குமாரிகள் கோட்டம் – 7

எங்கள் பயணம் தொடங்கியது. பச்சை போர்த்திய பெருமலைகள் வெயிலில் ஒளிர்ந்துகொண்டிருந்தன. காற்றில் குழுமை. மெல்ல மெல்ல மலைகளுக்குள் நுழைந்தோம். சரிவான பாதையில் பிரத்தியேகமாக வாங்கிய காலணிகள் அபாரமாக ஒத்துழைத்தன. கைத்தடிகள் வசம் வர தாமதமாகின.

இடையில் ஒரு வெள்ளிக்கோடு. உற்றுப்பார்த்தபோது அது தொங்கு பாலம் எனத் தெரிந்தது. 278 மீட்டர் நீளம் கொண்டது. நேபாளில் இப்படி அதிகமான தொங்கு பாலங்கள் உள்ளன. நதிகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்ட மலைகளை கடந்து செல்ல அவை அமைக்கப்பட்டுள்ளன.

தொங்கு பாலத்தைக் கண்டவுடன் நண்பர்கள் உற்சாகமானார்கள். களைப்பைக் கடந்து நடையில் வேகம் கூடியது. கடந்த வருடம் குஜராத் மாநிலத்தில் இப்படி ஒரு தொங்குபாலம் இடிந்து விழுந்ததில் 141 பேர் இறந்ததை நான் நினைவுகூர்ந்தபோது உடன் வந்த நண்பர்கள் கடுப்பாகினர். உற்சாகம் கெட்டுவிட்டதாக முணுமுணுத்துக்கொண்டே பாலத்தை நோக்கி நடந்தனர். எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

பாலம் உறுதியாகவே தெரிந்தது. அனைத்துமே இரும்பால் செய்யப்பட்டிருந்தது. இடையில் எந்தத் தூண்களும் இல்லை. வலுவான இரும்பு கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டிருந்த தொழில்நுட்பமும் மனித ஆற்றலும் மிரட்டியது. “எதிரில் கோவேறு கழுதைகள் வந்தால் நாம்தான் பின்வாங்க வேண்டும்,” என முன்னமே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்படி ஏதும் நிகழவில்லை. ஆனால் வழி நெடுகிலும் கழுதைகளின் சாணம். 

நதியை வேடிக்கைப் பார்த்தபடி பாலத்தைக் கடந்தேன். சரிவில் அதன் வேகமும் வளைவில் அதன் தவிப்பும் நுரைத்தலில் தெரிந்தது. பாலம் கட்டப்படும் முன்னர் இந்த நதியைக் கடந்துதான் மலைவாழ் மக்கள் பயணம் செய்திருப்பார்கள். அந்தப் பயணத்தைக் கற்பனையில் நிகழ்த்திப்பார்த்துக்கொண்டேன்.

பாலத்தில் பெரிதாக அசைவில்லை. காற்றின் அழுத்தம் குறைவாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற பாலங்களின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள். ஆயுட்காலம் முடியும் தருவாயில் பாலத்தின் சக்தியை ஆய்வுகள் செய்து உறுதிப்படுத்த வேண்டும். முறையான பராமரிப்பும் பழுதுபார்த்தலும் பாலத்தின் ஆயுளைக் கூட்டும்.

ஜின்னுவில்

பாலத்தைக் கடந்த பிறகு ‘ஜின்னு உங்களை வரவேற்கிறது’ எனும் அறிவிப்பு. அந்த அறிவிப்பு பதாகையின் மீது ‘ARNA’ எனும் பியர் விளம்பரம் இருந்தது. சுத்தமான நேபாள பீர் போல. முரட்டுக்காளை ஒன்று முட்டுவதுபோன்ற சின்னம். அர்னாவை குடித்தால் அடுத்தவர்களை முட்டக்கூடும்.

எனக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இந்த மலைப்பயணத்தில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் ஒன்று நீர் அருந்திக்கொண்டே இருப்பது.  குளிர் பிரதேசம் என்பதால் உடலில் நீர் வற்றுவது நாம் அறியாமலேயே நடக்கும். போதுமான நீர் இல்லாவிட்டால் உயிர்வளி குறைந்து பாதிப்புகள் உண்டாவது நிச்சயம். இதற்காகவே பிரத்தியேகமான நீர்பை ஒன்றை சுரேஷ் வாங்கச் சொல்லியிருந்தார். மருத்துவமனையில் ரத்தம் சேகரிக்கும் பை போன்றது அது. நீரை நிரப்பில் பையில் செருகிக்கொள்ள வேண்டும். அதிலிருந்து ஒரு பீலி வெளிப்புறம் தொங்கும். அதை அவ்வப்போது இழுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

எனக்கு ஒரு பிரச்சினை உண்டு. நான் நீர் அருந்த மறந்துவிடுவேன். யாராவது எனக்கு நினைவூட்டினால் அன்றி தாகம் எடுக்காமல் பருகும் எண்ணம் வராது. இதனால் சிறுநீரகத்தில் கல் உற்பத்தியாகி அறுவை சிகிச்சை வரை சென்றும் திருந்திய பாடில்லை.

