கீலாக்காரன் (கடிதங்கள் 2)

கீலாக்காரன் சிறுகதை

ஒவ்வொரு மனிதனுக்குள் நிகழும் மனப்பிறழ்வுகளைக் காட்டியது ‘கீலாக்காரன்’ சிறுகதை. கதையில் சீத்தாராமன் அவன் தோற்றத்தினாலும் பேச்சினாலும் ஊரார் மத்தியில் கீலாக்காரன் என்றழைக்கப்படுகிறான். ஆனால், கதையை வாசித்த முடித்த பிறகு ஒருவரின் தோற்றமும் பேச்சும் மட்டும்தான் ஒருவனை மனப்பிறழ்ந்தவன் என்று கூறுவதற்கு வழிவகுக்கின்றதா என்ற கேள்வியே எழுகின்றது. இக்கதையில் நிராகரிக்கப்படும் கேலிக்குள்ளாக்கப்படும் உயிர்களின் பிரதிபலிப்பாகச் சீத்தாராமனும், தமது பலத்தைப் பலவீனமற்றவர்களிடம் காட்டி மகிழ்ச்சியடைபவர்களின் பிம்பமாக வேலுவும், தமது சுயநலமும் இயலாமையும் ஒன்றுசேர ஏதும் செய்ய முடியாமல் குற்றவுணர்வுடன் சிக்கித் தவிக்கும் சக மனிதனின் பிரதிபலிப்பாகக் கோபியும் திகழ்கின்றனர். 

சீத்தாராமன் பல கொடுமைகளை வேலுவால் சந்தித்தாலும், தன் பல் வலியைக் குணப்படுத்திய வேலுவுக்கு எந்நேரமும் விசுவாசமாகவும் நன்றியுணர்வுடனும் செயல்படுகிறான். பல் வலியைக் குணம்படுத்தியதால் மட்டும் அவன் வேலுவுக்கு விசுவாசமாகவிருக்கவில்லை. தன்னால் மீண்டும் உணவு உண்ண முடிந்ததும் தனக்கு உரிய கோயில் வேலைகளைப் பார்க்க வாய்ப்பு தந்தடும் வேலுதான் என்பதனால் அவன் வேலுவுக்கு விசுவாசமாக இருந்ததுபோல் எனக்குத் தோன்றியது. 

மனப்பிறழ்ந்தவன் என்றழைக்கப்படும் சீத்தாராமன் அவன் செய்யும் வேலைகளிலும் தனக்கு உதவிய நபருக்கு உதவும்போதும் சக மனிதனிடம் பழகும்போதும் அன்பு, கனிவு, நன்றியுணர்வு என்று மனித குணத்துடன் இயங்குகிறான். மனப்பிறழ்ந்தவனிலிருந்து மனிதாபிமானமிக்கவனாக சீத்தாரமன் மாறுகிறான். ஆனால், கதைச்சொல்லியான கோபியும் வேலுவும் மனித குணத்தோடு தொடக்கத்தில் சீத்தாரமனுக்கு உதவியிருந்தாலும் தங்களின் தேவைகள் பூர்த்தியடையும் நேரத்தில் சுய நலம் தலைத்தோங்கி குரூரமாக நடந்துகொள்கின்றனர். இங்கு அவர்கள்தான் மனித குணத்திலிருந்து வெளியேறி மனப்பிறழ்ந்தவர்களாகச் செயல்படுகின்றனர்.  வேலு பலத்தால் சீத்தாராமனை வதைத்தான்; கோபி தன் தேவைக்கு முன்னுரிமை வழங்கி சுயநலத்தால் சீத்தாராமனுக்கு அநீதியை விளைவித்தான். இதில் நன்கு சிந்தித்துப் பார்த்தால், வேலுவைக் காட்டிலும் கோபியின் சுயநலமும் இயலாமையும் மிக ஆபத்தானது.

