குமாரிகள் கோட்டம் – 1

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் விமானம் இறங்கியபோது நன்கு விடிந்திருந்தது. விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. நேபாள் ஏர்லைன்ஸ் (Nepal Airlines)   ஓரளவு வசதியானது. கை கால்களை நீட்டிக்கொள்ள கொஞ்சம் கரிசனம் காட்டியது. பயணத்தினூடே சன்னல் வழியாக மலைச்சிகரங்களைக் காண முடிந்திருந்தது. முதலில் நெளிந்து படுத்திருக்கும் பெரிய உடும்புகளின் தோல்போல சாம்பல் மடிப்புகளில் மலைகள். உற்றுப் பார்த்தபோது சாம்பல் கரும்பச்சையாக மாறியது. அவற்றைக் கடந்து தொலைவில் பனி மூடிய இமைய மலைத்தொடர்கள். வெண்மையின் கம்பீரம் சிலிர்க்க வைத்தது. 


விமானம் காத்மாண்டுவில் தரையிறங்கிய நேரம் காலை மணி 8.00.  மலேசியாவில் 10.15 இருக்கலாம் என கணக்குப் போட்டுக்கொண்டேன்.  தூக்கம் இறுக்கமாகக் கண்களைக் கௌவியிருந்தது. வெளிநாட்டுப் பயணங்களில் தாயக நேரத்தை மறப்பதுதான் முதல் விதி. அப்போதுதான் உறக்கத்துக்கும் உணவுக்கும் மனம் பழக்கமடையும். அப்படி மறக்க குறைந்தது நான் இரண்டு நாட்களாவது புதிய நிலத்தில் புழங்க வேண்டியிருந்தது. நேபாளத்தில் 13 நாள் இருக்கப்போவதால் மனதை தயார் படுத்தியே ஆக வேண்டும்.

 
சுரேஷ் எங்களுக்காகக் காத்திருந்தார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷ் அன்னபூர்ணா பேஸ்கேம்ப் மலையேற்றம் குறித்து கூறியிருந்தார். அந்தப் பெயரே முதலில் ஈர்ப்பாக இருந்தது. பூரணமாக அன்னம் புசிக்கக் கொடுக்கும் மலையென கற்பனை செய்துகொண்டேன். அந்தப் பயணத்தில் நான் பங்கேற்கவில்லை. ஓராண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களுக்கான அன்னபூர்ணா மலையேற்றம் என்றதும் பெயரைப் பதிந்துகொண்டேன். பள்ளி விடுப்பை ஒட்டி அந்தப் பயணம் திட்டமிடப்படும் எனக் கூறப்பட்டதால் தயக்கம் இருக்கவில்லை. 


அன்னபூர்ணா இமயமலைத்  தொடரில் உள்ள ஒரு மலை. 8,091 மீட்டர் (26,545 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் பத்தாவது உயரமான மலை. ஆனால் நாங்கள் ஏற இருப்பது 4130 மீட்டர் உயரம்தான். இப்படி ‘தான்’ என சொல்லிக்கொண்டாலும் அதற்கும் பயிற்சிகள் முன் தயாரிப்புகளும் அவசியமாக இருந்தன. ஏறக்குறைய மூன்று மாதங்கள் இதற்காக சில பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தேன்.  இதற்கென பிரத்தியேக உடைகள், காலணி வாங்க வேண்டியிருந்தது தனிக்கதை. 

சக பயணிகள்


இந்தப் பயணத்தில் என்னுடன் எழுத்தாளர் அரவினும் இணைந்துகொண்டார். எழுத்தாளர்களுக்கு வாசிப்பு அளவுக்கு பயணமும் முக்கியம். எனவே அரவினை இப்பயணத்துக்கு நானே அழைத்தேன்.  கோகிலவாணியும் கலந்துகொள்கிறார் எனத் தாமதமாகவே அறிந்தேன். கோகிலவாணி எனக்கு கல்லூரியிலிருந்தே நன்கு அறிமுகம். அவர் வீட்டுக்கு நானும் என் வீட்டுக்கு அவரும் வந்து தங்கும் அளவுக்கு நெருக்கம். பரதம், சங்கீதம், இசை என நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர். அதில் சில உச்சங்களைத் தொட்டவர். வல்லினத்திற்கு அவர் சில கட்டுரைகளும் எழுதியுள்ளார். சிற்பம், ஓவிய கலைகள் குறித்து ஈடுபாடு கொண்டவராக மாறியிருந்தார். அனைத்திற்குப் பின்னாலும் பண்பாட்டையும் வரலாறையும் அறிவதே காரணமாக இருந்தது. 

நான் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ள முக்கியமானவர் சுரேஷ். சுரேஷ்  செய்வது வணிக ரீதியான பயண ஏற்பாடு அல்ல. பிற சுற்றுலா நிறுவனங்களைப்போல லாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டதல்ல. அவர் பயணங்களில் தான் கண்ட அற்புதங்களைச் சக நண்பர்களிடம் விரித்துக்காட்ட விரும்புகிறார். அது அவ்வளவு எளிதானதல்ல என அவர் அறிவார். அது ஒருவகையில் முயற்சிதான். இலக்கியத்தில் ஒரு தேர்ந்த வாசகன் கண்டடைந்த தனித்த தரிசனத்தை பிற வாசகர்களுக்கு நுகர கொடுப்பதுபோலதான். சுரேஷுடன் பயணிப்பதை நான் விரும்பினேன். அவர் பயணியல்ல; யாத்திரிகன். 

