முதல்நாள் பனிரெண்டு மணிநேரம் பேருந்திலேயே பயணம் செய்த களைப்பு மறுநாள் அனைவரது முகத்திலும் இருந்தது. அந்த நீண்ட நேர பயணத்தை நான் குமாரிகளின் கோட்டத்தின் இரண்டு கட்டுரைகள் எழுதப் பயன்படுத்திக்கொண்டேன். வளைவான குலுங்கும் பாதைகளில் கைப்பேசியை உற்றுப்பார்த்து எழுதுவது சாகசம் நிறைந்ததாக இருந்தது. மேலும் வலது தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த வலி கழுத்துக்குச் சென்றதால் குனிய முடியவில்லை. கழுத்துத் தலையணையை அணிந்தபடி ஒருவாறாகக் கட்டுரைகளை எழுதி முடித்தேன். இடையிடையே குட்டித் தூக்கம். வெளிப்புறக் காட்சிகள் சலிப்பையே ஏற்படுத்தின. ஒரே மாதிரியான வளைவுப் பாதைகள், ஏற்ற இறக்கங்கள், புழுதிகள்.
பக்கத்தில் அமர்ந்திருந்த அரவின் பெரும்பாலும் மழைக்கால சேவல்போல முடங்கியே கிடந்தார். நீண்ட பயணங்கள் அவரை வாட்டக்கூடியவையாக இருந்தன.
அந்தப் பேருந்து பயணத்தில்தான் இரண்டு சிறுமிகளைச் சந்தித்தேன். அக்காள் தங்கைகள். ஒருத்திக்கு எட்டு வயது. இன்னொரு பெண்ணுக்கு நான்கு வயது இருக்கலாம். இருவரும் ஒருவர் காதில் மற்றொருவர் ஏதோ ரகசியம் பேசியபடி என்னையும் அரவினையும் உற்று உற்றுப் பார்த்தனர். என்னிடம் அப்படி என்ன வித்தியாசமாக உள்ளது என நானே குழம்பிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் அப்பெண்ணின் தந்தை நபராஜ் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். நேபாளி. மலேசியாவில் சில ஆண்டுகள் வேலை செய்தவர். ஓரளவு மலாயில் உரையாடினார்.
தன் மகளுக்கு நாங்கள் கழுத்தில் அணிந்திருப்பது என்ன என்ற குழப்பம் ஏற்பட்டிருப்பதைச் சொன்னார். அவருக்கும் அது என்னவென்று புரியவில்லை. நான் அது கழுத்துத் தலையணை என்று கூறி அதன் பயன்பாட்டை ஓரளவு விளக்கினேன். அந்த எட்டு வயதுச் சிறுமியை அழைத்து அவள் கழுத்தில் மாட்டிவிட்டபோது பரவசம் அடைந்தாள். பஞ்சுப் பொதிபோன்ற அதை அழுத்திப் பார்த்து மகிழ்ந்தாள். ஒரு புசுபுசு பூனையைப்போல அவள் கழுத்தைச் சுற்றிக்கொண்ட அதை தன் மென் விரல்களால் தடவிவிட்டபடியே இருந்தாள். அழகிய சிறுமி அவள். எனக்கு என் மகளின் நினைவு வந்தது.
மீண்டும் அதை திரும்பக் கொடுத்தபோது அவளிடமே இருக்கட்டும் என்றேன். அந்தச் சின்னஞ்சிறிய இழப்பை அவள் தாங்கமாட்டாள் என அறிவேன். குழந்தைகள் உலகை நாம் விளையாட்டுச் சாதனங்களைக் குவித்து முழுமைப்படுத்த நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் தங்களுக்கான உலகை இடைவிடாத ஆச்சரியங்கள் மூலம் தாங்களே முழுமைப்படுத்திக் கொள்கின்றனர். இந்தத் தலையணை அவளுக்கு சில நாட்களில் சலித்துவிடலாம். அதன் பின்னர் இந்த உலகில் ஆச்சரியம் கொடுக்கும் வேறொரு பொருளை அவள் கண்கள் தேடக்கூடும்.
அந்த உலகம் இனிமையானது.
கலைஞர்களையும் ஞானிகளையும் அந்தச் சிறுவர்களின் கண்களைக்கொண்டே அடையாளம் காணலாம். ஜெயமோகன் ஓர் உரையில் தான் நித்திய சைதன்ய யதியை தனக்கான குருவாக அடையாளம் கண்டது அவரிடம் இருந்த பத்து வயதுச் சிறுவனின் கண்களால்தான் என்கிறார். பத்து வயதுச் சிறுவனின் கண்களில் இருப்பது இடைவிடாத ஆச்சரியங்களும் விளையாட்டுத்தனமும்தான். இறுக்கமும் அகம்பாவமும் அழுத்தமும் உள்ள மனதில் அந்தக் கண்கள் உருவாவதில்லை. அம்மனங்களில் கலையும் ஆன்மிகமும் நுழைவதில்லை.
