அன்று போக்ரா (Pokhara) நகரம் செல்ல வேண்டும். ஏறக்குறைய ஆறு மணி நேர பேருந்துப் பயணம்.
போக்கராவுக்குச் செல்லத் தயார் செய்துகொண்டு ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவை உண்டபோதுதான் தற்செயலாக ஸ்டார் கணேசனைச் சந்தித்தேன். அவரும் அன்னபூர்ணா மலை ஏற பினாங்கு குழுவுடன் வந்திருந்தார். சந்தித்து நெடுநாளாகிவிட்ட நிலையில் அவரை அங்குச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
புகைப்படத்துறையில் மிகப்பெரிய ஆளுமை. 2007ல் நான் அவரை நேர்காணல் செய்தபோது உலகம் முழுக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருந்தார். 2009ல் வல்லினம் மூலம் அவரது புகைப்படங்களை கண்காட்சிக்கு வைத்தபோது அதுதான் தனது முதல் புகைப்படக் கண்காட்சி எனக் கூறினார். மலேசியாவில் மிகச்சிறந்த ஆளுமைகளை சமூகம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வல்லினத்திற்கு உள்ள மிகப்பெரிய பொறுப்பும் எனக்குள் உறைத்த தினம் அது.
சுரேஷுக்கு ஸ்டார் கணேசனைத் தெரிந்திருந்தது. அவரை நான் அறிமுகப்படுத்தவும் உற்சாகமாகக் கைகுலுக்கினார். கற்றாரைக் கற்றார்தானே காமுறுவர். இருவரும் அருகருகே அமர்ந்து பேசியதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. எம்.ஜி.ஆர் இரட்டை வேடம் ஏற்று நடித்தால் சிற்சில மாறுதல்களை இன்னொரு பாத்திரத்துக்கு ஏற்றுவார். அப்படி ஆறு வித்தியாசங்களுக்குக் குறையாமல் இருந்தனர் இருவரும்.
காலை மணி 7.30 க்கு போக்ராவை நோக்கிப் பேருந்து புறப்பட்டது. கரடுமுரடான சாலை. காத்மாண்டுவிலிருந்து கீழே இறங்கிச் சென்றோம். வழிநெடுக பல மலைத் தொடர்களும் பல ஆறுகளும் கூடவே வந்தன. இடையில் சாலையில் பாறை விழுந்து ஆறு மணி நேரப்பயணம் பத்து மணி நேரமானது. நெடுகிலும் பறந்த தூசுகள் சாலையோரக் காட்சிகளைக் கசங்கிய நெகிழித்திரைபோலக் காட்டியது. பேருந்து சன்னல் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்தாலும் தொண்டையில் தூசு புகுந்தது போன்ற உணர்வு.
மெல்ல மெல்ல முன்னேறியது பேருந்து. செல்லும் வழியில் மலையேற்றத்துக்கான அனுமதி பெரும் பாரங்களும் பணமும் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தப் பயணத்தில் சுரேஷிடம் பேச அதிக வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக கோகிலவாணி அவரின் பயண அனுபவங்களை அறிந்து கொள்ள விரும்பினார். சைபிரிய ரயில் பயணம், இஸ்தான்புல், சீனா, ஜப்பான், துருக்கி என அவர் தனித்து மேற்கொண்ட பயணங்கள் குறித்துப் பேசினார். பயணங்களில் அவர் சந்தித்த வினோதமான மனிதர்களே அவர் பேச்சின் மையமாக இருந்தது.
மொழி தெரியாத சீனப் பெண்ணுடன் மூன்று நாட்கள் பயணம் செய்த போது அவர் பசியை புரிந்துகொண்டு மூன்று வேளையும் உணவளித்த அன்பு, கரடு முரடாக பேசிய மங்கோலியன் வீடுவரை அழைத்துச்சென்று உபசரிப்பில் காட்டிய அக்கறை என அவர் விளக்கிய காட்சிகள் ஒவ்வொன்றும் மனிதர்கள் மீதான நம்பிக்கையைச் சொல்வதாக இருந்தது.
