காலைக் குளிரை உதறிக்கொண்டு எழுந்தபோது அரவின் ஓர் அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். நேற்று அவர் குளிக்க எடுத்துச் சென்றது என்னுடைய துண்டாம். இருவருமே Decathlonஇல் வாங்கியதால் ஒன்று போலவே இருந்தன. நேற்று இரவு என்னையே நான் சந்தேகப்பட்டதை எண்ணி நொந்துகொண்டேன். அரவின் வைத்திருந்த புதிய துண்டை எடுத்துக்கொண்டு பல் துலக்கச் சென்றேன். அந்த அதிகாலை குளிரில் யாரும் குளிப்பதில்லை என்பது ஆறுதலாக இருந்தது. ஆனாலும் எங்கள் குழுவில் இருந்த கோமளா குளிரையும் பொருட்படுத்தாமல் குளித்துக் கிளம்பினார் என்பது நேபாளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அச்சாதனையைச் செய்த கோமளா தன்னடக்கத்துடனேயே காணப்பட்டார்.
காலை உணவை முடித்துக்கொண்டு கீழ் சினுவாவில் இருந்து பேம்புவை நோக்கி நடந்தோம். பேம்பு 2310 மீட்டர் உயரத்தில் உள்ள மலையூர். முந்தைய நாளின் பயணக்களைப்பு உடலில் ஒட்டியிருந்தாலும் காலையில் நடப்பது உற்சாகமாகவே இருந்தது. பாசி படர்ந்த மரங்களைக் கடப்பது மனதினுள் குளிர்ச்சியை பரவச் செய்தது. கேமரன் மலையில் பாசி காடு (mossy forest) பிரபலம் என்பதால் கோகிலவாணி அது குறித்து விளக்கிக்கொண்டு வந்தார்.
டைனோசர் வாழ்ந்த காலத்திலிருந்து பாசி இனத் தாவரம் பூமியில் உயிர்த்து வருகிறது. பாறைகளின் இடுக்குகளிலும் கற்கள் நிரம்பிய பகுதிகளிலும் எளிதாக வளரக்கூடிய முதல் தாவரம் பாசி. பச்சைக் கம்பளம்போல பாறைகளிலும் மரங்களிலும் படர்ந்திருந்த பாசிகளில் ஈரம் மின்னியது. ஈரப்பதமும் நிழலும் உள்ள இடங்களில் இவை வளர்வதால் இயல்பாகவே அவை படர்ந்த இடங்களில் குளிர்ச்சி சூழ்ந்திருந்தது.
நான் அவ்விடத்தில் நின்று மரங்களில் தொங்கும் பாசிகளை கண்களில் நிரப்பிக்கொண்டேன். எந்தப் புகைப்படத்திலும் அதன் முழு அழகை பதிவு செய்துவிட முடியாதென தோன்றியது. உண்மையில் இந்த மலைப்பயணத்தில் அடிக்கடி தோன்றிய எண்ணமும் இதுதான். காட்சி என்பது பார்ப்பதால் மட்டும் மனதில் பதிவாவதில்லை. அதன் அப்போதைய ஒளி, காற்றின் மணம், சீதோசன நிலை, கவிந்த ஒலி என அனைத்தும் இணைந்தே மனதினுள் படிமங்களாக புதைகின்றன.
ஏறக்குறை இரண்டரை மணி நேரம் நடந்த பிறகு பேம்பு எனும் பகுதியில் மதிய உணவு தயாராக இருந்தது. நாங்கள் உள்ளே நுழையவும் மழைத் தொடங்கவும் சரியாக இருந்தது. உண்மையில் அது மழைக்காலமல்ல. ஆனால் நேபாளைப் பொறுத்தவரை அதன் சீதோசன நிலையைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.
மதிய உணவை மழையின் சாரலும் சத்தமும் இனியதாக்கின. அதே Dal Bhat உணவுதான். முந்தைய நாளைவிட சுமாராக இருந்தது. உணவு இடைவெளி முழுதும் சிரிப்புக்கும் வேடிக்கைக்கும் பஞ்சமில்லை. பயணத்தில் கலந்துகொண்டிருந்த கந்தா, சுரேஷ் (இவர் வேறொரு சுரேஷ்) ஆகியோர் அமர்ந்திருக்கும் இடம் உற்சாகத்துக்குக் குறைவில்லாமல் இருந்தது. கந்தா, ‘யாத்ரா’ எனும் கூட்டுறவுக் கழகத்தின் துணைத்தலைவர். முன்னாள் ஆசிரியர். ஆசிரியரான சுரேஷ் ஒரு சாகச பிரியர். கோலாலம்பூர் கோபுரத்தின் 2058 படிகளை 33 நிமிடங்களில் ஓடிக்கடப்பது, சிபு கோபுரத்தை 8 நிமிடத்தில் ஓடி கடப்பது, உயரமான மலைகளில் ஏறுவது என உடலை சாகசத்துக்கென்று தயார் செய்து வைத்திருந்தார்.
