கீலாக்காரன் (சிறுகதை)

“இங்கேருந்து ஓடிப் போயிடு!”என்றேன் ரகசியமாக. அதைச் சொல்லும் தைரியம் எனக்கு எப்படி வந்ததெனத் தெரியவில்லை. யாரும் வருகிறார்களா எனச் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டேன்.

சீத்தாராமன் நான் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல கனிவுடன் பார்த்தார்.

“எங்கயாச்சும் போயிடு… போ!” என்றேன் மீண்டும்.

“சாப்பிட்டியா மேன்?” உச்சிக்கால பூஜை மணியோசையின் பின்னணியில் சீத்தாராமனின் குரல் கெஞ்சும் தொணியில் நீண்டு ஒலித்தது. அதுதான் அவர் பாணி. கண்ணிலும் சொல்லிலும் எப்போதுமே இயல்பான மன்றாடல் இருக்கும். அவர் சக மனிதனிடம் கேட்கும் ஒரே கேள்வி ‘சாப்பிட்டுவிட்டீர்களா?’ என்பதுதான். ‘ஆம்’ என்றால் தன் வயிறு நிறைந்ததைப்போல முகத்தில் நிறைவைக் காட்டுவார்.

நான் சீத்தாராமனின் கரங்களை இன்னொருதரம் பார்த்தேன். விரல்கள் செக்கச் செவேல் எனச் சிவந்து வீங்கியிருந்தன. உள்ளங்கை மேடுகளில் நீர்க்கட்டிகள். கனிந்து வெடிப்பதுபோல இருந்த கொப்புளக் கரங்களை மென்மையாக வருட வேண்டும்போல் தோன்றியது. பொதுவாகவே எனக்கு அதீத உணர்ச்சிகளைக் காட்டுவதில் கூச்சம் உண்டு. மேலும் என் ஸ்பரிசம் அவருக்குப் புரியுமா என்பதில் சந்தேகம் இருந்தது.

“சாப்பிட்டியா மேன்?” சீத்தாராமன் மீண்டும் கேட்டபோது தலையை மட்டும் ஆட்டி, கோயில் கூத்துமேடை படிக்கட்டில் சலிப்பாகச் சாய்ந்து அமர்ந்தேன். அப்போதுதான் சுவருக்குச் சாயம் பூசியிருப்பார்கள்போல. வாடை கிறு கிறுப்பை உண்டாக்கியது. பின்மண்டை வலித்தது.

அடுத்த வாரம் தீமிதித் திருவிழா என்பதால் கோயில் வளாகம் களைகட்டியிருந்தது.

ஆங்காங்கு கூடாரங்கள் போட்டிருந்தார்கள். தோரணங்கள் காற்றில் அசைந்து வெயிலுக்கு மின்னின. வண்ணக்கொடிகள் பார்க்கும் இடமெல்லாம் படபடத்தன. பக்திப்பாடல்கள் ஒலிபெருக்கியில் பரவசத்தை ஏற்படுத்தியபடி இருந்தன.

அன்று கொடியேற்றம்.

பொது உபயம் என்பதால் இரவில் அன்னதானம் போடுவார்கள் என்ற நினைப்பு வந்ததும் தன்னிச்சையாக சாம்பார் மணம் மூக்கில் ஒட்டிக்கொண்டது. சீத்தாராமனுக்கு அடுத்த ஒரு வாரம் இரவுச் சோறு கிடைத்துவிடும் என்பதே நிம்மதியாக இருந்தது. ஆனால் அதற்கு முன், பந்தியில் வேலையைப் பிழிந்து எடுத்து விடுவார்கள். சீத்தாராமனால் இந்தக் கைகளை வைத்துக்கொண்டு வேலை செய்யமுடியுமா எனத் தோன்றியபோதுதான் அவர் சோற்றை அள்ளிச் சாப்பிடுவதே கஷ்டம் எனும் எண்ணம் எழுந்து சுருக்கென்றது.

“நீ எப்பிடி இன்னிக்கு சாப்புடுவ… கையெல்லாம் இப்படி கொப்பளிச்சி கெடக்கே,” என்றேன்.

‘ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டியவர் கொஞ்ச நேரம் என் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி இருந்தார். முகங்களைக் கூர்ந்து பார்ப்பதில் அவருக்கு அப்படி என்ன ஈடுபாடு என்றே தெரியாது. நான் பார்வையைத் திருப்பி, அவசரமாக எங்கோ புறப்படும் ஐயரின் மேல் கவனத்தை வைத்தேன். இழுத்து முடிந்த குடுமியை தலைக்கவசத்தினுள் திணித்துக்கொண்டிருந்தார்.

நேற்று கணபதி ஹோமத்தைச் செய்யும்போது “கோபி… அந்த வில்வ எலையை ஒடிச்சிண்டு வா… கோபி… மட்டை உரிக்காத தேங்காய எடுத்துண்டு வா” என உயிரை வாங்கிவிட்டார். ஹோமம் முடியும்வரை என்னையும் வெற்றுடலுடன் வேட்டி மட்டுமே அணியச் சொன்னார். கையிலும் நெற்றியிலும் பட்டை வேறு. சிவந்த பெருத்த சாரீரம் ஐயருக்கு. சட்டையில்லாமல் பார்க்க அம்சமாகத் தெரிந்தார். எனக்குதான் கூச்சம் பிடுங்கித் தின்றது. சித்தப்பா எப்போது வந்து என்னை உணவக வேலைக்கு அழைத்துச் செல்வார் என ஏக்கமாக இருந்தது.

