குமாரிகளின் கோட்டம் – 15

லும்பினி நுழைவாயிலில்

காலையில் உணவுண்டு தயாரானபிறகு புத்தர் பிறந்த இடத்தை நோக்கி நடந்தே சென்றோம். விடுதியின் அருகில்தான் மாயாதேவி கோயில் அமைந்திருந்தது. காலையிலேயே லும்பினி சுடும் நிலமாக உருவெடுத்திருந்தது.

லும்பினி இந்திய எல்லையில் அமைந்துள்ளது என்பதை வரைப்படத்தைப் பார்த்துத்தான் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. பொக்கராவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கட்டடங்களும் கடைகளும் முகங்களுமாக லும்பினி வெளிப்பட்டது. காத்மண்டுவிலும் பொக்கராவிலும் காணாத ஆட்டோக்கள் லும்பினியை ஆக்கிரமித்திருந்தன. வட இந்திய மக்கள் அதிகம் தென்பட்டனர். முதன்முறையாகச் சட்டையைப் பிடித்து இழுக்கும் பிச்சைக்காரர்களை அங்குதான் பார்த்தோம்.

கௌதம புத்தர் பிறந்த நிலத்தில் நுழைகிறோம் என்பதே நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. லும்பினி 1997இல் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. புத்த மதத்தினரின் புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்று இந்த லும்பினி. புத்தர் தனது முதல் போதனையான பௌத்த தம்மம் என்றழைக்கப்பட்ட ஒழுக்கச் சட்டத்தை தனது ஐந்து சீடர்களுக்கு போதித்த சாரநாத்துக்கு 2017இல் சென்றிருக்கிறேன். அதன் பின்னர் இப்போது லும்பினி. சாரநாத்துக்கோ லும்பினிக்கோ செல்ல வேண்டுமென நான் திட்டமிடவில்லை. சொல்லப்போனால் என் பயண விருப்பங்களில் இவ்விடங்கள் இருந்ததில்லை. வேறொரு பயணத்தை முடிவெடுத்தபோது இவை இயல்பாக இணைந்துகொண்டன. இது என் வாழ்வில் நிகழ்ந்த ஆச்சரியம். நாம் எப்படி ஓர் இடத்திற்கு அழைக்கப்படுகிறோம் என்பதே விந்தையானது.

பௌத்தர்கள் நான்கு இடங்களை புனிதத் தலங்களாகக் கருதுகின்றனர். அதில் சாரநாத்தையும் லும்பினியையும் தவிர புத்தர் தன் இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு வழங்கிய ‘வைசாலி’யும், அவர் ஞானம்பெற்ற இடமான ‘புத்த கயா’வும் அடங்கும். ஒருவேளை இவ்விரு இடங்களுக்கும் காலம் அனுமதித்தால் செல்லக்கூடும். பார்ப்போம்.

மாயாதேவி கோயிலினுள்

நாங்கள் முதலில் மாயாதேவி கோயிலில் நுழைந்தோம். திரு. கணேஷ் வழிகாட்டியாக எங்களுக்கு தொடர்ந்து விளக்கம் கொடுத்தபடி இருந்தார். அவரே பிரிஸ்டின் நிறுவத்தின் தோற்றுனர் என்பது அன்றுதான் தெரியவந்தது. எளிய சிறிய உருவம், அழுத்தமான முகம். சரளமான ஆங்கிலத்தில் பேசினார்.

புத்தர் பிறந்த இடத்தைச் சுற்றி ஒரு கோட்டைபோல அமைத்திருந்தனர். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. கொஞ்சம் நேரம் அங்கு அமர்ந்திருந்தோம். பின்னர் சுற்றி வந்து மாயாதேவி சித்தார்த்தனை கிமு 566இல் பெற்றெடுத்த பகுதிக்குள் நுழைந்தோம். அவ்விடத்தை கண்ணாடியால் மூடி பாதுகாத்து வைத்திருந்தனர். உள்ளே இளம் பச்சை நிறத்திலான ஒரு கல் தெரிந்தது. அதுதான் சித்தார்த்தர் பிறந்த இடம் என்பது நம்பிக்கை.

