இன்னொரு குழுவினர் வரும் வரைக்கும் பொக்கராவைச் சுற்ற போதுமான அவகாசம் இருந்தது. தங்கும் விடுதியிலேயே கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு முதலில் சென்ற இடம் பும்டிகோட்டில் உள்ள சிவன் ஆலயம். நேபாளத்திவ் கைலாசநாத் மகாதேவ் சிலைக்குப் பிறகு இரண்டாவது மிக உயரமான சிவன் சிலை இங்குதான் உள்ளது. சிலை 51 அடி உயரம். சிவன் அமர்ந்திருக்கும் வெள்ளை ஸ்தூபி 57 அடி உயரம். ஆக 108 அடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சி தரும் சிவனைக் காண ஆசைப்பட்டது தவறாகிப் போனது.
அந்தக் கோயில் 1,500 மீட்டர் அமைந்துள்ளது. கார் திடீரென பாதியிலேயே நின்றது. சாலை போடும் பணிகள் நடப்பதால் மலைப் படிக்கட்டுகளில் ஏறித்தான் செல்ல வேண்டும் என்றபோது அன்னபூர்ணா நினைவு வந்தது. ஒரு கண்டத்தில் இருந்து தப்பினால் இன்னொரு கண்டம் பிடித்திழுக்கிறது என ஏற ஆரம்பித்தேன். ஏறக்குறைய இருபது நிமிட படி ஏற்றம். குறுகலான படிக்கட்டுகள். வேகமாகக் கடந்து செல்ல முடியாத படிக்கு ஒரு இந்தி குடும்பம் குறுக்காக நடந்துகொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தில் வயதான அம்மா நடக்க முடியாமல் படியேறினார். நல்ல தாட்டியான பெண். நானே அவரை முந்த முடியாமல் நொந்து கிடந்தபோது அவர் மகள் இடையிடையே அனைவரையும் வரிசையாக நிறுத்தி வைத்து செல்ஃபி எடுத்தபோது எரிச்சலானது. படியேற கஷ்டப்பட்ட அம்மாவும் புகைப்படம் பிடிக்கும்போது மட்டும் சிரித்து வைத்தார். எனக்கு அன்னபூர்ணா நினைவு வந்தது. நாங்களும் அப்படித்தான் நொந்து நடந்தபோது யாராவது படம்பிடிக்க வந்தால் ‘ஈ’ என இளித்து வைத்தோம்.
ஒருவழியாக உச்சியை அடைந்தபோது சிவன் வரவேற்றார். பிரம்மாண்டமான சிவன் சிலையைக் காண்பது அதுவே முதன் முறை. எனக்கு தென்னரசுவின் நினைவு வந்தது. எனக்குத் தெரிந்த ஒரே தீவிர சிவபக்தர் அவர். அங்கிருந்து ‘வீடியோ கால்’ செய்து சிவனைக் காட்டினேன். தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்தார்.
சிலை வளாகத்தில் 108 சிவலிங்கங்கள் இருந்தன. பக்தர்கள் அதன் அடிவாரத்தில் சுற்றி வரும்போது ஒவ்வொரு சிவலிங்கமாகத் தொட்டு வணங்கினர். எல்லோருக்கும் கடவுளைத் தொடுவதில் அவ்வளவு விருப்பம் உள்ளது. அதன் மூலம் எளிய நிம்மதி கிடைத்து விடுகிறது. சடங்குகள் வெல்வதும் அதனால்தான். அங்கு அமையப்பெற்றுள்ள பழமையான சிறிய சிவன் ஆலயத்திலும் லிங்கத்தை தொட்டு வழிபட முடியும். இந்தியாவின் வட நாடுகளில் இந்த வழமை உண்டு.
கோயிலில் நின்றபடி அன்னபூர்ணாவையும் மச்சாபுச்சாரேவையும் அருகருகே காண முடிந்தது. அதுதான் சிவசக்தி தரிசனம். யாரும் அதை கண்டுகொண்டதாய் தெரியவில்லை.
அருகிலேயே தொட்டு வழிப்படக்கூடிய சிவன், சற்று தள்ளி தொடவே முடியாத பிரம்மாண்ட சிவன். நம் ஆளுள்ளத்தில் அன்பால் மட்டுமே நிறைந்த சிவன் ஒருவர் இருப்பதையும் அறிந்தால் வாழ்க்கை மேலும் அர்த்தப்படுமெனத் தோன்றியது.
அங்கிருந்து மீண்டும் இறங்கி வண்டியைச் சேர்ந்தபோது வெயில் கொழுத்தியது. தொடர்ந்து பொக்கரா சாந்தி ஸ்தூபிக்குச் செல்லலாம் என்றேன்.
