நேற்றுபோலவே இன்றும் மச்சாபுச்சாரே உணவகத்தில் தங்கிடத் திட்டமிட்டோம். மாலைக்குப் பிறகு மச்சாபுச்சாரேவில் இருந்து அன்னபூர்ணா செல்வது ஆபத்தானது. உயிர்வளி குறைபாடு ஏற்படலாம் என்பது சுரேஷின் கவலையாக இருந்தது. மேலும் இம்முறை 400 மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். மலையில் 400 மீட்டர் என்பது 40 கிலோ மீட்டர் போன்றது. மேலும் இரவு பாதகமான விளைவுகளை உண்டாக்கலாம். எனவே தொடர் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த உணவகத்தின் பெஞ்சுகள் அகலமாகவும் வசதியாகவும் இருந்தன. தலையணை போர்வையெல்லாம்கூட ஓரமாக வைத்திருந்தனர். மலைப்பாதையில் குளிர் நடுங்க வருபவர்கள் தங்கிக்கொள்வதற்காக இருக்கலாம்.
நான் அன்று எதுவும் எழுதவில்லை. களைப்பும் வலியும் குளிர்நடுக்கமும் வாட்டியது. போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தேன். மேலும் அதிகாலை மூன்று மணிக்கு மச்சாபுச்சாரேவிலிருந்து அன்னபூர்ணா அடிவாரம் நோக்கிச் செல்லவேண்டும் என சுரேஷ் சொல்லியிருந்தார். ஏறக்குறைய மூன்று நான்கு மணிநேரப் பயணம். சென்று சேர்ந்தால் அன்னபூர்ணா அடித்தள முகாம் பயணம் நிறைவுற்றதாகப் பொருள். அதிகாலையில் எழ வேண்டும் என்பதால் தூங்குவது மட்டுமே முதன்மையாக இருந்தது. நான்கடுக்கில் போட்டிருந்த உடைகள் எதையும் கழட்டவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு எழுந்தேன். அபியின் முகம் தெரிந்தது. நான் அதைக் கனவென்று நினைத்துக்கொண்டேன். நாங்கள் மச்சாபுச்சாரே சேர்ந்த அதே நேரத்தில் அபி அழைத்துச் சென்ற குழு அன்னபூர்ணா மலையடிவாரத்தை அடைந்திருந்தது. திட்டமிட்ட நாளில் திட்டமிட்ட காலத்தில் அக்குழு திட்டமிடப்பட்ட இலக்கை அடைந்திருந்தனர். நாங்கள் ஒருநாள் பின்தங்கிவிட்டோம்.
நான் மீண்டும் உறங்கத் தொடங்கியபோது மீண்டும் சலசலப்பு. அவ்விரவில் பரபரப்பான சூழல் அந்நியமானது. எனவே மீண்டும் ஆழ் உறக்கத்துக்குள் சென்றேன். திடீரென என் கழுத்துக்கு முட்டுக்கொடுத்திருந்த தலையணை இழுக்கப்பட்டபோதுதான் ஏதோ விவகாரம் நடந்துள்ளது என எழுந்தேன். அபியும் சுரேஷும் பரபரப்பாக இருந்தனர். யாரோ ஒருவர் என் தலைக்கு எதிரில் இருந்த பெஞ்சில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார். என்னால் அவரது தலையையும் நெற்றியையும் பார்க்க முடிந்தது.
பெண்.
அவர் கைகால்களைத் தேய்த்து சூடாக்கிக் கொண்டிருந்தார்கள். பேச்சு மூச்சில்லை. குளிரில் நடுங்கிய அவர் அங்கிருந்த போர்வையால் அவசரமாக போர்த்தப்பட்டார். குளிரால் ஒருவர் நடுங்குவதை அறிந்ததும் நான் என் போர்வையை எடுத்து நீட்ட அதுவும் அவர்மேல் போர்த்தப்பட்டது.
நான் அவரை யோகாம்பிகை டீச்சர் என்றே நினைத்தேன். யோகாம்பிகை சித்தியவானில் உள்ள தேசியப்பள்ளியில் பணியாற்றுபவர். மிகவும் அமைதியானவர். அன்னபூர்ணா பயணத்தை ஆன்மிகப் பயணமாக வரித்துக்கொண்டவர். ஒவ்வொரு அடியையும் ‘சிவ சிவ’ என்றே உச்சரித்தபடி கடந்தார். யார் முன்னே சென்றாலும் அவருக்கு ஒரு பொருட்டில்லை. அவர் தன் வழியில் நடந்தார். நடையைப் போலவே அவர் பேச்சும் நிதானமானது. ஏற்கெனவே கைலாசம் சென்று திரும்பியிருந்தாலும் அன்னபூர்ணா அதைவிடச் சிக்கலான பயணம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.