கதையை வாசித்து முடித்த பிறகு கதை உணர்வுபூர்வமாக மனதில் நிறைந்துள்ளது. கதையின் மற்றொரு சிறப்பாக அமைகின்றது கதையில் கையாளப்பட்டுள்ள காட்சி சித்தரிப்பு. திருவிழா காலக்கட்டத்தில் இருக்கக்கூடிய பரபரப்பு, இருள் நிறைந்த காட்சி, உணவின் மணம் போன்றவற்றின் மூலம் கதையைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்க்க முடிந்தது. சுயநலம் என்ற ஒன்று மேலோங்கும்போது அனைவருமே மனப்பிறழ்ந்தவர்களாகத்தான் செயலாற்றுகிறோம் என்ற அவல நிலையை இக்கதை காட்டியுள்ளது.

சாலினி

அன்பு நவீன். நலம் சூழ்க.

மிருகம் சிறுகதையை வாசித்து முடித்த உணர்விலிருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு கதை.

வாசித்து முடித்தவுடன் இக்கதை ஒரு வாசிப்பில் வாசகனிடம் சென்று சேர சிரமம் எனத் தோன்றியது. அதற்கும் நீங்கள்தான் காரணம். இக்கதையில் வரும் இறுதிக் காட்சி அதுவரை சொன்ன அத்தனையும் சென்று குவியும் இடம் பாலியல் வல்லுறவு, ஓரினச் சேர்க்கை எனும் மன நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கும். வேறென்ன… ஓர் அதிர்ச்சி மதிப்பீடு. அதன் பின்னர் கதை வாசகன் மனதில் நகர்ந்திருக்காது.

ஒரு காட்சியை வைப்பது எழுத்தாளனின் உரிமை என்றாலும் இந்த வலுவான சித்தரிப்பு வாசகனை மேற்கொண்டு நகர விடாமல் செய்திருக்கும். (எளிய வாசகனையும் மனதில் வச்சிக்கிங்க பாஸ்) ஆனால் அதை நினைத்து எழுத்தாளன் கலங்க வேண்டியதில்லை. வேலு வல்லுறவு செய்வது சீத்தாராமனையா அல்லது ஏதோ ஒரு பெண்ணையா என்பது இங்கு முக்கியமல்ல என எண்ணும் வாசகன்தான் கதையை மேற்கொண்டு நகர்த்திச் செல்வான். (குறைந்த பட்சம் நீங்கள் ஓரினச்சேர்க்கைக்காக ஒரு கதையை எழுத மாட்டீர்கள் என உணரும் வாசகனாவது நகர்த்துவான்; நம்புவோம் 🙂

கருணை என்பதன் மதிப்பு என்ன என்று இக்கதை ஆராய்வதாக எடுத்துக்கொண்டு வாசிக்கும்போது வேலு vs கோபி (கதைச்சொல்லியின் பெயர் கோபி தானே) இரு வேறு முனைகளில் நிற்கும் ஒரே பாத்திரங்கள் எனும் எண்ணம் எழுந்தது. வேலு கருணையை ஒரு இன்வஸ்மண்டாக பயன்படுத்துகிறான். கோபி தனக்குக் கிடைக்காத விடுதலையை அவனுக்கு வழங்க நினைத்து பின்னர் அவனுக்கே அது கிடைத்தவுடன் கருணையை மீட்டுக்கொள்கிறான். அவனுக்கு சீத்தாராமன் குறித்த நினைவே அதற்குப் பிறகு இல்லை. அவனது துக்கங்கள் அனைத்தும் ஒரு நொடியில் இன்பமாகிவிடுகின்றன.

கோபியால் அம்மாவின் பணத்தைத் திருட முடியும். பொழுதெல்லாம் நகரத்தில் திரிய முடியும். ஆனால் அவனால் தனியாக எங்கும் ஓட முடியாது. அவன் ஒரு கைதி. அவன் குடும்பத்திற்கு கட்டுப்பட்டவன். அவனுக்கு சீத்தாராமனின் தடைகளற்ற சுதந்திரம் எத்தனை எரிச்சலை கொடுத்திருக்கும். சித்தப்பா வந்த பிறகு சீத்தாராமனை உடனடியாக மறப்பது அதனால்தான்?! அப்படியானால் அதற்கு முன்னர் கோபப்பட்டது… உதவ வந்தது… அதன் பெயர் கருணையா? என்பதுதான் இக்கதையின் மையக் கேள்வி.

