இந்த ஆண்டு தொடக்கத்தில், வல்லினம் பரிந்துரைக்கப்பட்ட நாவல்கள் ஐந்தையும் படித்து முடிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. எங்களுக்கு வழங்கப்பட்ட இடுப்பணியும் இதுவே. மார்ச் மாதத்திற்குள் ஐந்து புத்தகங்களைப் படித்து முடித்து விட வேண்டும் என தோழிகள் பவித்திரா, சுந்தரி, புஷ்பா, பாரதி அனைவரும் ஒரு மனதாக தீர்மானித்தோம். இடையில் திடீர் அறிவிப்பு, 31 மார்ச் மாதம் வரை பள்ளி விடுமுறை நீடிப்பு என்று நானும் தோழி பவித்திராவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம் ஒவ்வொரு நாளும் படித்ததைப் பகிர்ந்து கொண்டு கலந்துரையாடுவது என்று.
அன்று முதல் தோழி எனக்கு ஜெயமோகன் அவர்களின் சிறுகதையான ‘வருக்கை’ கதையினைச் சொன்னாள். என்னையும் படிக்கச்சொல்வார். பிறகு ‘மொழி’ எனும் சிறுகதையைப் படித்த அனுபவத்தைக் கூறினார். அக்கதையில் தங்கைக்கும் அண்ணனுக்கும் இடையில் உள்ள மழலை மொழி புரிதலை விளக்கினார். பிறகு ‘பூனை’, ‘யானை’ போன்ற கதையினை ஒவ்வொரு நானும் என்னிடம் கூறி கதையில் உள்ள சில குறியீடுகளையும் என்னிடம் விளக்கினார்.எனக்கு சிறுகதைகளைப் படிக்க உற்சாகம் தோன்றியது.
ஜெயமோகன் சார், ஆய்வுக் கட்டுரை, அனுபவக்கட்டுரை, விமர்சனக்கட்டுரைகள் மிகவும் தெளிவாக விளக்கத்தோடு பல தகவல்கள் பெரிய நிலப்பரப்பைப்போல படர்ந்து இருக்கும் ஒரு பெரிய மண்டபத்தைச்சுற்றுப்பார்பபதுப்போல இருக்கும். அதிலும் வாசகரின் பதில் கடிதம் அவரின் ஆளுமை வேறு கோணத்தில் மீட்டெடுக்கும். அவரின் சிறுகதைப் படிப்பது என்னிடம் சிறிது குறைவாக இருந்தது.
இவ்வருடம் நான் வாசித்த சிறுகதை ஆடாகம். இதிலும் ஜெயமோகன் சார் நான் என்று தான் கதாப்பாத்திரத்தைக் குறிப்பிட்டிருப்பார். உள உளைச்சல் காரணமாக தற்கொலைச் செய்து கொள்ளும் நபர் தன் இறப்பு ஓர் அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாகப்பாம்பிடம் தன் உயிரை நீக்க செய்வார்.
ஒரு கணத்தில் ஒரு துளியில் இவ்வளவு விஷம் போதும் என்று நாகம் பாம்பு முடிவெடுத்து, கதையில் வரும் நபர். பிழைத்துக் கொள்வார். முரண்பாடான நஞ்சு மருத்தாக மாறுகிறது. இயற்கை சிறு நஞ்சைத் தந்து அவர் உயிரை மீட்டெடுகிறது. கதையில் வரும் நான் என்ற நபரின் வாழ்க்கையை எதிர்பாராத உடல் உள மாற்றங்களுடன் விஷம் ஆடாகம் எனும் பசும் பொன்னுக்கு நிகராகி கொடையாகத் தருகிறது.
ம.நவீன் அண்மையில் எழுதிய ராசன் சிறுகதை அரவத்தைப் பற்றியதுதான். இவ்விரு சிறுகதைகளையும் அண்மையில் வாசித்தால் என்னையறியாமல் இக்கதைகள் என்னுள் இரு பிரிவுகளாக மாறி திரை வடிவங்களாக மாறி ஓடிக்கொண்டிருந்தன.
ஆடகம் கதையில் இருக்கும் நாகப்பாம்பின் படம் உயிரோட்டமாக இருந்தது. ஆகும்பே எனும் இடத்தில் மழையின் துறலும் குளிர்ச்சியும் உணர்ந்துக்கொண்டே வாசிக்கலாம்.