எஸ்.பி.எம் தேர்வு முடிவு கடந்த மாதம்தான் வந்தது. வரலாறு காணாத தோல்வி கண்ட என்னை, வேலு அண்ணனிடம் அழைத்துச் சென்று, அடுத்து என்ன செய்யலாம் என அம்மா ஆலோசனை கேட்க, அவரும் தனியார் கல்லூரிகள் விண்ணப்ப பாரங்களை வெளியிடும் வரை மாரியம்மன் கோயிலில் உதவியாக இருக்கட்டும் எனக் கூறிவிட்டார். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. நான் பட்டர்வொர்த்தில் உணவகம் திறந்திருக்கும் சித்தப்பாவை ரகசியமாகத் தொடர்புகொண்டு என்னையும் அங்கு அழைத்துப் போகச் சொல்லியிருந்தேன். அழைத்துச் செல்ல வராவிட்டால் நான் செத்துவிடுவேன் என்று அழுதபடியே சொன்னேன். நான் சாகப்போவதை நினைத்தால் என்னாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“சாப்பாடு இருக்கு மேன்,” என்றார் சீத்தாராமன். நான் ‘என்ன?’ என்பதுபோல ஏறிட்டபோது “சாப்பாடு இருக்கு!” எனக் கோயிலின் பின்புறம் இருக்கும் ஆயாக்கொட்டகையை மோவாயை நீட்டிச் சுட்டினார். நான் சொன்ன எதுவும் அவரிடம் சென்று சேரவில்லை. அயர்ச்சியாக அவரைப் பார்த்தேன். ஒரே வாரத்தில் உடல் இளைத்துக் கிடந்தார். பரதேசிக் கோலத்தில் வந்தபோது இருந்ததைவிட பாதியாகத் தெரிந்தார். ஒரு வாரத்து மொட்டைத் தலையில் வெள்ளியும் கறுப்புமாக ஊசி மயிர்கள். முகத்தில் முள் முடிகள்.

“வேலு தம்பி வாங்கியாந்திச்சி மேன்…” எனச் சொல்லும்போதே அவர் முகம் மலர்ந்தது.

நான் எரிச்சலுடன் “ம்” என்றேன்.

“வேலு தம்பிதான் முந்தி என்னோட பல்லு வலிய கொணமாக்குச்சி மேன்!” என்றார் குரல் உடைய. பக்திப் பாடலை உருகிப் பாடும் தொணி.

“இதையே இன்னும் ஆயிரம் தடவ சொல்லு!” என்றேன் எரிச்சலாக.

“செரி மேன்!” எனச் சந்தோசமாகச் சொன்ன சீத்தாரமனின் முகத்தை வெறுப்புடன் பார்த்தேன். இன்னும் பல்லாயிரம் முறை சொல்ல அவர் தயாராக இருப்பதுபோல கண்களில் ஒளி.

ஒன்றும் பேசத் தோன்றாமல் ஆயக்கொட்டகைக்கு ஓடிச்சென்று பொட்டலச் சாப்பாட்டை எடுத்து வந்து சீத்தாராமன் முன் பிரித்தேன். சோறும் தவ்வுச்சம்பலும் மட்டுமே இருந்தன. எதிர்பார்த்ததுதான்.

“நா ஏதும் ஊட்டி விடணுமா?” எனக் கரண்டியை எடுத்தேன்.

“நா சாப்பிட்டுக்குவேன் மேன்,” என்றார்.

“எப்பிடி சாப்புடுவெ… கை ரெண்டும் கொப்பளிச்சி கெடக்கு… எப்படி அல்லுவ…”

“நான் அப்புறமா சாப்புடுவேன் மேன்,” என்றார்.

“நா சொல்லுறத கேளு… பேசாம எங்கயாவது ஓடிப் போயிடேன்…” என்றேன். மூன்றாவது முறையும் அதேயே சொல்லும்போது கூடுதல் தைரியம் வந்திருந்தது.

“வேலு தம்பிதான் என்னோட பல்லு வலிய கொணமாக்கிச்சி…” என அதே பாட்டைப் பாடினார்.

“அதுக்கு இப்ப என்னா… பல்லு வலிய கொணமாக்கிட்டு ஒன்னைய கொஞ்சம் கொஞ்சமா கொன்னுக்கிட்டு இருக்காரு,” நான் அதிகம் பேசிவிட்டதாகத் தோன்றவும் பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தேன்.

“வேலு தம்பிதான மேன் பல்லு வலிய கொணமாக்கிச்சி,” என்றார் மீண்டும்.

நான் தலையில் கை வைத்துக்கொண்டேன். எனது கையாளாகாதத்தனத்தை நானே நொந்துகொண்டேன்.

“நீ இங்கேருந்து போகல… இனிமே நா ஒங்கிட்ட பேசவே மாட்டேன்,” எனக் கரண்டியைச் சடார் எனக் கீழே வீசிவிட்டு எழுந்தேன்.

“வேலு தம்பிதான் பல்லு வலிய…”

சீத்தாராமன் சொல்லி முடிப்பதற்குள் “போடா கீலாக்காரா!”எனக் கத்தினேன். எனக்கு அவ்வளவு ஆத்திரம் எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.“ஒன்னோட மூஞ்சியிலயே முழிக்க மாட்டேன் போடா!” என அவர் முகத்தைப் பார்க்காமல் விறுவிறுவென வீடு நோக்கி நடந்தேன். கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது கோயில் நாய்கள் அவர் அருகில் நின்று கொண்டிருந்தன. சீத்தாராமன் அவை சாப்பிடுவதைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடந்த வாரம் இதுபோல ஒரு நண்பகல் வேளையில் சொந்தமாகப் பேசிக்கொண்டு கோயில் வளாகத்தில் திரிந்துகொண்டிருந்த சீத்தாராமனைக் கோயில் கமிட்டியினர் கூடியிருந்த அறைக்கு அழைத்து வரும் பொறுப்பு என்னிடம்தான் வழங்கப்பட்டது. அது ஞாயிறு மதியம். கிழிந்த ஆடையும் பரட்டைத் தலையும் நீர் காணாத அழுக்கடைந்த உடலுமாக இருந்த அவரைச் சில சிறுவர்கள் ‘கீலாக்காரன்’எனப் பகடி செய்தபடி சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தனர். எனக்கும் அப்படித் தோன்றியதால் அவர் அருகில் செல்லத் தயங்கினேன். ஓடிவந்து தாக்கிவிடுவாரோ பாய்ந்து கடித்து விடுவாரோ என்றெல்லாம் கற்பனை போனது.

“எங்கூட வா!”எனத் தள்ளி நின்றே சொன்னபோது, ஏக்கமாகப் பார்த்தார். “சாப்பிட்டியா மேன்?” என்றார். நான் ஒன்றும் பேசாமல் நடக்கவும் பொறுமையாகப் பின்தொடர்ந்தார்.

இரண்டு வாரத்தில் வரப்போகும் திருவிழா ஏற்பாட்டுக்காக அன்று அத்தனை உறுப்பினர்களும் கூடியிருந்தனர். நான் கூட்டம் நடந்துகொண்டிருந்த அறை கதவைத் திறந்தபோது மெல்லிய சலசலப்பு எழுந்து அடங்கியது. மிகச் சவாலான காரியத்தைச் செய்து முடித்துவிட்ட கம்பீரத்தோடு நான் ஓரமாகச் சென்று நின்றுகொண்டேன்.

