மதிய உணவுக்கு ஒரு வித்தியாசமான இடத்திற்கு அழைத்துப்போக சுரேஷ் விரும்பினார். அது ‘தாமில்’ (Thamel) பகுதியில் உள்ள ஒரு சப்பாதிக்கடை. ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் நடைப்பயணம். கட்டடங்களும் கடை வரிசைகளும் சூழ்ந்திருந்த இடைவெளிகளில் நடை. சுரேஷ் பெரும்பாலும் நடக்கவில்லை. காற்று அவர் உடலைத் தள்ள அவர் பறந்துகொண்டிருந்தார். நாங்கள் அவரைத் துரத்திப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தோம்.
சப்பாத்திக் கடை குறுகலான சந்தில்தான் அமைந்திருந்தது. அதிக பட்சம் எட்டு பேர் அமரக்கூடிய சிறிய கடை. தூசும் புகையும் முறுக்கிக்கொண்டு ஓடும் மோட்டார் சைக்கிள்களால் அப்பகுதி சூழ்ந்திருந்தது. நான் இதுபோன்ற கடைகளில் பெரும்பாலும் மலேசியாவில் சாப்பிட்டதுண்டு. ஆனால் நேபாளத்தின் தூசு உடலுக்கு ஒத்துவருமா என்பது மட்டும் சந்தேகம் இருந்தது.
சப்பாத்திக் கடைக்குப் பக்கத்துக் கடை சமோசாகாரியுடையது. அடுப்பில் கொதித்த எண்ணெய்யைவிட எங்களைப் பார்த்து அதிகமாகவே கொதித்துப் போயிருந்தாள். பக்கத்துக்கடைக்காரன் தன்னைவிட அதிகம் சம்பாதிப்பதை அவளால் ஏற்க முடியாமல் இருக்கலாம். இயற்கைதானே. நாங்கள் சாப்பிட்ட சப்பாத்திகளில் அவளது ஒரு பிடி சாபமும் கலந்திருக்கக்கூடும்.
சப்பாத்தி சுமாராகவே இருந்தது. அதைவிடச் சிறந்த சப்பாத்திகளை நான் சாப்பிட்டதுண்டு. ஆனால் பலவித தானியங்களைக் கலந்து தயாரிக்கப்பட்ட அதன் குழம்பு தனித்துவமானது. நான் நின்றும் அமர்ந்தும் போஸ் கொடுத்தபடியும் மூன்று சப்பாத்திகளைச் சாப்பிட்டு முடித்தேன். திரும்பிச் செல்லும்போது சமோசா கடைக்காரி எண்ணெய்யை அள்ளி ஊற்றிவிடுவாளோ எனும் பயம் இருந்தது.
அவ்விடத்துக்கு அருகிலேயே ஒரு பாழடைந்த கோயில் கேட்பாரற்றுக் கிடந்தது. அருகில் சென்று பார்த்தேன். அங்கு அமர்ந்திருந்த பெரியவரிடம் அது என்ன தெய்வம் எனக் கேட்டேன்.
ஸ்வஸ்தானி பர்தா.
சிவப்பு வண்ண பட்டாடை பூண்டு இருளுள் கிடந்தாள் தேவி. உக்கிர தேவிதான். ஸ்வஸ்தானி பர்தா வழிபாடு குறித்த பொதுவான நம்பிக்கை அவள் தன் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் தாய்; அதற்காக அவள் தன் பிள்ளைகளைக் கையாளும் விதம் கடுமையானதாகவும் இருக்கலாம் என்பதுதான். ஒருவகையில் உலகில் உள்ள பெரும்பாலான அன்னையர்களின் குணமும் அதுதானே. அதிர்ஷ்டம், நலன் சக்தி தரும் தெய்வமாகவும் கொண்டாடப்படும் இந்த அம்மனுக்கு பரமேஸ்வரி என்ற பெயரும் உண்டு.
