குமாரிகள் கோட்டம் – 19

குமாரியாக சனிரா

ராயல் குமாரி இரண்டாவது மாடியில் இருந்த மையமான சன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது கீழ்த்தளத்தில் அமைதி சூழ்ந்தது. பழுப்பும் கறுப்புமாக இருந்த கட்டடத்திலிருந்து சிவப்புடையுடன் ஓர் ஒளித்துளியாக குமாரி தேவி பிரசன்னமானார். யாரையும் குறிப்பிட்டுப் பார்க்காத கண்கள் குமாரி தேவியுடையது. விழியோரங்களில் கூர்மை கொண்ட மையால் கண்கள் துலங்கி தெரிந்தன. குமாரியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இருக்கக் கூடாது என்பதுதான் விதி. குமாரி தேவி முகத்தில் தோன்றும் சின்னச் சின்ன சலனங்களுக்குக் கூட காரணங்கள் கணிக்கப்படும். புருவத்தை அசைப்பதுகூட அபச குணமாகக் கருதப்படும். குமாரி தேவி அதிக பட்சம் இருபது வினாடிகள் எங்களைப் பார்த்திருப்பார். பின்னர் அமைதியாகத் தன்னை அறையிருளுக்குள் இழுத்துக்கொண்டார்.

முடிந்தது.

எல்லாரும் மெல்ல மெல்ல கலைந்தனர். ராயல் குமாரி நேபாளின் அடையாளம். விமான நிலையம் தொடங்கி எங்கெங்கும் அவளது நாமங்கள் உச்சரிக்கப்படுகின்றன. பருவம் அடைவதுவரை அவளையே கடவுளாக ஏற்கும் மரபு இன்னும் அறுபடாது உள்ளது. நான் பார்த்த அந்த சில வினாடிகளை மறுபடி மறுபடி மனதில் உருவாக்கிப் பார்க்க முனைந்தேன். கள்ளமற்ற ஒரு குழந்தையின் முகம்தான் எட்டிப்பார்த்தது.

நேபாள் பயணத்தில் குமாரி தேவிக்கான திட்டங்களைக் கோகிலா வகுத்திருந்தார். அதன் அடிப்படையில் நாங்கள் சனிரா பஜ்ராச்சார்யா (chanira bajracharya) அவர்களைக் காண வேண்டியிருந்தது. சனிரா ஒரு முன்னாள் குமாரி. இப்படி முன்னாள் குமாரிகள் பலர் நேபாளில் இருந்தும் நாங்கள் சனிராவைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இருந்தது.

ஏப்ரல் 2000 இல் வாழும் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சனிரா மே 2001 இன் பிற்பகுதியில் இடைவிடாது மூன்று நாட்கள் அழத்தொடங்கினார். குமாரிகள் அப்படி அழுவது கெட்ட சகுனமாகக் கருதப்படும். எனவே புத்த பிக்குகள் காரணம் தெரியாமல் குழம்பினர். ஏதோ கெட்ட செய்தி நடக்க உள்ளது என நடுங்கினர். மூன்றாவது நாள் தன் அழுகையை நிறுத்திய சனிரா தன் பணி முடிந்தது என அறிவித்தார். அடுத்த சில மணி நேரத்தில் குமரிகருக்கு தொலைபேசி வழி செய்தி வந்தது. நேபாள அரசகுடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பரவியது.

உலக வரலாற்றில் அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாத படுகொலைகள் அவை. நிறைய ஆவணப்படங்கள் அது குறித்து வந்துள்ளன. 2001, ஜூன் 1ஆம் திகதி நேபாளத்தின் தலைநகரம் காத்மண்டுவில் அமைந்த நாராயணன்ஹிட்டி அரண்மனையில் இச்சம்பவம் நடந்தது. அப்போது அரசு விருந்து நடந்துகொண்டிருந்தது. இளவரசர் திபெந்திரா கடும்போதையில் விருந்தில் நுழைந்து துப்பாக்கியால் அங்கிருந்த மக்களைச் சுட்டார். திபேந்திராவின் தந்தையார் மன்னர் பிரேந்திரா, அவரின் தாய் அரசி ஐஸ்வரியா உட்பட 10 பேர் அதில் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிறகு திபேந்திரா தன்னைத் தானே சுட்டு நான்கு நாட்களுக்கு பிறகு இறந்தார். இக்கொலைக்கான காரணம் இன்றுவரை அறியப்படாவிட்டாலும் திபேந்திராவின் இளைய சகோதரர் ஞானேந்திராவின் ஆட்சியுடன்தான் நேபாளின் மன்னராட்சி 2008இல் நிறைவுக்கு வந்தது.

