கீலாக்காரன் (கடிதங்கள் 1)

கீலாக்காரன் சிறுகதை

60களில் பீடோங் அருகிலில் நான் வாழ்ந்த தோட்டதில் கூட ஆண் புணர்ச்சிக்காரர்கள் இருந்ததை ஒரு சிறுவனாக (4-5 வயதாக இருந்த இளம் பிரயாயத்தில்) என் கண்களால் பார்த்திருக்கிறேன். ஒரு முறை அப்படிப்பட்ட ‘காமுகனிடமிருந்து’ தப்பித்துமிருக்கிறேன்.

அதுக்கப்புறம் 14 வயதில் வேறொரு எஸ்டேட்டுக்கு மாறி போனோம். அந்தத் தோட்டத்தில் பெண் சீத்தாராமன் (கீலாகாரச்சி அக்கா)  ஒருத்தரும் இருந்தார்.

‘டௌன் சிண்ட்ரோம்’ சிறுமி போல முகத்தோற்றம் கொண்டிருந்தாலும் உடல் மட்டும் பார்த்த மாத்திரத்தில் ஆண்களின்  காமத்தைத் தூண்டும் வகையில்தான் இருக்கும். உடல்கட்டு தெரியுமளவிற்கு அவருடைய அலங்கோலமான ஆடையும் அதுக்குத் துணையாய் இருந்தது.

வெகுளி, ஒன்னுந்தெரியாத பாப்பா னு எஸ்டேட்டே பேசிக்கொள்ளும்.

அந்தத் தோட்டத்து பல ஆண்களின் (பெருசுகள், பொடுசுகள், விடலைப்பசங்களின்)  காம இச்சைக்கு 20 காசுக்கோ 50 காசுக்கோ இரையாக்கிப்போவார்.

எனக்கு மட்டும், ஒரு 2 வீடு தள்ளியிருந்த  அவரைப் பார்க்கும் போதெல்லாம் பாவமாக இருக்கும். என்னைப் பார்க்கும் போது அவர் சிரித்தால் கூட அங்கு நிற்காமல் ஓடியே போயிடுவேன். நானும் அந்த ரக ஆள் என்று என்னைத் தப்பாக எண்ணிடுவாரோ என்கிற பயம்தான்!

என் சக வயது நண்பர்கள் சிலர் (‘போயிட்டு’ வந்தவனுங்க) என்னிடம் கேட்பானுங்க, “நீ இன்னும்   போகலேயாடா?” னு…

“ச்சீ! போங்கடா! நமக்கெல்லாம் அக்கா மாதிரி இருக்கிற அவங்க கிட்டப் போயீ… வெட்கமா இல்ல??” என்று திட்டி அவர்களின் சகவாசத்தை முறித்துக் கொண்டேன்.

10 வயது தொடங்கி எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்து அவரின் தீவிர ரசிகரானவன்… அவருடைய கொள்கைப் பாடல்கள்களால் ஈர்க்கப்பட்டவன்!

குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் அவர் திரைப்படத்தில் ‘ஒழுக்கமாக'(?) நடந்துகொண்ட விதம், கடைபிடித்த கொள்கை எல்லாம் அப்படியே மனசளவில் எம்ஜிஆராகவே மாறியிருந்தேன்! ந.பார்த்தசாரதியின் “குறிஞ்சி மலர்” நாவலை தமிழாசிரியர் பிரேமிளா படித்துக் காட்டி முடித்த பிறகு அந்த நாவலில் வரும் அரவிந்தனைப் போல் இலட்சிய இளைஞனாக வாழத் தொடங்கிய காலம் அது.

அகிலனின் ‘பால் மரக்காட்டிலே’ படித்து முடித்து பாலனைப் போல் தோட்டது ஹீரோவாக என்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கிய வயது அது. அதுக்கப்புறம் காந்தியின் ‘சத்திய சோதனை’.

பைபிளை வாசிக்கத் தொடங்கியதும் அப்போதுதான்!