இப்படி மனதுக்கு நெருக்கமான மூவருடன் இப்பயணம் இயல்பாக அமைந்திருந்தாலும் அந்தரங்கமாக நான் இதை தனிப்பயணமாகவே உணர்ந்து வைத்திருந்தேன். உடல் பலத்தையோ திடத்தையோ காட்டுவதற்கானதல்ல பிரமாண்ட மலைப்பயணங்கள். மலைப் பயணம் என்பது மலையை அறிவதற்கான பயணம். பருப்பொருளாக நிற்கும் மலையை மட்டும் அறிவதல்ல அது. அது நம்முள் புகுந்து மெல்ல உருமாற்றி கொடுக்கும் சூட்சும அர்த்தங்களையும் அறிவது. அவ்வர்த்தம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவது. நாம் யாராக இருக்கிறோமோ அப்படியே அது தன்னை வெளிகாட்டும். கல்லில் இருந்து ஒவ்வொருவரும் அவரவருக்கான கடவுளை தேடி எடுப்பதுபோல அது நிகழும். 

நான் அன்னபூர்ணா செல்லப்போகிறேன் எனச் சொன்னபோது பெரும்பாலோர் அதை உடலளவிலான பயிற்சி என்றே புரிந்துகொள்ள முயன்றனர். எனக்கு சுவாச பிரச்சினை உண்டு. தமிழகத்தில் ‘கபாலி’ திரைக்கதை விவாதத்தில் கலந்துகொண்டபோது  மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அனுபவம். அதன் பின்னர் கோவிட்டால் பாதிக்கப்பட்டபோது சுவாசிக்க முடியாமல் அவசரமாக இரவோடு இரவாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். மரணத்தைத் தொட்டு வந்ததுபோலத்தான் இருந்தது. அன்னபூர்ணாவில் உயிர்வளி குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதை அறிந்தே இதில் கலந்துகொள்ள முடிவெடுத்தேன். அன்னபூர்ணா தன்னை எனக்கு என்னவாக காட்ட விரும்புகிறது என்றே அறிய ஆவல்கொண்டுள்ளேன். இந்தப் பயணத்தில் நிகழக்கூடிய அனைத்துமே அனுபவம்தான். எதையும் மறுதளிப்பதாக இல்லை. 

பதினெட்டுப் பேர் கொண்ட குழு இப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். கவிஞர் முனியாண்டி ராஜ் அதில் ஒருவராக இணைந்திருந்தார். அவர் கோகிலவாணியை எழுத்தாளராக அடையாளம் கண்டது ஆச்சரியமாக இருந்தது. 

கல்லூரியில் பயின்றபோது கோகிலாவுக்கு தமிழ் வெகுதூரம். ஆங்கிலம்தான் அவருக்கு நெருக்கமான மொழி. இதனால் சிவனேசன் என்ற விரிவுரையாளரால் வகுப்பில் ஒருமுறை அவமானப்படுத்தப்பட்டு அழுதுகொண்டிருந்தார். சிவனேசன் என்றாலே கல்லூரியே நடுங்கும். யாரும் அவரிடம் நெருங்க மாட்டார்கள். நான் பொதுவாக அநீதிகளைப் பொறுத்துக்கொண்டிருப்பதில்லை. “எப்படி கல்லூரிக்குப் புதிதாய் வந்த மாணவியைப் பொதுவில் அவமதிக்கலாம்?” என கைப்பேசியில் அழைத்துக் கேட்டேன். அது வாக்குவாதமாக மாறியது.  விரிவுரையாளரால் கல்லூரியில் மொழி கைகூடவில்லை என அவமானப்படுத்தப்பட்ட அந்த கோகிலவாணிதான் வல்லினத்தில் கட்டுரை எழுதி இன்னொரு எழுத்தாளரால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார். காலம் எதையும் எப்படியும் மாற்றி அமைக்கக் கூடியது. 

சின் தாப்பா விளக்குகிறார்

விமான நிலையம் சிறியது. செயல்முறைகள் இலகுவாக நகர்ந்தன. புகைப்படங்கள் நல விசாரிப்புகள் என நகர்ந்து இரு வேன்களில் ஏற்றப்பட்டோம். ஒருவர் தானாக முன்வந்து என் பெட்டிகளை வேனில் ஏற்ற உதவினார். ஏற்றியபிறகு பணம் கேட்டார். ஒரு ரிங்கிட் கொடுத்தபோது மலேசிய பத்து ரிங்கிட்டைக் காட்டி அதுபோல வேண்டும் என்றார். அத்தனையையும் கை அசைவில் காட்டினார். நானும் கை அசைவில் இல்லை எனச் சொல்லி அனுப்பினேன். 

சின் தாப்பா என்பவர்தான் முதன்மை வழிகாட்டி. அவருக்கு நான்கு துணை வழிகாட்டிகள் இருந்தனர். சுரேஷ் இவர்கள் வழியாக பயணத்தை ஒருங்கிணைக்கிறார். நாங்கள் தாமல் எனும் விடுதிக்கு வந்து சேர்ந்தபோது காலை மணி 10.00. சின் தாப்பா எங்களுக்கு அன்னபூர்ணா பயணத்தின் சவால்களை விளக்கினார். கொஞ்சம் சவாலான பயணம்தான். 

இந்த நேபாளப் பயணம் எனக்கு அன்னபூர்ணா மலை ஏற்றத்துக்கானது மட்டுமல்ல. தொடக்கத்திலேயே சுரேஷ் வடிவமைத்திருந்த திட்டத்தில் புகுந்து நானும் கோகிலாவும் சில மாறுதல்கள் செய்தோம். அதில் முக்கியமானது குமாரிகளைச் சந்திப்பது. குமாரிகள் நேபாளத்தில் வாழும் கடவுள்கள். நேபாளம் ஒருவகையில் குமாரிகள் கோட்டம். 


தொடரும்

(Visited 329 times, 1 visits today)