எதிர்பார்த்ததைவிட இரவு குளிர்ந்தது. கையுறையால் விரல்களில் ஏற்படும் குளிர்வலியில் இருந்து தப்ப முடிந்தது. நாங்கள் குளித்திருக்கவில்லை. நேரத்தை விரையம் செய்ய வேண்டாமென குளிராடையை உடுத்திக்கொண்டு அவசரமாக வெளியேறி இருந்தோம். அந்த அவசரத்தில் எங்களிடம் கொடுத்த சிவப்பு நிற அட்டையும் உடன் வந்தது. எங்குச் சென்றாலும் அந்த அட்டையை அணியச் சொன்னது நினைவுக்கு வந்தது. கழுத்தில் இருந்ததை சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.
நானும் அஸ்ரினும் தொடர்ந்து மலேசிய இலக்கியச் சூழல் குறித்து பேசிக்கொண்டே வந்தோம். மலேசியாவில் குறிப்பிடத்தக்க மலாய் சிற்றிதழ்கள் இல்லாத சூழல் குறித்ததாக அது அமைந்தது. அரசாங்க ஏடு என்பதால் ‘டேவான் சாஸ்த்திரா’, அறிமுக எழுத்தாளர்களுக்காக அது உருவாக்கும் ‘தூனாஸ் சிப்தா’ ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் சிற்றிதழ் பாணியில் உருவாகும் ‘ஸ்வாரா’ இதழ் குறித்தும் அஸ்ரின் விளக்கினார். இணையச் சூழலில் Eksentrika ஓரளவு பங்களிப்பது குறித்துக் கூறினேன். அது ஆங்கிலம் – மலாய் என இருமொழி இதழ். அவ்விதழ் எனக்கு ஏற்படுத்திய அறிமுகம் குறித்துப் பகிர்ந்துகொண்டேன்.
உண்மையில் இந்தச் சூழலில் வைத்து ஒப்பிடும்போது வல்லினம் இதழில் தேவை என்னவென்று பலருக்கும் புரியலாம். மலேசியாவில் மலாய் மொழியே அதிகாரத்துவ மொழி. அரசே முன்னின்று வளர்க்கும் மொழி. ‘டேவன் சாஸ்திரா’, ‘துனாஸ் சிப்தா’ போன்ற இதழ்களுக்குப் பின்னால் ‘டேவான் பாஹாசா’ என்ற மாபெரும் அமைப்பு உண்டு. தமிழ் இங்குச் சிறுபான்மை இனம் பேசும் மொழி. அம்மொழியில் ஓர் இதழ் 2007இல் உருவாகி, எவ்வித ஸ்தாபனங்களின் பலமும் இன்றி, இன்றுவரை நிலைக்க முடிவதால் மட்டுமே இந்நாட்டில் நவீன தமிழ் இலக்கியவாதிகளுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்க முடிந்துள்ளது. இணையத்தின் பலமின்றி இது சாத்தியமில்லை. இணையம் எல்லைகளை விரிவடையச் செய்தது. அதன்வழி, உலகம் முழுக்க இருக்கும் நவீன இலக்கியவாதிகளின் கரங்களைப் பற்றிக்கொண்டு வல்லினம் தன் நிலத்தில் திடமாக நின்றுக்கொண்டது.
எங்கள் தங்கும் விடுதிக்கு அருகில் உள்ள கடைவீதிக்குச் செல்லும் வழியைப் பலமுறை பொறுப்பில் இருந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றிருந்ததால் பெரிய சிக்கல் இல்லாமல் சாலை ஓரமாகவே நடந்துகொண்டிருந்தோம். இதுபோன்ற குளிர் இரவுகளில் நடக்கும்போதெல்லாம் தன்னியல்பாக ஒரு பாட்டை முணுமுணுக்கத் தொடங்கிவிடுவேன். அன்றும் அப்படிப் பாடிக்கொண்டே சென்றேன்.
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
என்ன பக்கத்தில் ஜோதிகா இல்லை; அஸ்ரினை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்வதற்கும் இல்லை.
