
80களுக்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மொழியாக்க முயற்சிகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன எனக்கூறலாம். இதுவரை மலேசியத் தமிழ் இலக்கியம் சார்ந்து எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை தொகுப்பு நூல்களிலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்த விரிவான கட்டுரைகள் இல்லை. இராம. சுப்பையா, ஜி. சூசை, விக்னேசன், எஸ். ராமச்சந்திரன், எஸ். சிங்காரவேலு ஆகியோரின் மொழிபெயர்ப்பு பங்களிப்புகள் குறித்த தரவுகளோ தகவல்களோ கிடைப்பதும் மிக அரிதாகவே உள்ளது. நானறிந்து ஜி. சூசை அவர்களின் சில மொழிபெயர்ப்புக் கவிதைகள் 1996இல் மா. இராமையா அவர்களால் எழுதி தொகுக்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தில்’ இடம்பெற்றுள்ளது. அந்நூலில் ஜி. சூசை அவர்களுக்குப் பின்னர் மொழிபெயர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர் மலாக்கா ஜோசப் செல்வம் என மா. இராமையா ஒருவரியில் குறிப்பிட்டுச் செல்கிறார். யார் அந்த ஜோசப் செல்வம் எனத் தேடிச் சென்றபோது அவர் ஐந்து நூல்களை மலாய் மொழியிலிருந்து தமிழுக்கும் பாரதியின் பாடல்கள் உட்பட 3 நூல்களைத் தமிழிலிருந்து மலாய் மொழிக்கும் மொழியாக்கம் செய்துள்ளது தெரியவந்தது. 70களில் மலாய் இலக்கியத்துறையில் தீவிரமாக ஈடுபட்டவர். தமிழிலக்கியச் சூழலில் அதிகம் அறியப்படாதவர்.
Continue reading








