காப்பி இதமான இருந்தது. நடுங்கி உதறச் செய்த குளிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியது. பால்கனிக்குச் செல்லும் தைரியம் எழவில்லை. முன்னறைக்குச் சென்று சாய்ந்து அமர்ந்தேன். தூரமாகக் கிடந்த சிவப்பு நிற அட்டை பயமுறுத்தியது. அதில் ‘சிப்’ இருக்கலாம் என விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் ‘இருக்கலாமோ’ என இப்போது தோன்றியது. அறையைச் சுத்தம் செய்யும் கிழவி ஒரு விசையை அழுத்தி நான் யார் என உறுதிப்படுத்திக்கொண்டதும் அமரும் இடம் தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் என் இருப்பை ஏற்பாட்டுக்குழு உறுதி செய்துகொண்டதும் யாரோ எந்த நேரமும் என்னை உற்றுப் பார்ப்பதுபோன்ற உணர்வை உண்டாக்கியது. ஒட்டுமொத்தசத சீனாவும் ஏதோ ஒரு பிரமாண்ட கண்ணினால் பார்க்கப்பட்டுக்கொண்டே இருக்கிறதோ எனத் தோன்றியது.
நேற்று அரங்குகள் முடியும்வரை எல்லோரிடமும் ஏதோ ஒரு இறுக்கத்தை உணர்ந்தேன். அது என் பிரம்மையாகவும் இருக்கலாம். ஓரளவு சீன அரசியல் வரலாற்றை அறிந்ததாலும் இருக்கலாம்.
சீனா இன்று தன்னை ஒரு கம்யூனிச நாடாக அறிவித்துக்கொண்டுள்ளது. 1949ஆம் ஆண்டில்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குவோமிந்தாங் (Kuomintang) அரசை வீழ்த்தி, சீன மக்கள் குடியரசை நிறுவியது. அன்று தொடங்கி சீனா ஓர் ஒற்றை கட்சி ஆட்சியுடைய நாடாகவே திகழ்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே 1949 முதல் சீனாவை ஆள்கிறது.
உலகின் மிக நீண்ட காலம் மன்னர் ஆட்சியில் கீழிருந்த சீனாவில் 1920களின் முன்பகுதியில் பஞ்சத்தால் சொல்லொண்ணா துன்பங்கள் ஏற்பட்டன. பயிர்கள் அழிந்தன. கால்நடைகள் இறந்தன. குழந்தைகளை விற்றனர். செயலிழந்த தலைமைத்துவம், குறுநில பிரபுக்களின் அட்டகாசம் என்றிருந்த சூழலில் புரட்சிகர நடவடிக்கைகள் துவங்கின.
சீன மக்கள் குடியரசை உருவாக்கியவர் மா செ துங். சீன வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்தவர். சீனாவில் நிலவும் ஏழ்மை, பட்டினி மற்றும் வெளிநாட்டு ஆதிக்கம் ஆகியவற்றைக் கண்டு மனம் வருந்திய மா சே துங்கும் அவரது தோழர்களும் கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர். கொடூரப் பஞ்சப் பின்னணியில் ரஷ்யாவின் உதவியுடன் 1921-ல் சீனப் பொதுவுடமைக் கட்சியை நிறுவி, சீனாவை ஒரு புதிய சமூகமாக மாற்ற வேண்டும் என்ற கனவுடன் போராடினர். 1949-ஆம் ஆண்டு குவோமிந்தாங்கை வீழ்த்தி சீன மக்கள் குடியரசை நிறுவினார்.
விவசாயிகளுக்கு நிலம் வழங்கி, நிலச் சீர்திருத்தத்தை செயல்படுத்தியதும் தொழிற்சாலைகளை நிறுவி, சீனாவை தொழில் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் சீனாவில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்படுத்தியதும் இவர் ஆட்சியில் முக்கியமான பங்களிப்புகளாகக் கூறப்படுகிறது.
ஆனால் மா செ துங் சீனாவில் உருவாக்கிய அழிவும் வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாதவைதான்.
