சில பதற்றமான சூழல்களை எதிர்கொண்டதால் எங்கள் பயணம் சற்றுத் தாமதமாகி அதிகாலை 4.00 அளவில் தொடங்கியது. யாரும் பசியாறவில்லை. குளிரும் உறக்கமும் கௌவியிருந்தன. அன்னபூர்ணாவை நோக்கிய பயணம் அது. உச்சக்கட்டமான தருணம்.
நெற்றியில் விளக்கு கட்டிக்கொண்டோம். பெருமலை இருளின் விட்டில் பூச்சிகள்போல அவை சிறிய எல்லைக்குள் சுடர் விட்டன.
கரும்பாறைச் சரிவுகளில் பனி பொதிந்த காட்சி எனக்கு நியூசிலாந்தில் பார்த்த மாடுகளை நினைவூட்டின. அவற்றின் உடல்களே வெண்மையும் கருமையும் இணைந்தவை. பனி அப்பிய மலைகள் பெரிய பெரிய பசுக்கள். பால்போன்ற நதியை வற்றாமல் கருணையுடன் சுரந்தன.
கொஞ்ச தூரம் நடந்தோம். நடக்க நடக்க உற்சாகம் தொற்றிக்கொண்டது. பனிமூடிய மலைகள் சுற்றிச்சூழத்தொடங்கின. சுரேஷ் வழக்கம்போல கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு யாத்திரீகனைப்போல நிதானமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். இப்போது முன்புறம் அன்னபூர்ணாவும் பின்னால் மச்சாபுச்சாரேவும் இருந்தன. இரண்டும் முழுமையாக பனியால் சூழப்பட்ட மலைகள். ஆங்காங்கே கருந்திட்டு.
நான் சுரேஷிடம் சொன்னேன், “நிலவும் பனிமலையும் ஒன்று. இரண்டிலும் கறை உள்ளது. நெருங்க நெருங்க உயிர்வளி குறைகிறது. இரண்டுமே உயிர்களை அவ்வளவு எளிதாக நெருங்க விடுவதில்லை. பனிமலை பூமியில் இருக்கும் நிலவின் தூரத்துறவு.”
நடந்தோம். மெல்ல மெல்ல விடியல் தொடங்கியது. சூரியனை இன்னும் காணவில்லை. தலையில் கட்டியிருந்த விளக்குக்கு வேலையில்லாமல் போனது. மச்சாபுச்சாரேவின் பின்னால் இருந்து செந்தீற்று. அது கதிரவனின் உறக்கம் நெளியும் கரங்கள்.
கொஞ்ச நேரத்தில் அன்னபூர்ணாவின் உச்சி சிவந்தது. யாரோ மெழுகுவர்த்தியில் தீபம் ஏற்றியதைப்போல வெண்மையில் சுடர். சரியாகப் பார்த்தால் மச்சாபுச்சாரே அன்னபூர்ணாவில் ஒளியேற்றுவதாகப் புரிந்துகொள்ளலாம். அப்படியானால் அன்னபூர்ணா சக்தியின் வடிவம். சிவன் அவள் நெற்றியில் திலகமிடுகிறார்.
நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். நான் மெல்ல மெல்ல பிந்தி சென்றேன். எனக்குப் புரிந்துவிட்டது. உயிர்வளி போதவில்லை. வேகமாக நடப்பது மேலும் சுவாசத்தைப் பாதிக்கும். பொறுமையாக நடப்பது மட்டுமே அன்னபூர்ணாவை அடையும் வழி. அடிமேல் அடிவைத்தேன்.
நன்கு விடிந்திருந்தது. அன்னபூரணா வெள்ளியாக மின்னியது. பின்னால் மச்சாபுச்சாரேவும் பளபளத்தது. ஒன்றை இன்னொன்று ஆட்கொள்கிறது; அரவணைக்கிறது. விடியலைத்தான் இந்த உலகம் எப்படியெல்லாம் கொண்டாடுகிறது. கண்ணாடி அணியாமல் இருந்திருந்தால் அவற்றின் பளபளப்பின் கூர்மை கண்களைப் பாதிக்கக்கூடும்.
