குமாரிகள் கோட்டம் – 3

சாமியாருடன் நான்

மாலை ஐந்து மணிக்கு வேன் புறப்படுவதாகத் திட்டம். எதிரில் பாதையை மறைத்து நின்ற கார் ஒதுங்கிச் செல்ல  காத்திருந்ததில் 5.15 ஆனது. வழியெங்கும் சாலை நெரிசல். களைக்கப்பட்ட கோலிக் குண்டுகள் போல வாகனங்கள் நான்கு பக்கமும் உருண்டு தங்களுக்கான பாதைகளில் புகுந்தன. அப்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். எந்த நெருக்கடியான சூழலிலும் ‘ஹாரன்’ சத்தம் வாகனங்களிலிருந்து எழவே இல்லை. மக்கள் இயல்பாகவே ஒருவகை புரிந்துணர்வுடன் செயல்பட்டனர். எரிச்சலும் பரபரப்பும் இன்னும் ஒரு தொற்றுவியாதியாக அங்குப் பரவாமல் இருந்தது.

வழியெங்கும் வேடிக்கை பார்த்தபடி சென்றோம். 2ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட உலகின் பழைய நகரம் காத்மாண்டு.  நெபாளத்தின் தலைநகரம். பெரிய கட்டடங்கள் என எங்கும் காணவில்லை. பழைய நகரங்களின் இயல்பு அது. விரைவுணவுக் கடைகள் எதுவும் கண்ணில்படவில்லை. கட்டடங்களில் பிளாஸ்டர் பூசப்படாமல் செங்கல் அடுக்குகளே வடிவங்களாகியிருந்தன. காத்மாண்டு விமான நிலையமே செங்கல் அடுக்கு வடிகங்களால் முழுமை பெற்றதை நினைவு கூர்ந்தோம்.

காத்மாண்டுவில், சினோலி என்ற இடத்தில் இருக்கும் பசுபதிநாத் ஆலயத்தை வந்தடைந்தபோது காலணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும்படி காவலர்களால் கட்டளையிடப்பட்டது. செருப்பு அணிந்தவர் முதன்மை காவலைக் கடந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். உள்ளே இன்னொரு இடத்தில் செருப்பையும் கழற்றி வைத்துவிட வேண்டும்.

நானும் அரவினும் காலணியை உத்திராட்சக் கடை ஒன்றில் கலற்றி வைத்துவிட்டு அவர்கள் கொடுத்த இலவச செருப்பை அணிந்துகொண்டோம். அங்கே விட்டுச்சென்றால் காலணிகள் காணாமல் போகும் எனத் தயங்கி அவற்றை நாங்கள் வந்த வேனில் பத்திரப்படுத்த கைகளில் ஏந்திக்கொண்டோம். கடைக்காரர் ‘அதெல்லாம் காணாமல் போகாது’ எனச் சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. நாங்கள் காணாமல் போனாலும் காலணி பத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தோம்.

பசுபதிநாத் ஆலயத்தில் சூழ்ந்திருந்த குரங்குகள் கொஞ்சம் பெரிய அளவிலானவை. ஆனால் பத்துமலைக் குரங்குகளைப்போல மனிதர்களுடனேயே நடந்து வந்து தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி அமர்ந்து தனிச் சமூகமாக குழுமியிருந்தன. பக்தர்கள் போட்டுச்சென்ற உணவு பொட்டலங்களை சில குரங்குகள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தன. பக்தர்கள் கைகளில் பிடுங்கிச் சென்றவையாகவும் இருக்கலாம். நாய்களையும் ஏராளமாக காண முடிந்தது. அவையும் சற்று பெரிய அளவிலானவைதான். குளிர் பிரதேசம் என்பதால் உரோமங்கள் அடர்ந்திருந்தன.