அந்த இடத்தை முறையாகக் காண முடியாதபடிக்கு ரூபாய் நோட்டுகளைப் போட்டு மூடியிருந்தனர் சுற்றுலாவாசிகள். அருகில்தான் உண்டியல் இருந்தது. ஆனால் நோட்டுகளை வீசி புத்தர் பிறந்ததாக நம்பப்படும் பகுதியை மூடி மறைப்பதில்தான் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது. அது குறித்து பாதுகாப்பில் இருக்கும் பொறுப்பாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

இந்த மடத்தனத்தைப் பார்த்து பார்த்துச் சலித்துவிட்டது. புத்தர் போதித்த பேருண்மைகள் குறித்தும் அறிந்துகொள்வதில் அக்கறை இல்லாத அரைவேக்காடுகள் தாங்கள் மிகப்பெரிய சக்தியாய் நம்பும் பணத்தை வீசியெறிவதன் வழி எளிய நிறைவை அடைகின்றனர். அடைவதற்கு சவாலான மெய்யியலை எளிய உலகியல் சாதனங்களைக் கைவிடுவதன் மூலம் சமன்செய்வதாக நினைக்கின்றனர். அதில் ஒரு அடிமுட்டாள் வாழைப்பழத்தை பக்கச் சுவரில் செருகி வைத்திருந்தான். அவ்விடம் வரலாற்று சின்னம் என்பதில் எந்த கவனமும் இல்லை. அவனுக்கு வாழைப்பழம்தான் உலகில் மகத்தான உடமைபோல.
நான் முதல் முறை சென்று பார்த்து நிறைவடையாமல் மீண்டும் இன்னொரு முறை வரிசையில் நின்றேன். அவ்விடத்தை நன்கு மனதில் பதித்துக்கொள்ள முயன்றேன்.

புஷ்கர்னி ஏரி

லும்பினியில், மாயாதேவி கோயிலைத் தவிர புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளது. இவ்வேரியிலேயே சித்தார்த்தரைப் பெற்றெடுக்குமுன் மாயாதேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதல் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றதாக நம்பிக்கை உண்டு. ஏரியில் சில ஆமைகள் நீந்திக்கொண்டிருந்தன. கைகளை அலையவிட்டேன். பாசி நிறைந்த குளம்.

கிமு 249இல் அசோகனால் இவ்விடம் புத்தர் பிறந்த இடமாக அடையாளம் காணப்பட்டது. அதற்கு முன்னர் இந்த ஊர் வேறு பெயரால் அறியப்பட்டது. பௌத்த நூல்களின்படி மாயாதேவி கபிலவஸ்துவில் இருந்து தனது சொந்த நகரமான தேவதாஹாவிற்கு பிரசவத்திற்காகப் பயணித்தபோது லும்பினி தோட்டத்தில் ஓய்வெடுத்தார். அப்போது அவருக்குப் பிரசவவலி ஏற்பட்டது. சால மரத்தின் அடியில் தன் மகனைப் பெற்றெடுத்தார். அருகில் உள்ள குளத்தில் அவனைக் குளிப்பாட்டினார். கபிலவஸ்துவுக்குத் திரும்பிய அவர் ஏழு நாட்களில் மரணமடைந்தார்.

லும்பினியிலுள்ள அசோகரின் தூண்

மாயாதேவி ஆலயத்திற்கு அருகே அசோகப் பேரரசர் எழுப்பிய பெருந்தூண் (இதை சமஸ்கிருதத்தில் ஸ்தூபி என்பார்கள்) இது புத்தர் பிறந்த இடம் என்பதற்கான முதல் கல்வெட்டு ஆதாரமாக உள்ளது. இந்தத் தூணை கி.மு. 249இல் அசோகர் நிறுவியுள்ளார். கிமு 269 முதல் கிமு 232 வரை இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சிசெய்துள்ள மௌரியப் பேரரசரான அசோகர், தமது பேரரசெங்கும் ஏராளமான பெருந்தூண்களை நிறுவியுள்ளார். அவற்றில் தற்போது 19 தூண்கள் மட்டுமே உள்ளன. சராசரியாக 40-50 அடி உயரமும் 50 டன் எடையும் கொண்டுள்ள அத்தூண்களில் ஒன்றுதான் லும்பினியில் இருப்பது.

கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவிய அசோகர், புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்யும் முயற்சிகள் மேற்கொண்டார். விகாரைகள் கட்டினார். அந்த வகையின் புத்தரின் சிறப்பைக் கூறும் தூணாக இது உள்ளது. ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்கும் முந்திய இந்த அரிய கலைச்செல்வம், குப்பைக்கூளமாக காட்சியளித்தது எரிச்சலூட்டியது. இங்கும் அதே கதைதான். சுற்றிலும் ஆளுயுரக் கம்பி வேலி அடைக்கப்பட்டுள்ளது. அதற்குள் சோற்றையும் துணியையும் சில்லறைகளையும் வீசியெறிந்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளிலும் தட்டுகளிலும் வைக்கப்பட்டிருந்த சோறு கீழே சிதறி நாற்றம் எடுத்தது. குப்பை போடுவதுகுறித்து எந்த அதிகாரியும் கண்டுகொள்வதாக இல்லை. அங்கே இருந்த அறிவிப்பில் எழுதப்பட்டிருப்பதையோ, தூணில் காணப்படும் எழுத்துகளையோ நின்று பார்க்க முடியாத அளவுக்கு அந்த இடத்தின் அசுத்தம் அசூசையைத் தந்தது.