நடந்தேன். கண்களுக்கு அன்னபூர்ணா அடித்தள முகாம் தெரிந்தது. அங்குதான் நேற்று சென்று சேர்ந்த நண்பர்கள் இருப்பார்கள். அதைச் சென்றடைந்தால் பயணம் முடிந்தது. ஆனால் அதற்கு மேலும் ஒருமணி நேரமாவது நடக்க வேண்டும்.
திடீரென எனக்குப் பின்னால் வந்த கோமளாவுக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்தது. ஒரு பாறையோரம் சாய்ந்தார். சுரேஷ் ஓடிச்சென்று அவர் முகத்தைப் பார்த்தார். கோமளாவுக்கு தொடர்ந்து நடக்கும் தீவிரம் இருந்தது. ஆனால் சுரேஷ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.
கோமளா ஒரு நேபாள பளுதூக்கியால் மச்சாபுச்சாரேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனக்கு மேலும் பயம் கூடியது. சுரேஷால் முகத்தைப் பார்த்தே ஒருவரின் உடல்நிலையைச் சொல்ல முடிந்தது. என்னையும் அப்படிச் சொல்லிவிடுவாரா? எனக்கு பின் வாங்கும் எண்ணமில்லை. அன்னபூர்ணா தேவியின் பாதங்களைப் பார்ப்பதை மட்டுமே இலக்காக எண்ணிக்கொண்டேன்.
இப்போது நான் தன்னந்தனியனாக நடந்துகொண்டிருந்தேன். நண்பர்கள் எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தனர். நான் ஒவ்வொரு அடியாக எண்ணி எண்ணி வைத்தேன். கை வலியை மறக்க நினைத்தேன். முன்புபோல அது விட்டுவிட்டு வராமல் நிரந்தரமாக ஒட்டிக்கிடந்தது. மூச்சை கவனமாகக் கையாண்டேன். இடையில் நிறுத்தி மூச்சுப்பயிற்சி செய்துகொண்டேன். அன்னபூர்ணாவை பார்த்து “எனக்கு அனுமதி கொடு,” என்றேன்.
அவள் கருணையுடன் மின்னிச்சிரித்தாள்.
கொஞ்ச நேரத்தில் முன்னே சென்றுகொண்டிருந்த கோகிலா என்னைத் தேடி திரும்ப வந்தார். கடந்த இரண்டு நாட்களாக உயிர்வளி போதாமையால் கஷ்டப்பட்டவர் இப்போது பனிமலையில் உற்சாகமாகக் காணப்பட்டார். மலையின் சீதோசனம் அவருக்கு தலைகீழாக வேலை செய்தது. என் நிலை அவருக்குப் புரிந்தது. நான் எவ்வளவு மறுத்தும் என்னுடனேயே நடந்து வந்தார்.
“உனக்கு இந்த மலைப்பயணம் கஷ்டமாக இல்லையா?” என்றேன்.
“இந்த உலகில் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மையைவிட வேறெதுவும் அவ்வளவு கஷ்டமில்லை,” என்றார்.
நான் சிரித்தேன்.
“நீ சிறுவனாக இருந்தபோது உன் அம்மா இந்த மலையேற்றம்போல அசாதாரணமான காரியம் ஒன்றைச் செய்திருந்தால் உனக்கு பெருமையாக இருந்திருக்குமா?” என்றாள்.
“நிச்சயமாக… பள்ளிக்கூடம் முழுக்க சொல்லி பெருமையடைவேன்.”
சிரித்தார், “இதெல்லாம் அதற்குத்தான்” என்றாள். அவள் குரலும் கண்களும் கனிந்திருந்தன. தாய்மையின் கனிவு அது.
நான் மெல்ல நடந்தேன். மூச்சு சீரானதுபோல இருந்தது. அன்னபூரணி அனுமதித்திருந்தாள்.
நன்கு விடிந்திருந்தது. ‘நமஸ்தே’ எனும் அறிவிப்புடன் அன்னபூர்ணா அடித்தள முகாம் எங்களை வரவேற்றது.
