மறுநாள் இரவு புறப்பாடு. இன்றே அனைத்துப் பொருள்களையும் முறையாக அடுக்கிக் கட்ட வேண்டியிருந்தது. அதற்கு முன் நினைவு பொருட்களை வாங்க வேண்டும். நான் பச்சை நிற தாரா சிலையை வாங்கத் திட்டமிட்டிருந்தேன். நபராஜ் தன்னை ஒரு வியாபாரி என அறிமுகம் செய்துகொண்டதால் அவர் வழியாகப் பொருள்களை மலிவாக வாங்குவதுதான் எங்கள் திட்டம். எந்தக் கடைக்குச் சென்றாலும் எங்களைத் தென்னிந்திய சுற்றுலாவாசிகள் என விலையை அழுத்தினர். எனவே எங்களுக்கு ஒரு ‘விவரமான’ நேபாளியின் உதவி அவசியமாக இருந்தது.
நபராஜ் சொன்னதுபோல பீர்குடியில் இருந்த பத்திரகாளியம்மன் கோயிலருகில் காத்திருந்தோம். அங்கே எளிமையான முறையில் நடந்த திருமணத்தை அரவின் புகைப்படம் எடுக்க மணமகளின் வீட்டுக்காரர்கள் அப்படிச் செய்யவேண்டாம் எனத் தடுத்தனர். நாங்கள் அங்கிருந்து ஓடிவிட நினைத்தோம். ஒரு சங்கடமான சூழலில்தான் நபராஜ் பிரசன்னமானார்.
நபராஜ் முதலில் எங்களை தனது கடைக்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மலேசியாவில் பெட்டாலிங் சாலையில் அமைந்துள்ளது போன்ற அங்காடி கடைகளின் தொகுப்பு பரந்த நிலத்தில் விரிந்திருந்தது. ஆனால் வெயில் படாமல் இருக்க கூரை பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் பறக்காமல் இருக்க கட்டை, கற்கள், செருப்பு என பிளாஸ்டிக் கூரை முழுவதும் வீசப்பட்டிருந்தன.
அதனுள் நுழைந்தோம்.
காலணிகள், ஆடைகள், மிதியடிகள், தரைவிரிப்புகள் என அடுக்கடுக்கான கடைகள் கண்ணில் பட்டது. நபராஜ் துணிப்பை கடை வைத்திருந்தார். பல்வேறு அளவில் பல்வேறு வடிவத்தில் அவை இருந்தன. நான் “இங்கு மலிவாகச் சிலைகள் கிடைக்குமா?” எனக்கேட்டேன்.
“சிலைகளா? அப்படியானால்!” என அவர் கேட்டபோது எனக்குத் தலைசுற்றியது.
நான் பிடித்து வைத்திருந்த படத்தை எடுத்துக்காட்டினேன். “ஓ இதுதான் சிலையா?” என்றார்.
நாங்கள் மூவரும் பரிதாபமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். கொஞ்ச நேரம் யோசித்தவர் என் அண்ணனின் கடை ஒன்று ‘தாமில்’ பகுதியில் உள்ளது. அங்கு பார்க்கலாம் என்றார். எங்கள் தங்கும் விடுதியும் அங்குதான் இருப்பதால் அது நல்லதெனப்பட்டது.
“அந்த ஒரு கழுத்துத் தலையணையை வைத்துக்கொண்டு என் இரு மகள்களுக்கும் ஒரே சண்டை. உன்னிடம் அதுபோல வேறு உள்ளதா?” என அவர் கேட்டபோது அரவினுக்கு கழுத்துவலி வந்திருக்க வேண்டும். அதை காதில் வாங்கிக்கொள்ளாததுபோல அனைவருக்கும் விடை கொடுத்து அங்கிருந்து புறப்பட்டோம். பௌத்தநாத்திலிருந்து பீர்குடிக்கு நானூரு ரூபாய், பீர்குடியில் இருந்து தாமிலுக்கு நானூறு ரூபாய் என டாக்சிக்கு மட்டுமே செலவான பணத்தில் ஒரு சிலை வாங்கியிருக்கலாம் என நொந்துகொண்டேன். போகும் வழியில் நபராஜ் தான் மீண்டும் மலேசியா வந்து வேலை பார்க்க விரும்புவதாகவும் அதற்கு நான் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கழுத்துத் தலையணையைக் கொடுத்ததால் என்னை ஓர் இளம் தொழிலதிபர் என அவர் நினைத்திருக்கலாம்.
மேலும் அவருக்கு ஒரு விண்ணப்பம் இருந்தது. என்னுடன் ஓரிரவு மது அருந்த வேண்டும். என் முகத்தைப் பார்த்தால் அவருக்கு அப்படித் தோன்றியிருக்கிறது பாவம். நான் ஏதும் பேசி அவர் நம்பிக்கையைக் கெடுக்காமல் மௌனமாக நடந்தேன்.