ஒன்றரைக் கிலோ மீட்டர் நடந்தபின்னர் வெளிச்சம் தெரிந்தது. பனி மூடிய இரவுகளில் ஒளிவிடும் மஞ்சள் விளக்குகள் கொடுக்கும் மந்தகாசமான வெளிச்சம் மனதை சிலிர்க்க வைக்கக் கூடியது. அவ்விடத்தை நோக்கி நடந்தோம். \
அங்கே சிறிய கூட்டம் கூடியிருந்தது. இன்னும் அருகில் சென்றபோது சீன இசைநாடகம் ஒன்று நடந்துக்கொண்டிருந்தது. இதை Chinese opera என்பார்கள். சின்ன வயதிலிருந்து இதை பார்த்து வளர்ந்துள்ளதால் அதன் இசையும் கூர்மை கொள்ளும் குரலும் எனக்கு நல்ல அறிமுகம். அஸ்ரின் அதை வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
சீன ஒபரா பண்டைய சீனாவில் நிலவிய பல கலை வடிவங்களின் கூட்டு நிகழ்த்துக்கலை. இது கி.பி 13ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசு காலத்தில் இன்றைய முதிர்நிலை வடிவத்தை அடைந்த கலை. அதன் பின்னர் சில பெண்கள் குடைகளை வைத்துக்கொண்டு நடனம் ஆடினர். எல்லாமே திறந்த வெளியில் நடந்தது.
அஸ்ரின் நடனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது என் கவனம் அவ்விடத்தைச் சுற்றியிருந்த கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது சென்றது. எல்லாமே பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட கடைகள். ஒவ்வொன்றும் விலை அதிகம். அஸ்ரின் என்னைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளச் சொன்னார். மறுநாள் Hefang Street எனும் இடத்திற்குச் செல்லலாம் என்றும். அங்கு அனைத்துப் பொருட்களும் விலை மலிவாகக் கிடைக்கும் என்றார். ஆனால் அந்தக் கடை வீதியில் என்னைக் கவர்ந்தது லியாங்ஸு மக்கள் வழிபட்ட தெய்வத்தின் உருவம் நவீன ஓவியமாக வடிக்கப்பட்ட காந்த ஒட்டிகள். சிறியவை; ஆனால் நுட்பமாகவும் தரமாகவும் இருந்தது.
சீனப் பட்டுத் துணிகளை அதிகம் பார்க்க முடிந்தது. பட்டு சீனாவில் ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய கற்கால யுகத்தில் வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஹான் வம்சத்தின்போது, சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் விரிவடைந்தன. அக்காலக்கட்டத்தில்தான் சீனாவின் பட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந்தது, இது பழம்பெரும் பட்டுப் பாதை விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது. பட்டுப்பாதை திறக்கப்படும்வரை பட்டு உற்பத்திக் கலை சீனாவில் மட்டுமே இருந்தது.
சீனப்பட்டு பட்டுப்புழுக்கள் உருவாக்கும் இழைகளில் இருந்து தயாரிக்கப்படுவது. சீனர்களே பட்டுப்புழுக்களின் இழைகளை எடுத்து நூல் நூற்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுப்பிடித்தனர். சீனாவில் பட்டு அறிமுகமான விதம் குறித்து பிரபலமான கதை ஒன்று உண்டு. சீனத்து ராணி ஒருத்தி வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, முசுக்கட்டைச் செடியின் இலையில் (mulberry) பட்டுப் புழு கூடு கட்டியிருந்தது. அந்தக் கூடு வழவழப்பான நூலால் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ராணி அந்த கூட்டின் நூலை மெதுவாக இழுத்தாள். அது நீளமாக வந்துகொண்டே இருந்தது. மேலும் சில கூடுகளின் நூலைப் பிரித்தெடுத்தாள். பிறகு அந்த நூலைக் கொண்டு சிறிய துணியைப் பின்னினாள். பிறகு இந்தத் தகவலை பிறருக்குச் சொன்னாள். அதைத் தொடர்ந்து, காடுகளில் பட்டுப் புழுக்களைத் தேடிப்பிடித்து நூல் எடுத்த சீனர்கள், பிறகு தங்கள் வீடுகளிலேயே பட்டுப் புழுக்களை வளர்க்கத் தொடங்கினர் எனக்கூறப்படுகிறது.