நான் வந்து சேர்ந்துவிட்டேன். உற்சாகத்தைவிட மனம் அமைதியாக இருந்தது. குறிப்பாக, யாருக்கும் சிரமம் கொடுத்திருக்கவில்லை என்பதே நிம்மதி.
முதல்நாள் வந்த நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அரவின்தான் முதல் ஆளாக மலை ஏறியிருந்தார். அவரை வாழ்த்தினேன். “அதற்கு காரணம் நான் மட்டுமல்ல, சுரேஷ் சாரும்தான். அவர் நினைத்திருந்தால் என்னை முந்தி சென்றிருக்க முடியும். அந்த அளவுக்கு அவரது ஆற்றல் இருந்தது. ஆனால் பல சமயங்களில் என்னை முன்னே செல்ல ஊக்குவித்தார்,” என்றார். எவ்வளவு இனிய மனிதர்கள். எவ்வளவு மேன்மையானவர்கள்.
வலது கை முற்றிலும் செயலிழந்ததைப்போல உணர்ந்தேன். முனியாண்டி ராஜ் தான் வைத்திருந்த தைலம் ஒன்றை கொடுத்தார். அரவின் அதை தேய்த்துவிடவும் வலி தெரியாமல் இருந்தது. முனியாண்டி ராஜுக்கும் எனக்கும் இலக்கியம் சார்ந்த சில மனக்கசப்புகள் இருந்தன. நான் அவரிடம் கொஞ்சம் கடுமையாகவே பேசியிருந்தேன். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் விமான நிலையத்தில் அன்பு பாராட்டினார்; நடக்கச் சொல்லி ஊக்குவித்தார்; இந்தப் பயணம் முழுக்க சிரிப்பும் கூச்சலுமாக இருக்க அவரும் ஒரு காரணம்.
மனிதர்கள் என்பது ஒன்றல்ல; அவர்கள் பிழந்த மலையில் தெரிவதைப்போல ஆயிரம் ஆயிரம் அடுக்குகளைக் கொண்டவர்கள். கடுமையும் மொரமொரப்பும் உள்ளதுபோல கனிவும் மென்மையும் கொண்டவர்கள்.
தனிப்பட்ட முறையில் மலையேறி வந்ததை நான் வெற்றியாகக் கருதவில்லை. ஒரு பெரிய மலைக்கு முன்னால் நான் எவ்வளவு சிறியவன் என்றே உணர்ந்தேன். ஒரு சின்னஞ்சிறிய எறும்பு, சக்கரை மூட்டையில் ஏற முயலும் பிரயத்தனங்களை நாம் எவ்வளவு வேடிக்கையாகப் பார்க்கிறோமோ அப்படி எங்காவது இரண்டு மாயங்கண்கள் நான் ஏறி வந்ததைப் பார்த்துச் சிரித்திருக்குமா எனத் தோன்றியது.
கொண்டு சென்றிருந்த வல்லினம் கொடியைப் பிடித்தபடி படம் எடுத்துக்கொண்டேன். மற்றவர்களைப் படம் பிடித்தேன். நான் இப்போது அன்னபூரணி எனும் மாபெரும் சக்தியின் காலடியில் பத்திரமாக இருக்கிறேன் என்ற உணர்வு நிலையாக இருந்தது.
எல்லாரும் உற்சாகமாக இருந்தார்கள். வந்த நோக்கம் வெற்றியடைந்ததாக மகிழ்ந்திருந்தார்கள்.
உண்மையில் என் நேபாளப் பயணம் இனிமேல்தான் தொடங்க இருந்தது. புத்தர் பிறந்த ஊரான லும்பினி செல்ல வேண்டும், இரு தங்கா ஓவியர்களைச் சந்திக்க வேண்டும், முக்கியமாக
குமாரி எனும் வாழும் தெய்வத்தைக் காண வேண்டும்
இப்போது என் முன் இருந்த சவால் மலையில் இருந்து கீழே இறங்குவது. ஏறுவதைவிட இறங்கும்போது கைகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுப்பதால் வலி மேலும் கூடும். கை வலி அதிகரிக்கும்போது எழுத முடியாமல் போகும். நான் இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க வேண்டும். எனக்குக் குழப்பமாக இருந்தது.
தொடரும்