அங்கு ஓர் அரச மரம் இருந்தது. புத்தர் அதில் அமர்ந்து தியானம் செய்வார் எனும் கட்டுக்கதைகளெல்லாம் அங்கு உலாவிக்கொண்டிருந்தன. (அரச மரமே சமஸ்கிருதத்தில் போதி மரம்) அரச மரத்தைச் சுற்றிலும் பௌத்த, இந்து துறவிகளும் காவி உடையணிந்த சாமியார்களும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரம் அங்கு ஓய்வெடுத்தோம். அங்கு அமர்ந்தபடியே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகள்போல மாதிரிக்கு உருவாக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். வெயில் மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருந்தது.

தொடர்ந்து பல்வேறு நாட்டு புத்த நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பௌத்த மடாலயங்களைப் பார்வையிட்டோம். ஒவ்வொரு நாட்டிலும் பௌத்தம் எவ்வாறு அணுகப்படுகிறது என்பதற்கான பெருமுயற்சி அது. புத்தருக்கு இந்திய நிலத்துடன் நெருங்கிய தொடர்பிருப்பதால் முதலில் அங்குச் சென்று பார்க்கலாம் என முடிவு. கடும் மனச்சோர்வை ஏற்படுத்தியதை தவிர அவ்விடம் வேறொன்றையும் அளிக்கவில்லை.


ஜெர்மன் மடாலயமே அங்கு ஆகச்சிறந்தது எனச் சொல்லப்பட்டதால் அதை சென்று பார்வையிட்டோம். அற்புதமான தங்க்கா ஓவியங்கள் மண்டலா பாணியில் இருந்தன. தங்க்கா ஓவியங்கள் என்பவை பௌத்த புராணக் காட்சிகளை வெளிப்படுத்தும் திபெத்திய பௌத்த ஓவியங்களாகும். அதன் தத்துவங்கள் வட்ட வடிவத்தில் வரையப்பட்டிருப்பதை மண்டலா என்கிறார்கள். மண்டலா ஓவியங்கள் குறித்து ஏற்கெனவே கோகிலவாணி வல்லினத்தில் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்ததால் எனக்கு ஓரளவு அவற்றின் தன்மைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. சொர்க்கம்- நரகம், குறியீடுகளைக்கொண்ட பல்வேறு விலங்குகள், பஞ்சபூதங்கள் என கலவையான வண்ணங்களின் பின்னணியில் விரிந்திருந்தன.

ஜெர்மன் மடத்தின் தாந்திரீக மண்டலா ஓவியம்


இந்த ஜெர்மன் மடாலயத்தில் என்னைக் கவர்ந்தது தாரா ஓவியங்கள். அத்தனை வகையான தாராவையும் ஒரே சுவரில் பிரம்மாண்டமாக வரைந்திருந்தனர். மையத்தில் பச்சைத் தாரா அங்கேயே அவ்விடத்திலேயே நிலைகொள்ளச் செய்தாள். மடாலத்தின் உள்ளே ஜெர்மன் நாட்டு பௌத்த சடங்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுவர் முழுவதும் புத்தரின் வாழ்வு ஓவியங்களாக இருந்தன. மையத்தில் தங்க்கா தாந்திரீக தத்துவத்தை விளக்கும் மண்டலா ஓவியம் தலைக்கு மேலே பிரம்மாண்டமாக இருந்தது.

நேபாள மடாலயம்

எங்களுடன் வந்த பெரும்பாலோர் சோர்வடைந்திருந்தனர். வெயிலும் பசியும் வாட்டியதால் மதிய உணவுக்குப் போகத் தயாராகினர். அந்த இடைப்பட்ட நேரத்தில் நானும் சில நண்பர்களும் நேபாள மடாலயத்திற்குள் நுழைந்தோம். நேவார் பண்பாட்டின் அடிப்படையில் அற்புதமாகக் கட்டப்பட்ட செந்நிற மடாயலம் அது. ஒரு தரம் சுற்றி வந்தபோது தங்க நிறத்தில் ஜொலித்த தாராவும் தலேஜும் மனதில் நின்றனர்.