பேம்புவில் மதிய உணவை முடித்தபோது மழை வலுத்திருந்தது. அடுத்து டோவன் செல்ல வேண்டும். தாமதிக்க முடியாது. தாமதித்தால் எல்லா திட்டங்களும் பாதிப்படையும். மழையாடைய அணிந்துகொண்டு காட்டில் இறங்கினோம்.
தொடர்ந்து வந்த பாதைகளின் படிகள் கற்களால் ஆனவை என்பதால் வலுக்கும் சந்தர்ப்பம் அதிகம் இருந்தது. நான் என் கைத்தடியை உறுதியாகப் பிடித்துக்கொண்டேன். அத்தடி நுட்பமாகத் தயாரிக்கப்பட்டது. கூர்மையான அதன் இறும்புப்பகுதி எவ்விடத்திலும் தரையை வலுவாகப் பிடித்துக்கொண்டன. இறக்கமான பாதை என்பதால் நான் கைகளில் அதிகமான அழுத்தம் கொடுத்தேன். விளைவாக நெடுநாட்களாக காணாமல் போயிருந்த தோள்பட்ட வலி உக்கிரமடையத் தொடங்கியது.
2018இல் இந்த வலியைத் தாங்க முடியாமல் கேரளாவுக்கு வைத்தியம் செய்யச் சென்றிருந்தேன். அதை வலி எனச் சொல்லமுடியாது. தசையை மெல்லிய ஊசிகளால் ஆழமாகக் கீறி, அதில் கொஞ்சம் உப்பையும் மிளகாய் பொடியையும் தடவி, சரக் புரக் எனத் தேய்த்தால் எப்படி உஷ்ணமடைந்து எரியுமோ அப்படி ஓர் எரிச்சல் கிளம்பும். அது மெல்ல கழுத்தை ஆக்கிரமிக்கும். பின்னர் முதுகெலும்பு. வலி செல்லும் இடமெல்லாம் தோல் எரிந்து உஷ்ணமடையும். முதுகில் ஒரு மூட்டை தீப்பிழம்பைச் சுமப்பதுபோல கொதிக்கும்.
வலியின் அறிகுறி தெரிந்த உடனேயே நான் என் நடையைத் தளர்த்தத் தொடங்கினேன். ஆனால் கைத்தடியை ஊன்றாமல் நடக்க முடியவில்லை. கைத்தடியை ஊன்றிய ஒவ்வொரு தருணமும் வலித்தது. இடது கைக்கு ஒரு வலி என்றால் வலது கையை ஊன்றினால் வேறொரு வலி.
மனித மனங்களில் வலி குறித்த பிரிவினைகள் உண்டு. ஒருவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு வலி என்றால் பதறிவிடுவார்கள். முதுகில் வலி என்றால் “முதுகுதானே பரவாயில்ல… ” என்பதாக பதில் இருக்கும். ஆனால் வலி என்பது வலிதான். அது உடலின் எந்தப் பகுதியாக இருந்தாலும் நாம் அதற்கு கவனம் செலுத்த வேண்டும். உடல், நோய் சார்ந்த விசயங்களில் நான் சமரசம் செய்துகொள்வதில்லை. உடல்தான் செயலைப் புரிவதற்கான கருவி. நான் எதை செய்ய இந்த பூமியில் பிறந்தேனோ அதை செய்து முடிக்கவே இந்த உடல் எனக்கு முக்கியம். அதன் பாதுகாப்பை மீறச்சொல்லும் எதையும் நான் பொருட்படுத்துவதில்லை.
நான் என் நடையை மெது படுத்தினேன். அப்போதுதான் கோபால் ஓடி வந்தார். கோபால் ஒரு நேபாள பளுதூக்கி. அங்கிருந்த பளு தூக்கிகளில் சுறுசுறுப்பானவர். என்ன ஆனது எனக்கேட்டார். நிலையைச் சொன்னதும் “ஏன் என்னிடம் சொல்லவில்லை? நான் எதற்கு இருக்கிறேன்?” என்றவர் என் பையை எடுத்து அவர் ஏற்கெனவே சுமந்துவந்த பைகளோடு இணைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார்.