சிறுமியைக் கொஞ்சிவிட்டு விடைபெற்றேன்.
மறுநாள் களைப்பு தீராமல் இருந்தாலும் பௌத்தநாத் (boudhanath) மடாலயத்தைப் பார்க்கும் திட்டம் இருந்ததால் அதை நோக்கிப் பயணமானோம். அழகு, அமைதி ஆன்மீகத்திற்கு மிகவும் பிரபலமான இந்த மடாலயம் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதில் 36 மீட்டர் உயரமான நினைவுத் தூண் உள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய ஸ்தூபிகளில் ஒன்றாகவும் நேபாளத்தின் மிகப்பெரிய கோள ஸ்தூபியாகவும் உள்ளது.
பௌத்தநாத், காஸ்தி மஹாசைத்யா என்றும் அழைக்கப்படுகிறது. காஸ்தி மஹாசைத்யா என்றால் பனித்துளிகளின் பெரிய ஸ்தூபி என்று பொருள். 1960களில் மன்னர் மகேந்திரா அதற்கு ‘பௌதநாத்’ என்று பெயரிட்டார். இதற்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த ஸ்தூபியின் கட்டுமானம் பல மன்னர்களுடன் தொடர்புடையது. நேபாள மன்னர்கள் 4ஆம் நூற்றாண்டில் இந்த மடாலாயம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திபெத்திய பேரரசர் சாங் ட்சென் காம்போ புத்த மதத்திற்கு மாறியபோது, கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பௌதநாத்தில் முதல் ஸ்தூபி கட்டப்பட்டதாக ஒரு வரலாறு சொல்கிறது. இந்த பழமையான ஸ்தூபியின் கட்டுமானத்திற்குப் பின்னால் பல புராணங்களும் கதைகளும் உள்ளன. ஆனால், முகலாயப் பேரரசர்கள் முதல் ஸ்தூபியை அழித்தார்கள். தற்போதுள்ள ஸ்தூபி 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1500 ஆண்டுகளில் பௌத்தநாத் தூண் 15 முறை சீரமைத்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. யுனெஸ்கோ இந்த ஸ்தூபியை உலக தொல்லியல் சிறப்புமிக்க தலமாக 1979இல் பட்டியலிட்டது.
பௌத்தநாத் ஸ்தூபி மண்டல பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புத்தரின் அறிவொளியை நோக்கிய பாதையின் முப்பரிமாண நினைவூட்டலைக் குறிக்கிறது. ஸ்தூபியின் அடிப்பகுதி பூமியைக் குறிக்கிறது, கும்பம் (வெள்ளை குவிமாடம்) தண்ணீரைக் குறிக்கிறது, கோபுரம் காற்றைக் குறிக்கிறது. மேல் குடை வடிவம் வெற்றிடத்தைக் குறிக்கிறது. மனிதர்கள் நிர்வாணத்தை அடைய 13 நிலைகளைக் கடக்க வேண்டும். 13 கோபுரங்கள் அந்த நிலைகளின் சின்னம்.
2015 ஏப்ரலில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த பெரிய ஸ்தூபியை கடுமையாக சேதப்படுத்தியது. பல தரப்பினரதும் உதவியாலும் புனரமைக்கப்பட்ட புதிய ஸ்தூபி, 2016 நவம்பரில் திறக்கப்பட்டது.
1959இல் சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து திபெத்தில் இருந்து நேபாளத்திற்குள் அகதிகளாக வந்த மக்கள் பௌதநாத்தை சுற்றி வாழ முடிவு செய்தனர். இந்த ஸ்தூபியைச் சுற்றி ஏராளமான திபெத்திய அகதிகளும் புத்த யாத்ரீகர்களும் வாழ்கின்றனர். இன்று திபெத்திற்கு வெளியே திபெத்திய பௌத்தத்தின் மிகவும் புனிதமான தலங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இவ்விடம் உலகெங்கிலும் உள்ள பக்தர்களால் புனித யாத்திரைத் தலமாகக் கருதப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட மடங்கள் ஸ்தூபி வளாகத்தைச் சூழ்ந்துள்ளன.
