ஹிமாலயாவில் தங்குவது குறித்து முன் திட்டம் இல்லாததால் மூவர் தங்கும் ஓர் அறை மட்டுமே கிடைத்தது. எனக்கும் சுரேஷுக்கும் ஒதுக்கப்பட்ட அறை போதுமான பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாகிக் கிடந்தது.
சுரேஷ் கொஞ்சம் கடுப்பாகிவிட்டார். “இந்த அறையில் எப்படித் தங்குவது?” என இந்திராவிடம் கேட்டார். இந்திராவுக்கும் என்ன சொல்வதென தெரியவில்லை. “நாம் திடீரென இங்குத் தங்க முடிவெடுத்ததால் இந்த அறை மட்டுமே கிடைத்தது,” என்றார் தயங்கியபடி.
“அங்கு நாங்கள் தங்கமுடியாது. கட்டாயம் நோய் ஏற்படும்,” சுரேஷ்.
“வேறு அறை இல்லையே!” இந்திரா.
“அப்படியானால் நாங்கள் இந்த உணவகத்திலேயே தங்கிக்கொள்கிறோம்” என்றார் சுரேஷ். ‘டீ ஹவுஸ்’ என்பது தங்கும் இடம், குளியல் அறை, உணவு உண்ணும் இடம் ஆகிய வசதிகளைக் கொண்ட இடம். கைப்பேசிக்கு மின்னூட்டும் வசதியெல்லாம் டீ ஹவிஸில்தான் இருக்கும். மெத்தை பதித்த நீளமான பெஞ்சுகள் அடுக்கப்பட்டிருக்கும். அதில் படுத்துத் தூங்குவதுதான் சுரேஷின் திட்டம்.
சுரேஷ் என்னைப் பார்த்தார். எனக்கும் சம்மதம்தான். ஆனால் தூக்கக்கலக்கத்தில் நான் உருண்டு விழக்கூடும் என்பதால் நான் அங்கேயே தரையில் துணி விரித்து படுத்துக்கொள்கிறேன் என்றேன்.
சுரேஷ் சொன்னதை இந்திரா கடை உரிமையாளரிடம் மொழிபெயர்த்துச் சொல்லவும் அவர் எங்களைக் கூர்ந்து பார்த்தார். தொங்குசதை முகம் கடைக்காரருக்கு. என்ன உணர்ச்சியைக் காட்டுகிறார் எனப் புரியவில்லை. ஆனால் நாங்கள் அங்குத் தங்குவதில் அவருக்குச் சம்மதம் இல்லை என மட்டும் புரிந்தது.
சுரேஷ் அவர்கள் வழங்கிய அறையில் தங்குவதால் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். இருந்தும் அவர் சம்மதிப்பதாகத் தெரியவில்லை. தொங்குசதை முகம் உணர்ச்சியற்றே இருந்தது. இந்தக் குளிரில் ஏன் இப்படிப் படுத்துகிறார் எனத் தோன்றியது.
கடைசியாக சுரேஷ் “இந்த உணவத்தில் நாங்கள் தங்குவதில் உங்களுக்கு என்னதான் பிரச்சினை?” என்றார். இந்திரா அதை அவரிடம் கேட்டு மீண்டும் மொழிபெயர்த்து கூறினார்.
“இந்த பெஞ்சுகள் குறுகலாக உள்ளதாம். நீங்கள் வசதியாகப் படுக்க முடியாதாம். உடல் வலிக்குமாம். உங்கள் பயணத்துக்கு அது நல்லதில்லையாம். வேண்டுமானால் மேசையில் படுக்கிறீர்களா எனக்கேட்கிறார்,” என்றார்.
எனக்கு நெகிழ்ந்து போனது. சுரேஷுக்கும்தான். “எங்களுக்கு அதிலெல்லாம் பிரச்சினையே இல்லை” என்ற சுரேஷ் என்னைத் திரும்பிப் பார்த்தார். நானும் சிக்கல் இல்லை என்றேன். மீண்டும் அந்த தொங்கு முகக் கிழவர் ஏதோ சொன்னார். ஓர் உதவியாளன் இரு மெத்தைகளை எடுத்து வந்து மேசையில் போட்டு படுக்கையைத் தயார் செய்தார்.
“வெறும் மேசையில் படுக்க வேண்டாம். மெத்தையில் படுக்கச் சொல்கிறார்,” என்றார். நான் அந்தக் கிழவரைப் பார்த்தேன். அவர் முகத்தில் இப்போதும் எந்த மாறுதலும் இல்லை. சுருக்கம் விழுந்த ஏராளமான கோடுகளுக்கு மத்தியில் கருணையின் ஒளி படிந்திருக்கலாம்.