குளிர்சாதன அறையில் குப்பென புளிச்சவாடை பரவியது. சிலர் கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொண்டனர். பொருளாளர் குணசீலன் ஓடிச் சென்று கதவையும் சன்னல்களையும் திறந்துவிட்டார்.

சீத்தாராமன் எல்லாரையும் பார்த்து “சாப்பிட்டிங்களா மேன்?”என்றார். கூட்டத்தில் அவர் கேள்விக்குப் பதில் கூறலாமா வேண்டாமா எனும் குழப்பம் வரவும் தலைவர் பேசத் தொடங்கினார்.

கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் சீத்தாராமனிடம் முறையான பதில் இல்லை. அவருக்குத் தன் பெயரும் தன் அம்மாவின் பெயரும் மட்டும் தெரிந்தது. அம்மா இறந்துவிட்டதால் அவரை உறவினர் யாரோ ஒருவர் அழைத்து வந்து சாலையோரமாக இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். சில நாட்கள் நடந்து பசியில் துவண்ட அவரிடம் மாரியம்மன் கோயிலுக்குப் போனால் தினமும் ஓசியில் பிரசாதம் கிடைக்கும் எனப் பெரியவர் ஒருவர் வழிகாட்டியிருக்கிறார்.

சீத்தாராமனுக்குத் தான் எந்த ஊர் என்பது தெரியவில்லை. எத்தனை முறை கேட்டாலும் “கோயில் இருக்குமே… அங்க…” என நிமிடத்திற்கு ஒரு திசையாகக் கையைக் காட்டினார். அடையாள அட்டை என எதுவும் இல்லை. மாற்றுடை குறித்த நினைப்பே இல்லை.

சீத்தாராமன் அங்கிருந்த அனைவரையும் ‘மேன்’ என்றே விளித்தார். கணக்காய்வாளர் சுசி மட்டும் “நான் மேன் இல்ல… மேடம்” எனக் கோபித்துக்கொண்டதும் சிரிப்பலை உண்டானது.

கோயில் தலைவர் “அவனுக்கு என்னா தெரியும்… புத்தி பொரண்டவனாட்டம் இருக்கான்… மொதல்ல சாப்பாடு கீப்பாடு ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுங்க,” எனச் சொல்லவும் “என்னால சாப்புட முடியாது,” என்ற சீத்தாராமன் வலது பக்க கன்னத்தை அழுத்திக்காட்டினார்.

அப்போதுதான் கவனித்தோம். அவரது முகத்தின் வலது புறம் நன்றாக வீங்கியிருந்தது. அது அவர் முகத்தின் இயல்பான வடிவமென நாங்களாக நினைத்திருந்தோம். அவர் பேசும்போது வரும் வீச்சம் அங்கிருந்துதான் கிளம்பியது.

வேலு அண்ணன் அப்போதுதான் வாய் திறந்தார். “இவன என்னோட பொறுப்புல வச்சிக்கிறேன். கோயில் திருவிழா வருது. கூடமாட இருந்து வேலை செய்யட்டும். இங்க முதுகு வளைஞ்சி வேல செய்ய ஒருத்தனும் இல்ல,” என அவர் சொன்னபோது அதிருப்தியான முனகல்கள் எழுந்தன.

“தலவரே… அடுத்த வாரம் கணபதி ஹோமம் முடிஞ்சதும் எட்டு நாளைக்கு அடர்த்தியா அன்னதானம் ஆரம்பிச்சிடும். ஒவ்வொருநாளும் ஒபயம். கொடியேத்தம், ரத ஊர்வலமுன்னு எக்கச்சக்கமான வேலைங்க கெடக்கு. ஒத்த ஆளா நா எவ்வளோ அலையுறது? யாராச்சும் பொறுப்பா எடுத்து செய்யுறாங்களான்னு கேட்டு சொல்லுங்க,” என்றார்.

யாரும் வாய் திறக்கவில்லை. ஆனால் முன்பைவிட முனகல் அதிகம் இருந்தது.

“திருவிழா முடிஞ்ச பெறகு இவன என்னா செய்யலாம்… ஏது செய்யலாமுன்னு யோசிப்போம். இப்போதைக்கு பின்னாடி இருக்குற ஆயாக்கொட்டாயுல தங்கட்டும்,” என முடித்தார் வேலு அண்ணன்.

வேலு அண்ணன் சொல்லுக்குப் பெரும்பாலும் மறுப்பு இருப்பதில்லை. அவர்தான் கோயில் நிர்வாகச் செயலாளர். லூனாஸ் போன்ற ஒரு சிற்றூரில் உள்ள ஆலயம், பணச்சிக்கல் இல்லாமல் இயங்குகிறது என்றால் அதற்கு வேலு அண்ணனின் செல்வாக்கு முக்கியக் காரணம். எந்த அரசியல் தலைவரையும் எளிதாக அணுகி கோயிலுக்கு நிதி கேட்கும் நுட்பமெல்லாம் வேலு அண்ணனுக்கு அத்துப்படி.‘மக்கள் நண்பன்’ நாளிதழின் வட்டார நிருபர் அவர். லூனாஸ் டவுனில் அவருக்கென சிறு அலுவலகம் ஒன்றும் இருந்தது. நாற்பது வயதாகியும் திருமணம் செய்யாததால் பெரும்பாலான இரவுகளில் அலுவலகத்திலேயே தங்கிவிடுவார். செய்தியை எழுதி அனுப்பிய பிறகு அவ்வட்டார மக்களின் பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் பொறுப்பைத் தானாக ஏற்றுக் கொண்டிருந்தார்.