1960களில் ‘கலாச்சாரப் புரட்சி’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார் மா செ துங். இதன் நோக்கம், பழைய சமூகக் கட்டமைப்பை முற்றிலும் அழித்து, புதிய சமூகத்தை உருவாக்குவதாகும். இப்படிச் சொல்லலாம், கம்யூனிச வழிமுறைகளை வலுப்படுத்தும் இலக்குடன், முதலாளித்துவ சிந்தனை, பாரம்பரிய – பழைமைவாத சிந்தனை, கலாசார சிந்தனைகளைச் சீன சமூகத்திலிருந்து வேருடன் பிடுங்கி எறிவதுதான் இதன் நோக்கம். அதாவது, சீனக் கலாசாரமானது கட்சியின் சிந்தாந்தங்களைச் சார்ந்ததாக இருப்பதை உறுதிப்படுத்தவே மா செ துங் விளைந்தார் என்பதே வரலாறு.
இதனால் கலைஞர்களும் எழுத்தாளர்களும் அரசுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டனர். புரட்சியாளர்கள் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களாகக் கருதப்பட்டனர். மாவோ சிந்தனையுடன் ஒத்துவராத எழுத்தாளர்களும் கலைஞர்களும் அறிஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாகி, கடும் உடல் உழைப்புக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் பலர் கொல்லப்பட்டனர். மாவோ சிந்தனை அல்லது மாவோயிசம் என்பது மா சே துங்கின் சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்ட ஒரு அரசியல் கொள்கைதான்.
மா சே துங்கின் கலாசாரப் புரட்சியின்போது நூலகங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்று இடங்கள், கலாசார நிறுவனங்கள் பலவும் அழிக்கப்பட்டன. எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் பெரும்பாலும் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டனர். கட்சியின் சித்தாந்தங்களுடன் ஒத்துப்போகாத அவர்களின் படைப்புகள் தடைசெய்யப்பட்டன.
தொடக்கத்தில் மா சே துங்கின் Hundred Flowers இயக்கம் (1956-57)கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவித்தது. ஆம் நூறு பூக்கள் மலரட்டும் என்றார் மா சே துங். அதாவது நூறு வகையான சிந்தனைகள் உருவாக வேண்டும் என்பதே அவர் கருத்தாக இருந்தது. அரசாங்கத்தை விமர்சிக்க, கருத்துகளைக் கூற அறிஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். அதனால் கம்யூனிசக் கட்சியின் மீது மக்கள் விமர்சனம் அதிகரித்ததைத் தொடர்ந்து, மாவோ அதை உடனே தலைகீழாக மாற்றினார்.
கட்சியை விமர்சிக்கும், மேற்கத்திய விழுமியங்களை ஊக்குவிக்கும் அல்லது அரசின் சிந்தாந்தத்திற்கு சவால் விடும் படைப்புகளை உருவாக்கிய கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் ஆபத்தானவர்களாக அவர் ஆட்சியில் கருதப்பட்டனர். கலையும் இலக்கியமும் பாட்டாளி வர்க்கத்தின் தேவைகளைப் பிரதிபலிக்க வேண்டும், கம்யூனிச விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மா சே துங் எதிர்பார்த்தார். இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் சமூக ஒழுங்கிற்கு அச்சுறுத்தல்களாகக் கருதப்பட்டனர். எனவே அவர்கள் இணங்க வைக்கப்பட்டனர் அல்லது மௌனமாக்கப்பட்டனர்.
கலாசாரப் புரட்சியை ஒட்டி மா சே துங்கின் கருத்துக்களைப் பரப்பவும், பழைய சமூகக் கட்டமைப்பை அழித்து புதிய சமூகத்தை வடிவமைக்கவும் உருவாக்கப்பட்ட செம்படை (Red Guards) சீனாவில் செய்த அழிவுகளை இன்றும் யாரும் மறுத்துவிட முடியாது. அவர்கள் கண்மூடித்தனமாக தாங்கள் எதிரியாகக் கருதிய எல்லாரையும் துடைத்தொழித்தனர். செம்படையினரின் செயல்பாடுகள் காரணமாக சீனாவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக, சீனா பல ஆண்டுகள் பின்னடைவைச் சந்தித்தது.