இவர்கள் இருவருக்கும் கைவராத கருணை சீத்தாராமனுக்கு வாய்த்துள்ளது. அவர் நன்றி உணர்ச்சியால் அவ்விடத்தை விட்டு போகாமல் இருக்கலாம், வேலுவுக்கு அதீத முக்கியத்துவம் தரலாம். ஆனால் இதற்கு முன்னர் யாருக்கோ வேலை செய்த கைகள் அவை. இப்போதும் யார் சொன்னாலும் இயங்கும் மனம் அது. கருணையில்லாமல் வேறென்ன சீத்தாராமனை இயக்கியிருக்கக் கூடும்?

நல்ல கதைகள் நம் வாழ்வில் அதனுடைய சாரத்தை ஏற்றி விடுகிறது. யோசித்துப் பார்த்தால் நமக்காக எந்த கேள்வியும் கேட்காமல் பணிவிடை செய்துக்கொண்டே இருக்கும் அம்மா, மனைவி, சகோதரி உயிர்கள் நம் மீது எத்தனை கருணை காட்டுகிறது என எண்ணிக்கொண்டேன். நாம் அவர்களை உண்மையில் கரிசனத்தோடு கவனிக்கிறோமா?

ராம்

அன்புள்ள நவீன் சார் அவர்களுக்கு,

சிலர் நம்மிடம் பகிரும் நிகழ்வுகள், “எனக்கு இப்படி நடந்துச்சு தெரியுமா” என்று விவரித்து சொல்லும்போதெல்லாம்  நான் உணர்வுகளை எல்லாம் ஒன்றாய் குவித்து கேட்பது வழக்கம். சில கதைகளை வாசிக்கும் பொழுது அவ்வாறான மன நிலை ஏற்படும். கீலாக்காரனை வாசித்து முடிக்கும் பொழுது, நானும் கதைச் சொல்லியைப் போல் ஒரு கடையில் அமர்ந்துக் கொண்டு, சீதாராமனை நினைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. கதையின் இறுதியில் வருவதுப் போல், சரியாக சுவாமியும் என்னிடம் ‘சாப்டாச்சாப்பா” என்று கேட்டார். சின்ன திடுக்கிடல்.

நான் அப்பொழுது பினாங்கின் MBS இடைநிலைப் பள்ளியில் பயின்றுக் கொண்டிருந்தேன். பள்ளிக்கு செல்லும் வழியில் இவ்வாறான ஒருவரை கண்டிருக்கிறேன். அங்கே ஒரு மேம்பாலச் சாலையின் அடியில் ஒரு கீலாக்காரன் இருப்பார். பினாங்கில் வசிப்பவர்கள் இதை வாசித்தால் அறிந்துக் கொள்ள முடியும். பினாங்கு நகரின் ‘Masjid Negeri’ எதிர்புறமிருக்கும் சாலையது. சீதாராமனை அவரோடு ஒப்பிட்டு கொள்கிறேன். எத்தனை சீதாராமன்கள் இருந்திருப்பார்கள். எத்தனை பேரை இவ்வுலகம் அடையாளம் கண்டிருக்கும். காலத்தால் கரைந்தழிந்தவர்கள் எத்தனைப் பேர், என்று நினைக்கும் பொழுது மார்பின் மேல் பெருத்த கணம் ஓங்கி அடிக்கிறது. நான் அவ்வாறான ஒருவரை நேரில் சந்தித்திருப்பதால், அவரை கேலிச் செய்திருப்பதால், கீலாக்காரன் என்று வசைப் பாடியிருப்பதால் இந்தக் கேள்விகள் எழுகின்றன. அவர்கள் எல்லாம் யார்? ஏன் அப்படி சென்று சேர்ந்தார்கள்? எது அவர்களை அந்த இருண்மைக்கு உந்தி தள்ளியது ? அவர்கள் வாழ்வு, சிந்தனை எல்லாம் எப்படி இருக்குமென்ற கேள்விகள். முன்பு ஒருமுறை பள்ளி முடிந்து திரும்பி நடந்து செல்கையில், அவர் நிர்வாணமாக நின்றுக் கொண்டிருந்தார். நான் என்னுடன் எடுத்து வந்திருந்த விளையாட்டு மாற்று உடைகளை அவரிடம் போட்டு விட்டு ஓடி விட்டேன். பின்பு பள்ளி புறப்பாட நடவடிக்கை ஆசிரியரிடம் அடி வாங்கியதாக ஞாபகம். மறுநாள் அவர் அந்த உடைகளை அணிந்திருப்பதை பார்த்த பொழுது ஏதோவொரு நிறைவு ஏற்பட்டது என்று இப்பொழுது எண்ணும் பொழுது தோன்றுகிறது. கூலிமிற்கு வந்தவுடன் அவரை நான் மறுபடி பார்த்ததே இல்லை.