எனக்கு என்ன முதலுதவி செய்வதென தெரியவில்லை. என்ன நடக்கிறது என பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மூளை உறக்கத்தைவிட்டு மெல்ல மெல்ல தெளிவானது. மச்சாபுச்சாரேவில் உள்ள யோகாம்பிகை டீச்சருக்கு உதவ அன்னபூர்ணாவில் உள்ள அபி ஏன் தன் குழுவினருடன் வந்தார் எனக் குழம்பினேன். சுரேஷ் ஓர் அசாதாரண சூழலில் எப்படிச் செயல்படுகிறார் என அப்போதுதான் பார்க்க முடிந்தது. அவர் முன்னர் மருத்துவம் சார்ந்து செய்த தொழில் முன்னனுபவமாகச் செயல்பட்டது.
கொஞ்ச நேரத்தில் கந்தா அவர்கள் உள்ளே நுழைந்தபோதுதான் உண்மையான சூழல் எனக்குப் புலப்படத் தொடங்கியது. மயக்கமடைந்து வந்திருப்பது அன்னபூர்ணா முகாமிலிருந்து ஒருவர். அருகில் சென்று உற்று பார்த்தபோதுதான் அது வசந்தி எனத் தெரிந்தது. வசந்தி கோகிலாவின் தோழி. அவருடன் ஒன்றாக மலையேற வந்தவர்.
நாலாயிரம் மீட்டர் உயரத்தில் ஒருவர் ஒரு தரம் வாந்தி எடுப்பதென்பதே ஆபத்தானது. வசந்தி இரு தரம் வாந்தி எடுத்திருந்தார். அதற்கு உயிர்வளி குறைபாடு முக்கியக் காரணம். தொடர்ந்து மூளைக்கு உயிர்வளி பாயாமல் மூர்ச்சையான அவரை மூன்று நேபாளப் பளுதூக்கிகள் மாற்றி மாற்றி சுமந்து வந்துள்ளனர்.
கந்தா கொஞ்சம் தெளிவாக இருந்தார். அவருக்கும் உயிர்வளி பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. ஆனால் ஒருவகையாகச் சமாளித்துக்கொண்டு இறங்கி வந்துவிட்டார்.
மணியைப் பார்த்தேன். இரவு பதினொன்று. அந்த இரவில் வசந்தியை அந்த நேபாள இளைஞர்கள் தூக்கி வந்த விதம் குறித்து கந்தா வியந்தார். ஒரு கைலியைத் தொட்டிலாக்கி அவரை அதில் அமர வைத்து, தங்கள் கைகளில் அதன் இன்னொரு பகுதியைக் கோர்த்து மூட்டைபோல மாற்றி மாற்றி சுமந்து வந்துள்ளனர்.
அது ஆபத்தான பாதை. படிக்கட்டுகள் இல்லாமல் கற்கள் குவிந்த பாதை. “என்னால் அவர்கள் பின்னால் வர முடியவில்லை. அந்த கற்பாதையில் அவர்கள் வசந்தியைத் தூக்கி வந்த விதத்தை என்னால் மறக்க முடியாது. நாம் நடக்கத் தடுமாறும் அந்தப் பாதையில், விளக்கின் துணையும் இல்லாமல், அவர்கள் மேடு பள்ளங்களில் தாவிக்குதித்து ஓடி வந்த விதம் அசாதாரணமானது,” கந்தா சொன்னார்.
நான் அபியின் அருகில் சென்றேன். கைகளைப் பிடித்தேன். “எப்படி உங்களால் முடிந்தது?” என்றேன்.
“வேறு எதைவிடவும் மனித உயிர் முக்கியமல்லவா?” என்றார்.
இதுபோன்ற ஆபத்தான காடுகளில் உதவி செய்ய முனையும் உள்ளூர்வாசிகள் முதலில் பேரம் பேசுவதை வழக்கமாகக் கொள்வதுண்டு. மலேசியாவில் கினாபாலு மலையில்கூட அப்படியான நிகழ்வுகளைக் கேள்விப்பட்டுள்ளேன். அபி மற்றும் அவர் குழுவினரிடம் கடமையுணர்ச்சியைவிட மனிதாபிமானம் அதிகமே இருந்தது.
பேசாமல் படுத்தேன். சுரேஷ் என்னை அறையில் சென்று படுக்கச் சொன்னார். வேண்டாம் எனத் தோன்றியது. அன்னபூர்ணா புறப்பட இன்னும் சில மணி நேரமே இருந்தது. அங்கேயே படுத்து கண்களை மூடிக்கொண்டேன். எண்ணங்கள் திசை தெரியாமல் மோதி முட்டின.
ஏற்கெனவே இருமுறை சுவாசப்பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவன் நான். குறைவான உயிர்வளி கொண்ட அந்த மலையில் ஏற முடியுமா? குளிர் கொல்லும் அந்த அதிகாலையில் அன்னபூர்ணாவை அடைய முடியுமா? ஒருவேளை உயிர்வளி குறைவு ஏற்பட்டால் என்னையும் தூக்கிக்கொண்டு கீழ்ப்பகுதிக்கு ஓடுவார்களா?
முதன்முறையாக அச்சம் தொற்றிக்கொண்டது.
தொடரும்