ராசன் சிறுகதையில் இருக்கும் படம் நீலவேணு பாம்பு உயிரை எடுக்கும் அளவிற்கு பயங்கரமாக இருந்தது. கதையை முதல் தொடக்கத்தில் சிரித்துக்கொண்டே வாசிக்கலாம்.
ராசன் சிறுகதையில் தீபன், அமிர்கானை முதலில் சந்திக்கும் தருணம் மிகவும் இயல்பாகவே இருந்தது. அமிர்கான் வார்த்தை ஜாலம், சொல்லாடல் வழி நகைச்சுவைப் பூரிப்பில் மக்களைத்திளைக்கவைத்து தயக்கத்தையும் அச்சத்தையும் போக்குகிறார் .சாதுரியமாக பேசி வணிக யுத்தியைக் கையாளுகிறார்.
‘தூவான் புவான் பாய்க் – பாய்க் டெங்கார்’ எனக்கூறும் போதும், நானும் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். ஆடாகம் சிறுகதையில் பாம்பு கொத்தினால் நாகத்தின் நஞ்சு நரம்பைப்பாதிக்கும், நரப்பின் வலையை அறுத்துவிடும் மூச்சுத்திணறல் ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது படிக்கும் போதே நடுக்கம் இருக்கும்
ராசன் கதையில் பாம்பின் விஷக்கடி பல விதமான நக்கல் நையாண்டியுடன் கூறப்பட்டிடுக்கும். ‘பாம்பின் ஒரு பல்லு பதிஞ்சிருந்தா தோலை தொட்டிருக்கும் நாலு பல்லு பட்டிருந்தா மூளையிலே முத்தக்கொடுத்திருக்கு , முத்தத்தைவாங்கிட்டா குடும்பத்திற்கு வெவகாரம் ஏதும் பண்ணாமல் சத்தமில்லாம குழிக்குள்ளாற போயி சமர்த்த படுத்துக்கலாம்’ கூட்டத்தின் சிரிப்பொலியில் நாமும் சேர்ந்துகொள்வோம். பாம்புக்கடியை இவ்வளவு விளையாட்டாக அமிர்கான் வழி நவீன் சொல்லியுள்ளார்.
அமீர்கான் வாடிக்கையாளரின் உதிக்கும் சொல்லைத் தன் தொழிலுக்கு மூலதனமாக்கி அவர்களுக்கே நிவாரணியாக அளித்திருப்பார். சாதுரியமாக அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் அச்சூழலை இன்னும் யாதார்த்தமாக்கி கூட்டத்தில் நாமும் முண்டியடித்துக்கொண்டு அங்கே என்ன தான் நடக்கிறது? எனப்பார்க்க தோன்றுகிறது. கோபத்தில் இருக்கும் ஒரு குழந்தையை எவ்வாறு ஒரு தாய் சாந்தப்படுத்துவாளோ அதுப்போல அமிர்கான் பாம்பைச் சாந்தப்படுத்த தவளையும் சிட்டுக்குருவியையும் எலியையும் காணிக்கையாகத் தருவதாகப் பேசும் போது நிஜமாகவே பாம்பு கூடையில் தான் இருக்குமோ என கேள்வி எழுகிறது.
குடும்ப பிரச்சனையைக் கையாளும் விதமும் இன்னொரு புதிய யுத்தி. பெண்கள் பேசினால் எரிச்சல் அடையும் ஆண்களை ஆண் சிங்கத்திற்கும் அலற ஓலம் பிடிக்காததால் வேட்டையாடும் பிராணிகளின் வாயைக் கடித்து மூடி விடும் என விலங்கியல் ஆராய்ச்சையும் பெண்கள் கத்துவது கோபத்தால் அல்ல சம்பவங்களை நினைவில் வைத்துக் கொள்வதற்குத்தான் என்றும் காக்கை கரைவது இதற்குதான் என்று கூறுவது உண்மையா என்று வாசகனை யோசிக்கவிடாமல் நம்மை தடுத்து நிறுத்தி நம்மை கன்னத்தில் கையைவைத்துக் கதையைக் கேட்கவைக்கிறார்
கதையின் அமைப்பு நகைச்சுவையாகப் போனாலும் தீபனும் அமிர் கானும் சந்தித்துப் பேசும் தருணம் இக்கதையில் அடி நாதம் எனலாம். மக்களின் நம்பிக்கையைப்பெற்றவர், தன்னுடையை போலித்தனத்தின் துருப்புச்சீட்டு தீபனின் கையில் இருக்கும்போது சற்று பணிந்து பேசும் உரையாடல்களும் நீலவேணு பாம்பின் குணத்தையும் இரகசியமாகப்பேசும் போது அமிர்கானின் உண்மைக் குணத்தைக் காண முடிந்தது. தீபன் தன் சோர்வின் சரித்திரத்தைக் கூறும் போதும் வரிக்குவரி அவரின் பகடி சொற்களால், சீண்டுவது இதழில் புன்னகையை வரவைத்துக்கொண்டிருந்தது. அமிர் கான் பயங்கரமான தீபன் முகத்தில் மகுடி வாசிப்பதுப் போல சிரிப்பாக இருந்தது. அமீர்கான் கடம்பூர் குலத்து இராஜ வம்சம் என்றால் தீபன் ஒரு சாலைக்கு ராசனாகிறான்.