ஆனந்தா மலையில், உலக அமைதிக்காக நிறுவப்பட்ட பௌத்த ஸ்தூபி இது. பகோடா வடிவமைப்பில் கட்டப்பட்டது. நிசிதாத்சு பியூஜியின் (Nichidatsu Fuji) ஆலோசனையின் படி, மொரியோகா சோனின் என்ற பௌத்த பிக்கு, உள்ளூர் மக்களின் உதவியுடன், பொக்காராவில் உலக அமைதிக்கான அந்த ஸ்தூபியை நிறுவினார்.
உலக அமைதியை வேண்டி, இத்தூபி பொக்காராவில் நிறுவப்பட்டதால், இதனை பொக்காரா உலக அமைதிக்கான ஸ்தூபி என்றே அறிவிப்புப் பலகையில் காண முடிந்தது. அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தபடியே நடந்தேன்.
இந்த ஸ்தூபியைக் காணவும் பத்து நிமிடம் படியேற வேண்டியிருந்தது. வழியில் சிவப்பு மணிகளால் பின்னப்பட்ட தாராவின் முகம் ஒன்று கண்ணில் பட அதை பேரம் பேசி வாங்கவே பெரும்பாடு ஆனது. கடைக்காரியிடம் நான் கெஞ்ச விலையைக் குறைக்க முடியாது என அவளும் என்னிடம் கெஞ்ச… ஒரே உணர்ச்சி நாடகமாகிவிட்டது.
ஒருவழியாக ஏறி முடித்தபோது 115 அடி உயரம் 344 அடி சுற்றளவுடன், வெள்ளை நிறத்தில் அமைந்திருந்த ஸ்தூபி வெயிலில் தகித்துக்கொண்டிருந்தது. அருகில் சென்றேன். குறைவான சுற்றுலா பயணிகளுடன் அமைதியாக இருந்தது. ஜப்பான், இலங்கை, தாய்லாந்து மற்றும் லும்பினி ஆகிய நான்கு இடங்களிலிருந்து பெறப்பட்ட புத்தரின் நான்கு மாதிரி உருவச் சிற்பங்கள் நான்கு முனைகளில் நிறுவப்பட்டிருந்தன. அதற்கு மேல் வெயில் கொடுமை தாங்காததால் மீண்டும் விடுதிக்கு வந்தேன். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்பட்டது.
மறுநாள் காலை 12 மணிக்கு அன்னபூர்ணாவிலிருந்து வெற்றிகரமாக அனைவரும் வந்து சேர்ந்தனர். களைப்பு இருந்தாலும் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியும் உற்சாகமும் துள்ளியது.
நான் அதிகம் பேசியிருக்காவிட்டாலும் சண்முகநாதன், ஜெகதீசன் ஆகியோரின் வருகை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவர்கள் இருப்பு ஒரு சூழலை நிறைவாக ஆக்கக் கூடியதாக உணர்ந்தேன். சண்முகநாதன் லாபிஸ் பகுதியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் 34 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். நிதானமானவர். பேச்சிலும் செயலிலும் முதிர்ச்சி வெளிப்பட்டபடி இருந்தது. ஜெகதீசன் பொறியியலாளராக கூலிம் கெடாவில் பணியாற்றுகிறார். நகைச்சுவை உணர்வுகொண்டவர். துருதுருப்பானவர். இருவரும் சம்பந்திகள் என்பதுதான் வேடிக்கை. அன்னபூர்ணா மலையேற்றத்துக்கு சம்பந்திகள் இருவர் வந்திருப்பது அச்சூழலையே கலகலப்பாக்கியது. ஜெகதீசனின் வேடிக்கையான பேச்சையும் சண்முகநாதனின் நிதானமான அணுகல்களையும் நான் அதிகமே ரசித்தேன். அவர்களை மீண்டும் சந்தித்தது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
அரவின் சோர்ந்து போயிருந்தார். ஆனால் ஏறும்போதும் இறங்கும்போதும் தன் உடலின் ஆற்றலை தனக்குத்தானே நிரூபித்ததில் உற்சாகமாக இருந்தார். எனக்கும் அவரை எண்ணிப் பெருமையாக இருந்தது.
அன்று இரவு உதவியாளர்கள் பளுதூக்கிகளுடனான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பளுதூக்கிகளுக்கு தங்களின் நன்றியைச் சொல்லும் வகையில் சிறிய தொகை ஒன்றை வழங்கினர். இதுதவிர பதினெட்டு பேரும் வழங்கிய தொகையும் அவர்களுக்குப் பகிர்ந்து தரப்பட்டது. அடுத்த வரப்போகும் மூன்று மாத பனிக்காலத்தில் வேலையின்றி வீட்டில் இருக்கப்போகும் அவர்களுக்கு இந்தத் தொகையெல்லாம் மிகவும் சொற்பம் என்றே தோன்றியது.