எல்லாமும் சேர்ந்து என்னைக் காப்பாற்றி விட்டன!

50-60 வருஷமாச்சு… இன்னமும் அந்த கீலாகார அக்காவின் ஞாபகம் என்னை விட்டு அகலவில்லை. உங்க பரிதாபத்துக்குரிய சீத்தாராமன் கதையைப் படிச்சதும் அந்தப் பழைய ஞாபகம் வந்து நெஞ்சில் தைத்த முள்ளாக ஒரு ரணத்தை, வலியைக் குடைந்து கொடுத்துவிட்டு   இதயத் தடாகத்தில்  (இப்போதைக்கு) அமைதியா போய்
படுத்துக் கொண்டது.

மீண்டும் இன்னொரு கீலாக்காரன் @ கீலாகரச்சி கதையை வாசிக்கிற வரைக்கும்!

பி. எம். மூர்த்தி

கீலாக்காரான் சிறுகதையை வாசித்தேன். சீத்தாராமன் மீது கதைசொல்லிக்கு எழும் உணர்வு குறித்த கேள்வியே கதையின் மையத்தை நெருங்கச் செய்யும் என எண்ணுகிறேன்.

அம்மா, வேலு அண்ணன் என மற்றவர்களின் கட்டாயத்துக்கு இணங்கி கோவிலில் எடுபிடியாக இருப்பதில் மறைமுகமான வெறுப்பைக் கதைசொல்லி கொண்டிருக்கிறான். கோவிலில் வந்து சேரும் சீத்தாராமன் பசி, வலி என உடல் சார்ந்த தேவைகள் மட்டுமே தான் என முன்வைத்துக் கொள்கிறார்.அதைத் தவிர்த்த கேள்விகளுக்கு அவரிடம் எந்தப் பதிலும் இல்லை. சீத்தாராமனுக்கு உதவி செய்வதிலும் வெளிப்படையாகச் செய்ய முடியாத இயலாமையை எண்ணிக் கதைசொல்லி நொந்து கொள்கிறான். ஆனால், இந்த உணர்வுகளுக்குப் பின்னால் சீத்தாராமனைச் சரியான உணவு தராமல் அதிக வேலை தந்து சுரண்டுவது ஆகியவற்றைக் கண்டு அவர் மீது கரிசனம் காட்டுகிறான். கைகள் வேக அவர் வேலை செய்யவைக்கப்படுவது என எல்லாவற்றின் மீதும் வெளியே காட்டாத கோபத்தயும் கரிசனத்தையும் கொண்டிருக்கிறான்.
இப்படி நேரடியான உணர்வுகளைக் காட்ட தயங்குகிறவனின் மனத்தில் அவரை விடுவிக்க வேண்டும் எனத் தோன்றும் உத்திகளும் வீரியமற்றே இருக்கின்றன.

தன் வலியைப் போக்க உதவியவன் என்பதாலே வேலு இடும் பணிகளை சீத்தாராமன் செய்கிறார் . கதைசொல்லிக்குக் கூட வேலுவின் மீதும் அம்மாவின் மீதும் இருக்கும் வெளிக்காட்ட முடியாத கோபம் ஆகியவற்றை இந்தக் கரிசனத்தின் வாயிலாகவும் அவருக்கு அளிக்க நினைக்கிற விடுவிப்பின் மூலமாய் நிகர் செய்யவே அவன் ஆசைப்படுவதாய்த் தெரிகிறது. இவ்வளவுக்குப் பின்னரும், அவர் மனம் பிறழ்ந்தவர் என்பதால் தான் குற்றவுணர்வு கொள்வதில் நியாயம் இல்லை என சமாதானம் கொள்கிறான்.

ஆனால், வாடிக்கையாளர் சாப்பிட்டு விட்டாயா எனக் கேட்பதற்கும் நீ சாப்பிட்டுவிட்டாயா எனக் கேட்டுத் தன் பசியையும் சேர்த்தே சொல்லும் சீத்தாராமனை எண்ணும் போது ஏற்படும் கண்ணீர் பொய்யாய் இருக்கக் காரணமில்லை என்றே தோன்றுகிறது.