ஒரு ஏழு வருடம் முன்னே சென்றால், கதை சொல்லியாக தான் நானிருந்தேன் என்று சொல்லலாம். அந்த மன நிலையை கடக்காத இளைஞன் இருக்க மாட்டான் என்று நினைத்துக் கொள்கிறேன். அடுத்தவர் சொல்லும் வேலைகளை செய்ய மனம் அறவே ஒப்பாது, ஆனால் செய்வதொன்றே வழி என்று இருக்கும். எத்தனை கெட்ட வார்த்தைகள், யாருமில்லா நேரத்தில் வெளி வந்திருக்கும் என்று, இப்பொழுது இதை எழுதும் பொழுது எண்ணி பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது. எத்தனை மொன்னையாகஇருந்திருக்கிறோம் என்ற உணர்வும் ஏற்படுகிறது. அதுவெல்லாம் வயதின், உணர்ச்சிகளின் வேகம், உச்சம். கதை சொல்லி சீதாராமனுக்காக திருடுகிறான். மாட்டிக் கொள்கிறான். சித்தப்பாவின் அன்பை, அரவணைப்பைக் கோருகிறான். சீதாராமனைக் கூட அவன் தந்தையாகவோ, சித்தப்பாவாகவோ நினைத்து இருக்கலாம். ஒன்றிலிருந்து தொலைத்த ஒன்றை, இன்னொன்றில் தேடுவது அது. அதனால் தான் அந்த கனிவு, அக்கறை, அன்பு எல்லாம்.

வேலு அண்ணன் பாத்திரம், ஒரு வகை ஆழ் மன திகைப்பை தந்தது. ஏன் என்று சொல்ல தோன்றவில்லை. சிலரை நாம் சந்தித்து இருப்போம். சிலர் நம் மனதையும் உடலையும் வெகுவாய் பாதித்திருப்பார்கள். சிலரை தண்டித்திருப்போம்.  சிலரை மன்னித்திருப்போம்.  நம் மனதை தோண்டிப் பார்த்தால், அவர்கள் எல்லாம் இன்னமும் எங்கோ ஓரிடத்தில் புகைப் போல உறைந்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், வெகு சிலரை மட்டுமே நம் தசை பிண்டத்தை நாமே வெட்டி வீசுவதைப் போல் அறுத்து எறிந்திருப்போம். அவர்களை காலப் போக்கில் மறந்தும் போயிருப்போம். அவ்வாறு ஒருவன் தான் எனக்கு வேலு. எங்கோ ஆழத்தில் எரித்துளியென எரிந்து, அது அணைந்து, கரிக் கல்லாய் மாறிவிட்ட நினைவுகள் அவை. அதை என்றுமே தொடக் கூடாது என்று எண்ணுகிறேன். ஆயக் கோட்டையில் வேலுவுடன் உண்மையில் இருந்தது யார்? பொதுவான மனம் இவள் தான் என்று சொன்னாலும், ஆழ்மனம் வேறொன்றை கூவி கத்துகிறது. இருக்கட்டும். அதை அடக்கி விடுகிறேன்.

கீலாக்காரர்கள் யாருக்காகவோ காத்திருக்கிறார்கள். இல்லை யாருடனோ தொடர்ந்து உரையாடலில் இருக்கிறார்கள். அல்லது நம்மில் இன்னமும் தோன்றாத ஒரு பித்தில் முன் கூட்டியே சென்று திளைத்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்க. அவர்களை மீண்டும் நினைவுப்படுத்திய உங்களுக்கு நன்றி.

சர்வேந்திரன் செல்வபாண்டியன்.

(Visited 73 times, 1 visits today)