பௌத்தநாத் வளாகத்தில் நுழைந்தபோது அவ்விடம் சட்டெனப் பிடித்துப்போனது. அதன் பழமையும் கலைச்செழிப்பும் துடிப்பும் மனதில் அடுக்கடுக்கான காட்சிப்படிமங்களை உருவாக்கியபடி இருந்தது. நான்கு பக்கமும் இரண்டு ஜோடி கண்கள் வரையப்பட்டிருந்தன. அது எங்கும் பார்க்கும் புத்தரின் கண்கள். நண்பர்கள் வழிபாட்டுச் சக்கரங்களைச் சுழற்றியபடி ஸ்தூபியைச் சுற்றி வந்தனர். சிலர் அதன் வெளிப்புறத்தில் அமைந்திருந்த கலை வேலைப்பாட்டுப் பொருள்களைப் பார்வையிடச் சென்றனர். நான் உள்ளே நுழைந்து முழுமையாக ஒரு சுற்று வந்தேன். புத்த பிக்குகள், பலவித வழிபாடுகள், புத்தர் சிலைகள் என பார்வையிட்ட பிறகு கலைப்பொருட்களைக் காணச் சென்றேன்.
சுற்றிலும் ஏராளமான ஓவியக் கூடங்களும் கலைப்பொருள்கள் விற்கும் கடைகளும் உணவகங்களும் இருந்தன. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினோம். வாங்காத பொருள்களுக்கு விலை பேசினோம். பொருள்களையும் ஓவியங்களையும் பார்வையிடுவதே இனிய அனுபவமாக இருந்தது.
நேரம் காலை மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. நடந்து நடந்து அந்த வளாகத்தில் அமைந்திருந்த Heritage Thangka gallery and Art Schoolஐ அடைந்தோம். அன்று Heritage Thangka gallery and Art Schoolஐ வழிநடத்தும் பில்னோட் (Blnod) அவர்களைச் சந்திக்க ஆறுமாதங்களுக்கு முன்னரே அனுமதி கேட்டிருந்தோம். அவரும் இந்நாளில் காலை பத்து மணிக்கு அனுமதி கொடுத்திருந்தார். நான்கு தலைமுறையாக பில்னோட் குடும்பத்தார் தங்க்கா ஓவியங்களை வரைகின்றனர். அப்பகுதியில் புகழ்பெற்ற தங்க்கா ஓவியப் பள்ளியை வழிநடத்தி வருகின்றனர். அவர்களிடம் நேரடியாகச் சென்று உரையாடுவது எங்கள் பயண நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இது சுரேஷ் அமைத்த திட்டத்தில் இல்லாதது. முதன்மையாக கோகிலாவின் தனித்திட்டம். எனவே பிற அனைவருமே பசுபதிநாதர் கோயிலுக்குச் சென்றுவிட்டனர்.
நான், அரவின், கோகிலா ஆகிய மூவரும் Heritage Thangka gallery and Art Schoolல் நுழைந்தபோது டிக்ஷன் (Dikshan) என்பவர் எங்களை வரவேற்றார். டிக்ஷன் அப்போது ஓர் ஓவியம் வரைந்துகொண்டிருந்தார். அவர் பினோட்டின் தம்பி எனத் தெரிந்தபோது உரையாடல் இயல்பானது. பில்னோட் வந்துகொண்டிருப்பதாகக் கூறினார். எங்களை நேராக ஓவிய மாணவர்கள் பயிலும் மூன்றாவது மாடிக்கு அழைத்துச் சென்றார். படிகளில் ஏறும்போதே பல்வேறு விதமான மண்டலா ஓவியங்களைப் பார்த்தபடி நடந்தோம். உண்மையில் எனக்கு இந்த ஓவியங்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் உண்டு. எனவே இதில் முன்னனுபவம் கொண்ட கோகிலாவுடைய விளக்கம் மற்றும் கேள்விகள் வழியாகவே அவற்றைப் புரிந்துகொள்ள முயன்றேன்.
டிக்ஷன் சிரித்த முகத்துடன் இருந்தார். ஆறு மாதங்களுக்கு முன்னரே அனுமதி வாங்கியிருந்ததால் அப்பள்ளியைச் சென்று காண்பதில் சிக்கல் இருக்கவில்லை. நாங்கள் சென்றபோது இரண்டு ஓவிய மாணவர்கள் தங்க்கா ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தனர்.
“தங்க்கா ஓவியத்தை நிவாரி மற்றும் தமா பரம்பரையினர் மட்டுமே வரைகின்றனர். முதலில் மூங்கிலால் சட்டகம் ஒன்றை அமைப்போம். அதில் துணியை இழுத்துக்கட்டி ஓவியம் வரைவதற்குத் தயார் செய்வோம். அந்தத் துணியில் விலங்குகளின் மூலம் தயாரிக்கப்படு பசையைத் தடவியவுடன் துணி கடினத்தன்மைக்கு மாறும். முதலில் நாங்கள் பென்சிலால் ஓவியங்களை வரைந்து அடிப்படை வண்ணங்களைப் பூசுவோம். இரண்டாவது கட்டத்தில் நாங்கள் பிரத்தியேக வண்ணங்களை உருவாக்குவோம்.”