எனக்கு அவரைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. ஏற்கெனவே அவரிடம் போதுமான சுமைகள் இருந்தன. இதில் நானும் அவருக்கு பாரமாகியிருந்தேன். கோபால் அப்பையைத் தூக்க எந்த பேரமும் பேசவில்லை. உண்மையில் மலை ஏற்றதில் நமது அத்தனை பொருட்களையும் சுமந்துகொண்டு நம்முடனே வரும் ஒரு பளுதூக்கிகளுக்குத் தனிக்கட்டணங்கள் உள்ளன. கோபாலுக்கு உதவும் எண்ணம் மட்டுமே இருந்தது.
நான் உடன் வந்த கோபாலிடம் பேசிக்கொண்டே வந்தேன். கோபாலுக்கு 38 வயது. எட்டு வயதில் ஒரு மகள். நான்கு வயதில் ஒரு மகன். வருடத்தில் நான்கு முறை கிடைக்கும் பளுதூக்கி வேலையைச் செய்துதான் குடும்பத்தை நடத்துகிறார்.
“என் மகனுக்கு நான் காடுகளில் சுற்றுவது பிடிக்காது. அப்பா நீதான் என் ஹீரோ… ஏன் என்னை விட்டு செல்கிறாய்…” என்பான். நான் பளுதூக்குவதை ஒரு வேலையென அவனிடம் சொல்ல மாட்டேன். அப்பா மற்றவர்களுக்கு உதவச் செல்கிறேன் என்பேன். அறிமுகமில்லாத காட்டில் கஷ்டப்படுபவர்களுக்கு நாம்தானே உதவ வேண்டும் என்பேன். ஒவ்வொருநாள் இரவும் நான் யாருக்கு என்ன உதவினேன் என்றுதான் அவனிடம் வீடியோ அழைப்பின் வழி பகிர்ந்துகொள்வேன். அவன் கண்களுக்கு அப்போது நான் ஹீரோவாகத் தெரிவேன் அல்லவா” என கோபால் கூறியபோது கோகிலா அவரைப் பார்த்து “நீதான் நிஜ ஹீரோ” என்றார்.
பை கைமாறி விட்டாலும் வலி குறைந்த பாடில்லை. கற்படிகளும் மண் சருக்கல்களும் நிறைந்த தடத்தில் கைத்தடியை ஊன்றி ஊன்றி தோள்பட்டைகளை நானே பழுதாக்கிக் கொண்டிருந்தேன். 2018 போல எழுதுவதற்குக்கூட கைகளைத் தூக்க முடியாத நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. செங்குத்தாக சென்ற படியில் அத்தனை சக்தியையும் திரட்டிக்கொண்டு ஏறியபோது குளிர் வாட்டியது. உடல் தளர்ந்து கால் நடுங்கியது. அருவிக்கு அருகில் இருந்த புத்தர் ஆலயத்தை நெருங்கியபோது அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறி அமர்ந்தேன்.
அங்குதான் தேவஜித்தாவும் அவர் அம்மா ஆனந்தியும் இருந்தனர். தேவஜித்தா ஆசிரியர். அவர் அம்மாவையும் அழைத்துக்கொண்டு மலையேற வந்திருந்தார். இருவரும் தோழிகள் போல ஒருவருக்கொருவர் ஊக்கம் கொடுத்தபடி மலையேறுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மகள் தன் இளமையின் ஒரு பகுதியை தனது அன்னைக்குக் கொடுக்கும் காட்சி அது.
ஏற்கெனவே அங்கு காய்ச்சலால் துவண்டிருந்த சிவலட்சுமிக்கு இருவரும் மருந்துகொடுத்து தேற்றிக்கொண்டிருந்தனர். உடன் மயூரியும் இருந்தார். என்னிடம் உள்ள மருந்துகளால் அவரைத் தேற்ற முடியுமெனத் தோன்றியது. ஆனால் மருந்துகள் எனது பெரிய பையில் இருந்தன. இன்றைக்கு தங்கும் இடம் சென்ற பிறகுதான் மருந்தை எடுத்துக்கொடுக்க முடியும். நான் சிவலட்சுமியிடம் எப்படியும் இரவுக்குள் மருந்தை எடுத்துக்கொடுப்பதாகச் சொன்னேன். பதில் கூற முடியாத அளவுக்குச் சோர்ந்திருந்தார். கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
ஆனந்தி அம்மா எனக்கு என்ன ஆனது என்றார். சொன்னேன். சற்றும் தாமதிக்காமல் தான் கொண்டு வந்திருந்த தைலத்தை எடுத்து வந்து என் சட்டையை விலக்கி சூடு பறக்க முதுகிலும் கழுத்திலும் தேய்த்துவிட்டார். என் அம்மாவும் அப்படித்தான் தேய்ப்பார். உலகில் உள்ள அத்தனை அன்னையர்களுக்கும் அன்புக் கரங்கள் ஒன்று போலவே உள்ளன.
