குமாரிகள் கோட்டம் – 14

டேவிஸ் அருவி

மலைகளினூடாகவே எங்கள் பயணம் தொடங்கியது. எனவே அட்டகாசமான வளைவுப்பாதைகள். அரவினுக்கு வளைவுப்பாதை ஒத்துவரவில்லை. இரண்டு முறை வாந்தியெடுத்தார். வேனிலும் பையை வைத்துக்கொண்டு வாந்தி எடுத்தபடியே வந்தார். இடையில் கோகிலாவும் சிவலட்சுமியும் கூட வாந்தியெடுத்தனர். சிவலட்சுமிதான் கழிப்பறையன்றி வேறு எங்குமே வாந்தியெடுக்க மாட்டேன் என உக்கிரமாகக் காத்திருந்தது படையப்பா நீலாம்பரியை நினைவூட்டியது.

காலையில் தொடங்கிய பயணம் மாலைவரை நீடிக்க பொக்கராவில் அமைந்திருந்த பும்டிகோட் சிவன் ஆலயத்துக்கும் ‘டேவிஸ்’ அருவிக்கும் சென்று வந்தது ஒரு காரணம். சிவன் ஆலயத்துக்கு நான் ஏற்கெனவே சென்றுவிட்டதால் வேனிலியே அமர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். திரும்பி வந்தபோது சுரேஷ் தொங்கிப்போயிருந்தார். “ஏம்பா அங்க போனா படியெல்லாம் ஏறிதான் போகனுமுன்னு ஒரு வார்த்த சொல்லக் கூடாதா?” என்றவரை பரிதாபமாகப் பார்த்தேன். முந்தைய நாள் போல இல்லாமல் வெயிலும் பக்தர்கள் நெரிசலும் அதிகம்மெனத் தெரிந்தபோது நல்லவேளையாக இரண்டாவது தரிசனத்திற்கு நான் போகவில்லை என்பது நிம்மதியாக இருந்தது.

அதன் பின்னர் டேவிஸ் அருவியைக் காணும் பொருட்டுதான் நான் வேனிலிருந்து இறங்கினேன். இந்த அருவிக்கு ‘டேவிஸ்’ எனப் பெயர் வர காரணம் உள்ளது. 1961 ஜூலை 31ஆம் தேதி ஒரு சுவிஸ் தம்பதியர் இந்த இடத்திற்கு வருகை தந்தனர். நீர் நிரம்பி வழிந்ததால், அருவியில் குளித்துக்கொண்டிருந்த  மனைவி மூழ்கி இறந்தார். மூன்று நாட்களுக்குப் பின்னரே, அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப்பெண்ணின் பெயரே டேவி.

இது கட்டுக்கதையென சொல்பவர்களும் உண்டு. தேவி என்ற வார்த்தையை நேபாளத்தில் பெண் தெய்வத்தைக் குறிப்பது. தேவி என்ற சொல்லே மருவி டேவிஸ் என ஆனது என்கிறார்கள்.

எது எப்படியாயினும் நான் பிறந்ததும் ஜூலை 31 என்பதால் அத்தினத்தில் இறந்த ஒரு பெண்ணின் ஆவிக்கும் எனக்கும் ஏதும் தொடர்பிருக்குமா எனும் சந்தேகமெல்லாம் எழுந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றேன். நுழைவு டிக்கெட் வாங்க வேண்டும்.

கணேஷ்

இந்தப் பயணம் முழுக்க எங்களுக்கு வழிகாட்டியாக கணேஷ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். தெளிவான ஆங்கிலத்தில் அனைத்தையும் விளக்கினார். அவர் விளக்கப்படி “இந்த அருவியில் உள்ள நீர் ஃபெவா ஏரியிலிருந்து வருகிறது. அருவியை இதற்கு முன்னர் மேலிருந்து கீழே வருவதைக் கண்டிருப்பீர்கள் இந்த அருவி உங்கள் கால்களுக்குக் கீழே இன்னும் ஆழமான பாதாளத்திற்குள் நுழையும்” என்றார்.

அப்படித்தான் இருந்தது.

ஆனால் நேபாளத்தில் பருவமழை உச்சத்தில் இருக்கும்போதுதான் அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்றனர். நீர் பாறைச் சரிவுகள் வழியாகக் கிழித்துக்கொண்டு ஒரு நிலத்தடி சுரங்கப்பாதையில் மறைந்தது. 500 அடி நீளம் கொண்ட அந்தச் சுரங்கம் 100 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்டது. நன்றாக கவனித்தால் பூமி பிளந்த வடிவம் தெரிவதை சுரேஷ் காட்டினார். அப்படித்தான் இருந்தது. இரு முனைகளின் நெளிவுகளின் வடிவங்களும் ஒன்றுடன் ஒன்றாகப் பொருந்தின.

லும்பினியைச் சென்றடைய தாமதமான காரணம் இந்த அருவியை ஒட்டி இருந்த  ஷாப்பிங் செய்யும் இடம்தான். பொருட்கள் மலிவாகக் கிடைத்தன. நான் கூட எனக்கு ஒரு கூர்க்கா சட்டை வாங்கினேன். அரவின் முதல் ஆளாக மலை ஏறியதால் பரிசாக ஒரு சட்டை வாங்கிக்கொடுத்தேன். எங்களை அழைத்துச் சென்றதால் சுரேஷுக்கும் ஒரு சட்டை.

