையாக அவர் மனைவியின் வங்கி கணக்குக்குச் சென்ற ஆவணங்களை இணைத்துள்ளோம். பிப்ரவரி மாத வங்கி அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், நன்கொடை வழங்கியவர்கள் யார் கேட்டாலும் அனைத்து அறிக்கைகளையும் அனுப்பி வைக்க சித்தமாக உள்ளோம்.
மஹாத்மனை கடந்தவாரம் சென்று கண்டபோது எடுத்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். அவர் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் அறிந்துகொள்ளலாம். நன்றி.
மஹாத்மன் இன்றைய நிலை: https://www.youtube.com/shorts/wL2zuo7r4PI