பெரும்பாலும் கல்விப் பின்புலமில்லாதத் தொழிலாளர்கள்தான் வேலு அண்ணனின் உதவியை நாடுவதுண்டு. ஊழியர் சேமநிதி வாரியச் சிக்கல்கள், பெர்கேசோ விவகாரங்கள், காப்புறுதி நிறுவனங்களின் குளறுபடிகள், சிவில் சட்டச் சிக்கல்கள் என அவர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். ஒரு பக்கம் அவர் சமூக சேவையாளராக மதிக்கப்பட்டாலும் தான் செய்யும் உதவிகளுக்குக் கணிசமான லாபத்தையும் அவர் அடைவதாகப் பேச்சிருந்தது. சிக்கல் தீர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு பங்கை ரொக்கமாக அவர் கையில் கொடுத்த கதைகளைக் கள்ளுக்கடையில் உளறி வைத்தனர். சில சமயம் அவரிடம் உதவி பெறும் பெண்களை இரவு வேளைகளில் அவர் அலுவலக வளாகத்தில் பார்த்ததாகவும் கிசுகிசுப்பு உண்டு. இதுபற்றி அவரிடம் கேட்க யாருக்கும் தைரியம் இருந்ததில்லை. எல்லாருக்கும் வேலு அண்ணனின் உதவி எப்போதாவது தேவைப்படும் எனும் எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம். அவரும் யாருக்கும் எதுவும் பதில் சொல்லக் கடமைப்பாடாதவர்போலவே கம்பீரமாக லூனாஸை சுற்றித் திரிந்தார்.

கோயில் திருவிழா பொறுப்புகளை எடுத்துச் செய்ய வேலு அண்ணனுக்குப் போதுமான நேரமும் தொடர்புகளும் இருந்ததால் தலைவர்கூட அவர் பேச்சை மீறுவதில்லை. மேலும் அவ்வளவு ஈடுபாட்டுடன் கோயில் வேலைகளைச் செய்ய கமிட்டியில் வேறு யாரும் இல்லை என்பதை அவரும் அறிவார்.

சீத்தாராமன் தங்குவதற்கு ஆயக்கொட்டகையைச் சுத்தம் செய்யும் பொறுப்பும் என்னிடமே வந்து சேர்ந்தது. அப்போது எனக்கு வந்த கோபத்தை யார் மீது காட்டுவதெனத் தெரியாமல் தெரிந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் தன்னந்தனியனாகக் கொட்டித் தீர்த்தேன்.

கோயிலின் பின்புறமாக நடந்து சென்றால் ஆயக்கொட்டகைத் தென்படும். அதற்குப் பின்னால் செம்பனைகாடு. ஒரு காலத்தில் லூனாஸ் ரப்பர் மரத் தோட்டமாக இருந்தபோது சுறுசுறுப்புடன் இயங்கிய பகுதி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிகாலையில் ரப்பர் மரம் சீவச் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளை அங்குதான் விட்டுச் செல்வார்கள். குழந்தைகளைப் பராமரிப்பவள் ஆயம்மா. மதியம் குழந்தைகளை வந்து அழைத்துச் செல்லும் வரை அவளே தாயாக இருந்து அத்தனை பிள்ளைகளையும் கவனித்துக்கொள்வாள்.

செம்பனை மரங்கள் நடப்பட்டு தமிழர்கள் அந்தத் தோட்டத்தைவிட்டு வெளியேறியதும் ஆயாக்கொட்டகையும் செயலிழந்துபோனது. மின்சார வசதி துண்டிக்கப்பட்டது. மெல்ல மெல்ல கோயிலின் பழைய பொருட்களைப் போட்டு வைக்கும் கூடமானது. சுற்றிலும் புதர்கள் சூழ்ந்துபோனதால் போலிஸ் கண்ணுக்கு மறைவாகச் சூதாடிகள் மட்டும் அவ்வப்போது அங்கு புழங்குவதுண்டு. சில சமயம் பசை இழுப்பவர்களையும் பார்த்துள்ளேன். மற்றபடி அவ்விடம் கேட்பாரற்றுக் கிடக்கும்.

கொசுக்கள் பிடுங்கித் தின்ற அந்த ஆயக்கொட்டகையை அடித்துக் கூட்டிச் சுத்தம் செய்து எடுப்பதற்குள் இடுப்பு கழண்டு போனது. கைகால்களில் அரிப்பெடுத்தது. ஒட்டடைகளும் குப்பைகளும் மது புட்டிகளும் கூட்ட கூட்ட வந்துகொண்டே இருந்தன. கழிப்பறையில் எப்போதோ யாரோ பேண்டு வைத்த பீ காய்ந்து போய்க் கிடந்தது. அதை கழுவும்போது அம்மாவை மோசமாக வசைமொழிந்ததாக ஞாபகம்.

மூன்று மணி நேரம் போராடி ஆயக்கொட்டகையைத் தூய்மைப்படுத்தியவுடன் எனக்கே என் மீது நம்பிக்கை எழுந்திருந்தது. பல வருடங்களாகக் குடித்தனம் செய்த அத்தனை பூச்சி பொட்டுகளையும் அடித்து விரட்டியிருந்தேன். வெறுங்காலில் நடக்கலாம் எனும் நம்பிக்கையைத் தரையின் தூய்மை கொடுத்தது. வலது பக்கச் சுவரின் ஓரமாக அகலமான மேசை ஒன்றை நகர்த்தி வைத்து, அதை சீத்தாராமனின் கட்டிலாக மாற்றியிருந்தேன். கோயில் ஸ்டோரில் பயன்படுத்தாமல் கிடந்த துணி கட்டில் விரிப்பாகியிருந்தது. கழிப்பறை சொல்லிக்கொள்ளும் அளவுக்குத் தூய்மையாக இருந்தது.

எல்லாவற்றையும் கழுவி எடுத்து ஈரத்துணியைப் பிழிந்து கொண்டிருந்தபோதுதான் வேலு அண்ணன் தனது ஆர்.எக்ஸ்.செட் மோட்டார் சைக்கிளை என் அருகில் கொண்டு வந்து நிறுத்தினார். பின்னால் சீத்தாராமன். வேலு அண்ணன் அவருக்கு மொட்டையடித்து தாடி மீசையைச் சவரம் செய்திருந்தார்.

“இவனுக்கு சோத்துக்கை பக்கம் இருந்த ரெண்டு பல்லும் பூச்சி. ரெண்டையும் புடுங்கியாச்சி. மொதல்ல படுத்துத் தூங்கட்டும்… அப்புறம் பசிச்சா… தோ இதுல ஏதாச்சும் வாங்கிக் கொடு… நீயும் ஏதாச்சும் வாங்கிக்க,” எனச் சொல்லிவிட்டுக் கையில் பத்து ரிங்கிட்டைத் திணித்துவிட்டுச் சென்றார்.

என்னை நம்பி யாரும் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்ததில்லை. அம்மா சீனக்கடையில் ஏதாவது பொருள் வாங்க வேண்டுமென்றால் அதற்குரிய பணத்தை மட்டுமே கொடுத்து அனுப்புவாள். மிச்சம் மீதி இருக்கும் பத்து இருபது காசையும் கேட்டு வாங்கிவிடுவாள்.

