Wiki Impact : மை ஸ்கில்ஸ் அறநிறுவனமும் சமூகத்தின் நம்பகத்தன்மையும்

மலேசியாவுக்கு வரும் முக்கியமான ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள், கலைஞர்கள் என பலரையும் நான் மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் நடத்தும் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதுண்டு. 2012ஆம் ஆண்டு கிள்ளான் நகரில் அமைந்துள்ள கைவிடப்பட்ட பேருந்து முனையத்தில் அக்கல்லூரி இயங்கிய காலத்திலும் 2018ஆம் ஆண்டு தொடங்கி கலும்பாங்கில்  34 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலிலும் நான் தொடர்ச்சியாக ஏதோ ஒருவகையில் என்னை அவ்வமைப்புடன் பிணைத்தே வந்துள்ளேன்.

பொதுவாகவே எது குறித்தும் உடனடியாக எதிர்மறை எண்ணங்களை முன்வைக்கும் நண்பர்கள் எக்குழுவிலும் அமைவது இயல்பு. அப்படி என்னைச் சுற்றியும் சிலர் இருந்தனர். இன்றுவரையிலும் ஏதோ ஒரு வடிவத்தில் மை ஸ்கில்ஸ் குறித்த அவதூறுகளை அவர்கள் முன்னிறுத்தியபடியும் உள்ளனர். மை ஸ்கில்ஸ் மீது என் உறுதியான நம்பிக்கைக்கு என்ன காரணம் என அவர்களுக்கு எப்போதும் குழப்பம் இருப்பதுண்டு. எதன் அடிப்படையில் அவ்வமைப்பின் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளேன் எனக் கேட்பதும் உண்டு.

அது மிக எளிது.

பிரம்மாண்டமான திட்டங்களையும் ஆடம்பரமான கட்டமைப்புகளையும் நான் எப்போதும் நம்புவதில்லை; நான் நம்புவது அதை முன்னெடுக்கும் மனிதர்களை மட்டுமே. ஒரு செயல்பாட்டிற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கொண்டே அந்தத் திட்டத்துடனான என் பிணைப்பு அமைகிறது. வழக்கறிஞர் பசுபதியும் மருத்துவர் சண்முகசிவாவும் உள்ள ஓர் அமைப்பில் சுயநலமும் ஊழலும் மொண்ணைத்தனமும் ஒருபோதும் நுழையாது என்பதை அழுத்தமாகவே ஒவ்வொருமுறையும் பதிவு செய்திருக்கிறேன். அதை உள்ளூர அறிந்தும் வைத்திருக்கிறேன். அந்த அறிதல் அரூபமானது. ஒருவகையில் ஆன்மிகம் போன்றதுதான். அவ்வளவு எளிதில் விளக்கிவிட முடியாதது.

இந்தப் புரிதலோடுதான் சமூக அக்கறையுடன் எனக்கு அறிமுகமாகும் நண்பர்களிடம் நான் உரையாடும்போதும் இயல்பாக மை ஸ்கில்ஸ் குறித்த பேச்சு வந்துவிடும். அப்போது அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி நான் அவ்வமைப்பில் ஓர் அங்கமா என்பதுதான். சமூகத்தின் மீது அக்கறைகொண்ட ஒருவர் மை ஸ்கில்ஸின் ஒரு பகுதியாவது தன்னியல்பாகவே நிகழ்கிறது. அது அதிகாரப்பூர்வமாக நிகழவேண்டிய அவசியம் இல்லை. அன்பு செலுத்த யார் யாரை நிர்பந்திப்பது? அல்லது யார் யாரை தடுப்பது?

மை ஸ்கில்ஸ் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியை மட்டும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதுபோன்ற மாணவர்களுக்கு வாழ்க்கையை ஆக்ககரமானமுறையில் வழிநடத்தும், திறனையும் கற்பிக்கும் ஆளுமை உருமாற்ற அமைப்பாகச் செயல்படுகிறது. எதிர்காலத்தில், சுயமாக சமூகத்தில் சிந்திக்கும் ஆற்றல்கொண்ட மாணவர்களையும் சுதந்திரமாக இயங்கக்கூடிய மனிதர்களையும் உருவாக்கித் தருவதை மை ஸ்கில்ஸ் வழங்கும் பயிற்சிகள் மூலம் நானே நேரில் கண்டுள்ளேன். தொழிற்திறன் கல்வியை வழங்க நாட்டில் பல கல்லூரிகள் இயங்கினாலும் தங்களின் கசப்பான வாழ்விலிருந்து மீண்டு சமூகத்தோடு ஒன்றிணைந்து செயல்படும் அணுக்க முறைகளை கற்பிற்கும் இலவசம் கல்வி மையம் மை ஸ்கில்ஸ்.

