குமாரிகள் கோட்டம் – 4

ஆரத்தி

பக்மதி நதிக்கு ஆரத்தி எடுக்கும் காட்சி எனக்கு காசியில் இருந்த தினங்களை நினைவூட்டியது. காசியில் படந்திருந்த சாம்பல் பூத்த பழமையை நதிக்கு இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த படித்துறையில் காணமுடிந்தது. காணும் இடமெல்லாம் மனித தலைகள்.

கங்கை ஆரத்தி ஏழரை மணிக்குத் தொடங்குவதுபோல பத்மதி ஆரத்தி ஆறரைக்குத் தொடங்குகிறது. கங்கை ஆரத்தி ஐந்து இளைஞர்களால் நிகழ்த்தப்படுவது. கங்கையை கடவுளாக எண்ணி பாடல்கள் பாடி ஆரத்தி எடுக்கப்படும். ஐந்து இளம் பூசாரிகளின் ஒத்திசைவான அசைவுகளும் பாடலும் வண்ணங்களும் கங்கை ஆரத்தியை இன்றும் மறக்க முடியாததாக்கியது. பக்மதி ஆரத்தி மூன்று இளம் பூசாரிகளால் செய்யப்பட்டது. நேப்பாள மொழியில் பாடல் ஒன்றும் பாடப்பட்டது. அது நதியைப் போற்றியதாக இருக்கலாம்.

மனம் அதில் ஒன்றிப்போக முடியாமல் அலைபாய்ந்தபடியே இருந்தது. அதற்கு பாக்மதி நதியின் அவலமான தோற்றம் ஒரு காரணம்.

நேபாளத்தின் புனித நதியான பாக்மதி, இமய மலையிலிருந்து உற்பத்தியாகிறது. காத்மாண்டுவிலிருந்து தெற்கு சமவெளி வழியாக கங்கையில் கலக்கிறது. பாக்மதி நதிதான் நேபாள நாகரிகத்தின் ஆதாரம். ஏராளமான இந்துக் கோயில்கள் இதன் கரையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்துக்கள் போலவே பௌத்தர்களுக்கும் இது புனிதமான நதிதான். நேபாள இந்துகளின் நம்பிக்கைபடி  இறந்த உடலை தகனம் செய்வதற்கு முன் பாக்மதி ஆற்றில் மூன்று முறை நனைக்க வேண்டும். அப்படிச் செய்வதால் இறந்தவருக்கு மறுபிறப்பு இல்லை என நம்பப்படுகிறது.

நான் பார்த்த பாக்மதி நதி அழுக்கடைந்து காணப்பட்டது. நீரோட்டத்தின் வேகம் குவிந்த குப்பைகளால் தடைபட்டிருந்தது. நதி என்பதை நான் இளைஞனுடன் ஒப்பிடுவேன். அதன் துள்ளலும் பாய்ச்சலும் இளைஞர்களுக்குரியது. பாக்மதி அந்திமகால முதியவனைப்போல காய்ந்து கரைவதற்காகக் காத்திருந்தது. சட்டென அதை ஒரு கால்வாய் என நினைக்கவைத்தது.

நான், அரவின், கோகிலவாணி

நதியின் மகத்துவம் அழிந்து அங்கு வெறும் சடங்கு மட்டுமே நிகழ்வதாகத் தோன்றியபோது அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை.

படித்துறையில் அமர்ந்தபடியே ஆர்ய காட் என்றழைக்கப்படும் சுடுகாட்டைப் பார்த்தேன். இங்கு எரியூட்டப்பட்ட ஆன்மாக்களுக்கு நற்கதி கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. காசியைப் போலதான்.

நண்பர்களை அழைத்துக்கொண்டு மெல்ல நடந்து அவ்விடம் சென்றேன். நாங்கள் சென்றபோது வரிசையாக மூன்று, நான்கு பிணங்கள் எரிந்துகொண்டிருந்தன.

கோகிலா திடீரெனக் காதருகில் வந்து,

மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே

எனும் சிவவாக்கியரின் பாடலைச் சொல்ல நான் அதிர்ச்சி அடைந்தேன்.

“உனக்கு எப்படி இவ்வளவு தமிழ் தெரிந்தது?” என்றேன்.

சிரித்தார். சிவனேசன் கேட்டிருந்தால் சந்தோசப்பட்டிருப்பார்.

ஆழமான அர்த்தம் கொண்ட பாடல் அது.

மண்பானை உடைந்து போனாலோ வெண்கலப் பானை நசுங்கிப் போனாலோ அதை பாதுகாத்து வைக்கும் நாம்,  உடம்பை விட்டு உயிர் பிரிந்தபிறகு அதனைப் பிணம் என இகழ்கிறோம் என நிலையற்ற உடலின் மாயையை குறிப்பிடும் பாடல். ஒருவகையில் உலகியல் வாழ்வின் நிலையற்ற தன்மையைச் சொல்லும் பாடல்.

அச்சூழலில் அப்பாடல் பொருத்தமானது. சிறிது நேரம் நின்று பிணங்கள் எரிவதைப் பார்த்துவிட்டுப் புறப்பட்டோம். அவ்வளவு பெரிய வளாகத்தில் எங்கும் பிச்சைக்காரர்கள் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. மணல் சாலைகள் என்பதால் காற்றில் தூசு இருந்ததே தவிர நிலத்தில் குப்பைகள் இல்லை. எல்லாக் குப்பைகளையும் பக்மதி நதியில் கொட்டிவிடுவார்களோ என்னவோ.

எரியும் பிணங்கள்

செருப்பை இரவல் வாங்கிய உருத்திராட்சக் கடையைத் தேடிச்சென்று செருப்பை ஒப்படைத்தோம். கடைக்காரப் பெண் இன்முகத்துடன் நன்றிகூறி பெற்றுக்கொண்டார். “உருத்திராட்சை வாங்குகிறாராயா?” என்றார்.

“இல்லை வேண்டாம்” எனப் புறப்பட்டோம். புன்னகை மாறாமல் இருந்தார்.

நாங்கள் முன்னமே எங்கள் காலணியைப் பாதுகாப்பாக வேனில் வைத்துவிட்டதால் ஒருவேளை அவள் இரவல் கொடுத்த செருப்பை கொடுக்காமல் போனாலும் அவளுக்குத் தெரியப்போவதில்லை. அப்படியானால் எந்த நம்பிக்கையில் செருப்பை இரவல் கொடுத்தாள்? எங்களுக்கு எங்கள் காலணி எவ்வளவு  முக்கியமோ அவளுக்கும் அவளது செருப்பு முக்கியம்தானே. எங்களிடம் இல்லாத எது அவளிடம் இருந்தது?

ஒருவேளை அவளுக்கு சிவவாக்கியரின் பாடல் தெரிந்திருக்குமோ என்னவோ.

தொடரும்

(Visited 205 times, 1 visits today)