சீத்தாராமன் முகத்தின் வலது பக்கம் முன்பைவிட வீங்கியிருப்பதாகத் தோன்றியது. வாயோரம் அதக்கி வைத்திருந்த பஞ்சின் முனைகள் மஞ்சளாக வெளியே தெரிந்தன. சீத்தாராமன் கனிவோடு என்னைப் பார்த்தபடி இருந்தார். அதுநாள் வரையில் தனக்காக யாரும் வேலை செய்துகொடுத்ததில்லை என்பது போன்ற நன்றியுணர்ச்சி அவர் பார்வையில் இருந்தது.

சீத்தாராமனிடம் படுக்கும் இடத்தைக் காட்டியவுடன் பேசாமல் சென்று படுத்துக்கொண்டார். மருப்பூசியின் வேகம் குறையக் குறைய வலி அதிகரித்திருக்க வேண்டும். முனகிக் கொண்டிருந்தார். குப்பையாகக் கிடந்த பொருட்கள் அனைத்தையும் மூட்டையாகக் கட்டியபோது குரட்டை ஒலியுடன் ஆழ் உறக்கத்திற்குப் போயிருந்தார். சீத்தாராமனை ஓய்வாக நான் பார்த்த கடைசி தினம் அதுதான்.

மறுநாள் காலையில் நான் கோயிலுக்குச் சென்றபோது சீத்தாராமன் கோயில் முழுவதும் இருந்த விளக்குகளைத் துடைத்துக்கொண்டிருந்தார். நெற்றியில் பட்டை. பழைய காவி வேட்டி ஒன்றை அணிந்திருந்தார். என்னைப் பார்த்ததும் “சாப்பிட்டியா மேன்?” என்றார். நான் பூஜைக்குப் பூக்களைப் பறிந்து வந்தபோது காற்றாடிகளைத் துடைக்கத் தொடங்கினார். நீண்ட மர ஏணியைக் கிடைக்கும் தடுப்புகளில் சாய்த்துக்கொண்டு அவர் தனியனாக அந்த வேலையைச் செய்வதைப் பார்க்கவே பயமாக இருந்தது. விழுந்தால் கைகால் உடைவது நிச்சயம் என்பதால் நான் ஓடிச்சென்று ஏணியைப் பிடித்துக்கொண்டேன். ஏணியில் ஏறும்போதும் இறங்கும்போதும் தனக்குப் பல் வலி குறைந்திவிட்டதாகச் சொன்னவர், “வேலு தம்பிதான் கிளினிக் கூட்டிபோயி பல்ல புடுங்குச்சி,”என்பதையும் மறக்காமல் சொல்லி வைத்தார். அவரிடம் ஏதாவது கதை பேசலாம் என நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் எரிச்சலாகக்கூட இருந்தது.

சீத்தாராமனைப் புத்திப்பிரண்டவர் என நான் நினைத்தது தவறு என அவர் செய்யும் வேலைகளின் நேர்த்தி வழியாகவே கண்டுபிடித்தேன். வேலு அண்ணன் சொல்லிச் சென்ற ஒவ்வொரு பணியையும் நினைவில் வைத்துச் செய்தார். சன்னல் கண்ணாடிகளைத் தூய்மைப்படுத்துவது, கோயில் கழிப்பறையைக் கழுவுவது, மடப்பள்ளியைச் சுத்தம் செய்வது என ஓயாமல் இயங்கிக்கொண்டே இருந்தார். ஒன்று முடிந்து அடுத்தது என அவர் மூளையில் வேலைகள் தெளிவாகப் பதிந்திருந்தன. ஆனால், அவரிடம் பேச்சுக் கொடுத்தால் மட்டும் பைத்தியம் என்ற எண்ணம் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது.

ஒருமுறை எப்படி இந்த வேலைகளெல்லாம் தெரியும் எனக் கேட்டபோது, வலது கையை வானை நோக்கி உயர்த்தியவர்,“நான் தோ அங்க கோயிலாண்டதான இருந்தேன்… அங்க செய்வேனே…” என்றார்.

“எந்தக் கோயிலு?”

“தோ அங்க…” என மீண்டும் வானத்தைக் காட்டினார்.

சீத்தாராமன் வந்த பிறகு எனக்கு வேலைகள் குறைந்திருந்தன. கோயிலில் என்னுடைய பிரதான வேலையே தரையைக் கூட்டிப் பெருக்குவதும் ஐயருக்குப் பூஜை வேளையில் கூடமாட ஒத்தாசையாக இருப்பதும்தான். அந்த வளாகத்தில் திரியும் நாய்கள் சாவகாசமாக வந்து பளிங்குத்தரையில் படுத்துக்கிடக்கும் என்பதால் உரோமங்கள் தரை முழுவதும் சிதறிக்கிடக்கும். அவற்றைக் கூட்டிப்பெருக்கி மோப் போடுவது சாகசம் நிறைந்த பணி. எவ்வளவு கூட்டினாலும் காற்றில் மிதக்கும் உரோமங்கள் பஞ்சு பஞ்சாக அங்கேயே தவழ்ந்து கொண்டிருக்கும். சீத்தாராமன் வந்த மறுநாளே அப்பணியைத் தனதாக்கிக்கொண்டார். அவர் கையில் விளக்கமாறு ஒரு ஜிம்னாஸ்டிக் கருவிபோல சுழன்றது. சாமி விளக்குகளைத் தேய்த்துக் கழுவுவது, திரைச்சீலையை மாற்றுவது, சன்னிதானத்தைக் கழுவுவது, அம்மனுக்கு மாற்றுச்சேலை எடுத்து வைப்பது, காளாஞ்சிகளைத் தயார் செய்வது என்று பூஜைக்கான ஆயத்தப் பணிகள் செய்வதோடு என் கடமைகளைச் சுருக்கிக்கொண்டேன்.

