மிருகம்: கடிதங்கள் 4

‘மிருகம்’ படித்தேன். மனிதநேயம் அருகிவரும் காலத்தில் மெருகேற்றிய மிருகநேயம் பற்றி சொல்லப்பட்ட கதை.
மனங்களின் முரண்களை பற்றிய அழகான எதார்த்தமான சித்தரிப்பு.
முடிவு மனதை உண்மையலேயே தொட்டது.

சிலருக்கு அது அதீதமாக தோன்றலாம்.
அந்த அதீதம் எனக்கு பிடித்திருக்கின்றது.
பரிணாம வளர்ச்சியில் ஓநாய் நாயானது. நாய் நண்பனாகி சகஜீவனானது.
நாய் இனத்திற்கு நிகழ்ந்தது இன்னும் மனித இனத்திற்கு நிகழவில்லை.
ரோட்வைலரை முன்னிறுத்தி எனக்கும் என் மனைவிக்குமான முரண் அனுபவம் இருந்ததால் கதையோடு எளிதாக பொருத்திக்கொள்ள முடிந்தது.
ஆனால் அது இறந்த போது அவள் அழுதது ஏன் என்று இன்றும் புரியவில்லை.

கோமதியும் அழுதிருப்பாள் அல்லது என்றாவது ஒரு  நாள் அழுவாள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இறுதி வரி கதறிஅழுதேன் என்பது அழுதேன் என்று மட்டும் இருந்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.
விபத்து இல்லாமல் இருந்திருந்தாலும் கூட அவனோடான கதைச்சொல்லியின் உறவு இதேபோல் தான் இருந்திருக்கும்.
அத்தகைய ஓர் உறவு அபூர்வமானது.
அதற்கு அர்த்தங்கள் காரணகாரியங்கள் கற்பிக்க இயலாது. அதுவே புனைவிற்கான, பகிர்விற்கான நியாயமாகின்றது.

மனிதனுள் மிருகமும் மிருகத்தினுள் மனிதமும் காட்டிய கதை இது.
நன்றி நவீன்.

மா. சண்முகசிவா

நவீன் அண்ணா, முதலில் சொல்லிவிடுகிறேன். உங்கள் நடை அபாரம். சலசலவென போகிறது கதை. தொடங்கினால் நிறுத்த முடியாத விறுவிறுப்பு. இதுதான் உங்கள் சிறுகதை வந்தவுடன் வாசிக்கக் காரணம். நிச்சயமாக சோர்வு தட்டாது என நம்பிக்கை.

என்னைப் போன்ற வெகுசன வாசிப்பில் இருந்து தீவிர வாசிப்பை நோக்கி வரும் பின்புலம் கொண்டவனுக்கு இதுபோன்ற எளிய மொழியில் சொல்லும் கதைகள் வரப்பிரசாதம்.

உங்களுக்கு வந்த கடிதங்களை வைத்து மிருகம் கதையை மேலும் புரிந்துகொண்டேன். நன்றி அவர்களுக்கு.

பார்த்திபன் சோமா

ம. நவீன் அவர்களே, மிருகம் நல்ல சிறுகதை. மிருகம் என தலைப்பு இருந்தாலும் மனிதனைப் பற்றி பேசும் சிறுகதை.

எனக்கு நாய்களுடன் பழக்கம் இல்லை. நாய்களைத் தொட முடிவதில்லை. ஆனால் இக்கதையை வாசித்தபோது இருளில் செல்லும் போப்பியை அணைக்கத் தோன்றியது.

எல்லா அனாதை போப்பிகளுக்கும் பின்னால் இப்படி ஒரு கதை இருக்குமா என யோசிக்கையில் இனி வீதி நாய்கள் மீது கரிசனம் செலுத்த வேண்டும்போல உள்ளது.

மஹாதேவன்

(Visited 71 times, 1 visits today)