சனிரா ராயல் குமாரி அல்ல. அதாவது காத்மண்டு தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ள குமரிகரில் அவர் வசிக்கவில்லை. அவர் பதான் தர்பார் சதுக்கத்தின் தெய்வமாவார். இந்தக் கொடும் சம்பவம் நிகழ்ந்தபோது ராயல் குமாரியாக இருந்த சிறுமியிடம் எவ்வித அறிகுறிகள் வராததால் நான்கு நாட்கள் இடைவிடாமல் அழுத சனிராவின் பக்கம் கவனம் திரும்பியது. நேபாள் மக்களால் கவனிக்கப்படும் தெய்வமாக அவர் மாறினார்.

சனிரா மற்றுமொரு விதத்தில் வித்தியாசமானவர். சனிராவின் பெற்றோர்கள் தனது மகளுக்கு முறையான கல்வி வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டதின் பேரில் குமாரிகளின் மரபில் சில மாற்றங்கள் எழுந்தன. அவர் வாழ்ந்த குமரிகரிலேயே அவருக்கு பிரத்தியேக ஆசிரியர்களால் பாடங்கள் போதிக்கப்பட்டன. 15 வயதில் முதன்முறையாக மாதவிடாய் வந்தபோது சனிராவின் ஆட்சிக்காலம் முடிந்தது. கல்வி சனிராவுக்கு சராசரி வாழ்வை வலுவாக்கிக் கொடுத்தது. காத்மண்டு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தைப் பயின்றார். வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பெற்றார். சரளமாக அவர் பேசும் ஆங்கிலமும் அறிவார்த்தமான சிந்தனையும் உலகின் கவனத்தை அவர் பக்கம் இழுத்தது. பிபிசியில் அண்மையில் வந்த அவர் நேர்காணலால் அவர் மேலும் பிரபலமானார். எனவே எளிதில் யாரும் நெருங்காதபடிக்கு தன் தொடர்புகளைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

சனிரா ஒரு நாட்டியத் தாரகை. எனவே கோகிலா தன் நடன யூடியூப் சேனலை அறிமுகம் செய்து அவரிடம் பேசினார். தமிழில் குமாரிகள் குறித்து எழுதும் ஆவலைச் சொல்லி எனது சில ஆங்கிலக் கதைகளை அவருக்கு அனுப்பி வைத்தார். பிபிசி நேர்காணலுக்குப் பின்னர் பல்வேறு சந்திப்புகளுக்காக ஒப்பந்தம் செய்ய காத்துக்கொண்டிருந்தோர் வரிசையில் எங்களைச் சந்திக்க சனிரா இலகுவாக வழி விட்டார். அவரைக் காணத்தான் நாங்கள் பதான் தர்பார் சதுக்கத்துக்கு விரைந்துகொண்டிருந்தோம்.

கோகிலவாணி யூடியூப்

பதான் தர்பார் சதுக்கத்தில் சனிரா குமாரி தேவியாக இருந்த அதே குமரிகரில் காத்திருந்தோம். இப்போது பதான் தர்பார் குமாரி தேவியை பார்க்கும் எண்ணம் இருந்தது. ஆனால் இரண்டு மணிக்குப் பிறகுதான் அவரைச் சந்திக்க முடியுமென கூறப்பட்டதால் சனிராவின் அழைப்புக்குக் காத்திருந்தோம்.

கொஞ்ச நேரத்தில் எங்களுக்கு சனிராவிடம் இருந்து அழைப்பு வந்தது. நடக்கும் தொலைவில் அவர் வீடு. இளஞ்சிவப்பு உடையில் சனிரா எங்களுக்காகக் காத்திருந்தார். அழகி. ஒளிகொண்ட பெண்.