‘ஸ்வஸ்தானி பிரதா கதா’ வாசிப்பு அங்கு ஒரு சடங்காகவே உள்ளது. ஒரு மாத காலம் ஒவ்வொருநாளும் படிப்பார்களாம். பாரதக் கதை சொல்வதுபோல. பெரும்பாலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரும். இந்த நூலில் பல்வேறு தெய்வங்களில் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் 31 அத்தியாயங்கள் உள்ளன. ஸ்வஸ்தானி மாதா, சிவன் கதைகளுக்கு முக்கியமாக கவனம் செலுத்தப்படுகிறது. இந்தக் கதை ஸ்கந்த புராணத்தில் இருந்து பெறப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
அந்தச் சிறிய கோயிலின் சிதிலமடைந்த படிக்கட்டுகளில் வயோதிகர்கள் சிலர் ஓய்வாக அமர்ந்திருந்தனர். தலையில் வண்ணக்குல்லாய் அணிந்திருந்தனர். முகத்தில் பூரண நிதானம். நிதானமாக இருப்பதன்றி வேறு பணிகள் இல்லை என்பதுபோல அமர்ந்திருந்தனர். நிதானம் என்பது உடலில் ஏற்படுத்திக்கொள்வதல்ல. அது மனதில் குடிபுக வேண்டும். மனதின் அதிர்வின்மையை உடல் பிரதிபலிக்கும்.
அன்னபூரணா மலை ஏற்றத்துக்குத் தேவையான சில பொருட்களை நண்பர்கள் சிலர் வாங்க வேண்டியிருந்ததால் கடைத்தெருக்களில் அலைந்து திரிந்தோம். தூசு பழக்கமாகியிருந்தது. நடை வியாபாரிகள் என்னைக் கடக்கும்போதெல்லாம் ஏதாவது வாங்கிக்கொள் எனக் கேட்டபடி கடந்தனர். என் முகத்தில் ஏதோ நேப்பாள சாயல் இருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.
கலைப் பொருட்களால் சூழ்ந்த சந்தை வீதி அது. ஓவியங்கள், சிற்பங்கள், அலங்காரப் பொருட்கள் என அடுக்கப்பட்டிருந்தன. சாலை ஓரம் அடுக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலைகளில் தூசு படிந்துகிடந்தது. வெங்கலத்தில் பதிந்த தூசு சிற்பங்களுக்குப் புராதனத்தோற்றத்தை வழங்கியது. ஆங்காங்கு தாரா தேவியின் சிற்பங்களையும் ஓவியங்களையும் காண முடிந்தது. நேபாளத்துக்கு நான் வர தாராவும் ஒரு காரணம். அந்தக் கதையைப் பின்னர் சொல்கிறேன்.
அறைக்குத் திரும்பியதும் பெரும்பாலோர் களைத்திருந்தனர். பயணக்கலைப்பு, அலைச்சல், தூக்கமின்மை என அழுத்தியது. ஆனால் எனக்கு ஒரு விண்ணப்பம் இருந்தது. சுரேஷிடம் நான் அன்றே பசுபதிநாத் கோயிலுக்குச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். எங்கள் பயணத்திட்டத்தின் இறுதி நாள் அந்தக் கோயிலுக்குச் செல்லும் திட்டம் இருந்தது. நாங்கள் பகலில் செல்ல இருப்பதால் காசியில் நிகழும் கங்கை ஆரத்திபோல பாக்மதி நதிக்கு செய்யப்படும் ஆரத்தியைக் காணமுடியாமல் போகலாம். எனவே அந்த மாலையை அதற்கானதாக ஆக்கிக்கொள்ள விரும்பினேன்.
பாக்மதி ஆறு, இந்தியாவின் கங்கை ஆறு போன்று புனிதமானது. சிவகங்கா என்றும் அழைக்கிறார்கள். பௌத்தர்களுக்கும் புனிதமான நதி இது. இந்த ஆற்றின் கரையில்தான் பசுபதிநாத் கோயில் உள்ளது. ஆற்றங்கரையில் ஆர்யா காட் என்றழைக்கப்படும் சுடுகாடும் உள்ளது. காசியைப் போலவே இங்கு பிணங்கள் எரிக்கப்படுகின்றன. நேபாள நாட்டு இந்து சமய வழக்கப்படி, இறந்தவரின் உடலை எரிப்பதற்கு முன்னர், பாக்மதி ஆற்றில் மூன்று முறை அமிழ்த்தி எடுக்கின்றனர்.
ஏறக்குறைய ஒரு மணி நேர ஓய்வுக்குப் பிறகு பசுபதிநாத் கோயிலுக்குப் புறப்பட்டோம். என்னுடன் கோகிலவாணி, அரவின், மயூரி, சிவா, கோமளா, வசந்தி, யோகாம்பிகை ஆகியோரை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டது. மற்றவர்கள் ஓய்வில் இருந்தனர்.
- தொடரும்