தாமில் பகுதி நெருங்கியதும் நபராஜிடம் நான் தெளிவாகச் சொன்னேன். “எந்தக் காரணம் கொண்டும் நாங்கள் மலேசியர்கள் எனச் சொல்ல வேண்டாம். நீங்களே வாங்குவதாக இருக்கட்டும்,” என்றேன்.
‘சரி சரி’ எனத் தலையை ஆட்டியவர், போன கடையில் அவர் நண்பரிடம் நேபாளில் பேசினாலும் ‘மலேசியா மலேசியா’ என்றது காதில் விழக் கடுப்பானது. கடைக்காரனும் நன்றாக ஏற்றி விலையைக் கூறினார். அந்தக் கடையில் வாங்காமல் வெளியேறினோம். அடுத்தடுத்த கடைகளிலும் நபராஜ் ‘மலேசியா மலேசியா’ எனச் சொல்வதை விடவில்லை. அவர் அதை வேண்டுமென்றே செய்யவில்லை. உண்மையில் அவர் ஒரு வெகுளியோ என்ற சந்தேகம்கூட வந்தது. காணும் சிலைகளையெல்லாம் ‘இந்த மாதிரியா… இதுவா…’ எனக் காட்டிக்காட்டி கேட்டார்.
இதற்கிடையில் அரவின் பேரம் பேசி பொருள்களை வாங்கும் திறனை வளர்த்துக்கொண்டதால் அவரையே இடைத்தரகராகப் பயன்படுத்தி பொருள்கள் வாங்கலாம் என முடிவானது. அரவின் ஒரு தினுசான முறையைப் பின்பற்றினார். ஒரு குறிப்பிட்ட விலையைக் கடைக்காரரிடம் சொன்னார். கடைக்காரர் அந்த விலையை மறுத்து வேறு விலையை சொல்வார். அரவின் விடாமல் அந்த விலையையே அழுத்தமாகச் சொல்லிச் சொல்லி கடைக்காரரை சம்மதிக்க வைத்துவிடுவார். அரவினுடைய இந்த உத்தி நன்றாகவே பலன் கொடுத்தது. இனி தீவிரமாகப் பொருட்களை வாங்க வேண்டுமென முடிவெடுத்தோம்.
அதற்கு முன் நபராஜை கழட்டிவிட வேண்டியிருந்தது.
“அவசரமாக எங்களை விடுதிக்கு அழைக்கிறார்கள்,” என்றேன். பொய்தான்… வேறு வழியில்லை.
“அப்படியானால் நாம் எப்போது குடிப்பது?” நபராஜ்.
“அதற்கென்ன குடிக்கலாம். நாளைக்கே குடிக்கலாம். நன்றாகக் குடிக்கலாம்,” எனச் சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பல கடைகளில் ஏறி இறங்கி விலை பேசி சில பொருள்களை வாங்கினோம். இடையில் இந்திராவை வரவழைத்து ஒரு புத்தகக் கடைக்குச் சென்றோம். காம்யூவின் ‘அந்நியன்’ நாவலையும் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலையும் வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தேன். இந்திரா Narayan Wagle நாவல் மற்றும் Laxmi Prasad Deckota கவிதைகளை எனக்கு அறிமுகம் செய்தார். Buddhisagar எழுதிய Karnali Blues எனும் நாவலை அன்பளிப்பாக வாங்கிக்கொடுத்தார். பின்னர் அமைதியாக ஒரு கடையில் அமர்ந்து காப்பி குடித்து இலக்கியம் பேசினோம்.
இரவு எங்களுக்கு பிரியாவிடை விருந்தொன்றை எங்களது சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. முன்பு வாங்கிய குர்க்கா பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு விருந்துக்குப் புறப்பட்டோம்.
சொல்லி வைத்தால்போல எங்களுக்கு ‘டால் பாத்’தான் அங்கும் பரிமாறப்பட்டது. கூடுதலாக அரிசியில் செய்த மதுமானம் அகல் விளக்கு போன்ற சின்னஞ்சிறிய குடுவையில் நிரப்பப்பட்டது.
நேபாளின் நான்கு வகையான பாரம்பரிய நடனங்கள் ஆடப்படும் என அறிவிப்பாளர் அறிவித்தார். எனவே அதைக் காண ஆவலாக காத்திருந்தோம். நான்கு நடனத்தையும் இரண்டு அழகிய பெண்கள் வெவ்வேறு உடைகளில் தோன்றி ஆடினர்.