கலாசாரப் புரட்சி என்பது எந்த விதமான கலாசார வெளிப்பாட்டையும் ஒழிக்க முன்னெடுக்கப்பட்ட மிருகத்தனமான செயல். சீன வரலாற்றின் மிகத் துயரமான, இருண்ட அடுக்குமுறையான காலகட்டம் என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
சீனா இன்று உலகத் திறனும் பொருளியல் வெற்றியும் பெற்று உலகின் இரண்டாவது பெரிய பொருளியலாக, முக்கியமான உலக சக்தியாக வளர்ந்துள்ளது.
மா சே துங்கிற்குப் பிறகு சீன அதிபரான 1978இல் டெங் ஷியா பிங் தலைமையில், சீனா, மத்திய அரசு திட்டமிடும் பொருளியலிலிருந்து சந்தைப் பொருளாதாரக்கு மாறியது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது. ஏற்றுமதியையும் உற்பத்தியையும் அதிகரித்தது. குறைந்த சம்பள ஊழியர்களால் உலகின் தொழிற்சாலையானது. மேலும் சாலைகள், துறைமுகங்கள், ரயில்பாதைகள் என உள்கட்டமைப்பில் சீனா பெருமளவில் முதலீடுகளைச் செய்தது. இது உள்நாட்டு, உலகளாவிய வர்த்தகத்திற்கு உதவியது.
இன்று சீனா உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது. மின்னணு, ஆடை, நுகர்வுப் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்குகிறது. Huawei மற்றும் Alibaba போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களின் உதவியுடன் தற்போது, சீனா 5G, செயற்கை நுண்ணறிவு (AI), மின்சார வாகனங்கள் போன்ற தொழில்நுட்பங்களில் முன்னணி நாடாக உள்ளது.
ஆனால் இன்றும் அதன் மீது கருத்துச் சுதந்திரத்தை ஒட்டிய கறை அழியாமல் உள்ளது.
சீனாவில் மனித உரிமை, அரசியல் சுதந்திர சீர்திருத்தங்களுக்காகப் போராடியதற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற எழுத்தாளர் லியூ ஷியாபோ (Liu Xiaobo) தன் வாழ்நாளில் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு, சீன அரசுக்கு எதிராக ‘அரசு அதிகாரத்தை சீர்குலைக்கத் தூண்டினார்’ என்ற குற்றச்சாட்டில் 11 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போதுதுதான் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017இல், சிறையிலேயே கல்லீரல் புற்றுநோயால் அவர் உயிரிழந்தார் எனும் உண்மையைச் சுமந்திருக்கும் மனதில் சீனா குறித்த எவ்வகையான சித்திரம் உருவாக முடியும்.
காப்பி முடிந்துவிட்டது. இன்னொன்றைப் போட சோர்வாக இருந்தது. சீனாவைப் பற்றிய இந்தப் புரிதல்கள் என் மனநிலைக்குக் காரணமா அல்லது சூழல் அப்படித்தான் இருக்கிறதா என என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.
சொகுசான அறையையும் திகட்டத் திகட்ட உணவையும் கொடுப்பதால் எழுத்தாளன் அதிகாரம் விரும்பும் உண்மையை மட்டும்தான் எழுத முடியுமா என்ன? என்னால் என்றுமே அப்படி எழுத முடியாது.
மா செ துங் நூறு மலர்கள் மலர வேண்டும் என விரும்பி அது மலர்ந்தபோதே மணம் பொறுக்காமல் அழித்தொழித்தார். அவர் அந்த நூறு மலர்களை அறியவே இல்லை. இந்தக் கட்டுரைத் தொடருக்கு அப்படித்தான் தலைப்பும் உருவானது.
- தொடரும்