மிருகம்: கடிதங்கள் 5

தீவிர இலக்கிய செயல்பாடுகள், முகாம்கள், இலக்கிய பத்திரிக்கை நடத்துதல்,  இலக்கிய விழாக்களுக்கு நாடு விட்டு நாடு பயணித்தல், போட்டிகள், நடுவர் வேலை, பரிசளித்தல், நாவல்கள், விமர்சனம், கட்டுரை, புத்தக வெளியீடு, இலக்கிய அமர்வுகள் இவை யாவற்றுக்கும் நடுவில் நேரம் அமைத்து சிறுகதை எழுதுகின்ற ம.நவீன் அவர்களுக்கு முதலில் பெரிய சலாம்.

இம்மாத வல்லினம் இதழில் அவரது ‘மிருகம்’ சிறுகதை வாசித்து அதன் முடிவிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன். பரிதாபமாக பார்க்கின்ற அந்த போப்பியின் புகைப்படம் கண்ணிலே நிற்கிறது. மிக நுட்பமான சிறுகதை. கதைசொல்லிக்கு பெயரே இல்லை. கதைசொல்லிக்கு பெற்றோர்கள் இல்லை. பெரிய அனுபவங்களோ புரிதல்களோ இல்லாத இளங்குறுத்துகளின் வாழ்வில் போப்பி நுழைவது, பின் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து வளர்கின்ற சூழல், மேலும் பல நுண் சித்தரிப்புகள், இக்கதையை சிறப்பானதொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.

போப்பி என்றால் போப்பி மட்டும்தானா என்ன? ராணுவம், அரசியல், மதம், கார்ப்பரேட் ஆகிய அனைத்துமே செய்கின்ற de-humanisation செயலை ஏற்பதில்/மறுப்பதில் உருவாகின்றது சிக்கல். ராணுவத்தை, அரசியலை, கார்ப்பரேட் கலாச்சாரத்தை விட்டு விலகி ஓடுபவர்கள், நாள்தோறும் வேகமாய் மாறுகின்ற நவீன தலைமுறையை ஏற்றுக் கொள்ள இயலாது தோற்கும் பழைய தலைமுறைகள், விவாகரத்துகள் அதிகரித்து வரும் இன்றைய காலட்டத்தில், மிருகத்துக்கும் மனிதத்துக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் மனங்கள் என, அனைத்துமே போப்பிகள்தான்.

போப்பி/poppy என்பது காட்டு மலரா, வீட்டு மலரா என கேள்வியெழுப்பும் அந்த நாய்குட்டியின் பெயரே ஒரு கவிதை. 

மையத்திலிருந்து மீண்டும் விளிம்பை நோக்கி, அதாவது கோலாலம்பூரில் இருந்து கோலா சிலாங்கூர் நோக்கி போப்பி செல்கையில், இந்த சிறுகதை வாசக மனங்களில் பிரம்மாண்டமாய் விரிகிறது. அற்புதமான சிறுகதை அளித்ததற்கு நன்றிகளும், வாழ்த்துகளும் நவீன்.

வெற்றி ராஜா

மிக அருமையான இலக்கியப் படைப்பு சார். கண் கலங்க வைத்த கதையின் முடிவு ஒரு எழுதாளரின் வெற்றியாகக் கருதுகிறேன். இருப்பினும் ஓரிரு இடங்களில் எனக்கு உடன்பாடில்லாத சில பதிவுகள் இருந்தன, அது என் சொந்த கருத்தென்பதால் அது அவ்வளவு முக்கியம் இல்லை. வாழ்த்துகள் சார்.

பிரவினா ராஜேந்திரன்

இப்போது தான் ‘மிருகம்’ கதை வாசித்தேன் நவீன். நன்றாக வந்திருக்கிறது. நாயை ஏதோ விதத்தில் குழந்தையாகவும் நாம் பார்ப்பதால் கடைசியில் போப்பி திரும்பி பார்க்காமல் போகும் போது வருத்தமாகவும் இருந்தது. நாய்க்கு ‘உணவு’ என்றால் மனிதனுக்கு தன் சுமூகமான ‘வாழ்க்கை’. இரண்டிலும் எவ்வளவு நெருங்கியவர்கள் கை வைத்தாலும் எதிர்வினை நிகழும். இரண்டுமே மிருக குணங்கள் தான். பொருத்தமான தலைப்பு.

ஜெயராம்

(Visited 55 times, 1 visits today)