குங்குமச் சாமியார் அரவினுக்கு என்ன சாபம் கொடுத்தார் என்பது ஒருநாளைக்குப் பிறகுதான் தெரிந்தது. காலையிலேயே பித்த வாந்திக்கான மருந்து உள்ளதா எனக் கேட்டார். பின்னர் வயிற்றுப்போக்கு அவரை வாட்டத் தொடங்கியது.
நான் புறப்பட்டபோதே டாக்டர் சண்முகசிவா கொடுத்தனுப்பிய மாத்திரைகளில் வயிற்றுப்போக்கும் மருந்தும் இருந்தது. அதில் இரண்டைப் போட்டு ‘தே ஓ’ ஒன்றை ‘கவ்வாக’ பருகக் கொடுத்தபோது அரவின் வயிறு ஓரளவு சமாதானம் அடைந்தது.
பயணம் நீண்டு கொண்டிருந்தது. இடையில் வழக்கறிஞர் பசுபதி அவர்களிடமிருந்து அவர் எழுதும் தொடரின் புதிய பாகம் வந்தது. நான் அன்னபூர்ணா ஏறப்போவதை அவரிடம் சொன்னேன். அவர் பிப்ரவரி மாதம் கினாபாலு மலையில் ஏறிய படத்தை அனுப்பி மலை ஏற சிந்தனை, சக்தி, பிரபஞ்ச ஆற்றல் ஆகியவற்றின் இணைவு முக்கியம் என்றார். கினாபாலு மலை அன்னபூர்ணாவைவிட சவாலானது. அறுபது வயதைக் கடந்துவிட்ட அவரது வேகமும் செயல்துடிப்பும் எனக்கு முன்னுதாரணமானவை. அந்நேரத்தில் அவர் சொற்கள் ஆசிபோல ஒலித்தன.
இந்தப் பயணத்தில் ஒட்டுமொத்த பேருந்தையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது ‘பாசா பாசா’ எனும் நேபாளப் பாடல். அது நேபாள நாட்டுப்புறப் பாடல். திபெத்திய இசையின் தாக்கம் அப்பாடலில் இருந்தது. திபெத்தியப் பாடல்கள் அபிராமிப் பட்டரின் அந்தாதிபோல தொடர்ச்சிகள் கொண்டவை. முடியும் சொல்லில் புதிய பகுதி தொடங்கும். இப்பாடலும் அப்படி வசீகரித்தது. அரவினும் பாடலை ரசித்தபடி வந்தார். முற்றிலும் குணமடைந்திருந்தார் என ரசிப்பதில் தெரிந்தது.
இடையில் மதிய உணவு. மலைகள் சூழ்ந்த உணவகத்தில் வெளியில் அமர்ந்து சாப்பிட்டோம். சுரேஷ் “முட்டை சாப்பிடுங்கள்… முட்டை சாப்பிடுங்கள்” என பலமாக உபசரித்துக்கொண்டே இருந்தார். சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் பயணித்த பேருந்து மேடு பள்ளங்கள் நிறைந்த உட்புறப்பகுதிகளில் புகுந்து, ‘சி வாய்’ எனும் இடத்தில் நின்றது. இறங்கியபோதுதான் பேருந்தின் சக்கரம் வழக்கத்தைவிட பெரியதாக இருப்பதைக் கண்டேன். என் நெஞ்சுவரை அதன் உயரம் இருந்தது. வனப்பகுதிகளில் ஓடுவதற்கென்றே உருவாக்கப்பட்ட பேருந்து. பேருந்து நின்ற இடத்திலிருந்து ஜீப் சேவை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் பாதைகள் மேம்படுத்தும் பணி நடந்ததால் ஏறக்குறைய 35 நிமிடங்கள் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு நடந்தோம். இடையில் வாஞ்சையோடு நெருங்கிய நாய்களை கொஞ்சி வைத்தோம். அவை யார் எதிர்பட்டாலும் “என்னைய கொஞ்சம் கொஞ்சிட்டு போ மக்கா” எனப் பிடிவாதம் பிடிப்பவையாக இருந்தன.
“முட்டை சாப்பிடுங்கள்… முட்டை சாப்பிடுங்கள்” என விடாமல் சுரேஷ் கூறியபோதே உஷாராகியிருக்க வேண்டும். பயணம் கடுமையாகவே இருந்தது. மேடும் பள்ளமும் கற்களும் நிறைந்த பாதையில் பயணித்த பிறகு ‘கந்துருக்’ எனும் இடத்தில் ஜீப் காத்திருந்தது. மேம்பாட்டு பணிகள் நடந்த பகுதியைக் கடந்துவந்ததால் நுரையீரலை தூசு அடைத்திருந்தது.
காட்டுப் பகுதியில் ஓடும் ஜீப் அது. மொத்தம் 5 ஜீப்புகள். சுரேஷ் எங்களுடன் ஏறிக்கொண்டார். ஜீப்பின் மேலே ஒரு நேபாள வழிகாட்டி ஏறிக்கொண்டார். அப்படி பயணம் செய்ய அவருக்கு நெடுநாள் ஆசையாம். அந்த குலுங்களில் எப்படி சமாளித்தார் எனத் தெரியவில்லை. சவாலான பயணம் அது. பயணத்தினூடே உரோமங்கள் கொண்ட எருமைகளைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு ஊரின் சீதோசன நிலைக்கு ஏற்ப விலங்குகளின் பரிமானம் உருவாகிறது.
ஜீப் சின்னுவா எனும் இடத்தில் நின்றது. இனிதான் அன்னபூர்ணா மலையை நோக்கி மூன்று நாள் பயணம் தொடங்க உள்ளது.
“எல்லாரும் தயாரா?” எனக்கேட்டார் சுரேஷ். அவர் வாயின் இரு புறம் கோரப்பற்களும் தலையில் இரண்டு சிவப்பு நிற கொம்புகளும் அப்போது வெளிபட்டதை நான் மட்டுமே பார்த்திருக்கக்கூடும்
தொடரும்