மயூரி

என் பலவீனத்தை புரிந்துகொண்ட மயூரி “அண்ணா தண்ணி குடிங்க” என பார்க்கும் போதெல்லாம் சொல்லி வைத்தார். மயூரி மலாக்காவில் பணியாற்று

ம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர். இந்தப் பயணத்தை உற்சாகமாக்கியவர்களில் ஒருவர். கள்ளமற்ற மழலையின் சிரிப்பு எப்போதும் அவரிடம் இருந்தது. அவர் சொல்லும்போதெல்லாம் நானும் பீலியை உறிஞ்சி வைத்தேன்.

ஒரு மணி நேரம் நடந்த பிறகு ஜின்னுவில் நாங்கள் மதிய உணவு சாப்பிட வேண்டிய இடம் வந்தது. ஒவ்வொரு மலை ஊர்களிலும் அப்படியான இடங்கள் உள்ளன. அவற்றை Tea House என்கின்றனர். இங்கு இணைய வசதி, சுடுநீர் வசதி, தங்கும் வசதி, உணவுகள் என எல்லாமே கிடைக்கும். எல்லாவற்றுக்கும் கட்டணமும் உண்டு.

எங்களுக்கு சோறு, சட்டினி, பருப்பு சூப், அப்பளம், கிழங்குக் கூட்டு, முள்ளங்கி, கேரட் என ஒரு செட்டாக உணவு வழங்கப்பட்டது. அதை ‘Dal Bhat’ என அழைத்தனர். நேபாளின் பிரபலமான பாரம்பரிய உணவு. மலை ஏறிய பசிக்கு நன்கு சுவைத்தது.

கொஞ்சம் ஓய்வெடுத்தப் பின்னர் மீண்டும் பயணத்தை முடுக்கினார் சுரேஷ். இம்முறை சொம்ரோங்கை நோக்கி பயணம். சுரேஷ் “அடுத்த பயணம் கொஞ்சம் சிரமமாக இருக்கும்” எனச் சொல்லி வைத்தார். நான் மூச்சை இழுத்துப்பிடித்து தயார் ஆனேன்.

என்னைப்போலவே பலருடைய முகத்திலும் உள்ள சோர்வை சுரேஷ் கணித்திருக்கக் கூடும். “மலையின் உயரத்தை அடிக்கடி பார்த்து  ‘ஆ’ என வியந்துவிட்டால் அதன் உச்சியைத் தொடமுடியாது. ஒருமுறை அதன் பிரம்மாண்டத்தைப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் கவனம் வைக்க வேண்டியது  உங்கள் வழித்தடத்தில்தான். உங்கள் கால்களுக்குக் கீழே உள்ள அந்த தடத்தில் மட்டும் கவனம் வையுங்கள். இன்று பயணிக்கப் போகும் எஞ்சிய ஐந்து மணி நேரத்தையும் நினைத்துப் பயப்படாதீர்கள். அடுத்த பத்து நிமிடம் குறித்து மட்டும் யோசியுங்கள்,” என்றார்.

சுரேஷுடைய வார்த்தை பலருக்கும் புத்தெழுச்சியை உண்டாக்கியது. இது சுற்றுலா அல்ல; மலைப்பயணம். எனவே சுற்றுலா வழிகாட்டியிடம் எதிர்பார்க்கும் இலகுத்தன்மையை சுரேஷிடம் எதிர்பார்க்க முடியாது. அவர் சொற்களைப் பின்பற்றுவது மட்டுமே பாதுகாப்பான பயணத்துக்கு வழி.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏறிச்செல்வதுதான் அடுத்த இரண்டு மணி நேர பயணமாக இருந்தது. தோளில் தொங்கிய பையின் எடை வாட்டியதால் கனத்தைக் குறைக்க நீரை வேக வேகமாக உறிஞ்சித்தீர்த்தேன். நீர் குறைய குறைய கனம் குறைந்தது. எனக்கு அப்போதுதான் எங்களுடன் வந்த பளுதூக்கிகள் (porter) மேல் கவனம் சென்றது.

