குமாரிகள் கோட்டம் – 18

இன்றைய குமாரி

காலை மணி பத்தை நெருங்கியபோது என் பதற்றம் உச்சத்தை அடைந்தது. குமாரி தேவி காலை பதினொரு மணிக்குத்தான் பொதுமக்களுக்காகப் பிரசன்னமாவார். இனி எப்போது கிளம்பி எப்போது அவ்விடத்தை அடைவது? எப்படியும் நாங்கள் சேர்வதற்குள் குமாரி தேவி தரிசனம் முடிந்துவிடும். பின்னர் எதற்கு இந்தத் தொடருக்குக் ‘குமாரிகள் கோட்டம்’ எனப் பெயர் வைத்தேன்? எது என்னை அத்தலைப்பை வைக்கத் தூண்டியது?

அழுத்தம் கூடிக்கொண்டே போனது.

அன்று காலையில் காத்மண்டுவில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான பூத நீலகண்டர் கோயிலுக்குச் (புத்தானிகந்தா கோவில்) சென்றிருந்தோம். பொதுமக்கள் இக்கோயிலை ஜல நாராயண ஆலயம் என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீ அனந்த சயன நாராயணர் என்றும் பெயருண்டு.

பூத நீலகண்டர் என்பதை ஒரு சிலர் புத்த நீலகண்டர் என புத்தருடன் தொடர்பு படுத்துகின்றனர். பூத நீலகண்டர் என்பது பழைய நீல நிறத்தில் இருக்க கூடிய தொண்டை என்று சமஸ்கிருதத்தில் பொருள்படுகிறது. ஆலகால விஷத்தை பருகியதால் சிவபெருமானை நீலகண்டர் என்பர். பிரம்மா, சிவன், விஷ்ணு திருமூர்த்தி ரூபமென்பதால் இங்கு இவரை பூத நிலகண்டர் என்று அழைக்கிறார்கள் என்கிற நம்பிக்கையும் உண்டு.

இந்தக் கோவிலில் உள்ள மகாவிஷ்ணு, கோவிலின் மிக பிரம்மாண்டமான குளத்தின் மையப் பகுதியில் 11 தலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பதுபோல ஒருக்களித்து அல்ல; மனிதர்கள் போல மல்லாக்கப்படுத்திருந்தார் விஷ்ணு. நான்கு கைகளிலும் முறையே சங்கு, சக்கரம், கதை , தாமரை மலர் ஆகியன உள்ளன.

கிட்டத்தட்ட 14 அடி உயரத்தில், 5 மீட்டர் நீளமுள்ள விஷ்ணுவும் ஆதிஷேசனும் ஒரே கருங்கல்லினால் செய்யப்பட்டவை. இந்த சிலை 1,300 ஆண்டுகளாக நீரில் மிதந்தபடியே இருக்கின்றது என எங்கள் சுற்றுலா வழிகாட்டி கூறினார். 7ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்தச் சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. ஜல நாராயணர் திறந்த வெளியில் தான் உள்ளார். மேற்கூரை எதுவும் இல்லை.

பொதுவாகவே வழிபாட்டு அம்சங்கள் மேலேற்றப்படும் அதிசயங்கள் மீது எனக்கு ஒவ்வாமை உண்டு. அதிசயங்கள் ஆன்மிகத்தை, பண்பாட்டை நெருங்கிச்செல்வதற்கான தடை. கல் நீரில் மிதப்பதையும், தூண்களில் ஒலி மாறுபட்டிருப்பதையும், கோபுரத்தின் நிழல் தரையில் விழாதிருப்பதையும் யாரொவர் கோயிலின் சிறப்பாகச் சொல்கிறார்களோ அதனால் மட்டுமே தேடிச் செல்கிறார்களோ அவர்களே அக்கோயில் உருவான நோக்கத்திற்கு எதிரானவர்கள்.