கோயிலில் கொடியேற்றம் நெருங்க நெருங்க வழக்கத்தைவிட அதிகமானவர்கள் வரத் தொடங்கியிருந்தனர். எனவே வழக்கமாகச் செய்யும் வேலைகளைவிட அதிகமான பணிகள் சூழ்ந்துகிடந்தன. ஒரு நாளைக்குக் குறைந்தது நூறு தேங்காய்களை உரித்து உடைத்து வைப்பது, திருநீறு குங்குமத்தை சிறிய பையில் அளவாகக் கொட்டி வைப்பது, வாழைப்பழங்களைச் சீப்பிலிருந்து பிரித்து அர்ச்சனைக்குத் தயாராக வைப்பது, வெற்றிலைகளை அடுக்கி வைப்பது என எல்லா வேலைகளையும் சீத்தாராமன் தனி ஒருவராகச் செய்து முடித்தார்.

சீத்தாராமன் உதவிக்கு யாரையும் அழைப்பதில்லை. ஏதோ ஒன்றால் இயக்கப்பட்டவர்போல அவர் தன் பணிகளைச் செய்துகொண்டே இருப்பார். அதைப் பார்த்து கூடமாட ஏதும் செய்யத் தோன்றினால் பின்தொடர்வேன். அவரை வழிநடத்துவது வேலு அண்ணனின் கட்டளைகள்தான்.

கோயில் நிர்வாகத்தில் உள்ள யார் எதை சொன்னாலும் சீத்தாராமன் ஓடிச் சென்று அதை செய்து முடிப்பவராகவே இருந்தார். ஆனால், வேலு அண்ணன் இடும் பணிகள்தான் அவருக்குப் பிரதானமானவை. அதை முடித்த பிறகே மற்றவர்கள் சொல்லும் வேலைகளைக் கவனிப்பார்.

“நீ என்னா வேலுவுக்கு பொண்டாட்டியாடா… நாங்களும் கோயில்காரங்கதான்,” என நிர்வாகத்தில் உள்ள யாராவது கிண்டல் செய்தால் “வேலு தம்பி என்னோட பல் வலிய கொணமாக்குச்சி,” என்பார்.

‘பல் வலியை குணப்படுத்தியதற்காக யாராவது இப்படி அடிமைபோல இருப்பார்களா?’ என எனக்குக்கூட சில சமயம் தோன்றும். ஆட்கள் சூழ்ந்திருக்கும்போது வேலு அண்ணன் கெட்ட வார்த்தையில் தன்னைத் திட்டுவதையும் தலையில் தட்டுவதையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டார். ஒரு சமயம் கோயிலுக்கு வந்திருந்த பக்தரை இடித்ததற்காகக் கொடுத்த அறையையும் வாங்கிக்கொண்டார். அதுவரை எனக்குப் பல்வலி வந்ததில்லை. அது அத்தனை கொடுமையானாதா எனக் குழம்பிக்கொள்வேன். இப்படி அவமானப்படுவதற்குப் பதிலாக அந்த வலியோடு அவர் வாழ்ந்திருக்கலாம் எனத் தோன்றும்.

“அது கவர்மண்ட் கிளினிக்கு… எல்லாமே ஃபிரி. நீயே தனியா போயிருந்தாகூட பல்ல புடுங்கி உட்டுருப்பானுங்க,”எனச் சிலமுறை சொல்லி பார்த்தேன்.

“ஆமா தோ இங்க பல்லு வலி… வேலு தம்பிதான் கொணப்படுத்துச்சி,”என நான் சொல்வதைப் புரிந்துகொள்ளாமல் வலது கன்னத்தைத் தடவியபடி பதில் பேசினார்.

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சீத்தாராமனிடம் லூனாஸில் வேறு எங்கெல்லாம் வேலை செய்யலாம் எனச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். அரிசி மண்டியிலோ பலசரக்குக் கடைகளிலோ வேலை பார்த்தால் அவர் உழைக்கும் உழைப்பிற்குக் கை நிறைய சம்பளத்தோடு மூன்று வேளை சாப்பாடும் கிடைக்கும். அது எதுவுமே சீத்தாராமனுக்குப் புரிவதில்லை. ‘வேலு’ எனும் பெயரைச் சொன்னாலே முகமெல்லாம் பல்லாக நின்றார். எவ்வளவு சோர்ந்து கிடந்தாலும் அடுத்த வேலைக்குத் தயார் என்பதுபோல முன் வந்தார்.

வேலு அண்ணன் அவரை ஓர் அடிமைபோல நடத்துவதைப் பார்க்கும்போது எரிச்சலாக இருக்கும். காலையில் அம்மனுக்குச் செய்யும் பிரசாதம்தான் சீத்தாராமனுக்குப் பசியாறல். தோன்றினால் மதிய உணவு வாங்கி வந்துகொடுப்பார். அதில் பெரும்பாலும் சோறும் குழம்பும் மட்டுமே இருக்கும். இரவு உணவு மீண்டும் சாமிக்குச் செய்யும் பிரசாதம். வேலை மட்டும் சீத்தா ராமனுக்கு ஓயாது. வேலு அண்ணனுக்குச் சீத்தாராமனைப் பார்த்தாலே புதிது புதிதாக வேலைகள் தோன்றும். திடீரென வேப்பங்கன்றுகளை எடுத்து வந்து கோயிலைச் சுற்றி நடச் சொல்வார். கிழடு தட்டிய மரங்களின் கிளைக்களை வெட்டி வீசச் சொல்வார். நீர் தேங்கும் இடங்களிலெல்லாம் எங்கிருந்தாவது மண்ணைவெட்டி வந்து கொட்டச் சொல்வார். விறகுகளைப் பிழந்து வைக்கச் சொல்வார். எதுவும் இல்லையென்றால் ஏதாவது ஒரு இடத்தைத் தேய்த்துக் கழுவச் சொல்வார். தனது வழக்கமான பணிகளினூடே சீத்தாராமன் அவற்றையும் சிரத்தை எடுத்துச் செய்தார். அவர் சாப்பிடும் கொஞ்சமான உணவில் எங்கிருந்து அவ்வளவு சக்தி கிடைக்கிறது என ஆச்சரியமாக இருக்கும்.

நேற்று காலையில் சீத்தாராமனுக்கு நடந்த கொடுமையைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.

கணபதி ஹோமத்திற்கு வரும் பக்தர்களுக்காகப் பொங்கல் தயாரிக்கும் பணி மடப்பள்ளியில் நடந்து கொண்டிருந்தது. ஐயரிடமிருந்து தப்பித்து அவ்வப்போது நானும் மடப்பள்ளி பக்கம் சென்று நெய் உருகும் வாசனையை இழுத்துக் கொண்டிருந்தேன்.