நன்றி நவிலும் விருந்துக்கு வந்த கோபாலிடம் நான் எழுதிய கட்டுரையை நேபாள மொழியில் மாற்றி வாசிக்கக் கொடுத்தேன். அவர் கண்கலங்கினார். தன் மகனிடம் காட்டுவேன் என்றார். அவருடைய மற்ற நண்பர்களும் என் வலைத்தளத்தை நேபாள மொழியில் வாசிக்கக் கற்றுக்கொண்டனர். இனி நேபாளத்தில் வல்லினத்திற்கு ஒரு கிளை திறந்துவிடலாம் என நினைத்துக்கொண்டேன்.
நன்றி நவிலும் நிகழ்ச்சியில் அனைவரும் உரையாற்றும்படி கோரப்பட்டது. நான் இரண்டு வரிகளில் முடித்துக்கொண்டேன். என் ஆங்கிலப்புலமை அவ்வளவுதான்.
அந்த நன்றி நவிழும் நிகழ்ச்சியில் சுப்பிரமணியம் அவர்களின் உரை என்னை வெகுவாகக் கவர்ந்தது. சுப்பிரமணியம் தமிழ் அறவாரியத்தின் துணைத்தலைவர்.
இரண்டு முறை இதயத்தில் ‘பைபாஸ்’ செய்தவர். இன்னும் ஓர் அடைப்பு உள்ளது என்றார். அந்த நிலையிலேயே அவர் மலையை ஏறி இருந்தார். இந்த மலையேற்றம் முழுவதும் அவரது நிதானமும் எளிமையாகப் பழகும் விதமும் மலர்ந்த முகமும் ஒரு போதும் மாறியதில்லை. சொல்லப்போனால் மலை ஏறியவர்களில் முதல் ஐவரில் ஒருவர் அவர். எது குறித்தும் புகார்கள் இல்லாத நல்ல மனிதர் என்றே நினைவில் பதிந்திருந்தார்.
விருந்து தொடந்து கொண்டிருந்தபோதே நான் இரவு பத்து மணிக்கு அறையில் புகுந்தேன். பயணம் குறித்து எழுத வேண்டியிருந்தது.
மறுநாள் காலையிலேயே நண்பர்களுடன் தால் பராஹி கோயிலுக்குச் சென்றேன். அதை ஏரி கோயில் என்றும் அழைக்கின்றனர். இந்த கோயில் ஃபெவா ஏரியின் நடுவில் ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு சிறிய தீவில் அமைந்திருப்பதால், படகில் செல்வதுதான் ஒரே வழி.
நான் படகில் செல்லும்போது காசியின் அதிகாலைத்தன்மையை உணர்ந்தேன். படித்துறையும் படகுகளும் அதையே உணர்த்தின. மேலும் ஃபெவா ஏரி நேபாளத்தில் இரண்டாவது பெரிய ஏரி என்பதால் அதில் பயணிப்பது உற்சாகம் கொடுத்தது.
வாராஹி தேவியை வழிபட இந்து, பௌத்த பக்தர்கள் வருகின்றனர் . மன்னர் குல்மந்தன் ஷா தனது கனவை நிறைவேற்றும் வகையில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
நேபாள மொழியில் வராஹி என்றால் ‘பன்றி’ என்று பொருள். துர்கா தேவி தீங்கு விளைவிக்கும் அசுரர்களைக் கொல்ல இந்த வடிவத்தை எடுத்தாள். அவளது தந்தங்களுடன், அவள் தீய பேய்கள் அனைத்தையும் போரிட்டு கொன்றதாக நம்பப்படுகிறது. மோதலுக்குப் பிறகு அவள் போக்ரா பள்ளத்தாக்குக்கு விஜயம் செய்ததாகவும் அவ்வூர் மிகவும் அழகாக இருப்பதைக் கண்டு அவள் அங்கு வசிக்க விரும்பினாள்; அங்கேயே நிலைகொண்டாள்.
படகில் செல்ல 20 நிமிடம்; வழிபட 20 நிமிடம்; மீண்டும் திரும்ப 20 நிமிடமென ஒரு மணி நேரம் பயணத்தில் முடிந்தது. இதையெல்லாம் காலை 7க்குள்ளாகவே முடித்தோம். நேபாளத்தில் 5 மணிக்கு விடிந்து 6 மணிக்கு இருட்டிவிடும் என்பதால் சிக்கலிருக்கவில்லை.
ஏழரை மணிக்கு எங்கள் குழு மூன்றாகப் பிரிந்தது. முதல் குழு மலேசியா திரும்பினர். இரண்டாவது குழு பொக்கராவில் சுற்றுலா செல்லத் திட்டமிட்டனர். மூன்றாவது குழு லும்பினி செல்ல ஆயத்தமானது. அதில் மொத்தம் எட்டு பேர். நானும் அதில் அடக்கம்.
பொக்கராவில் இருந்து லும்பினிக்கு ஏறக்குறைய எட்டு மணி நேரப் பயணம். மனதைத் திடப்படுத்திக்கொண்டு பயணத்துக்கு ஆயத்தமானோம்.
தொடரும்