அன்று எனக்கு உடல் நலம் ஒத்துழைக்காததாலும் மனதில் ஏதோ தடையிருந்ததாலும் நீரில் படுத்திருக்கும் விஷ்ணுவை நெருங்கிச் சென்று வழிபடவில்லை. தொலைவாக நின்றுகொண்டிருந்த எனக்கு நண்பர்கள் நீண்ட வரிசையில் இடம்பிடித்து அழைத்தும் உள்ளே நுழையவில்லை. ஆனால் பின்னிப்பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதிசேஷனில் சயன கோலத்தில் காட்சி அளித்த விஷ்ணுவை பல்வேறு கோணங்களில் நின்று ரசித்துக்கொண்டே இருந்தேன். அற்புதமான தோற்றம் அது. நாகம் உடலை முறுக்கி அசைந்துகொண்டே இருப்பதுபோன்றதொரு தோற்றம். அது என்றென்றைக்கும் அசையும் நாகம். அவர் என்றுமே அசையாதிருக்கும் கடவுள். அசைந்துகொண்டே இருக்கும் எளிய இன்பங்களுக்கு மேல்தான் அசையாத பேருண்மை அமைதியாக உள்ளது.

அசையும்போதே தோணி
அசையாதபோதே தீவு
தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற்பொழுதே தூரம்

தேவதேவன் நினைவுக்கு வந்தார்.

புத்தானிகந்தா கோயிலில் விஷ்ணுவின் சிலை நீரில் மிதக்கவில்லை எனும் கருத்தும் பரவலாக உண்டு. அது தரையில் இருந்து சில அடி உயரமுள்ள பாம்பு போன்ற பீடத்தின் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். அந்த குளத்தில் சில அடி உயரத்தில் நீர் நிரப்பினால், சிலை பார்ப்பதற்கு மிதப்பது போலத் தெரியும் என்றும் மிகச்சிறிய அந்த குளத்தில் உள்ள நீரை வடித்துவிட்டு, சில நாட்களில் பூஜை நடத்துவதும் உண்டு என்கின்றனர். அப்படியான புகைப்படங்களும் இணையத்தில் கிடைக்கின்றன.

எது உண்மையென ஆராயும் நோக்கத்தில் நான் செல்லவில்லை. எதுவாகவும் இருக்கலாம். ஆனால் எல்லா பழமையான கோயிலிலும் எஞ்சிய பழங்காலங்கள் உள்ளன. படைப்பாளிக்கு அந்தக் காலம் அவசியம். கற்பனையால் மெல்ல மெல்ல பின் சென்று பார்த்துவரும் சாத்தியத்தை அவன் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. அங்கிருக்கும் ஒளியும் மணமும் அதற்கு அரூபமாகத் துணையிருப்பவை.

கோயிலை விட்டு வெளிவந்தபோது நண்பர்கள் ஷாப்பிங் சென்றுவிட்டனர். எங்களை அழைத்துச் சென்ற பேருந்துவர தாமதமானது. நான் சாலையோரம் கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டாரில் அமர்ந்திருந்தேன். தூசு மண்டலம். நேரமானதை உணர்ந்தபோது எனக்கு என்மீது முதலில் கோபம் வந்தது. நண்பர்களுக்கு குமாரி தேவி கோயிலுக்குச் செல்லும் அவசியம் தெரியாமல் இருக்கலாம்; எனக்கு அதன் தேவை தெரியும். எனவே ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்து முதலில் நான் தர்பார் சதுக்கம் புறப்பட்டிருக்க வேண்டும். இனியும் தாமதிக்கக்கூடாது என உணர்ந்து கணேஷிடம் என் எண்ணத்தைக் கூறினேன். அவருக்கும் அந்த எண்ணமே இருந்தது. ஷாப்பிங் சென்றவர்களை மீண்டும் திரட்டுவதில் உள்ள சிக்கலை அவரும் அறிவார். ஐந்து நிமிடம் பொறுத்திருக்கச் சொன்னார். தன்னால் அது சாத்தியப்படவில்லையென்றால் டாக்ஸி ஏற்பாடு செய்வதாகக் கூறினார். ஆனால் நிலை ஐந்து நிமிடத்தில் சரியானது.

பேருந்து தர்பார் சதுக்கம் நோக்கிப் புறப்பட்டது.

பேருந்தைவிட்டு இறங்கும்போது அரவின் “மணி 11ஐ தாண்டிருச்சிண்ணெ!” என்றார். நான் தலையை மட்டும் ஆட்டினேன். உண்மையில் எனக்குக் கடும் சோர்வாக இருந்தது. என்னைச் சுமந்து செல்ல எனக்கே சுமையாக இருந்தது. என்னை நினைத்து எனக்கே கோபம். ஏதோ ஒரு இழிநிலை. ஒருவேளை ராயல் குமாரியைப் பார்க்க முடியாவிட்டால் இத்தொடரை இத்தோடு நிறுத்திக்கொள்வது என முடிவெடுத்தேன். அதனால் யாருக்கும் எந்த பாதகமுமில்லை. ஆனால் எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் அறை அது. என்றென்றும் மாறாத வடுவுடன் விழும் அறை. எனக்கு அது தேவையானது. இனி யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்கக்கூடாது என அந்த அறை நினைவுப்படுத்தும். நோக்கத்தை விடுத்து எளிய உலகியல் விருப்பங்களில் ஈடுபடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.