கடைசியாகக் கறுப்புச் சீனி பாகு ஊற்றும்போதுதான் பண்டாரம் “டேய் மரக்கரண்டி எங்கடா?” எனச் சத்தமிட்டார். கொஞ்ச நேரத்தில் அவ்விடமே அல்லோலகல்லோலப்பட்டது பொங்கல் பாகில் கொதித்துக் கொண்டிருக்கும்போது அதை விடாமல் கிண்டுவது முக்கியம். தாமதமானல் ருசி கெட்டு பொங்கலில் புகை மணம் எழும். மரக்கரண்டியைக் காணாது பண்டாரம் தவித்துக்கொண்டிருந்தபோதுதான் வேலு அண்ணன் நீளமான அலுமினியப் பிடிகொண்ட கரண்டி ஒன்றை எங்கிருந்தோ தேடி எடுத்து வந்தார்.

“என்னா வேலு தம்பி… இத புடிச்சி எப்புடி கிண்டுறது? சூடு ஏறி கையெல்லாம் வெந்துடுமே!” எனப் பண்டாரம் கேட்டபோது, “அதெல்லாம் கிண்டலாம்” என்று அலட்சியமாகக் கூறிவிட்டு, சீத்தாராமனை அருகில் அழைத்தார்.

“தா… இத புடிச்சி கிண்டு!” எனச் சொன்னதுதான் தாமதம். சீத்தாராமன் அதை பணிந்து பெற்று பொங்கல் பானையில் நுழைத்தார். ஆற்றில் துடுப்பு போடுவதுபோல லாவகமாகக் கிண்டத் தொடங்கினார். பொங்கலின் மணம் குப்பென எழுந்தது. பண்டாரம் ஏலக்காய், முத்திரிக்காய் போன்றவற்றைப் பொங்கலில் கொட்ட கொட்ட சீத்தாராமன் கிண்டிக்கொண்டே இருந்தார்.

நான் வேலு அண்ணனைப் பார்த்தேன். முகத்தில் அலட்சியமான சிரிப்பும் தான் யாரென நிரூபித்த திமிரும் இருந்தது. அந்த முகத்துடனே அவ்விடத்தை விட்டு அகன்றார்.

அவர் போனவுடன் நான் இரண்டு துண்டுத் துணிகளைத் தேடி எடுத்து வந்து சீத்தாராமன் கைப்பிடிக்கு வைக்கச் சொன்னேன். சீத்தாராமன் தான் ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டவர் போல பிடியைவிடாமல், என் சொற்கள் எதுவும் காதில் சென்று சேராதவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவர் முகத்தைப் பார்த்தேன். செயலில் அத்தனை தீர்க்கம். பாற்கடலைத் தனி ஒருவனாகக் கடைவது போல கண்களில் பக்தி. பிடியை ஆள்காட்டி விரலால் தொட்டுப் பார்த்தேன். சுளீர் என்றது.

பண்டாரமும் தன் பங்குக்கு எவ்வளவு சொல்லியும் சீத்தாராமன் கரண்டியில் இருந்து கையை எடுக்கவில்லை. “என்ன பொறப்போ!” எனத்தலையில் அடித்துக்கொண்டவர், “ஏய் கோபி… போயி பூச வேலய பாரு…” என என்னைத் திட்டினார். நான் பரிதாபமாகச் சீத்தாராமனைப் பார்த்தேன். பானையின் அடிப்பகுதியில் கரண்டி உரசும் சத்தம் கேட்க அவர் கைகள் முறுக்கி சுழன்றுகொண்டே இருந்தன.

நான் சீத்தாராமனைத் திட்டிவிட்டேனே தவிர வீட்டுக்கு வந்த பிறகு அவர் ஞாபகமாகவே இருந்தது. அவர் கைகளிலிருந்த தீக்கொப்புளங்கள் நினைவுக்கு வந்ததும் மேலும் மனம் சஞ்சலப்பட்டது. அந்தக் கோயிலில் அவரிடம் அன்பாகப் பேச நான் ஒருவன் மட்டும்தான் இருந்தேன். ‘கீலாக்காரன்’ என்பதற்கு அவருக்குப் பொருள் தெரிந்திருக்குமா எனக் குழப்பமாக இருந்தது. குற்ற உணர்ச்சி குடைந்தெடுத்தது. பேசாமல் அவரை நானே அழைத்துச் சென்று ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏற்றிவிட்டால் என்ன என்று தோன்றியவுடன் மூளை பரபரப்படைந்தது.

இரவு பூஜை தொடங்கும்போது சீத்தாராமன் ஆயக்கொட்டகையில் தனியாக இருப்பார். அதுதான் அவர் வேலையெல்லாம் முடித்து குளிக்கும் நேரம். குளித்து முடித்தவுடன் மீண்டும் கோயிலைக் கூட்டிப்பெருக்க சென்றுவிடுவார். அந்த இடைவெளியில் அவரிடம் பேசி சம்மதம் பெற வேண்டும் என முடிவெடுத்தேன். அப்படியே இரவோடு இரவாக அழைத்துச் சென்று முச்சந்தியில் நின்றால் கூலிம் செல்லும் கடைசி பேருந்து இரவு எட்டு மணிக்கு வரும். அதில் ஏற்றிவிட்டுக் கையில் கொஞ்சம் காசும் கொடுத்துவிட்டால் எங்காவது சென்று பிழைத்துக் கொள்வார் எனத் திட்டம் வரைந்திருந்தேன். வீடு முழுக்க அலசியதில் அம்மா உப்பு ஜாடிக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த இருநூறு ரிங்கிட் கண்ணில் அகப்பட்டது. பணத்தை எடுத்துக் கொண்டு மருந்து கடைக்கு ஓடினேன். தீக்காயங்களுக்குப் போடும் மருந்தை கேட்டு வாங்கிக் கொண்டேன்.

கோயிலுக்குச் செல்லத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. ‘நான் சொன்னதைச் சீத்தாராமன் வேலு அண்ணனிடம் சொல்லியிருப்பாரா? அப்படிச் சொல்லியிருந்தால் அதை எப்படிச் சமாளிப்பது’ எனப் பலவாறு சிந்தனைகள் சுழன்றன. கத்தி கம்போடு என் வருகைக்காக ஒரு கூட்டமே கோயில் முச்சந்தியில் காத்திருப்பதாகக் கற்பனைகள் சென்றன.