தைலம் கொடுத்த எரிச்சல் வலியைக் கொஞ்சம் மறக்கடித்தது. காய்ச்சலால் துவண்டிருந்த சிவலட்சுமி மெல்ல மெல்ல படியேறத் தொடங்கினார். அவரது உத்வேகமும் முனைப்பும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. சிவலட்சுமி சிறிய உருவம் கொண்ட பெண். ஆனால் வலுவான மன ஆற்றல் கொண்டவர். நானும் அவருடன் நடந்து ஹிமாலயா எனும் இடத்தை அடைந்தேன். அது 2920 மீட்டர் உயரத்தில் உள்ள கிராமம்.
அப்போது இருட்டிவிட்டிருந்தது. உண்மையில் அன்று நாங்கள் தங்க வேண்டிய இடம் டியூராலி. 3230 மீட்டர் உயரத்தில் உள்ள ஊர் அது. ஏறக்குறைய 300 மீட்டர்களைக் கடக்க வேண்டும். மலையில் 300 மீட்டர் என்பது சாதாரணமல்ல. அதற்கு இன்னும் மூன்று மணி நேரம் நடக்க வேண்டும். ஆனால் நான் அந்தப் பயணத்திற்குத் தயாராக இல்லை. வலி வாட்டி வதைத்தது. தோள் பட்டை வீங்கியிருந்தது. மேலும் தனிப்பட்ட முறையில் நான் மலையேறி சாதனை புரிய இதில் இணைந்திருக்கவில்லை. இது எனக்கு ஓர் அனுபவம். இந்த வலிகள் எல்லாமே அந்த அனுபவத்தின் ஒரு பகுதிதான். ஆனால் வலியை வலிந்து உருவாக்கிக்கொள்ளுதல் அனுபவமாகாது. மேலும் சுரேஷின் ஊக்கச் சொற்களாலும் அவர் சொற்களின் மீதுள்ள நம்பிக்கையாலும் பயணத்தைத் தொடரும் குழுவில் என்னுடைய தனிப்பட்ட பலவீனம் பாதிப்பை உருவாக்கிவிடக்கூடாது என நினைத்தேன்.
கொஞ்ச நேரத்தில் சுரேஷ் கோமளாவை தாங்கிப் பிடித்தபடி உள்ளே நுழைந்தார். உடலில் சக்கரை அளவு குறைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு பக்கத்து நாற்காலியில் சிவலட்சுமி கிடத்தப்பட்டிருந்தார். நான் என்னிடம் இருந்த சில நோயெதிர்ப்பு மாத்திரைகளை அவருக்குக் கொடுத்திருந்தேன்.
சுரேஷ் அன்று செல்ல வேண்டிய இரவுப் பயணம் குறித்து நண்பர்களிடம் விளக்கிக்கொண்டிருந்தார். காற்றின் குளிர் எலும்புவரை துளைத்தது. நான் போவதில்லை என உறுதியாகச் சொல்லிவிட்டேன். சிவலட்சுமி, கோமாளவுடன் தான் தங்கிக்கொள்வதாக கோகிலாவும் சொல்லிவிட்டார். வரக்கூடிய மழையும் இருளும் அன்றிரவு பயணத்தை கடுமையானதாக மாற்றும் என எல்லாமே அறிந்திருந்தனர். அரவின், மயூரி உள்ளிட்ட சிலர் எதையும் எதிர்கொண்டு பார்ப்பதென நெற்றியில் விளக்கைக் கட்டிக்கொண்டு காட்டில் புக தயாராக இருந்தனர். மறுநாள் செல்வதாகச் சொன்ன சிலரிடம் சுரேஷ் ஊக்கம் கொடுத்து அன்றைய இரவுப் பயணத்துக்கு தயார் செய்தார். சுரேஷுடைய சொற்களைவிட பார்வை கொடுக்கும் நம்பிக்கை யாருக்கும் உத்வேகம் கொடுக்கக் கூடியது. தலைமைத்துவத்தின் பண்பு அது.
உண்மையில் அது ஒரு பொல்லாத இரவு. கடுங்குளிரும் காற்றும் இருளும் சுற்றிச்சூழ்ந்து மிரட்டின.
எல்லாருமே ஒன்றாக நடந்துசெல்ல வேண்டும் எனும் கட்டளைக்கிணங்க அவ்விரவு பயணம் தொடர்ந்தது. ஆனால் எனக்கும் சுரேஷுக்கும் ஒரு புதிய சிக்கல் உருவாகியிருந்தது.
தொடரும்