அந்த மேசைப் படுக்கையில் படுத்தபடி அன்றைய ‘குமாரிக்கோட்டம்’ பகுதியை எழுதத்தொடங்கினேன். விரல் அசைந்தால்கூட தோள்பட்டை வலித்தது. வலி வலியென வலி மட்டுமே மனதில் குவிந்திருந்தது. களைப்பும் குளிரும் வலியை நோக்கிக் கவனம் குவியாமல் பார்த்துக்கொண்டன. குமாரிக்கோட்டத்தை பதிவேற்றிவிட்டுப் படுத்தேன்.
மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து தயாரானோம். டுவராலி நோக்கிய பயணம். ஹிமாலயா மெல்ல மெல்ல விழித்தது. அங்கு தங்கியுள்ள வாடிக்கையாளர்கள் காலை உணவுண்ண வருவதற்குள் இடம் தூய்மை செய்யப்பட்டது.
என் தனிப்பட்ட பையை லுல் பஹதுல் எனும் பளுதூக்கி சுமந்து வந்தார். தொடர்ந்து பையைச் சுமப்பது தோளை பாதிக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. லுல் பஹதுல்லுக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை. சில வார்த்தைகள் பேசினார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஏராளமான பைகளை முதுகில் சுமந்ததால் என் பையை மார்பு பகுதியில் மாட்டிக்கொண்டார். தனிப்பட்ட பையில் நீர்ப்பை இருந்ததால் அவர் என்னுடனேயே நடந்துவர வேண்டியிருந்தது. அது அவருக்குச் சிக்கலானது. கனத்தைச் சுமப்பவர்கள் விரைவாக நடப்பார்கள். அதுதான் கனம் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கும் வழி. லுல் எனக்காக அதை தாங்கிக்கொண்டார். என் கண்களையே பார்த்துக்கொண்டு வந்தார். நான் கொஞ்சம் சோர்ந்தாலும் நீர் வேண்டுமா என ஓடி வந்தார். நானும் பீலியை இழுத்துப் பருகிக்கொள்வேன்.
ஓரிடத்தில் நான் சொன்னேன், ” நீ மார்பில் பையை மாட்டி நீர் கொடுப்பது தாய்ப்பால் கொடுப்பதை போல உள்ளது. என் அன்னைக்கு அடுத்து இப்படி பருகக்கொடுப்பது நீயாகத்தான் இருப்பாய்.”
இந்திரா வேகமாகச் சிரித்து அவனிடம் மொழிபெயர்த்தார். லுல்லும் சிரித்தார்.
டுவராலி நோக்கிய பயணத்தில்தான் இந்திராவிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது. தென் கொரியாவில் உள்ள தோட்டத்தில் சில காலம் வேலை செய்தவர். சின் தப்பா அவருடைய சித்தப்பா. சித்தப்பா தொடங்கிய நிறுவனத்தில் இப்போது பணியாற்றுகிறார். நான் ஒரு எழுத்தாளன் என அறிந்தபோது ஆச்சரிப்பட்டார். தமிழர்களில் அப்படி ஆச்சரியப்படுபவர்கள் குறைவு. காரணம் தமிழில் பெரும்பாலோர் தங்களையும் எழுத்தாளர்கள் என்றே நம்பி வாழ்கிறார்கள். “நானும் கூட கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன்” என்று சடாரென கவிதையை வாசித்துக் காட்டிப் பயமுறுத்துவார்கள். அல்லது “எனக்கு இந்த எழுத்தாளரைப் பழக்கம்… ஐயோ அற்புதமா எழுதுவாரு,” என்றும் யாருடைய பெயரையாவது சொல்வார்கள்.
இலக்கியத்தில் நான் வைத்திருக்கும் அளவுகோள்கள் வேறு. பொழுதுபோக்கு இலக்கியங்கள் குறித்து நான் பொதுவாகக் கருத்து சொல்வதில்லை. மொழியை வைத்துக்கொண்டு குட்டிக்கரணம் அடிக்கும் குரங்கு சேஷ்டைகளை பொருட்படுத்துவதும் இல்லை. எனவே தமிழ்ச் சூழலில் என்னை எழுத்தாளனாக சொல்லிக்கொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பானதாகத் தோன்றும்.
