குமாரிகள் கோட்டம் – 20

குமாரி தேவிகளைச் சந்தித்து திரும்பும்போது சிறிய சலசலப்பு ஏற்பட்டது. எங்களுடன் வந்த கோமளவள்ளி, சிவலட்சுமி, தேவஜித்தா ஆகியோரைக் காணவில்லை. அவர்கள் மூவரும் குமாரிகளைக் காணும் திட்டத்தில் இணைந்திருக்கவில்லை. அப்பகுதியில் ஷாப்பிங் செய்ய விரும்புவதாக அவர்கள் சொல்லியிருந்ததால் மீண்டும் சந்திக்கும் நேரத்தையும் இடத்தையும் நிர்ணயம் செய்துவிட்டுதான் பிரிந்தோம். திரும்பி வந்தபோதுதான் அவர்கள் அங்கு இல்லாததும் அவர்களைத் தொடர்புகொள்ள வேறு வழிகள் இல்லாததும் எங்களுக்கே உறைத்தது.

ஆனந்தி அம்மா கொஞ்சம் கலங்கிதான் போய்விட்டார். நீண்டு நெடிந்திருக்கும் அந்தச் சாலையில் அவர்களைத் தேடிக்கண்டடைவது அத்தனை எளிதல்ல. ஆனால் தேவஜித்தா தைரியமான பெண் என்பதால் அவர்கள் மூவரும் எப்படியும் வந்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒரு வாடகை வண்டி எடுத்தால் நேராக விடுதிக்கே வந்துவிடலாம். கணேஷும் எப்போதும்போல நிதானமாக இருந்தார். “முதலில் நீங்கள் அனைவரும் நமது பேருந்தில் விடுதிக்குத் திரும்புங்கள். நானும் ஆனந்தியும் இங்கேயே காத்திருந்து அவர்கள் மூவரையும் அழைத்து வருகிறோம்” என்றார்.

கணேஷ் பொறுமையாகப் பேசும் விதம், பதற்றமற்ற அவரது அணுகுமுறைகள், எல்லா இடங்களிலும் காட்டும் உணர்வுச் சமநிலை போன்றவை என் மனதுக்கு நெருக்கமாக இருந்தது. ஆன்மிகவாதிகளிடம் உள்ள சலனமின்மை அவர் கண்களில் எப்போதும் நிலைத்திருந்தது. அவர் முடிவின்படி நாங்கள் பேருந்தில் ஏறிச்செல்ல தயாரானபோது கந்தா அவர்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்துமிடம் வந்து சேர்ந்தார். ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்த மூவரையும் தான் கண்டடைந்த விதத்தை தனக்கே உரிய பாணியில் சொல்லி அச்சூழலை நகைச்சுவையாக்கினார்.

அனைவரும் மலேசியா திரும்ப தயாரானோம். விடுதிக்குச் சென்று பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு குளித்து கிளம்புவதுதான் திட்டம். பிரியாணி என மனதில் நினைத்தபோதே வாயும் வயிறும் அதற்குத் தயாராகின. இனி வாழ்நாளில் ‘டால் பாத்’ என்ற உணவையே கண்ணால் பார்ப்பதில்லை என மனதில் சத்தியம் செய்துக்கொண்டேன். பிரியாணியை ஓரிரு வாய் வைத்தபோது விமானம் மூன்று மணி நேரம் தாமதம் என சுரேஷிடம் இருந்து அறிவிப்பு வந்தது. உண்மையில் எங்கள் விமானம் நேபாள நேரப்படி இரவு 8.40க்கு. பலரும் மலேசியாவுக்கு அதிகாலை நான்குக்குள் அடைந்திவிடலாம்; குளித்துவிட்டு பள்ளிக்குச் செல்லலாம் என்றே திட்டமிட்டிருந்தனர். அப்படித் திட்டத்தில் இருந்தவர்கள் முகமெல்லாம் வாட்டம்.