முதலில் நேவார் நடனம் (Newari Dance) ஆடப்பட்டது. நேபாளில் முதன்மையான இனக்குழு நேவாரியர். ஆகப்பெரிய இனக்குழுவும் இதுதான். நேபாத்தின் காத்மாண்டு சமவெளியில் வரலாற்றுக் காலம் முதல் வாழும் மக்கள் இவர்கள். தங்களுக்கென தனி மொழியும் பண்பாடும் கொண்டவர்கள். 80 விழுக்காடு இந்துக்களான இவர்கள் வர்ணாசிரம வாழ்க்கைமுறையை இன்றும் பின்பற்றுகின்றனர். குமாரி கடவுள் ரதத்தில் வரும்போது நேவார் நடனம்தான் முதலில் ஆடப்படுகிறது. ஒருவகையில் நேவாரியின் பண்பாடுகளே நேபாளில் முதன்மையானவையாகத் திகழ்கின்றன. சற்று முன்னர் எங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி சாராயம்கூட அவர்கள் கலாசாரத்தின் ஓர் அங்கம்தான். அந்த நடனமும் அரிசி சாராயம் அருந்தப்பட்ட பின்னரே ஆடப்படுகிறது.
நீரை அடிப்படையாகக்கொண்டு ஆடப்பட்ட நடனம் அது. பாவனையாக நீரை ஊற்றி பருகும் பாவனைகள் திரும்பதிரும்பச் செய்யப்பட்டன. ஒரு நதியில் நடப்பதுபோலவும் அதில் கையலம்பி விளையாடுவதுபோலவும் நடன அசைவுகள் இருந்தன.
இந்த நடனத்தைத் தொடர்ந்து செர்ப்பா நடனம் (Sherpa Dance) ஆடப்பட்டது. இவர்கள் நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் வாழும் இனக்குழுவினர். ஷெர்ப்பா மக்கள் மலையேறுவதில் தேர்ந்தவர்கள். எவரெஸ்ட் மலை மீது முதன்முதலாக ஏறியவரும் ஷெர்ப்பா இனத்தவர்தான். இவர்களின் பாரம்பரிய உடை திபெத்திய பண்பாட்டுடன் ஒத்துப்போவது. நீளமான கையுடன் இடுப்பைச் சுற்றி கட்டப்பட்ட துணியுடன் காணப்படுவர். இந்த நடனம் ஆடிய பெண்கள் அந்த உடையில் வந்தபோது மிகுந்த அழகுடன் இருந்தனர்.
காற்றுக்கு அசையும் உடலிசைவுடன் அமைந்திருந்தது செர்ப்பா நடனம். திபெத்திய பாணி இசை பரவசமூட்டியது. மலையின் ஓயாத காற்றுக்கு உடலை ஒரு நாணலாக்கி பறத்தலின் கிளர்ச்சியை நடனத்தில் உருவாக்கிச் சென்றனர்.
மூன்றாவதாக டிமல் நடனம் (Dhimal Dance) ஆடப்பட்டது. டிமல் என்பவர்களும் திபெத்திய மக்கள்தான். இவர்கள் நேபாளில் மட்டுமல்லாமல் டார்ஜனின், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலும் வசிப்பதால் அங்கும் இந்த நடனம் உள்ளது. நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஓரிடத்தில் நிலைத்து வசிக்காத இந்தக் குழுவினர் மீன் பிடி தொழிலின்போது டிமல் நடனத்தை ஆடுகின்றனர். எல்லாப் பழங்குடிகளையும்போல மத நம்பிக்கையற்று இயற்கை வழிபாடு செய்யும் இவர்கள் நடனம் நீரிலும் காற்றிலும் ஆடுவதுபோல இருந்தது. இந்த நடனத்திற்கு இவர்கள் அணிந்திருந்த உடையும் கவர்ச்சியாகவே இருந்தது.
இறுதியாக நாட்டுப்புற நடனம் ஆடப்பட்டது. அதில் எங்கள் நண்பர்களும் பங்கேற்றனர். ஒவ்வொரு சமூகத்தின் பாரம்பரிய அசைவுகளைக்கொண்டே நாட்டுப்புற நடன அசைவுகள் உருவாவதால் அந்த நடனம் அப்படித் தொடங்கி நண்பர்கள் குழு இணைந்ததும் இயல்பான நடனத்துக்கு மாறியது.
எனக்கு நடனம் வராது என்பதால் அமைதியாக வெளியேறினேன். வீட்டுக்குச் செல்லும் எண்ணம் வழுத்திருந்தது. போதுமெனத் தோன்றியது. அதற்கு முன் குமாரிகளைச் சந்திக்க வேண்டும். அவர்கள் வாழும் கடவுள். நான் நாளையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன்.
தொடரும்