அன்னபூர்ணாவில் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இருந்தோம். பின்னர் ஒவ்வொருவராகக் கீழே இறங்கத் தொடங்கினோம். நான் தனியாகவே நடக்கத் தொடங்கினேன். கை வலித்ததால் என்னால் குழுவின் வேகத்திற்கு நடக்க முடியவில்லை.
கொஞ்ச தூரம் கடந்து திரும்பிப் பார்த்தேன். உலகின் பத்தாவது உயர்ந்த மலையான அன்னபூர்ணா வெண்ணொளி பிரகாசிக்க சிரித்தது. இமையமலைத் தொடரில் ஒரு சிகரம். ஒருவகையில் இம்மலை அன்னபூரணி எனும் கடவுளின் வடிவாகவும் கருதப்படுகிறது. பார்வதி தேவியின் அவதாரம் அன்னபூரணி.
புராணக் கதைகளின்படி, உணவு என்பது வெறும் மாயையல்ல என்பதைச் சிவனுக்கு உணர்த்த பார்வதி எண்ணுகிறாள். உலகில் பஞ்சத்தை உண்டாக்கி பின்னர் அன்னபூரணியாக காசியில் பசியுடன் வரும் சிவனுக்கு தன் உணவைத் தானமாகத் தருகிறாள். சிவனுக்கு உணவின் மகத்துவத்தைப் புரியவைக்கிறாள். இவளே காசியின் தலைமைக் கடவுள்.
மீண்டும் அன்னபூரணியைப் பார்த்தேன். எதை மாயை இல்லையெனச் சொல்ல எனை அழைத்தாள்? உடலையா? சுவாசத்தையா? ஜீவனையா?
அவளைப் படங்கள் பிடித்தேன். பெரும் சக்திகள் எவ்வளவு சாதாரணமாகப் படங்களில் தெரிகின்றன. மனதன்றி அப்பெரும் சக்திகளைத் திரட்டி வைத்துக்கொள்ளும் பெட்டகம் ஏது? கலைகளன்றி அவற்றை மீண்டும் வெளிபடுத்தும் கருவிகள் ஏது?
அன்னம் கொடுப்பவள்தான் அன்னபூரணி என்றால் மலை முழுவதும் வெண்மையாக மின்னுவதெல்லாம் சோற்றுப் பருக்கைகளா? வெள்ளிச்சோறுகளா?
மெல்ல மெல்ல இறங்கினேன். அன்னை கண்ணிலிருந்து மறைந்தாள். மாச்சாபுச்சாரேவில் ஓய்வு. மீண்டும் டியூராலியை நோக்கிப் பயணம். ஆபத்தான பாலங்கள், பனி சறுக்கிய வழித்தடங்கள், கற்படிக்கட்டுகள் என ஒரே நாளில் 900 மீட்டர் நடக்க வேண்டியிருந்தது.
இறக்கங்களில் என்னால் கைகளை ஊன்ற முடியவில்லை. சுரேஷ் இடது கையால் மட்டும் ஊன்றிவரச் சொன்னார். பனிப் பாறைகளிலும் கற்பாதைகளிலும் அது சாத்தியமானதல்ல. எனக்கு ஹெலிகாப்டரில் திரும்பும் எண்ணம் இருந்தது. அதன் விலை அதிகம் என்பதால் சுரேஷ் கொஞ்சம் தயங்கினார். அத்தொகை தனி ஒருவனாக எனக்குச் சிரமம் கொடுக்குமென நினைத்தார். எனக்குத் தன்னூக்கம் கொடுத்தபடியே உடன் நடந்து வந்தார்.
ஒரு குழுவின் தலைவராக அவர் எண்ணுவது முறையென்றே தோன்றியது. ஆனால் எனக்கு வேறு நியாயங்கள் இருந்தன.
நான் சுரேஷிடம் கூறினேன். “நீங்கள் ஒரு பயணி. உங்கள் பயண அனுபவம் குறித்து ஒரு நூலை வெளியிடவும் போகிறீர்கள். ஒருவேளை இந்த நூல் தயாரிப்பால் உங்கள் பயணம் சில மாதங்கள் கெடுகிறது என்றால் நீங்கள் நூல் எழுத முக்கியத்துவம் தருவீர்களா?”
சுரேஷ் “நிச்சயமாக இல்லை” என்றார்.
“நான் ஒரு பயணியல்ல; எழுத்தாளன். இந்த பயணம் இப்படியே தொடர்ந்தால் என்னால் சில வாரங்கள் எழுத முடியாமல் போகலாம். அப்படி ஒரு துன்பத்தை நான் முன்னர் அனுபவித்ததுண்டு,” என்றேன்.
சுரேஷுக்கு நான் சொல்வது புரிந்தது. நுண்ணுணர்ச்சி கொண்டவர்களுக்கு மட்டுமே நான் சொல்வது புரியும். அவர்களுடன் மட்டுமே நான் அந்தரங்கமாக உரையாட விரும்புகிறேன்.
“சரி! நீங்கள் சொல்வது,” என்றார்.
“நீங்கள் பயணத்தினால் ஒரு நூலை எழுதியுள்ளீர்கள்; நான் எழுதுவதன் பொருட்டே பயணம் மேற்கொள்கிறேன். எழுத்தே எனக்கு முதன்மையானது,” என்றேன்.
அன்னபூர்ணாவிலேயே ஹெலிகாப்டரில் செல்லும் திட்டம் இருந்தாலும் போதுமான ஆட்கள் இல்லாததால் அத்திட்டம் நிறைவேறவில்லை. ஐவர் இருந்தால் ஹெலிகாப்டரின் தொகையைப் பகிர்ந்துகொள்ளலாம். டியூராலியில் அதற்கு சாத்தியப்பட்டது. அதுவும் இல்லாவிட்டால் டோவனில் கோவேறு கழுதையை வாடகைக்கு எடுத்தாவது புறப்பட்டிருப்பேன்.