நாங்கள் வண்ணங்களைப் பார்வையிட்டோம்.
“தங்க்கா ஓவியங்களை நவீன ஓவியங்களாக மாற்றக்கூடாது. அதைச் செய்ய நாங்கள் விரும்புவதும் இல்லை. காரணம் நாங்கள் பௌத்த தத்துவங்களை ஓவியங்கள் ஆக்குகிறோம். அதற்கென சில வரையறைகள் உள்ளன; பாடத்திட்டங்கள் உள்ளன. எங்களின் பணி பத்து ஆண்டுகள் அந்தத் தத்துவங்களையும் ஓவியங்களையும் பயின்று அவற்றை பல்வேறு தன்மைகளில் வெளிப்படுத்துவது. நாங்கள் இதில் அதிகமும் மாற்றம் செய்வது வண்ணங்களைத்தான். தத்துவங்களில் குறியீடாக இருக்கும் அம்சங்களை நாங்கள் மாற்றுவதில்லை.”
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே நாங்கள் அவர் காட்டிய ஓவியங்களைப் பார்வையிட்டோம். அதில் தங்கம்போல ஒளிர்ந்த வண்ணத்தை ஆச்சரியமாகப் பார்ப்பதைக் கவனித்தவர், “இது உண்மையான 24 காரட் தங்கம். உண்மையான தங்கத்தைதான் தங்க்கா ஓவியத்தின் முடிவில் நாங்கள் பயன்படுத்துகிறோம்.”
விளக்கிக்கொண்டே எங்களை அவர் அப்பா அமர்ந்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அவரின் பெயர் பாபுலல் லாமா (Babulal Lama). அமைதியாக அமர்ந்து வரைந்துகொண்டிருந்த அவர் இரண்டாம் தலைமுறை ஓவியர். அவர் அப்போது ஒரு மண்டலா ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தார்.
அரவின் அப்போது ஆச்சரியமாக அங்கு முழுமையடையாமல் இருந்த ஓவியத்தைக் காட்டினார். “அது நான் வரைந்து கொண்டிருக்கும் ஓவியம். 65 நாட்களாக வரைந்துகொண்டிருக்கிறேன்” என்றார் டிக்ஷன். பல்வேறு புத்தரின் உருவங்கள் இணைந்த பிரமாண்ட ஓவியம் அது. நாங்கள் அங்கேயே ஆச்சரியத்தில் அமர்ந்தோம். நாங்கள் ஒரு பெரும் கலைஞரிடம் பேசிக்கொண்டிருப்பது அப்போதுதான் புரிந்தது.
அங்கிருந்து நாங்கள் இரண்டாம் மாடிக்கு வந்தோம். வருகையாளர்களுக்கு ஓவியங்களை விளக்கக்கூடிய பாங்கில் அந்த இடம் அமைந்திருந்தது. நாற்காலியில் அமர்ந்தோம். அங்கு தன் தந்தை வரைந்த பாரம்பரியமான காலச்சக்கரா (Wheel of Life) என்பதை எங்களுக்கு விளக்கத் தொடங்கினார் டிக்ஷன்.
“முதலில் காலச்சக்கரத்தை வரைந்தவர் புத்தர். அதன்பின்னர் ஒவ்வொரு பௌத்த தலைவர்களும் ஒரு காலச்சக்கரத்தை அறிமுகம் செய்துவைப்பர். இப்போது தலாய் லாமா உருவாக்கிக்கொடுத்த காலச்சக்கரமே வரையப்படுகிறது.”
நாங்கள் அந்த ஓவியத்தைப் பார்த்தோம். ஒரு பெரிய வட்டத்தின் உள்ளே நான்குபுறமும் நுழைவாயில்கள்கொண்ட ஏழு அடுக்கு மாடிக்கோட்டை வடிவம் தென்பட்டது.