பசுபதிநாதர் விலங்குகளின் கடவுள் என அறியப்பட்டதாலோ என்னவோ அவற்றை அதன் இயல்பில் விட்டிருந்தனர். புராணக் கதைகளின்படி பசுபதிநாதருக்கும் விலங்குகளுக்கும் நிறைய தொடர்புண்டு. காத்மாண்டு பள்ளத்தாக்கில் மான் வடிவில் சுற்றிக்கொண்டிருந்த சிவனை திருமாள் அடையாளம் கண்டுகொண்டார். கைலாயத்தில் இருக்கப் பிடிக்காமல் ஜாலியாக காத்மண்டுவில் சுற்றிக்கொண்டிருந்த சிவன் யார் அழைத்தும் வராததால் திருமாள் மானின் கொம்பைப் பிடிக்க கொம்பு சுக்குநூறாக உடைந்தது. அந்தக் கொம்பின் துண்டில் லிங்கத்தை உருவாக்கினார் திருமாள். லிங்கத்துக்கு பாக்மதி நதியோரம் கோயிலும் அமைத்தார். காலப்போக்கில் சிதிலமடைந்த அந்த லிங்கத்தின் மீது ஆடு ஒன்று பால் சுரந்து லிங்கத்தை மீட்டது. இதேபோல பசு பால் சுரந்து லிங்கத்தை மீட்டதாகவும் இன்னொரு புராணக் கதையுண்டு. பசுபதி என்பது பசுக்களின் அதிபதி எனவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

புராணக்கதைகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அக்கதைகள் சுவாரசியமானவை. கற்பனையைத் தூண்டுபவை. மண்மூடிய கொம்பு லிங்கமொன்று பால் துளிகள் பட்டு வெளிப்படும் காட்சியென்பது இலக்கியக் கோட்பாட்டில் மாய எதார்த்தம் இல்லையா.

இவற்றையெல்லாம் கடந்து நடந்து சென்றபோது வெண்கலத்தால் ஆன பெரிய நந்தியின் பின்புறம் எதிர்கொண்டது. அதன் பிரமாண்டத்தை பார்த்தபடி முதன்மை வாசலில் நுழைந்தவுடன் கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது என நண்பர்கள் எச்சரிக்கவும் உள்ளே வைத்தேன். அதுவரை வெண்கலத்தால் செய்யப்பட்ட நந்தி ஒன்றை நான் கண்டதில்லை.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தக் கோயில் உலகில் உள்ள மிகப்பெரிய இந்துக்கோயில்களில் ஒன்று. சில அகப்பக்கங்கள் அங்கோர்வாட்டைவிட பசுபதிநாத் கோயிலே பெரியது என்கின்றன. வளாகத்தின் பரப்பளவால் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்; கோயில் சிறியதாகவே இருந்தது. ஆசியக் கண்டத்திலேயே மிக முக்கியமான இந்த சிவன் கோவில், தேவாரம் பாடப்பெற்ற தலங்களுள் ஒன்று. இந்தக் கோயில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கு சரியான சான்று இல்லை. என்றாலும் 1,000 ஆண்டுக்கு முற்பட்டது என அறிப்படுகிறது. பலமுறை புணரமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் வளாகத்தினுள் 500க்கும் மேற்பட்ட சிறுசிறு கோயில்கள் உள்ளன. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநிடுக்கத்தின்போதுகூட இந்த கோயிலின் முக்கிய பிரகாரம் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்பது ஆச்சர்யம். ஆனால் அங்கிருந்த அதிகமான அதிசய சின்னங்கள் அழிந்துவிட்டனவாம்.

நேபாளம் 2006 வரை இந்து நாடகவே அறியப்பட்டது. பள்ளி நாட்களில் நானும் உலகின் ஒரே இந்து நாடு நேபாளம் என படித்திருக்கிறேன். 2006 இல் மன்னராட்சி ஒழிக்கப்பட, ஜனநாயக முறைபடி தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தது நேபாளம். இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதரான சிவன், நேபாளம் இந்து நாடாக இருந்தவரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்துவந்தார்.

கோகிலவாணி

பசுபதிநாதர் வீற்றிருக்கும் பிரதான கோயிலுக்குச் சென்றோம். தென்னிந்திய ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்பகிரகம் இங்கு இல்லை. சிறிய வரிசைதான். பத்து பதினைந்து நிமிடத்தில் பசுபதிநாதரைக் காண முடிந்தது. ஆனால் அவரை முழுமையாகக் காண முடியாதபடிக்கு வாசலில் மறைத்துக்கொண்டு ஒரு அரைவேக்காட்டு பூசாரி சக பூசாரியிடன் கதை பேசியபடி நின்றுகொண்டிருந்தான். தரிசனத்துக்காக வரிசையில் நின்று அலைக்கழிக்கப்படும் பக்தர்கள் குறித்து அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தோள்பட்டையைச் சொறிந்துகொண்டே முழுமையாக வாசலை மறைத்தபடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். பூசாரி சொறிவதை நிறுத்திய இடைவெளி ஒன்றில் பசுபதிநாதர் தெரிந்தார். கருங்கல்லில் கண்கள் மின்னின.

நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். இங்கு சிவபெருமானுக்கு தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள்தான் பூசை செய்வதாகக் கூறினார்கள்.

கோகிலவாணி கோயில் கட்டுமானத்தை விளக்கினார். நேபாளக் கட்டடக்கலையான பகோடா அமைப்பில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கனசதுர வடிவத்தில் இருந்த கோயில் மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. நான்கு முதன்மை வாயில்கள். வாயில்கள் அனைத்துமே வெள்ளியால் செய்யப்பட்டவையாகவும் இருந்தன. சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நான்கு கதவுகள் கொண்ட நுழைவாயில் உள்ளது. ஒவ்வொன்றின் அருகிலும் பூஜை செய்யும் பண்டாக்கள் உள்ளனர். ஒரே சமயத்தில் நால்வரும் பக்தர்களுக்கான பூஜைகளை தனித்தனியாகச் செய்து தருகின்றனர்.  கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் உள்ளன. அதை வலம் வருவதற்காக அழகான வழிப்பாதையும் அமைந்துள்ளனர். கோயிலின் பின்புறமாக சென்றால் பாசுமதி நதியைப் பார்க்கலாம். நதியில் இறங்க படிக்கட்டுகள் உள்ளன. மற்றொருபுறம் படிக்கட்டின் மேலேயே, காசியில் கங்கைக் கரையில் நடைபெற்று வந்ததைப்போல (இப்போது தடைசெய்துள்ளதாகச் சொல்கிறார்கள்) இறந்தவர்களின் உடலை எரித்து ஓடும் ஆற்று நீரில் அஸ்தியை தள்ளிவிடுவார்களாம். நாங்கள் அந்தப் பக்கம் போகவில்லை.

ஆசி கொடுக்கும் சாமியார்கள்
குங்குமச் சாமியார்

சீக்கிரமாகவே கோயிலைப் பார்த்ததால் ஆறரை மணிக்கு தொடங்கவிருந்த பாக்மதி நதி ஆரத்தியைக் காணச் சென்றோம். செல்லும் வழியில் தென்பட்ட காவி உடை அணிந்த சாமியார்கள் சிலரைப் படம் எடுத்தோம். அவர்களுடன் சேராமல் குங்குமத்தை உடல் முழுவதும் அப்பிக்கொண்டு தனியாகத் திரிந்து கொண்டிருந்த சாமியார் ஒருவரை அரவின் புகைப்படம் எடுக்கவும் அவர் உக்கிரமாகி கத்தத் தொடங்கினார். அது நேபாள மொழி என்பதால் என்ன திட்டினார் எனப் புரியவில்லை. அப்படியே திரும்பி நடையை வேகமெடுத்தோம். “தொரத்தி வந்து அடிச்சிட போறாரு” என அரவின் சொல்லவும் திரும்பிப் பார்த்தேன். அவரால் தாங்கித் தாங்கியே நடக்க முடிந்ததால் “ஆபத்தில்லை” என்றேன்.

அரவின் ஆசி பெறுகிறார்

மீண்டும் கண்களில் தென்பட்ட சில சாமியார்களிடம் ஆசி பெற்றவாறு  நடந்து சென்றபோது குங்குமச் சாமியார் எங்களைக் வேகமாக நொண்டிக்கொண்டே கடந்தார். பின்னர் சற்றுத்தள்ளி அமர்ந்துகொண்டார். ஒரு தம்பதிகள் அவரின் அருகில் நின்று பணிவாகப் பேசிக்கொண்டிருக்கவும் இனி ஆபத்தில்லை என அரவின் இலகுவானார். அந்தப் பேச்சை தொந்தரவு செய்வதுபோல இடையில் புகுந்த சிறுவன் ஒருவனை குங்குமச் சாமியார் அறையவும் “அது எனக்கு விழ வேண்டிய அறை” என அரவின் சொன்னபோது கண்களில் மிரட்சியிருந்தது.

நேரமாகிவிட்டதால் நேராக நடந்து ஆரத்தி நடக்கும் பாக்மதி நதியை நோக்கி நடந்தோம். நாங்கள் சென்றபோது குறைந்தது ஐந்நூறு பேர் சூழ ஆரத்தி தொடங்கியிருந்தது.

தொடரும்

(Visited 263 times, 1 visits today)