அரவின் குமார்

“சாப்பிட்டியா மேன்” என்று சீத்தாராமன் பார்ப்பவர்கள் அனைவரையும் கேட்கும் கேள்விதான் ‘இன்னும் சாப்பிடவில்லை, யாராவது என் பசியை ஆற்ற மாட்டீர்களா’ எனும் தன் பசியை கோறி இடைவிடாது ஒவ்வொருவரின் முன்னும் கேள்விகளோடு மண்டி இடும் தருணம் கதையில் ஆக சிறந்த இடம்.

சீத்தாரமன் கோவில் வளாகத்தில் கேட்பாரற்று சுற்றித் திறிந்துக் கொண்டிருக்கும் போது அவர் எத்தனை நாள் சாப்பிடவில்லையோ என்ற ஒரு கணக்கு மனதை குடைந்துக் கொண்டே இருந்தது. சீத்தாரமனின் பல்லைப் பிடுங்க அழைத்துச் செல்லும் வேலு அந்த பல் வலி நீங்கிவிடுவதால் சீத்தாராமனால் தொடர்ந்து சாப்பிட முடிகிறது.

அவனுடைய இரண்டு அதி முக்கிய தேவைகளை, அவனால் இதனால் இது என்று கண்டுணற முடியாத சிக்கலான விஷயத்துக்கு வேலு தீர்வு காண்கிறான். முதலில் பல் வலியை போக்குகிறான். அதனால் அவன் வயிற்றுப் பசி தீர்கிறது. ஆனால் அதற்கு பதிலாக “வேலு தம்பி என்னோட பல் வலிய கொணமாக்கிடுச்சு” என்ற நன்றியுணர்வில் அவன் சிக்க வைக்கப்படுகிறான் அல்லது தன்னிச்சையாக சிக்கிக் கொள்கிறான்.

எந்த அரசியல் தலைவரையும் எளிதாக அணுகி தனது காரியங்களை சாத்தித்துக் கொள்ளத் தெரிந்த வேலுவுக்கு, சீத்தாரமனின்  பல்லைப் பிடுங்க அழைத்துச் செல்லும் வேலுவின் உதவிக்காக, சீத்தாராமனிடமிருந்து அவனுடைய பற்று, பக்தி, நன்றியுணர்வு, தனக்கு அடிமையாகிக் கிடக்கும் சுபாவத்தை பதிலுக்கு பெறுகிறான். அதை உறுதி செய்ய சீத்தாராமனின் கையில் சுடும் கரண்டியை திணித்து அதில் சுட சுட பொங்கலைக் கிண்ட உத்தரவு பிறப்பிக்கிறான். அதை தனக்குள் ரசித்து தன் ஆணவத்தை நிலை நிறுத்திக் கொள்கிறான்.

சீத்தாரமனின் மிகையான நன்றியுணர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிறகு பாலியல் இச்சைக்கும் இயக்குகிறான். தான் செய்த அற்ப உதவிக்கு கணிசமான இலாபத்தை அடையக் கூடிய வேறு எதைக் கொடுத்து சீத்தாரமனை தனக்காக இயங்க, இயக்க வைக்க முடியுமென கணக்கை மிக கச்சிதமாக அமைக்கிறான் வேலு. தனக்கு வெகு நாட்களாக உணவருந்த இருந்த ஒரே தடையை தகர்த்தெரிந்த வேலுவை சீத்தாராமன் தெய்வமாகப் பார்க்கிறான்.