ஹெலிகாப்டர் மறுநாள் காலையில் வரும் என்பதால் அன்றிரவு டியூராலியிலேயே தங்கினோம். அது ஒரு இனிய தினம். இறுக்கங்கள் களைந்து நிதானமாக இருந்தேன். அந்தத் தினங்களில்தான் என்னால் கந்தா அவர்களின் ஆளுமையை அறிந்துகொள்ள முடிந்தது.
கந்தா ‘யாத்ரா’ எனும் கூட்டுறவுக் கழகத்தின் துணைத்தலைவர். முதல் நாளே விமான நிலையத்தில் அது குறித்து பேசினார். அவர் குரலில் அதிகாரத் தொணி இருந்ததால் நான் மேற்கொண்டு உரையாடவில்லை. அது என் இயல்பு.
ஒருமுறை துணையமைச்சரின் உதவியாளர் ஒருவர் ‘யாழ் பதிப்பக’ நூல்களைச் சில லட்சம் ரிங்கிட்டுக்கு ஆர்டர் செய்தார். ஆட்சி மாறவிருந்த பதற்றம் அவருக்கு. ஏற்கெனவே அவ்வமைச்சர் இரண்டு ஆண்டுகள் என்னிடம் சில ஆயிரங்களுக்கு நூல்கள் வாங்கியிருந்தார். நெருக்கமானவர்தான். மலேசியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்காக அவர் ஆர்டர் செய்தபோது, என்னிடம் இருந்த ஒரு நூல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. எனவே அதைக் கொடுப்பதில் உள்ள தயக்கத்தை அவர் உதவியாளரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கைப்பேசியை வாங்கியவர் என்னைத் தகாத வார்த்தையில் திட்டி “கேட்ட நூல்களைக் கொடு” என்றார்.
எனக்கு கொதித்தது. தவறான நூல்களை அவர் மாணவர்களுக்குத் தந்துவிடக்கூடாது என்றே நான் தயங்கினேன். என் நோக்கத்தைச் சொல்லி “தகாத வார்த்தையில் திட்டியற்காக அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்றேன். அவர் மீண்டும் அழைத்தார். ஆங்கிலத்தில் வேகமாகப் பேசினார். அது ஏசியதாகவும் இருக்கலாம். நான் ஆங்கிலத்தில் மந்தம். அவ்வளவு வேகமான ஆங்கிலத்தில் என்னால் பதில் சொல்ல முடியாது என்பதால் “என்னிடம் மன்னிப்புக் கேட்காதவரை இது குறித்துப் பேச வேண்டாம்,” என கைப்பேசியை வைத்தேன்.
பல மணி நேரம் கடந்து மாலையில் அவர் இருந்த இக்கட்டான நிலையைச் சொல்லி மன்னிப்பு போன்ற ஒரு வாட்சப் வந்தது.
நான் மேற்கொண்டு நூல் விற்பனை குறித்து அவரிடம் பேசவில்லை. பேசியிருந்தால் சில லட்சம் சம்பாதித்திருக்கலாம். அதற்கு பிறகு என்னால் எழுத முடியாது. பணத்திடமும் அதிகாரத்திடமும் தலை குனியும் எழுத்தாளனின் எழுத்தில் ஒளி ஒருபோதும் உண்டாகாது. பாரதியும் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் எனக்குச் சொல்லிக்கொடுத்தது அதைத்தான்.
கந்தா அவர்கள் பொருளியல் ஆசிரியராக இருந்தவர். மிகச்சிறந்த ஆசிரியர் என்பதை அவர் பேச்சிலிருந்து அறிந்துகொண்டேன். அவர் பேசும் தொணியைக் கொண்டு தவறாகக் கணித்திருந்தேன். அவரிடம் பேசப்பேச சமூகத்தின் மீது அவர் வைத்துள்ள அக்கறை தெரிந்தது. ‘யாத்ரா’ மூலம் ஆசிரியர்களுக்கு காசி உள்ளிட்ட இடங்களுக்கு மலிவாக பயண ஏற்பாடுகளைச் செய்து வருவது தெரிந்தபோது முக்கியமான திட்டம் எனத் தோன்றியது. இந்தப் பயணத்திற்குப் பின்னர் நான் சென்று சந்திக்கக் கூடிய ஒருவராக அவரை நினைத்துக்கொண்டேன்.
எனக்கு வணிக ரீதியான சந்திப்புகளில் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் ஒருவருடன் இணைந்து சமுதாயத்திற்கு நன்மை தரும் ஏதும் செய்ய முடியுமென்றால் அதில் எனக்குச் சம்மதமே.
மறுநாள் காலையில் ஹெலிகாப்டர் வந்தது. வாழ்வில் முதன்முறையாக அதில் ஏறும் உற்சாகம். முன் சீட்டில் இணை கேப்டன் போல அமர்ந்துகொண்டேன். இரண்டு நாட்கள் கடக்க வேண்டிய மலையை இருபது நிமிடங்களில் கடந்து போக்கராவில் சேர்த்தது. பயண ஏற்பாட்டுக் குழுவினரால் விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
அறையில் நுழைந்தேன். இரண்டு நாட்களுக்குப் பின்னர் உடலில் சுடுநீர் பட்டபோது உள்ளமெல்லாம் மலர்ந்தது.
புத்தர் பிறந்த லும்பினி செல்லும் எண்ணம் புத்தெழுச்சியை ஏற்படுத்தியது.
தொடரும்