ஆற அமரப் பொருட்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டதாலும் பயணம் தாமதித்தது. மாலை ஆறு மணிக்குச் சென்று சேர்ந்தபோது லும்பினி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முந்தைய நகரம்போல காட்சியளித்தது. எந்த முன்னேற்றமும் இல்லாத நகரம். சமீப காலமாக யூனெஸ்கோ மற்றும் ஜப்பானிய அறவாரியமும் இணைந்து செய்துள்ள சில மேம்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் தங்கிச்செல்ல விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

சுரேஷ் Pristine எனும் நிறுவனம் மூலம் இந்த மொத்தப் பயணத்தையும் திட்டமிட்டிருந்தார். அவர்களும் முறையாகவே ஒவ்வொன்றையும் ஏற்பாடு செய்தனர். குறிப்பாக எங்களுக்கு எடுக்கப்பட்ட விடுதிகளெல்லாம் மையமான இடத்திலேயே இருந்தது. லும்பினியில் எடுக்கப்பட்ட விடுதி ஆட்கள் புழங்காததால் மந்தமாகச் செயல்பட்டது. மொத்த விடுதியில் நாங்கள் எட்டுப் பேர் மட்டுமே இருந்தோம். விடுதியில் மின்தூக்கி வசதியில்லை.

விடுதி நிர்வாகிகளின் பார்வை ‘வந்துட்டீங்கள்ள இனிமே நடக்குறத பாருங்க’ எனச் சொல்வதாகவே இருந்தது. அதில் ஒருவன் முதல் மாடியிலிருந்து நடக்க ஆரம்பித்தால் மூன்றாவது மாடிக்கு நான்காவது நாளில் வந்து சேரும் வேகத்தில் செயல்பட்டான்.

இரவு உணவை முடிக்க வெளியே சென்றோம். வேறொரு காலத்தில் இருப்பதாகத் தோன்றியது. சிறுவர்கள் சாலைகளில் இறங்கி பந்தை உதைத்து விளையாடினர். எப்போதாவது ஒருமுறை கார் கடந்து சென்றது. யாரும் எதற்கும் அவசரமில்லாமல் செயல்பட்டனர். சத்தமென பெரிதாக எதுவும் கேட்கவில்லை. சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த மினி திரையரங்கம் ஒன்றுக்குச் சென்றோம். இரவு 9 மணி வரை திறந்து வைத்திருக்கிறார்கள். புத்தரின் வரலாற்றை ஒரு மணிநேரம் ஒளிபரப்புவார்கள் என அங்குப் பொறுப்பில் இருந்த சிறுவன் கூறினான். ஐந்தாம் ஆண்டு மாணவன். வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தான். கேட்ட கேள்விகளுக்கு கண்டிப்புடன் பதில் சொன்னான். ‘என்னை யாரும் ஏமாத்திட முடியாது’ என்பதான தோரணை இருந்தது. நல்ல மொழுமொழுப்புடன் இருந்தான். திரையரங்கைத் திறந்து பார்த்தேன். அதை அவன் விரும்பவில்லை. ஏதும் சூழ்ச்சி செய்கிறேனா எனக் கண்காணித்தான். அரங்கம் முழுவதும் தூசு படிந்திருந்தது. உள்ளே ஒரு மணி நேரம் அமர்ந்தால் சளி பிடிக்கும். அதற்கு 500 ரூபாய் செலுத்தி பார்க்க வேண்டுமா என விடைபெற்றோம்.

விடுதிக்குச் சென்ற பிறகுதான் தலைவலி தொடங்கியது. லும்பினி உஷ்ண நிலம். பகலில் 41 டிகிரி வரை போகும். இரவிலும் அதன் கொதிப்பு இருந்தது. ஆனால் எங்கள் அறையின் குளிர்சாதனம் இயங்கவில்லை. சுரேஷ் எங்களுக்காக அறையை மாற்றிக்கொடுக்க முனைந்த போதுதான் அந்த ‘வேகமான’ ஊழியனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. செருப்பை தேய்த்தபடியே நடந்துவந்து குளிர்சாதனம் இல்லையென உறுதி செய்து இன்னொரு அறைச் சாவியை எடுத்து வந்தான். அந்த அறையின் குளிர் சாதனத்திலும் காற்று மட்டுமே வந்ததால் மாற்றக் கேட்டோம். மீண்டும் செருப்பை தேய்த்தபடி நடந்து சென்றான்.

புதிய அறை கொஞ்ச நேரம் குளிர்ந்தது. பின்னர் அதுவும் உஷ்ணமாகத் தெரியவும் சுரேஷிடம் கூறினேன். அவ்விரவில் அவரைத் தொந்தரவு செய்ய கஷ்டமாகத்தான் இருந்தது. சுரேஷ் மீண்டும் அந்த ஊழியரைக் காணச் சென்றபோது விடுதியின் ஷட்டர் அடைக்கப்பட்டு விடுதியே காலியாக இருந்துள்ளது.

வேறு வழியில்லை. சுரேஷ் தனது அறையையே எங்களுக்குத் தாரை வார்த்தார்.

அன்றிரவு யாருமே இல்லாத அந்த மர்ம விடுதியில் நாங்கள் எட்டு பேர் மட்டும் தூங்கினோம்.

தொடரும்

(Visited 134 times, 1 visits today)