இருட்டும் வரை லுனாஸ் டவுனையே சுற்றிச் சுற்றி வந்தேன். மிச்சம் இருந்த பணத்தில் வாத்துச் சோறு வாங்கிச் சாப்பிட்டேன். வீடியோ கேம் கடையில் கொஞ்ச நேரம் விளையாடினேன். நான் கோயிலுக்குச் சென்றபோது நன்கு இருட்டி விட்டிருந்தது. பூஜை மணி அடிக்கும் சத்தம் தொலைவிலேயே கேட்டது. நேற்றெல்லாம் அழகாகத் தெரிந்த அலங்கார விளக்குகள் இன்று பயத்தை மூட்டின. வேலு அண்ணன் கண்ணில் பட்டுவிடக்கூடாது எனப் பயந்து பயந்து புற்தரை ஓரமாகவே நடந்தேன்.

கோயிலின் ஒளிவெள்ளத்தைக் கடப்பதற்குள் வியர்த்துக்கொட்டியது. தலையை முடிந்தவரை குனிந்து கொண்டு விறுவிறுவென நடந்தேன். இருளுக்குள் நுழைந்ததும் ஆசுவாசமானேன். அங்கிருந்து ஆயக்கொட்டகை வரையும் நல்ல இருட்டுதான். எல்லா வேலைகளும் முடிந்த பிறகு சீத்தாராமன் அந்த இருட்டுக்குள்தான் தன்னந்தனியாக அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார். தோன்றினால் எப்போதாவது கொசுக்களை அடிப்பார்.

நடையைத் தீவிரப்படுத்தி நான் ஆயக்கொட்டகை அருகில் செல்லவும் வினோதமான முனகல் ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. மெல்ல நகர்ந்து சென்று கொட்டகை ஓரமாக உடலை அழுத்திக்கொண்டேன். ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு என்னை ஆக்கிரமித்தது. மெல்ல ஊர்ந்து சென்று கண்களை இருளில் அலையவிட்டேன். கண்கள் இருளுக்குப் பழகி ஒலிகொடுக்க தாமதமானது. காட்சிகள் துலங்கிய போது நான் விதிர் விதிர்த்துப் போனேன்.

உள்ளே வேலு அண்ணன் நிர்வாணமாக இருந்தார். என்னால் அவரது முதுகையும் பிட்டத்தையும் மட்டுமே பார்க்க முடிந்தது. அவரது மூர்க்கமான சுவாசத்தின் ஒலி, உறுமல் போல ஒலித்தது. “செய்யலனா கொன்னுடுவேன்” என்ற அவரது மிரட்டல் தொணி கேட்டபோது பாதங்கள் வியர்த்திருந்தன. யாரோ ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துவது புரிந்தபோது வாயைப் பொத்திக்கொண்டு கீழே அமர்ந்தேன். கோயிலுக்கு வந்தவளாக இருக்க வேண்டும். மேசைகளின் கால்கள் தரையோடு உராயும் சத்தம் பற்களைக் கூசச் செய்தபோது நான் நடுநடுங்கி ஒரே ஓட்டம் எடுத்தேன்.

சீத்தாராமன் எங்கே இருப்பார் எனக் கண்கள் தேடின. ஓடிச்சென்று மடப்பள்ளியில் பார்த்தேன். கிணற்றடியில் தேடினேன். கோயிலில் மணி அடிப்பவர் கைகள் அவருடையதா எனத் தூரத்தில் நின்றே ஆராய்ந்தேன். கூத்து மேடைக்குச் சென்று ஏமாந்தேன். அவர் எங்கும் இல்லை. என்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை. பரபரக்க வீட்டை நோக்கி ஓடினேன். சீத்தாராமனுக்கு வாங்கிய மருந்தை தூர வீசினேன். நானே ஏதோ தப்பு செய்துவிட்டதுபோல அழுகை வந்தது.

நான் அடுத்து என்ன செய்யலாம் என நிதானிப்பதற்குள் சேர்த்து வைத்திருந்த பணத்தைத் திருடினேன் என அம்மா ஆத்திரம் தீரும்வரை முதுகில் அறைந்தார். நான் சித்தப்பாவின் அணைப்பில் பாதுகாப்பாக உணர்ந்தேன். நான் செய்யவிருந்த தற்கொலையைத் தடுக்க வராத சித்தப்பா அம்மாவின் புலம்பலைக் கேட்டதும் உடனே வந்திருந்தார். என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகச் சொன்னபோது எல்லா கவலைகளும் உடனே மறந்துபோயின. அன்று இரவே மூட்டை முடிச்சுகள் கட்டப்பட்டுச் சித்தப்பாவுடன் பட்டர்வொர்த்துக்குப் புறப்பட்டேன்.

“காச திருடுற நாயி… இனிமே வீட்டுப்பக்கம் வரவே கூடாது…” என அம்மா வாசல் கதவை வேகமாக அறைந்து சாற்றியே வழியனுப்பினார். எனக்கு எதுவுமே கவலையாக இல்லை. சித்தப்பாவுடன் இருப்பதை பெரும் விடுதலையாக உணர்ந்தேன்.

அதற்குப் பிறகு சீத்தாராமனைப் பற்றி ஒரு விபரமும் தெரியவில்லை. யாரிடமும் கேட்பதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை. அவர் அந்த இரவு எங்குதான் சென்றார்? நான் திட்டியதில் மனமுடைந்து ஓடிவிட்டாரா? என்னைக் கண்டதும் எங்காவது ஒளிந்துகொண்டாரா? எனச் சில நாட்கள் குழம்பி கிடந்தேன். அந்தக் கற்பழிப்புப் பழி அவர் மேல் விழுந்திருக்குமா? உண்மையில் நான் கண்டது கற்பழிப்புதானா என்றும் புரியாமல் தவித்தேன்.

மனம் குற்ற உணர்ச்சியால் வதைபடும்போதெல்லாம் ‘என்னவாக இருந்தால் என்ன அவன் ஒரு கீலாக்காரன்தானே’ எனச் சொல்லிச் சமாதானம் செய்துகொண்டேன். கொஞ்ச நாளில் நான் பார்த்த அனைத்தும் நினைவிலிருந்தே அகன்று விட்டன. ஆனால், உணவகத்தில் பரிமாறும்போது “நீ சாப்பிட்டியா தம்பி?” என யாராவது வாடிக்கையாளர்கள் கேட்டால் மட்டும் கண்களில் நீர் கட்டுவதை இப்போது வரை தடுக்க முடிவதில்லை.

(Visited 402 times, 1 visits today)