“முதலில் ஆறு வட்டங்கள் வரைவோம். அதில் முதலாவது பிரபஞ்சம். அடுத்து பஞ்ச பூதங்கள். அதைத் தொடர்ந்து நான்கு புறமும் நான்கு வாசல்கள். ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு வண்ணம். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், காலை, இரவு ஆகியவற்றை அந்த வண்ணங்கள் குறிக்கும். அதை தொடர்ந்து நமது சிந்தனை, பேச்சு, உணர்ச்சி ஆகியவற்றை மையப்படுத்தி இவ்வோவியம் வடிக்கப்படும். இதனால்தான் நாம் கோயில்களில் நெற்றி, வாய் மற்றும் மனதில் கரங்களைக் குவித்து வழிபடுகிறோம்.”அவர் அதை செய்துகாட்டினார்.
” கடிகாரச் சுற்று பாதையில் மண்டலா ஓவியத்தை வடிவமைப்பர். எந்த மண்டலாவையும் நாம் கடிகார சுழற்சியில் காண வேண்டும். மூன்று வழிபாட்டின் குறியீடுகளையும் கடந்த பிறகு நீங்கள் காணுவது ஒரு சதுரம். அதுதான் ஞானத்தின் அடையாளம். இந்த ஞானம் ஓவியத்தில் காட்டப்படும் அத்தனை தன்மைகளையும் புரிந்துகொள்ளும்போது கிடைக்கக்கூடியது.”
இப்போது அந்த ஓவியத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. அருகில் வைத்திருக்கும் பூதக்கண்ணாடியைக்கொண்டு பார்த்தபோது அதன் தொழில்நுட்பம் வியக்கவைத்தது. “பொதுவாக மண்டலா ஓவியங்களை வரைபவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படும். அதை அறிந்தே தங்களை அந்தக் கலைக்கு ஒப்புக்கொடுக்கின்றனர்,” எனக் கோகிலா கூறினார்.
தொடர்ந்து பௌத்த மந்திரங்களால் உருவான மண்டலாவைப் பார்வையிட்டோம். கருமையில் தங்க எழுத்துகள் பிரகாசித்தன. கோகிலா ஒரு மாணவர் வரைந்த மண்டலாவை வாங்கினார். தங்கம் இணைக்கப்பட்ட மண்டலா அதிக விலை என்பதால் எளிமையான காலச்சக்கர மண்டலாவை வாங்க முடிந்தது.
கொஞ்ச நேரத்தில் பில்னோட் அங்கு வந்தார். அவரது விரல் வீங்கியிருந்தது. அதற்கு சிகிச்சை எடுக்கச் சென்றதால் தாமதமானது என்றார். “ஓவியர்களுக்கு விரல்கள் முக்கியம். பார்த்துக்கொள்ளுங்கள்,” என்றார் கோகிலா.
நட்பார்ந்த விடைபெறலுக்குப் பின்னர் தாரா ஓவியங்களைத் தேடி கடை கடையாக அழைந்தோம். ஆச்சரியப்படுத்திய ஓவியங்களின் விலையைக் கண்டு பின் வாங்கினோம். சோர்ந்துபோய் ஒரு கடையில் அமர்ந்தோம். அப்போது எனக்கு ஒரு வீடியோ அழைப்பு வந்தது. அது நபராஜ். எடுத்தேன். தன் மகள் நான் கொடுத்த கழுத்துத் தலையணையுடன் இன்னமும் அமர்ந்திருக்கும் காட்சியைக் காட்டினார். மகிழ்ச்சியாக இருந்தது. “நாங்கள் சில பொருட்கள் வாங்க வேண்டும். எங்களுக்கு பேரம் பேசிக்கொடுக்க உதவ முடியுமா?” என்றேன்.
“என்ன பொருள்?” என்றார்.
சொன்னேன். கொஞ்சம் யோசித்தவர் “நீங்கள் நான் இருக்கும் இடத்திற்கு வாருங்கள். அந்த இடத்தின் பேர் பீர்குடி. பத்திரகாளியம்மன் ஆலயம் அருகில் உள்ளது,” என்றார்.
‘பீர்குடி’ எனும் பெயரே ஒரு மாதிரியாக இருந்தது. உணவக ஊழியர் உதவியுடன் ஒரு வாடகை வண்டியைப் பதிவு செய்தோம். அந்த வாடகை வண்டியின் என் கைப்பேசிக்கு வந்தபோது முதன்மைச் சாலையில் இறங்கி வண்டிக்குக் காத்திருந்தோம். அப்போதுதான் ஒன்று புலப்பட்டது. நேபாளத்தில் அவர்களுக்கு உரிய எண்களைத்தான் பயன்படுத்துகின்றனர். வண்டிகளில் உள்ள எல்லா எண்களையும் பார்க்க ஒன்பது போலவே இருந்தது.
“இது என்னடா புதுச் சோதனை” என சாலையோரமாக நாங்கள் பதிவு செய்த வண்டியைத் தேடி அலைந்தோம்.
தொடரும்