சனிரா எங்களை தனது பிரத்தியேக அறைக்கு அழைத்துச் சென்றார். அவர் அனுமதித்த எண்ணிக்கையைவிட நாங்கள் சற்று பெரிய குழுவாக இருந்ததில் அவர் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது. ஆனால் நான் பேருந்திலேயே ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளைத் தொகுத்து வைத்திருந்ததால் உரையாடலில் சிக்கல் வராது என்பதில் உறுதியாக இருந்தேன். கோகிலா மட்டுமே கேள்விகள் கேட்டு அவர் பதில் அளித்தால் போதுமானது எனப் பொதுவான ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். அது இடையூறு இல்லாத் உரையாடலுக்கு வழிவகுக்கும்.

சனிரா மிக இயல்பாகப் பேசத் தொடங்கினார். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எங்கள் உரையாடல் தொடர்ந்தது. வல்லினம் இதழுக்காக அவற்றைப் பதிவு செய்துக்கொண்டோம். குமாரிகள் குறித்த பொதுவான தகவல்களைச் சொன்னவர் தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரிகளின் மன தைரியத்தைச் சோதிக்க துண்டிக்கப்பட்ட எருமை தலைகளுடன் ஓரிரவு முழுவதும் தங்க வைக்கும் சடங்கும் குமாரி தேர்வில் நடக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் என்றார். இன்று சில யூடியூப் தளங்களில் அதுபோன்ற பொய்களைப் பரப்புகின்றன என்றார்.

ஏராளமான நேர்காணல்களுக்கு பதில் கூறி சனிராவுக்கு பழக்கம் இருந்திருக்க வேண்டும். சரளமான ஆங்கிலத்தில் எங்கள் கேள்வியின் நோக்கத்தை அறிந்து விரிவாகவே பதில் சொன்னார்.

“குமாரிகளும் சாதாரண சிறுமிகள்போலதான் மற்ற நேரங்களில் இருப்பர். எங்களுக்கும் எல்லா உணர்ச்சிகளும் உண்டு. ஆனால் வெளியாட்களைப் பார்க்கும்போது உணர்ச்சியைக் காட்டக்கூடாது. அப்படி காட்டினால் அது பிற விளைவுகளுக்கான குறியீடுகளாகக் கருதப்படும். மற்றபடி தொலைக்காட்சி பார்த்தல், பொம்மைகளுடன் விளையாடுதல் என எங்கள் நேரம் மகிழ்ச்சியாகக் கழியும். குமாரிகள் கோயிலைவிட்டு வெளியேற முடியாது. கோயிலைத் தவிர எங்கள் பாதம் வேறெங்கும் படாது.” என்றார் சனிரா.

“உங்கள் குழந்தைப் பருவத்தை அதன் மகிழ்ச்சியோடு இழந்ததாக நீங்கள் கருதவில்லையா?” என்றோம்.

“நிச்சயம் இல்லை. வேறு யாருக்கும் கிடைக்காத வாழ்வும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கும்போது ஏன் அப்படி கருதவேண்டும். குமாரி வாழ்விலேயே வாழ்வில் நீடிக்க மாட்டோமா என்ற ஏக்கம்தான் இருக்கும்.” அப்படிச் சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு சிறுமியின் சாயல் எட்டிப்பார்த்தது.

“அத்தனை நாட்கள் உங்களை கடவுளாக வணங்கிவிட்டு, நீங்கள் பருவம் அடைந்தபோது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் சொன்ன தருணம் எப்படி இருந்தது?”

“உண்மையில் என் பெற்றோருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். என் அம்மா இந்த வாழ்க்கை நிரந்தரமானதல்ல என என்னிடம் எப்போதுமே சொல்லிக்கொண்டிருப்பார். எனவே நான் இயல்பு வாழ்வுக்குத் தயாராகவே இருந்தேன். இயல்பு வாழ்வில் நாங்கள் எதிர்க்கொள்ளும் முதல் சவாலே சிக்கலின்றி நடக்கவும் பேசவும் பழகுவதுதான். அதிகம் நடந்துபழக வாய்ப்பு கிடைக்காததால் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். குமாரி வாழ்வு முடிந்தவுடன் நான் பள்ளியில் சேர்க்கப்பட்டதால் என் தோழிகளில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. என்னிடம் ஏதேனும் வினோத சக்தியுள்ளதா என்பது அதில் முதன்மையானது” சனிரா சிரிக்கும்போது அழகாக இருந்தார். ஆனால் அவர் மிகக் குறைவாகவே சிரித்தார்.

தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். பெரும்பாலும் அவரது மன உணர்வுகள், தலேஜூ கடவுள், இன்றைய அவரது சவால்கள் என கேள்விகளும் பதில்களும் விரிந்தன. எங்கள் வழிகாட்டி கணேஷ் மிகுந்த உற்சாகமாக இருந்தார். நேபாளில் இருந்தும் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது என்றார்.

சனிராவை முதலில் அவரது அலுவலகத்தில் பார்ப்பதாகவே திட்டம். தமிழில் குமாரிகள் குறித்து எழுதப்போகிறோம் என்றவுடன் தனது அத்தையை சந்திக்கும் திட்டத்தை அவரே வழங்கினார்.

தன குமாரி பஜ்ராச்சார்யா

சனிராவின் அத்தை தன குமாரி பஜ்ராச்சார்யா. நேபாள வரலாற்றில் அதிக ஆண்டுகள் குமாரியாக வாழ்ந்தவர். பருவம் அடைந்தால் மட்டுமே ஒரு குமாரி இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும். இந்நிலையில் தன குமாரி பருவம் அடையாமலேயே இருந்ததால் தொடர்ந்து முப்பது ஆண்டுகள் குமாரியாகவே திகழ்ந்தார். 1984ல் மன்னரின் கட்டளைக்கிணங்கி இவரது குமாரி பதவி புதியவருக்கு வழங்கப்பட்டது. இன்றும் தன குமாரி பருவம் அடையாதவர்தான். என்றென்றைக்குமான குமாரியாக அவர் சனிராவின் வீட்டில் உள்ள அறையில் தன்னை இருத்தி வைத்துள்ளார். தன் வாழ்நாளில் 2015ல் நேபாளில் நடந்த நில நடுக்கத்தின்போது மட்டுமே வீதியில் இறங்கி நடந்தவராகக் கருதப்படும் இவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு எதிர்ப்பாராதது.

நாங்கள் கைகளை கழுவிவிட்டு ஒவ்வொருவராக தன குமாரியின் முன் மண்டியிட்டு ஆசி பெற்றோம். அவர் யாருடைய முகத்தையும் பார்க்கவில்லை. பார்க்கக் கூடாது என்பதே விதி.

சனிராவிடமும் அவர் பெற்றோரிடமும் விடைகொடுத்து புறப்பட்டோம். மீண்டும் பதான் தர்பார் சதுக்கத்தில் உள்ள குமாரியைப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ராயல் குமாரியை தொலைவில் இருந்தே பார்க்க முடியும். பாதான் குமாரி அப்படியல்ல. நாம் அவர் இருக்கும் அறையில் சென்று பார்க்கலாம். அப்படி சென்றபோது எங்களை வரவேற்றவர் அவர் தாயாக இருக்க வேண்டும்.

பதான் குமாரி

சிவப்பு நிற உடையில் குமாரி அமர்ந்திருந்தார். அவரிடம் ஆசி பெற்றோம். சிறுமியின் முகத்தில் தூக்கம் இருந்தது. முகத்தில் உணர்ச்சிகள் இல்லை. பின்னர் அமைதியாக விடைபெற்றோம். அறைக்குள் நுழையும் வாசலில் குமாரியின் படிப்பறை இருந்தது. அங்கிருந்த மேசையில் குமாரி தேவி பாதி செய்து வைத்த வீட்டுப்பாட புத்தகம் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது.

கடவுளாக இருக்கும் பெண்களுக்கும் கல்வியே கடவுள் என குறியீடாக சொல்கிறார் என்றே புரிந்துகொண்டேன்.

தொடரும்

(Visited 322 times, 1 visits today)