இந்திரா உலக இலக்கியங்களின் வாசகனாக இருந்தது எனக்கு அவரிடம் என்னை எழுத்தாளன் என வெளிக்காட்டிக்கொள்ள மகிழ்ச்சியாக இருந்தது. ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’, பாவ்லோ கொய்லோவின் ’11 நிமிடங்கள்’, ஹருக்கி முராகாமி புனைவுகள் என நிறைய வாசித்திருந்தார். நான் அவரிடம் காம்யூவையும் காஃப்காவையும் பற்றிக் கூறினேன். அவர் தேடி வாசிப்பதாகக் கூறினார். முதல் நாள் தங்கியிருந்த மலைக் கிராம டீ ஹவுஸில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த தஸ்தாயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவல் குறித்து அவரிடம் கூறினேன். அவரும் அந்நாவலைப் பார்த்திருந்தார். தஸ்தாயெவ்ஸ்கியை அவர் கேள்விப்பட்டிருந்தார். வாசிக்க வேண்டும் என்றார். நேபாளத்தின் சில முதன்மையான எழுத்தாளர்கள் குறித்து கூறி அந்த நூல்களை வாங்க உதவுவதாகக் கூறினார்.
“முதன்மையான எழுத்தாளரின் நூல்கள் எவ்வளவு விற்கும்?” என்றேன்.
“குறைந்தது ஐம்பதாயிரம்,” என்றார். எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.
“தமிழில் யார் முதன்மையான எழுத்தாளர்?” எனக்கேட்டார்.
“ஜெயமோகன்” எனக் கூறினேன். அவரை ஆங்கிலத்தில் வசிக்க ஆசைப்பட்டார். நூல்கள் உள்ளது என்றேன்.
“மலேசியாவில் எப்படி?” என்றார்.
“நிறைய மலாய் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் மலேசியாவில் தமிழில் எழுதும் நவீன எழுத்தாளர்களில் நான்தான் முதன்மையானவன்,” என்றேன். எனக்கு அப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதை இனித்தான் நான் நிரூபிக்க வேண்டும் என்பதும் இல்லை.
இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததால் களைப்பும் வலியும் தெரியவில்லை. லுல் என்னைப் பின்பற்றியே வந்தார். திரும்பும் போதெல்லாம் அவர் கண்கள் என்னைச் சந்தித்தன. ஓடிவந்து “வாட்டர்?” என்றார். நீயும் குடித்துக்கொள் என்றேன். அவர் தயங்கினார். “எனக்கு மனிதர்களிடம் எந்த பேதமும் இல்லை. நீயும் நானும் மனிதன். உனக்கு சங்கடம் இல்லை என்றால் என் நீரை குடித்துக்கொள்,” என்றேன்.
லுல் புரிந்ததாகச் சிரித்தான்.
பயணம் நீண்டுகொண்டே இருந்தபோது ஹிங்கு குகை (Hinkku cave) எதிர்கொண்டது. பாறைகளால் ஆன குகை அது. முன்பு கால்நடை மேய்ப்பர்களும் மலையேறுபவர்களும் தங்குமிடமாகப் பயன்பட்ட இடம். அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தேன். குளுமையாக இருந்தது.
மூன்று மணி நேர மலையேற்றத்துக்குப் பின்னர் டியூராலியை (Deurali) அடைந்தோம். மதிய உணவும் ஓய்வும் வழக்கம்போல கிடைத்தது. தோள்பட்டை நன்கு வீங்கியிருந்தது. செய்வதற்கு ஒன்றும் இல்லை. நடந்துதான் ஆக வேண்டும். தொடர்ந்து வருவது நீண்ட பயணம். இரண்டு நாட்கள் குளிக்கவில்லை. ஈரத்துண்டால் துடைத்துக்கொண்டதோடு சரி. கழிப்பறைக்குச் சென்று கழுவ நீரைத் தொட்டால் ரத்தம் உரைகிறது. டியூராலி 3,230 மீட்டர் உயரத்தில் உள்ளதென்றால் அடுத்து செல்லக்கூடிய மச்சாபுச்சாரே (Machhapuchhare) 3,700 மீட்டர் உயரத்தில் உள்ளது. இன்னும் அதிக குளிர். இன்னும் அதிக சவால். மனதையும் உடலையும் ஒருவழியாக தயார்ப்படுத்திக்கொண்டேன். கிடைத்த தைலங்களையெல்லாம் முதுகில் தேய்த்துக்கொண்டேன். எரிச்சலில் வலி தெரியக்கூடாது என்பதே நிலை.