தனிப்பட்ட முறையில் நான் ஒவ்வொருமுறையும் அங்குச் செல்லும்போது அடைவது கடுமையான குற்றஉணர்ச்சிதான். எனக்கு அறிமுகமே இல்லாத ஒரு மாணவனின் வீழ்ச்சிக்கு நான் எப்படியும் ஒரு காரணம் என்ற எண்ணமே தோன்றும். மை ஸ்கில்ஸ் ஒருவகையில் நமது ஒவ்வொருவரின் ஆழுள்ளங்களையும் கேள்வி எழுப்பும் அமைப்பு. நுண்ணுணர்வு கொண்ட ஒருவர் அங்கு தான் ஆற்றவேண்டியது சேவையல்ல; கடமை என்பதை எளிதாக அறிந்துகொள்வார். அங்கு ஒவ்வொரு மனிதனும் மறுபடி செலுத்த வேண்டிய கடன், அன்பு மட்டுமே என புரிந்துகொள்வார்.

***

விக்கி இம்பாக்ட் (Wiki Impact) என்ற இணையத்தளம் மலேசிய அறநிறுவனங்களின் வெளிப்படைத் தன்மைக்கான மதிப்பெண்கள் (Transparency score of Malaysia Foundation) என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையைப் பார்க்க நேர்ந்தபோது முதலில் உண்டானது ஒரு மனநிறைவு. மை ஸ்கில்ஸ் 90 புள்ளிகள் பெற்று மலேசியாவில் நம்பகமான அறவாரியம் எனும் தகுதியை அடைந்திருந்தது. மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் குறித்து நண்பர்களுடனான என் அழுத்தமான பகிர்வுகளுக்குக்  கிடைத்த சான்றிதழாகவே அதை எதிர்க்கொண்டேன். எளிமையான முறையில் அனைத்தையும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது அத்தளம்.

விக்கி இம்பாக்ட் (Wiki Impact) தளத்தை ஆராய்ந்தபோது அதன் நோக்கம் தெளிவாகப் புரிந்தது. இங்குச் செயல்படும் லாபநோக்கமற்ற அறநிறுவனங்களும் தொழில்துறைகளும் சரியான தாக்கத்தைச் சமூகத்தினரிடையே உருவாக்கியுள்ளதா என்பதனைத் தரவுகள் மூலம் ஆராய்ந்து இத்தளம் மதிப்பிடுகிறது. இதன்வழி சமூகத்தினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறநிறுவனங்களைக் கண்டறிந்து அடையாளப்படுத்துவதோடு சமூகத்தினரிடையே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களை அடையாளம் காணுவதையும் இத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அறநிறுவனங்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை தளத்தின் அறிக்கையில் வழி அறிந்துகொள்ளவும் முடிந்தது. அதன்படி, மலேசியாவில் 1,567 பதிவு செய்யப்பட் அறநிறுவனங்கள்  செயல்படுகின்றன. அதிகமான அறநிறுவனங்கள்,  கிள்ளான் பள்ளத்தாக்கில்தான் இயங்குகின்றன. இதில் கல்வி சார்ந்த அறநிறுவனங்களே அதிகம் உள்ளன. மிகக் குறைவாக விலங்கு நலன் சார்ந்த அறநிறுவனங்கள் உள்ளன.

மலேசியாவில் உள்ள அறநிறுவனங்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மையுடன் சமூகத்தில் இயங்குகின்றன என்பதன் அடிப்படையில் விக்கி இம்பாக்டில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த குழுவினரால்   புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. ரகசியத்தன்மையற்று வெளிப்படையாகச் சமூகத்தினரிடம் செயல்படுதல், தொடர்ச்சியாகச் செயல்படுதல், நம்பகத்தன்மையுடன் செயல்படுதல் (transparency, frequency and credibility) ஆகியவற்றின் அடிப்படையில் இவை மதிப்பிடப்பட்டுள்ளன.

விக்கி இம்பாக்ட் தரவுகளைத் திரட்டிய முறைதான் அதன் நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக உள்ளது. தரவுகளைத் திரட்டும் பொருட்டு அது எந்த அறநிறுவனங்களையும் நாடவில்லை. எந்த தரப்பு வழங்கும் தகவல்களைத் தங்கள் ஆய்வில் மூலப்பொருளாகப் பெறவில்லை. அறநிறுவனம் என்பவை மக்களுக்காக இயங்குபவை. எனவே சாமானியன் பார்வையில் அதன் வெளிபாட்டுத் தன்மை என்ன என்பதையே அவர்கள் சுயமாக ஆராய்ந்துள்ளனர். பொதுவில் கிடைக்கப்பெறும் தகவல், தரவு, அறிக்கை போன்றவற்றை மதிப்பாய்வு செய்து இம்மதிப்பீடு நடந்துள்ளது.