ராணி பட்டு நூலைக் கண்டறிந்தது குறித்து பல கதைகள் உண்டு. வாய்வழிக் கதைகள் பல இருந்தாலும் ராணிதான் பட்டைக் கண்டு பிடித்தார் என்று சீன தொன்ம வரலாற்று ஆதாரம் கூறுகிறது.
பட்டுத் தயாரிக்கும் நுட்பம் கிட்டத்தட்ட 2,500 வருடமாகச் சீனர்களால் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. இதன் மூலம் பட்டு வர்த்தகத்தில் சீனா பெரும் லாபம் ஈட்டியது. அந்த ரகசியம் சீனாவை விட்டு வெளியேறியதற்காக சொல்லப்படும் கதையும் சுவாரசியமானதுதான். அதாவது, கோடான் அரசரை மணந்த சீன இளவரசி, சீனாவை விட்டு வெளியேறும்போது பட்டுப்புழுவின் முட்டைகளையும் மல்பெரி விதைகளையும் தனது கேசத்திலும் தலையில் அணியும் துணியிலும் மறைத்து வைத்துக் கடத்தினாள் என்றும் இதனால் பட்டு தயாரிக்கும் தொழில் நுட்பம் பிற நாடுகளுக்குப் பரவியதாகவும் சொல்லப்படுகிறது.
வரலாற்று ரீதியான காரணங்கள் ஊகிக்கக் கூடியவைதான். பட்டுச் சாலை வழியாகப் பயணம் செய்த வணிகர்கள் இரகசியமாக அதன் தொழில் நுட்பத்தைக் கற்றிருக்கலாம் என்றும் பயணிகள் மூலம் பரவியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கும் வலுவான சான்றுகள் இல்லை. ஆனால் பட்டுத் தொழில்நுட்பம் கி.மு. 1ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அறிமுகமானதாகச் சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும் பட்டுக்குத் தாய்நாடு சீனா. அந்தச் சீனாவில் சென்று பட்டுடைகளைப் பார்த்தபோது இந்த நீண்ட பாரம்பரியம் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடிவதில்லை.
இப்படி ஒவ்வொரு கடைகளாக இருவரும் ஏறி இறங்கினோம். இரவுலா செல்லும் நாய்களைக் கொஞ்சினோம். அஸ்ரினுக்கும் நாய் விருப்பமான விலங்காக இருந்தது.
மறுநாள் காலையில் பல்கலைக்கழகச் சுற்றுலா இருப்பதாகக் கூறப்பட்டது. ”நாம் அதற்குச் செல்லாமல் தப்பித்துக்கொள்ளலாம்,” என்றேன். அஸ்ரினும் சம்மதித்தார்.
”ஆனால் நாம் செல்லாதது அவர்களுக்குத் தெரிந்துவிடும். இங்கு எல்லாமே கண்காணிக்கப்படுகிறது. எங்குச் சென்றாலும் இந்த கார்ட்டை எடுத்துச் செல்லச் சொல்கிறார்கள். சொல்ல முடியாது…. இந்தக் கார்ட்டில்கூட சிப் ஏதாவது இருக்கலாம்.” என்றேன். அஸ்ரின் சிரித்தார்.
எனவே, இந்தக் கார்ட்டை தூர கடாசிவிட்டு இருவரும் மறுநாள் முழுவதும் ஊர் சுற்றத் திட்டமிட்டோம்.
அறைக்குத் திரும்பியபோது எல்லா வசதிகள் இருந்தாலும் ஏதோ ஒன்று விலக்கமாக இருப்பதாகத் தோன்றியது. அது பிடிவாதமாகக் கடைப்பிடிக்கப்படும் நேர்த்தி. பிடிவாதமான நேர்த்தி பிளாஸ்டிக் செடியைப் போன்றது. பாக்கெட்டில் இருந்த சிவப்பு அட்டையைத் தூரமாக வீசினேன்.
சிவப்பு கம்யூனிச வண்ணம். கம்யூனிசம் சீனாவுக்கு வரலாற்றில் என்ன கொடுத்துள்ளது? ஒரு காப்பி தயாரித்தேன்.
- தொடரும்