மச்சாபுச்சாரே பயணம் சற்று ஆபத்தானது. கவனம் இன்றி நடந்தால் உடல் சேதமோ உயிர் சேதமோ நிகழலாம். இதுகுறித்து முன்னர் ஹரிராஷ்குமார் எழுதியிருந்தபோது சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். அது சாதாரணமானதல்ல. ஆங்காரமாக ஓடும் நதியை குறுகலான பாலங்கள் வழியாகவும் நதியில் நகரும் கற்களில் ஏறியும் கடக்க வேண்டும். இரண்டடி அகலம் கொண்ட வழித்தடத்தில் பள்ளத்தாக்குகளைக் கடக்க வேண்டும். அத்தனையையும் கடந்து சென்றபிறகு ஓர் அறிவிப்பு பலகை எதிர்கொண்டது.
‘AVALANCHE RISK AREA’
இந்த அறிவிப்புப் பலகை வைக்க காரணம் உண்டு. 2014ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்புயலால் குறைந்தது 21 மலையேற்றக்காரர்கள் உட்பட பல்வேறு தேசங்களைச் சேர்ந்த குறைந்தது 43 பேர் இறந்தனர். அக்டோபர் 14இல் நடந்த அந்தச் சம்பவம் இன்னும் அழியாத சுவடாக பயமுறுத்தி வருகிறது.
நாங்கள் பனிப்பாறைகள் சரிந்துவிழுந்து உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி பாதையில்தான் பயணம் செல்ல இருந்தோம். சுரேஷ் அதை விரும்பவில்லை. பனிப்பாறைகள் எப்போது வேண்டுமானாலும் சறுக்கி வந்து விழலாம். எனவே ஆற்றைக் கடந்து நடக்கலாம் என்பது அவர் திட்டம். இந்திரா அதற்கு அவசியம் இல்லை என்றார். இது இலையுதிர் காலம். எனவே பனிப்பாறைகள் விழாது என்பது அவர் ஊகமாக இருந்தது. ஆற்றைக் கடந்து மீண்டும் வருவது சுற்றல் என்பதால் பனிப்பாறைகள் விழுந்து கிடக்கும் பாதையை நோக்கிப் பயணப்படத் தொடங்கினோம்.
கண்ணுக்கு ஆங்காங்கு பனிபடிந்து கிடக்கும் மலைகள் தட்டுப்படத் தொடங்கின. நதியும் மலையும் பள்ளத்தாக்கும் பயணத்தை உற்சாகமாக்கினாலும் அது ஆபத்தான வழித்தடம் என்பது உறுத்திக்கொண்டே இருந்தது.
என் நினைவுகள் முழுவதும் நேற்று இரவு இந்தப் பாதையைக் கடந்தவர்கள் பற்றியே இருந்தது. அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்? தலையில் கட்டியிருந்த விளக்கு கொடுக்கும் குறைந்த ஒளியில் எப்படித் தவித்திருப்பார்கள்? என்பதிலேயே சென்றது. அதில் வயதானவர்கள் இருந்தனர். அவர்களின் மன உறுதி ஆச்சரியப்படுத்தியது.
மெல்ல மெல்ல நகர்ந்து பனிப்பாறைகள் விழுந்து நொறுங்கிக் கிடந்த சரிவை நோக்கி நகர்ந்தோம். சில மீட்டர்களுக்கு வெள்ளியாய் மின்னும் பனிப்படலத்தைப் பார்த்ததும் உற்சாகம் எழுந்தது. கூடவே அதிலுள்ள ஆபத்தும் புரிந்தது. ஒரு பளுதூக்கி “கடந்த முறை வந்தபோது இவ்வளவு பனி இல்லை. இப்போது இருக்கிறது. அப்படியானால் பனிப்பாறைகள் சமீபத்தில் விழுந்துள்ளன,” என்றார்.
‘அடப்பாவிகளா! ஆபத்தில்லை என்றுதானே கூட்டி வந்தீர்கள். இப்போது இப்படிச் சொல்கிறீர்களே. பனிப்பாறைகளுக்கு நான் ஒரு எழுத்தாளன் என்பதும்… இன்னும் நான் எழுத வேண்டிய நூல்கள் உள்ளன என்பதும் தெரியாதே’ என யோசித்துக் கலங்கினேன். அண்ணாந்து பார்த்தால் வரண்ட பாறை மலைகள். அதற்கு மேலிருந்துதான் பனிப்பாறைகள் விழுமாம்.