‘விக்கி இம்பாக்ட்’ எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி தரவுகளைத் திரட்டியதோடு கட்டணமின்றி ஆய்வின் முடிவுகளை பொதுவில் வழங்குகின்றது.  உண்மைச் சம்பவங்கள்,  நம்பகமான புள்ளிவிவரங்கள் என ஆதாரங்களின் அடிப்படையில் தரவுகள் திரட்டப்பட்டு அவை குறித்து ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த ஆய்வுகளில் பங்களிப்பவர்கள் துறைசார்ந்த நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சட்டத்தின் படி அறநிறுவனங்கள் தங்களின் ஆண்டு அறிக்கை, கணக்கறிக்கை/நிதி அறிக்கை, தங்கள் அமைப்பு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய அறிக்கைகளைச் சமூகத்திடம் காட்ட வேண்டிய கட்டாயமில்லை. இயக்குனர் குழு, நிதி பற்றிய தகவல்களையும் பொதுவில் அறிவிக்கத்  தேவையில்லை. அதற்கேற்ப சில அறநிறுவனங்களும் ரகசியத்தன்மையுடனே இயங்க விரும்புகின்றன.

இத்தகைய சூழலில் ரகசியத்தன்மையற்று வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையாகவும் சமூகத்தின் மத்தியில் செயல்படும் அறநிறுவனங்கள்தான் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு மதிப்பிட்டதில்தான்  90% புள்ளிகளைப் பெற்று மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் அதிக புள்ளிகளைப் பெற்ற அறநிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மேலும் 1567 அறநிறுவனங்களில் 32 அறநிறுவனங்கள் A மதிப்பீட்டைப் பெற்றுள்ள சூழலில் அந்தச் சிறப்பை பெற்ற அறநிறுவனங்களில் ஒன்றாகவும் மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளிகள் வழங்கப்பட்ட காரணத்தையும் இத்தளம் தெளிவாக விவரித்துள்ளது. அதன்படி, மைஸ்கில் அறநிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றிய தெளிவுகள், நிதி பற்றிய தகவல்கள், அறக்கொடையாளர்கள் பற்றிய விவரங்கள், அறநிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மைஸ்கில் அறநிறுவத்தின்  இணையப்பக்கத்தில் பொது மக்களால் சுலபமாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது. அதோடு, மைஸ்கில் அறநிறுவனத்தின் சமூக ஊடகப்பக்கங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இவையெல்லாம், பொது மக்களிடம் தங்களின் அறநிறுவனத்தைப் பற்றிய தகவல்களை எந்தவொரு ரகசியத்தன்மையும் அற்று வெளிப்படையாகக் கொண்டு சேர்க்கின்றது என்பதற்குச் சான்றாக அமைகின்றது.

இந்த ஆய்வின் நோக்கத்தை விக்கி இம்பாக்ட் தெளிவாக வரையறுத்துள்ளதையும் காண முடிந்தது. அதன்படிசமூகத்தினருக்கு உதவும் அல்லது சமூகத்தினரிடையே மாற்றத்தை ஏற்படுத்த செயல்படுபவர்களுக்கு இத்தளம் உதவியாக அமையும். மேலும் விக்கி இம்பாக்ட் வழி கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்க நினைப்பவர்கள் தகுந்த அறநிறுவனத்தைக் கண்டறிந்து அவர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பை Wiki Impact  உருவாக்கி தருகின்றது. அதோடு, சமூக ஆர்வலர்கள் சரியான இடத்தில் தங்களின் நிதியை வழங்கவும் வழிவகுக்கின்றது.

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’

பாரதி எப்போதும் எதற்கும் முன்னோடி. அவன் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லிவிட்டுச் சென்றதைதான் மை ஸ்கில்ஸ் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. இலக்கியம் கற்றவர்களும் அதன் இனிமையை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல் செயல்படுத்த முற்படும்போதுதான் சமூகம் மேம்படும்.

மை ஸ்கில்ஸ் அறவாரியம் – தமிழ் விக்கி

பசுபதி சிதம்பரம்

மா. சண்முகசிவா

(Visited 40 times, 1 visits today)