எனக்கு நிம்மதி. அவசரமாகக் கிளம்ப வேண்டியதில்லை. பொறுமையாக பிரியாணியைச் சுவைத்துவிட்டு குளித்தேன். கொஞ்ச நேரம் தனிமையும் அமைதியும் தேவைப்பட்டது. விடுதியின் வரவேற்பறையில் இருந்த விசாலமான இருக்கையில் சென்று அமர்ந்தேன். முதல் நாள் தொடங்கிய பயணம் முதல் ஒவ்வொன்றாக மனதில் ஓடியது. அடுக்கடுக்கான காட்சிகள். பல்வேறு வகையான உணர்வு நிலைகள். என்னளவில் இது ஒரு நிறைவான பயணம். எந்தப் புகைப்படங்களையும் விட என் ஆழ் மனதில் பதிந்திருக்கக் கூடிய அனுபவங்கள் மெல்ல மெல்ல படிமங்களாகும். அவை பின்னர் புனைவுகளுக்கான கச்சா பொருட்களாக மாறும்.

அரவின் வந்து எழுப்பியபோதுதான் இருக்கையிலேயே உறங்கிவிட்டதை அறிந்தேன். முகத்தைக் கழுவிக்கொண்டு அனைவரும் கூடியிருந்த இடத்திற்குச் சென்றேன். சுரேஷ், சின் தப்பா, கணேஷ் ஆகியோர் உற்சாகமாக இருந்தனர். பயணம் நிறைவாக அமைந்த திருப்தி அனைவரது முகத்திலும் இருந்தது. எல்லாருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. எனக்கு கணேஷ் வழங்கினார்.

இரண்டு வேனில் விமான நிலையம் புறப்பட்டோம். வழியனுப்பி வைக்க கணேஷ் வந்திருந்தார். Prinstine Nepal சுற்றுலா நிறுவனத்தை உருவாக்கியவர் அவர். நேபாள் பயணம் செய்ய நினைக்கும் யாரும் நம்பிக்கையாக அணுகிச்செல்லக் கூடிய நிறுவனம் இது. முகநூலில் இவர்கள் சுற்றுலா நிறுவனம் குறித்த தகவல்கள் உள்ளன. கணேஷும் சின் தப்பாவும் அதன் இந்நிறுவனத்தின் முதுகெலும்புகள்.

விமான நிலையத்தில் நாங்கள் செல்ல வேண்டிய விமானம் குறித்த எந்தத் தகவல்களும் இல்லை. நேபாள் ஏர்லைன்ஸ் கொஞ்சம் அலட்சியமானதுதான். எனவே மெதுவாகவே அறிவிப்புகள் வரும் எனக் காத்திருந்தோம். பெரும்பாலான அறிவிப்புகள் நேபாள் மொழியிலேயே இருந்தன. திடீரென மலேசியாவுக்குச் செல்லும் பயணிகள் அனைவரையும் தனியாக ஓர் இடத்திற்கு அழைத்தனர். குத்துமதிப்பாக விசாரித்துவிட்டு நாங்களும் அந்தக் கூட்டத்தில் இணைந்தோம்.

சண்முகம்

எங்கள் குழுவில் இருந்த ஆசிரியர் சண்முகம் முறையற்ற இந்த நிர்வாகத்தால் கொஞ்சம் கோபம் அடைந்துவிட்டார். விமான நிலையத்தில் கண்ணில் பட்ட அதிகாரிகளிடம் “முதலில் முறையாக ஆங்கிலத்தில் அறிவிக்கச் சொல்லுங்கள். ஒரு விமான நிலையத்தில் ஆங்கில அறிவிப்பு முக்கியம். ஏன் இப்படி அல்லாட வைக்கிறீர்கள்” எனக் கடிந்துகொண்டார். யாரும் அதை பொருட்படுத்துவதாக இல்லை.

நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டது விமான நிலைய உணவகம். விமானம் மேலும் தாமதம் ஆனதால் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அரவின் கொஞ்சம் கலங்கி விட்டார். “என்னண்ணே இன்னும் லேட்டுன்னு சொல்றாங்க” என்றவர் குரலில் சோகம். அவரும் மறுநாள் பள்ளிக்குச் செல்லும் திட்டத்தில் இருந்தால். விமானத் தாமதம் என்பது இயல்பானது. அதற்கு எதிர்வினையாற்றுவதெல்லாம் சக்தி விரையம். அச்சூழலை ஏற்பதும் ஒத்துப்போவதும் மட்டுமே சூழலை எதிர்கொள்ளும் வழி.

நான் முழுக்க அமைதியாகவே இருந்தேன். எதிர்மறையாக ஒரு சொல்லையும் யாரிடமும் வெளியிடவில்லை. “உணவெல்லாம் கொடுக்கிறார்கள் என்றால் இன்னும் விமானம் தாமதிக்குமா? உங்கள் அனுபவத்தில் என்ன நினைக்கிறீர்கள் நவீன்?” என சுரேஷ் கேட்டார். “இல்லை. இது வழக்கமான விமான நிலைய முறை. குறிப்பிட்ட மணி நேரம் தாமதமானால் உணவு கொடுப்பார்கள். மேலும் தாமதமானால் நமக்கு தங்கும் வசதி செய்துக்கொடுக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கே உண்டு.” என்றேன். “அவ்வளவு தாமதமாகுமா?” என நண்பர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது.

“இல்லை. என் உள்ளுணர்வில் பன்னிரெண்டுக்குள் நமக்கான விமானம் வந்துவிடும் என்றே தோன்றுகிறது” என்றேன்.

கொஞ்ச நேரத்தில் எங்களுக்கான உணவு வந்தது. அதே ‘டால் பாத்’. நான் செய்த சத்தியத்தில் நானே கொள்ளியை வைத்தேன். ஆன்மா அழுதது.

நேரம் ஆக ஆக நண்பர்கள் கொஞ்சம் பதற்றமடையத் தொடங்கினர். அன்னபூரணா மலை ஏற்றம் எனக்கு சிலவற்றைச் சொல்லிக்கொடுத்திருந்தது. முதலில் மலையைப் பார்த்து ‘ஆ’ என வியந்தால் மொத்த பயணமும் சிக்கலாகும். நிகழ்காலத்தில் எடுத்துவைக்கும் அடிகளே முக்கியம். மலையில் ஏற்றம் இருந்தால் அடுத்து இறக்கமும் இருக்குமென அர்த்தம். அதுபோல இறக்கம் இருந்தால் ஏற்றமும் நிச்சயம்.

ஜெகதீசனுடன் நண்பர்கள்

மலையில் அடிகள் எடுத்து வைப்பதுபோல நான் அப்போதைய வினாடிகளில் என்னை நிறுத்திக்கொள்ள முயன்றேன். அடுத்து எழுத வேண்டிய குமாரிகள் கோட்டம் குறித்து யோசிக்கத் தொடங்கினேன். ஜப்பானில் பத்தாண்டுகளுக்கு மேல் வேலை செய்த ஜெகதீசன் அவர்களின் அனுபவங்கள் குறித்து அறிவது அந்நேரத்தை சுவாரசியமாக்கியது. ஜெகதீசன் சுவாரசியமான உரையாடல்காரர். இந்தப் பயணத்தில் கிடைத்த மனதுக்கு நெருக்கமான நண்பர். அவரிடம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.

பன்னிரெண்டுக்குள் விமானம் வந்துவிட்டதாகச் செய்தி வந்தது. இனி விமானம் ஏற வேண்டும். ஏறிய விமானம் எல்லாம் தரையில் இறங்கத்தானே செய்யும்.

முற்றும்

(Visited 181 times, 1 visits today)