தலைமேல் ஏதோ விழுவதுபோல இருந்தது. பனிப்பாறையுடன் மண்ணும் சரிவதால் வெண்மையின் வெளிர்த்தன்மையை அந்தப் பனிச்சறுக்கில் காண முடியவில்லை. மண் திட்டுகள் ஒட்டடைகள் போல வெள்ளி முகட்டில் வலையெழுப்பியிருந்தன.
அவ்விடத்தில் நிற்காமல் விரைவாகக் கடந்துவிட வேண்டும் என சுரேஷ் சொல்லியிருந்தாலும் முதன்முறையாக பனிக்கட்டிகளைப் பார்ப்பதால் அள்ளிக் கையில் எடுத்தேன். மொரமொரப்பாக இருந்தது. ஐஸ் கச்சானில் அரைத்துப்போடும் ஐஸ் துகள் போன்ற தன்மை.
கொஞ்சம் வழுக்கினாலும் பக்கத்தில் உள்ள சரிவில் சறுக்கிக்கொண்டு போக நேரலாம். உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கைகால்களில் தேய்மானம் ஏற்படும். அடிமேல் அடிவைத்துக் கவனமாக நடந்தோம்.
மச்சாபுச்சாரே மலையின் அடிவாரத்தை மாலை ஆறு மணிக்குள்ளாக அடைந்தபோது குளிர் அதிகரித்துவிட்டதை உணர்ந்தேன். லுல் நீரை பருகும்படி மார்பை காட்டினான். களைப்புத்தீரப் பருகி முடித்தேன்.
மச்சாபுச்சாரே மலையை fishtail என அழைக்கின்றனர். மீன் வால் போல அதன் இரட்டை முனை பகுதி தோன்றம் காட்டுவதால் அப்பெயர். நேபாளத்தில் வாழும் குருங் இனக்குழுவுக்கும் சோம்ரோங் மக்களுக்கும் இது புனித மலை. மேலும் இதை சிவன் வாழும் மலை என்றும் நம்புவதால் கைலாயத்திற்கு நிகராகக் கருதப்படுகிறது. அதனால் நேபாள அரசு இம்மலையில் ஏற அனுமதி வழங்கவில்லை.
வலியை எத்தனை முறை வலியென்றே சொல்லிக்கொண்டிருப்பது. ஏற்கனவே டீ ஹவுஸ் உணவகத்தில் படுத்துறங்கி பழக்கம் இருந்ததால் யாரையும் கேட்காமல் படுத்துவிட்டேன். கழுத்தைத் திருப்ப முடியவில்லை. எனவே மறந்தும் திருப்பாமல் இருக்க இன்னொரு தலையணையை முட்டுக்கொடுத்துப் படுத்தேன். அப்படியே தூங்கிவிட்டேன்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு விழித்தபோது கோகிலா சூரியன் அஸ்தமனம் மலையில் பதிந்து செய்த ஜாலங்களை படமாகக் காட்டினார். அதை நேரில் பார்க்காதது எனக்கு ஏமாற்றம்தான். ஆனால் எதையும் நினைத்து வருந்தும் நிலையில் நான் இல்லை.
மெல்ல எழுந்து வெளியே சென்றேன். இன்னும் முழுமையாக இருட்டவில்லை. பனி பகல் முழுவதும் சேகரித்து வைத்திருந்த ஒளியை சன்னமாக வெளிப்படுத்தியபடி இருந்தது.
முன்னேற்பாடாக கையுறையும் குளிராடையும் அணிந்துகொண்டது கொஞ்சம் பாதுகாப்பைக் கொடுத்தது. மச்சாபுச்சாரே அடிவாரம் மேகங்களால் மறைக்கப்பட்டிருந்ததால் அதன் முனைகள் மட்டும் தீட்டப்பட்ட மேகங்கள்போல தங்களை வெளிப்படுத்தின.
அங்கே சிவன் வாழ்கிறாரா? அழைத்தால் வருவாரா? நான் மச்சாபுச்சாரே மலையையே பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் லுல் வந்தான். “சாப்பிட வா” என சைகை காட்டினான்.
நான் அவன் தோளைத் தொட்டு ” என் பையை தூக்க ஒரு நாளைக்கு எவ்வளவு தர வேண்டும்?” என்றேன். சுரேஷ் அதை உறுதி செய்யச் சொல்லியிருந்தார்.
அவன் தோளை உலுக்கி “எனக்கு அதெல்லாம் தெரியாது” என்றான். மீண்டும் சாப்பிட வா என பாவனை செய்தான்.
அன்பு என்பதே சிவனென்றால் அவர் மச்சாபுச்சாரே மலை உச்சியில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என எண்ணிக்கொண்டேன்.
தொடரும்