கணேஷ் வேகமாக ஓடினார். அவருக்கும் பதற்றம் இருந்தது. பயண நோக்கத்தில் அவருக்கு முழு அக்கறை இருந்தது. எப்போதும் நிதானமாக இருப்பவர் முகத்தில் கலவரம். தர்பார் சதுக்கத்தின் உள்ளே நுழைய கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது. ராயல் குமாரி தேவி இன்னும் பொதுமக்களைச் சந்திக்கவில்லை எனத் தெரிந்ததும் கொஞ்சம் ஆசுவாசமானது. ஆனால் அது எனக்கான மன்னிப்பை முழுமையாக வழங்கவில்லை. இவ்வளவு அவசரத்துடனும் பதற்றத்துடனும் இவ்விடத்தை அடைந்திருக்க வேண்டியதில்லை எனத் தோன்றியது. மேலும் நான் காண வந்தது குமாரி தேவியை மட்டுமல்ல. அந்த பழமையான தர்பார் சதுக்கத்தை.

தர்பார் சதுக்கத்தில் நுழைந்து நடக்கத் தொடங்கிய சில வினாடிகளில் அங்கிருந்த பழமையான கட்டடங்கள் ஆச்சரியப்படுத்தின. தர்பார் சதுக்கம் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்று. 2015இல் நடந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நெவார் பண்பாட்டைப் பிரதிபலிப்பவை இக்கட்டடங்கள். எதையும் நின்று ரசிக்க முடியாத பரபரப்புடன் நடந்தோம். நான் முன்பைவிட மிகவும் கனிந்துவிட்டதாகவே தோன்றியது.

குமரிகர் உள்ளே நுழைந்தேன்.

குமரிகர்

நேபாளம் முழுவதும் 12 குமாரி தேவிகள் உள்ளனர். அவர்களில் ராயல் குமாரி மிகவும் பிரபலமானவர். பெரும்பாலும் நவராத்திரி அல்லது தசரவிழாவின்போது மட்டும்தான் ராயல் குமாரி வெளியே வருவார். மற்ற நேரங்களில் காலையும் மாலையும் சில வினாடிகள் பொதுமக்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

மற்ற குமாரிகளைவிட ராயல் குமாரிகளின் தேர்வு கடுமையானது. முதலில் இவர் பௌத்த மதத்தில் ஷக்யா குலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இன்று இந்தக் குலத்தில் உள்ள குடும்பங்கள் மொத்தம் 150 மட்டுமே உண்டு. அந்தப் பின்னணியில் உள்ள குடும்பத்தார் தங்கள் குழந்தையை ராயல் குமாரியாக ஏற்க விண்ணப்பம் செய்வர். மூன்று வயதான சிறுமியில் இருந்து இந்த விண்ணப்பத்தைச் செய்யலாம். ஐந்து மூத்த பௌத்த குருமார்கள் விண்ணப்பத்தின் வழி தேர்ந்தெடுக்கப்படும் சிறுமிகளை நேரடியாக அழைத்து 32 சோதனைகள் செய்வர்.

அதில் முதன்மையானது அவர்களது ஜாதகம். மன்னனின் ஜாதகத்துக்கு தீங்கிழைக்காத ஜாதகமாக குமாரிகளின் அமைய வேண்டும். மேலும் தன்னியல்பில் அது வலுவான ஜாதகமாக இருக்க வேண்டும். தொடர்ந்து உருவ லட்சணம் ஆராயப்படும். பெரிய கூர்ந்த கருமையான கண்கள், கறுப்புக் கூந்தல், உடம்பில் காயமோ, தழும்போ இல்லாமல் இருப்பதெல்லாம் அடிப்படை அம்சங்கள். பின்னர் சிறுமியின் குரல், உச்சரிப்பு சோதிக்கப்படும். உணர்ச்சிகள் குறித்த சோதனைகள் மட்டும் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிறுமிகளிடம் நிகழ்த்தப்படும். அவர்களது உணர்வுநிலைகள் பரிசோதிக்கப்படும். தலேஜூவின் ஆசி பெற்ற சிறுமி அழவோ, சிரிக்கவோ மாட்டாள். அவளால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். அவளே குமாரியாகத் தகுதி பெற்றவள்.