பளுதூக்கிகள்

எங்களுடன் சுமார் 9 பளுதூக்கிகள் வந்தனர். குடிநீர், மழையாடை, கையுறை, மருந்துகள் போன்ற பொருட்களே எங்கள் பைகளில் இருந்தன. அடுத்த ஆறு நாட்களுக்கான மாற்றூடைகள் முதல் சில அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பத்து கிலோவரை கனம் கொண்ட பைகள் இரண்டை (20 கிலோ) பளுதூக்கிகள் சுமந்து வந்தனர். இந்த ஒன்பது பேரைத் தவிர இக்குழுவின் தலைவர்கள் இருவரும் உடன் வந்தார். அதில் ஒருவர் மருத்துவ உபகரணங்களுடன் வந்தார்.

இருபது கிலோவைச் சுமந்து வரும் பளுதூக்கிகளின் நிலையை நினைத்து வேதனையாகவும் வியப்பாகவும் இருந்தது. இவர்கள் பெரும்பாலும் மலைக் கிராமங்களில் வசிப்பவர்கள். ஒரு பளுதூக்கிக்கு ஒரு வருடத்தில் அதிகபட்சம் நான்கு முறை மட்டுமே இவ்வேலை கிடைக்கும். பனிக்காலம் தொடங்கிவிட்டால் தொடர்ச்சியாக சில மாதங்கள் வேலை இருக்காது. எனவே இந்த நான்கு முறை சம்பாதிப்பதைக் கொண்டுதான் அவர்களின் எஞ்சிய வாழ்வை நகர்த்த வேண்டும்.

கற்படிகள்

அபி என்பவர்தான் இக்குழுவின் தலைவர். வாட்டச்சாட்டமாக முரட்டு முகத்துடன் இருந்தார். மருத்துவ உதவியாளன் இந்திரா. மொத்த பயணத்தை ஏற்பாடு செய்த சின் தப்பாவின் உறவினன் அவன். வழி நெடுகிலும் தோளிலும் தலையிலும் கயிறுகளால் பிணைக்கப்பட்ட இரண்டு கனத்த பைகளை சுமந்துகொண்டு பளுதூக்கிகள் மலை ஏறுவதை வேதனையுடன் பார்க்க மட்டுமே முடிந்தது.

கடுமையான இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் சோம்ரோங்கை அடைந்தோம்.  அங்கு ஒரு வயதான பெண்மணியும் சில நாய்களும் இருந்தன. குளிர் பிரதேசத்திற்கு ஏற்ப அடர்த்தியான ரோமங்கள் கொண்ட நாய்கள் அவை. ஒன்றை அழைத்தேன். உடனே வந்தான். வருவான் எனத் தெரியும். கண்களில் ஏக்கம் இருந்தது. தடவிக்கொடுத்தபோது மடியில் சாய்ந்து படுத்துக்கொண்டான். அவற்றுக்கு மனிதனின் தழுவல் மட்டுமே முக்கியமாக இருந்தது. போப்பியின் நினைவு வந்தது.

அவ்விடம் ஒருவித பரவசத்தைக் கொடுத்தது. குளிர் நிலத்துக்கு ஏற்ற வண்ணத்தில் அவ்விடம் எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது. வெள்ளை செங்கற்கள் அடுக்கப்பட்ட குடில். உள்ளே அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. சிவப்பு வண்ண குளிராடை பெண்மணி நிதானமாக அமர்ந்திருந்தாள். பார்வைகள் சந்திக்கும்போது சிரித்து வைத்தாள்.

சோம்ரோங்கில்

பதினைந்து நிமிட ஓய்வுக்குப் பிறகு தொடர்ந்து கீழ் சினுவா நோக்கிய பயணம். இப்போது ஏற்றத்தைவிட இறக்கமே அதிகம். சுரேஷ் இதைப் பற்றிச் சொல்லியிருந்தார். மலையில் ஏற்றம் இருந்தால் இறக்கம் இருக்குமாம். எதிர்ப்பார்த்ததைவிட இறக்கம் படு பயங்கரமாக இருந்தது. கால் மூட்டுகள் கடுகடுத்தன. இடையில் ஆங்காங்கு ஓய்வெடுத்தோம். வலி பற்றி கேலி பேசிக்கொண்டோம். தொடர்ச்சியான வலிகளை எதிர்கொள்ளும்போது அது இயல்பான நகைச்சுவையாகி விடுகிறது.