“இந்தப் பயணங்களால் மனிதர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் எனும் மனநிலைக்கு வந்துள்ளீர்களா?” எனக்கேட்டேன்.
“சக மனிதன் குறித்து திட்டவட்டமாகத் தீர்மானிக்க எனக்கு உரிமை இல்லை என உணர்ந்துள்ளேன்,” என்றார்.
எந்தக் கல்லூரியும் எந்த மதமும் போதிக்காத மாண்புகளை சுரேஷ் பயணங்கள் மூலம் பெற்றிருந்தார். கிளந்தான் சைக்கிள் பயணத்தில் இரவு தங்க கோயிலில் இடம் கிடைக்காமல் மசூதியில் தன்னை தங்க வைத்து உணவளித்த மகத்தான மனிதர்கள் மத்தியில் மதத்துக்கும் இனத்துக்கும் இடமில்லை எனும் மனநிலைக்கு வந்திருந்தார். உலகின் அத்தனை மனிதர்களையும் பாகுபாடின்றி நேசிக்கத் தொடங்கும் மனதினால் மட்டுமே நேர்மறை அதிர்வுகளை உருவாக்க முடிகிறது எனப் புரிந்துகொண்டேன்.
பயணத்தின் மீதிருந்த ஆர்வத்தினால்தான் சுரேஷ் தான் ஏற்றிருந்த அரசாங்கப் பணியைத் துறந்தார். நாம் எதை விரும்புகிறோமோ அதன் வழியாக மட்டுமே வாழ்வை நடத்துவது என்பது ஒரு வரம். அந்த வரத்தை நாம்தான் நமக்கு அருள்பாலித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு சுரேஷ் ஓர் உதாரணமாக இருந்தார்.
போக்ராவை வந்தடைந்தோம். போக்ரா நேபாளத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலம். காத்மாண்டுவுக்கு அடுத்து மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பெரிய நகரம் இது. பெருநகருக்கு உரிய நேர்த்தியுடன் அமைந்திருப்பதை இரவுணவுக்கு நடந்து சென்றபோது காண முடிந்தது. நேபாளியில் போகரீ என்றால் ஏரி என்று பொருள். இந்த ஊரில் எட்டு ஏரிகள் இருக்கின்றனவாம்.
நேபாளத்தின் மிகப்பெரிய ஏரியான ஒன்றரைக் கிலோ மீட்டர் நீள ஃபெவா ஏரியை இரவு படிந்த கறும்பச்சை வண்ணத்தில் பார்த்தேன். இமயத்தின் அடிவாரத்தைத் தொட்டுக்கொண்டு போகும் அந்த ஏரி பொழுதுபோக்கு, சுற்றுலாத்தலமாக உள்ளது. நகருக்கு நடுவிலேயே பூமிக்கடியில் குகைகள், பாதாளத்தில் ஓடும் நதிகள், பூமிக்கடியிலேயே தேவி நீர்வீழ்ச்சி என்று போக்ராவில் பார்ப்பது பல இடங்கள் உண்டு. இரவாகிவிட்டதால் நேரே அறைக்குச் சென்றோம்.
அறையை அடைந்தபோது களைத்திருந்தோம். இரவு உணவை விரைவாக முடித்துக்கொண்டு உறங்குவதுதான் திட்டமாக இருந்தது. எங்களுக்கு வழங்கப்பட்ட ஏழாவது மாடியில் இருந்த அறைக்கு அவசரமாக சென்றபோதுதான் அதைக் கண்டோம். தூரத்தில் பனியால் உறைந்திருந்தது அன்னபூர்ணா மலைத் தொடர். அதன் எட்டுச் சிகரங்களும் இரவு தொடங்கிய பிறகும் தேக்கி வைத்த ஒளியால் பளபளத்தன. எல்லாக் களைப்பும் நீங்கி அன்னபூர்ணா மலை ஏறும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
மாசற்ற அந்த வெள்ளொளி மலையை அருகில் சென்று பார்க்கும் ஆவல் துளிர் விட்டது.
தொடரும்