உண்மையில் கோபி நினைத்தது போல் சீத்தாராமன் கீலாக்காரனில்லை. குறை தீர்த்து அண்ணமிட்டவரை தெய்வமாக பார்க்கும் ஒரு வித கற்றற்ற பற்று. தான் அடைந்திருந்த பல் வலி நீக்கமுறும்போது அணை கடந்த அன்பின் வழி வேலுவுக்கு ஒவ்வொரு கணமும் தன்னுடைய நன்றியுணர்வை வேறு வேறு விதத்தில் காட்டிக் கொண்டேயிருக்கும் சீத்தாராமன் தொடர்ந்து கிடைக்கும் உணவுக்காக ஒரு போதும்  கோவிலில் தங்கியிருக்கவில்லை.

முதல் முறை வேலுவால் தன் பல் வலியிலிருந்து விடுவிக்கப்படும் விடுதலையை அவன் மனமுறுகி பிராத்திக்கிறான். அந்தப் பிராத்தனையின் வெளிப்பாடே, எத்தனைக் கொடுமைக்கு ஆட்பட்டாலும் அவன் வேலு செய்த உதவிக்காக நன்றி கடனை தோள் மேல் சுமக்கிறான். அனைத்தையும் ஒரு அடிமைக்கு விடப்பட்ட கட்டளையாகவே செய்ய காத்திருக்கிறான். இதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இடத்திற்கு போகிறான். கடும் வலியையும் வேதனையுமே சீத்தாரமன் அதற்கு முன்பு அனுபவித்திருக்கலாம். அதை கதையில் எங்கும் குறிப்பிட படவில்லையென்றாலும், அவன் பல் சிகிச்சைக்குப் பிறகு வலியில் துவண்டு போய் முனகிக் கொண்டிருந்ததை மிக லேசாக விட்டு செல்கிறார்.

எதைக் கொடுத்தாலும் நிறைவு செய்ய முடியாத உதவியை காலமறிந்து செய்து தன்னை வலியிலிருந்து விடுதலைக் கொடுத்த சீத்தாரமனுக்கு, பிறகு அனுபவிக்கும் துன்பமெல்லாம் ஒன்றும் இல்லாததாக கூட இருந்திருக்கலாம். நீண்ட நாள் ஏங்கித் தவிக்கும் ஒரு அற்பமான விஷயம் கைகூடும் போது மனிதனின் பரவச நிலை மற்ற அனைத்து துன்பங்களையும் தாங்கி சகித்துக் கொள்ள பழகிக் கொள்கிறது. 

சீத்தாராமனைப் போலத்தான் கோபியும் தான் வேண்டி நிற்கும் சித்தப்பாவின் வருகை, கூலிமுக்கு அழைத்து செல்லும் போது அனைத்தையும் மறந்து விட்டு கோவிலிலிருந்து விடுதலைப் பெற்ற உணர்வோடு அங்கிருந்து செல்கிறான். பசியிலிருந்து விடுதலைப் பெறும் சீத்தாராமன் எப்படி வேலுவுக்கு நன்றி உணர்வால் அடிமைப்பட்டு, மனதை, உடலை வேலுவின் காலுக்கடியில் வைக்கிறானோ, அதேப் போன்றதொரு விடுதலை உணர்வைப் பெற்ற கோபியும் அனைத்தையும் மறந்து விட்டு தான் வெகு நாட்களாக நினைத்தது நிறைவேறும் போது அனைத்தையும் விட்டுச் செல்கிறான்.

பொதுவாகமனிதர்கள் தாங்கள் மனதில் யாசித்துக் கொண்டிருக்கும் அற்பமான விஷயங்கள் நிறைவேறும் போது ஒரு போராட்டத்திற்கு பின் வரும் விடுதலை உணர்வோடு ஏதோ ஒன்றை ஒவ்வொரு கணமும் இழந்துக் கொண்டேயிருக்கிறோம் போல. அது சீத்தாரமனைப் போல் வயிற்று பசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உடற்பசியாகவோ, உறவுப் பசியாகவோ கூட இருக்கலாம். அப்படிப் பார்க்கும் போது இங்கு அனைவரும் கட்டுப்படுத்தப்பட்ட, கட்டுண்ட ‘கீலாக்காரர்களே’.

ஆசிர். லாவண்யா

(Visited 86 times, 1 visits today)