சக நண்பர்கள்

இந்தப் பயணத்தில் சில பளுதூக்கிகள் நெருக்கமானார்கள். நேபாளம் இந்து தேசம் என்பதால் அவர்களின் பெயர்களின் சாயலும் அவ்வாறே இருந்தன. கோபால், சந்தோஷ் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர்கள். அவர்களிடம் பேசிச்செல்வது நல்ல அனுபவம். புரியும் வகையில் ஆங்கிலம் பேசினார்கள். “தோ அடுத்த ஐந்து நிமிடத்தில் இடம் வந்துவிடும்” என்பதை மனப்பாடமாகச் சொல்லி மணிக்கணக்கில் நடக்க வைத்தார்கள்.

அடுத்த இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் கீழ் சின்னுவாவை அடைந்திருந்தோம். காலையில் வயிற்றுப்போக்கால் வாடியிருந்த அரவின் முதல் ஆளாக ஏறியிருந்தார். இரவு நெருங்கிவிட்டதால் குளிர் அடர்ந்திருந்தது. எனக்கும் அரவின்னுக்கும் ஒரே அறை. மெல்லிய பலகைத் தடுப்புகளைக்கொண்ட குறுகலான அறை. ஒருவர் பேசுவது மறு அறையில் கேட்கும். குளியலறையும் கழிப்பறையும் பொதுவானது. குளிர் வாட்டியது.

பொருட்களை ஒருவாராக அடுக்கிக்கொண்டிருக்கும் போது அரவின் குளிக்கப் புறப்பட்டார். அவர் குளித்துவிட்டு திரும்பியபோது துண்டைத் தேடினால் என்னுடையதைக் காணவில்லை. சற்று முன்னர்தான் எடுத்து வைத்த நினைவு. இப்படி சில சமயம் நானாக கற்பனை செய்துகொள்வதும் உண்டு என்பதால் துண்டை உண்மையில் எடுத்து வைத்தேனா இல்லையா எனக் குழம்பினேன்.

பரபரப்பாகத் துண்டைத் தேடிக்கொண்டிருந்தபோது வெளியில் முனியாண்டி ராஜ் அலறும் சத்தம் கேட்டது. என்னவென்று பின்னர் விசாரித்துக்கொள்ளலாம் என அபியிடம் சென்று என் சிக்கலைச் சொன்னேன். அவன் என்னவோ பாராட்டுவிழாவில் பொன்னாடை பறிபோனதைப்போல பதறினான். அவர்கள் இடத்தில் இருந்த ஒரு இரவல் துண்டை பெற்று குளிக்கச் சென்றேன்.

சுடுநீர் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. சவர்க்காரத்தை முகத்தில் போட்டு மீண்டும் பீலியைத் திறந்தபோது திடீரென குளிர்நீர் முகத்தில் வந்து அடித்தபோது சப்த நாடிகளும் ஒடுங்கின. உடல் வெடவெடத்தது. நடுங்கிய கைகளோடு பீலியை அடைத்தேன். முகத்தில் சவர்க்காரம் இருந்தது. டைம் பாம் கட்டப்பட்ட கதாநாயகியைக் காப்பாற்ற எந்த மின்கம்பியை வெட்டலாம் எனத் தவிக்கும் கதாநாயகனின் தவிப்பு எனக்குள். பீலியைத் திறக்கலாமா அல்லது சவர்க்காரத்தை அப்படியே துடைத்துக்கொண்டு போகலாமா எனக் குழம்பி, ஆனது ஆகட்டும் என பீலியைத் திறந்தபோது மீண்டும் சுடுநீர் வந்தது. ஒருவழியாக சவர்க்காரத்தைக் கழுவிக்கொண்டு வெளியேறினேன். முனியாண்டி ராஜ் திடீரென தன் முகத்தில் குளிர் நீர் பட்டுவிட்டதை சுரேஷிடம் ஒரு திகில் கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் அலறிய காரணம் புரிந்தது.

ஒரு வழியாகக் குளிர் படாத அளவு உடலை மூடிக்கொண்டு உணவுண்ணச் சென்றேன். ஆனாலும் குளிர்ந்தது.

இரவுணவு சோறு பிரட்டல். ஆனால் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்த மீ சூப்பிலிருந்து வந்த புகையால் ஈர்க்கப்பட்டு அதையும் ஆர்டர் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டேன். குளிருக்கு சூப் இதமாக இருந்தது.

நாளைய பயணம் இன்னும் சவாலாக இருக்கும் என சுரேஷ் தூரமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘அது நாளைக்கு… இப்போது கைகளுக்கு அடியில் உள்ள சூப்பில் கவனம் வைப்போம்’ என உறிஞ்சத் தொடங்கினேன்.

தொடரும்

(Visited 231 times, 1 visits today)