அதன் பிறகும் சாப்பிடச் செல்லாவிட்டால் சுரேஷ் எங்களை கடித்துத் தின்றுவிடக்கூடும் என்பதால் புறப்பட்டோம். ஒவ்வொரு மடாலயமும் தூரமாக நிறுவப்பட்டுள்ளதால் பயணங்களுக்கு ஆட்டோவைப் பயன்படுத்தினோம். மதிய உணவுக்கும் ஆட்டோவிலேயே சென்றோம்.

மதிய உணவு அதே ‘டால் பாத்’. அச்சொல்லைக் கேட்டாலே கிட்டத்தட்ட வயிறு கசக்கும் அளவுக்குச் சென்றிருந்தது. சோறு, பருப்புக்குழம்பு, கிழங்கு, கூட்டு இதுதான் டால் பாத் உணவு. நேபாளின் பாரம்பரிய உணவு. அன்னபூர்ணா மலையேறும்போது அன்றாடம் கிடைத்த உணவும் இதுதான் என்பதால் எங்கு பார்த்தாலும் அச்சம்கொள்ள வைத்தது. ஆனால் அங்கு பெரும்பாலும் அதுதான் மதிய உணவாக இருந்ததால் தவிர்க்கவும் வேறு வழி இருக்கவில்லை.

சுரேஷ்

மீண்டும் லும்பினி மடாலயங்களைப் பார்க்க நுழைந்தபோது சுரேஷ் மிகவும் சோர்ந்திருந்தார். இம்முறை கம்போடியா மடாலயத்தில் புகுந்தோம். அங்கு மண்டலா ஓவியங்கள் இல்லை. ஆனால் சுவர் வடிவமைப்பும் அதை ஒட்டிய ஓவியங்களும் அற்புதமாக இருந்தன. சுரேஷ் சோர்ந்து தரையில் படுத்துக்கொண்டார். அன்னபூர்ணாவில் நாங்கள் சோர்ந்தபோது அவர் எப்படி உசுப்பேத்தினாரோ நாங்களும் அதையே செய்தோம்.

சுரேஷ் இரண்டு மாதங்களாக நாடு திரும்பவில்லை. தொடர்ச்சியாக அன்னபூர்ணா, எவரெஸ்ட் அடிப்படை முகாம்களை ஏற்பாடு செய்து பல கிலோமீட்டர்கள் ஏறியும் இறங்கியும் வருகிறார். அவரது சோர்வு புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

கம்போடிய மடத்தில் கோகிலா

கம்போடியா மடாலயத்தில் கெமர் கலாசாரத்தின்படி அவ்விடம் முழுவதும் புத்தர் காட்சியளித்தார். தலைக்கவசங்கள் அணிந்து விநோதமாக இருந்தார். அப்சரஸ் தேவதைகள் எங்கெங்கும் சூழ்ந்திருந்தனர். அதிகமான நேரத்தை அவ்விடத்தில் செலவிட்டோம்.

தொடர்ந்து மியன்மார், ஜப்பான், தங்கக் கோயில் ஆகிய மடாலயங்களுக்குச் சென்றோம். 41 டிகிரி வெயில் வாட்டியது. தொண்டைவிடாமல் வரண்டு கொண்டிருந்தது. இதுபோதும் எனும் மனநிலைக்கு ஏறக்குறைய எல்லாரும் திரும்பியபோது கரும்பு ஜூஸ் குடித்தோம். புதினாவும் எலுமிச்சை சாறும் சேர்ந்து அற்புதமான ருசியில் இருந்தது.

அறைக்குத் திரும்பியபோது குளிர்சாதனம் கொஞ்சம் காப்பாற்றியது. இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பின்னர் இரவுணவு. கொஞ்ச நேரம் லும்பினி சாலைகளில் உலாவினோம். அரவமற்ற தெரு, ஆளற்ற கடைகள், அவசரமற்ற மனிதர்கள். எல்லா இடத்திலும் தூசு. இந்த தூசினால் அங்கு வாழக்கூடிய மக்களுக்கும் புத்த பிக்குகளுக்கும் நுரையீரலில் சிக்கல் ஏற்படுவதுதான் லும்பினி இன்று எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை.

காலையிலேயே காத்மாண்டு திரும்ப வேண்டும். மீண்டும் பனிரெண்டு மணி நேரப் பயணம். இம்முறை பேருந்தில். அரவின் அந்தப் பயணத்தைக் கற்பனையால் எண்ணி எண்ணி பயந்து போயிருந்தார். மண்டலாவின் உருளை ஓவியங்கள் அவருக்கு மலைச்சாலைகளை நினைவூட்டியிருக்கலாம்.

மண்டலா

மண்டலா – 2


தொடரும்

(Visited 160 times, 1 visits today)