தலேஜூ

குமாரி தேவி என்பவர்கள் நேபாள மக்களால் வாழும் தெய்வமாகக் கருதப்படும் சிறுமிகள். தலேஜூ பவானி எனும் தெய்வத்தின் மனித வடிவாக இச்சிறுமிகள் கருதப்படுகின்றனர். துர்கையே நேபாளில் தலேஜூ பவானியாக வணங்கப்படுகிறார். அதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. மல்லா வம்சத்தில் இருந்த ஜெயப்பிரகாஷ் மல்லா எனும் மன்னன் தலேஜூ தெய்வத்துடன் பகடை விளையாடுவது வழக்கம். அது ரகசியமாக இருக்கவேண்டும் என்பது தலேஜூவின் கட்டளை. ஆனால் மன்னனின் மனைவி இதை ரகசியமாகக் கண்காணித்து அறியும்போது தலேஜூ கடவுள் மறைகிறாள். தன்னை மீண்டும் பார்க்க விரும்பினாலோ தான் அந்த நாட்டைப் பாதுக்காக்க வேண்டும் என விரும்பினாலோ நெவாரி சமூகத்தில் தன்னைத் தேடிக் கண்டடைய வேண்டும் என்கிறாள். தான் அச்சமூகத்தில் ஒரு சிறுமியாக அவதாரம் எடுப்பேன் என்கிறார். ஏறக்குறைய இதையொட்டி வெவ்வேறு புராணக் கதைகள் சொல்லப்பட்டாலும் பெரியதாக மாற்றங்கள் இல்லை.

2008க்குப் பிறகு நேபாளில் மன்னராட்சி முடிவுக்கு வந்தாலும் இன்று மக்களாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் தான் பதவியேற்றதும் முதலில் காத்மண்டுவில் உள்ள ராயல் குமாரியிடம் வந்து ஆசி பெறுகிறார். எனவே மரபாகத் தொடரும் குமாரி தேவியின் முக்கியத்துவத்துக்கு எந்தக் குறைவும் இல்லை.

நாங்கள் உள்ளே நுழைந்தபோது தர்பார் சதுக்கத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் கொஞ்சம் மிரட்டலாகவே எங்களை வழிநடந்தினர். எங்கள் வழிகாட்டியான கணேஷிடமும் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டனர். தாங்களே அங்கு முதன்மையான வழிகாட்டிகள் தாங்கள் சொல்வதுபோலவே நடந்துகொள்ள வேண்டுமெனக் கூறினர். வெயிலுக்கு ஓரமாக ஒதுங்கி நின்ற எங்கள் நண்பர்களைப் படியைவிட்டு இறங்கச் சொல்லி அவர்கள் அழைத்து வந்த சுற்றிலாவாசிகளை அங்கு நிற்க வைத்தனர். காமிராவை அங்குப் பயன்படுத்த அனுமதி இல்லை. குமாரி தேவியைப் புகைப்படம் எடுக்கக்கூடாது. அவர் சில வினாடிகள் மட்டுமே காட்சி கொடுப்பார். அப்போது கைக்கூப்பி வணங்க வேண்டும். பல்வேறு கட்டளைகள், பலவிதமான விதிமுறைகள்.

நாங்கள் பொறுமையாக அங்குக் காத்திருந்தோம். இந்தக் குமாரியின் பெயர் திரிஷ்னா ஷாக்யா. 2018ஆம் ஆண்டு தனது மூன்றாவது வயதில் ராயல் குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். குமாரி தேவியின் கால்கள் தரையில் படக்கூடாது. எனவே அவர் வெளியே சென்றால் தேரில் அழைத்துச் செல்லப்படுகிறார். சில சமயம் கோயில் பிரதிநிதிகளால் தூக்கி வரப்படுகிறார். எனவே தேவி எங்கு எப்படித் தோன்றுவாள் என்பதைக் காண ஆவலாய் இருந்தோம்.

தொடரும்

(Visited 177 times, 1 visits today)