திருடுவது குரு நித்தனை அல்லவா எனக்கேள்வி எழுதும் போது ஒருவரிடம், போர்களத்தின் பொதுநலத்துடன் கைப்பற்றும் எதையும் திருட்டிற்கு ஒப்பிட இயலாது என விளக்குகிறார். தகுதியில்லாதவரிடம் தர்மத்திற்காக தகுதியுள்ளவனிடம் சூரையாடுதல் தவறில்லை என்று கூறுதல் இக்கதையின் தரிசன் எனலாம். கள்ளத்திருட்டு கோழைகளின் பழக்கம் அதனால் தான் அவை இருட்டில் நடைபெறுகிறது விளக்கம் தரும் பகுதி சிறப்பாக அமைந்துள்ளது .
நீலவேணு பாம்பின் குணமும் அதன் அதிசயமும் படிக்கும் போது ஒரு மெல்லிய நடுக்க உணர்வு எழுகிறது. நீலவேணு பாம்பு இறுதியில் இறக்கை முளைத்து திருமாளை சரணடையும் எனும் விளக்கத்தைக் கேட்ட உடன் மெஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின் தராசில் வைத்துப் பார்க்க தோன்றவில்லை. அந்த அளவிற்கு இயல்பான கதை சூழலுக்குள் இயல்பு மீறிய வித்தைக்கூறுகளை முன் வைத்து பயணிக்கிறது இச்சிறுகதை. புராணக் செல்வாக்கை அதிகரித்து விட்டதோ என்று வாசகன் முடிவெடுக்கும் போது திடீர் விழிப்பு நிலைத்தோன்றி மறுபடியும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதுதான் நவீன் சாரின் இன்னொரு அறிவார்ந்த சித்து வேலை எனலாம். இக்கதையிலும் இதை நன்றாகவே செய்துள்ளார் நவீன்.
ராசன் கதையில் பல குறியீடுகள், சமிஞ்ஞைகள், படிமங்கள், உருவகம், அனைத்தும் புடைந்துகிடைக்கின்றன. ஒவ்வொரு உரையாடல் நடுவே அமிர்கான் பல உண்மைகளை முரண்பாட்டுக்கிடையே பதிவுசெய்து வருகிறார். அமிர்கான் கூறும் பொய்யைப் புறம் தள்ளிவிட்டு அவரை மதிப்பீடு செய்து கொண்டு வருகிறான் தீபன். தீபன், கூட்டத்தில் வந்து போகும் வாடிக்கையாளர்களின் பிரதிநிதியாக வரவே இல்லை. ஒரு ராசனாகவே வருகிறான்.
காவல் அதிகாரி அமிர்கானைத் திருடன் எனக்கூறும் போது, தீபன் அவர் ஒரு ராசன் எனக் கூறுபடியே கதையினை முடித்துள்ளார். மறுபடியும் வாசகர் பொதுப்பார்வையைத் தவிர்த்து சிந்தனையை உண்மை பக்கம் செலுத்தை வழிவகுத்துள்ளார். முரண்பாடுகளுக்கு நடுவே முடிவை யூகித்து எழுத பேனாவை வாசகன் கையிலே தந்துள்ளார் நவீன். புனைவில் அமைப்பு முறை, கதையின் நீட்சி, கதாப்பாத்திரங்களின் பாத்திரத்தின் ஆளுமை அனைத்தும் இக்கதையில் வேறு விதமாக சித்தரித்துள்ளது.
நவீன இலக்கியம் என்பது ஒற்றை நோக்குடைய பதிவு கிடையாது. இதன் இலக்கு சொல்லப்படாத ஒன்றை சொல்வதாகும். பார்க்கப்படாத கோணத்தில் பார்ப்பதாகும். சமரசமற்ற கறாரான உண்மையைச் சொல்லவேண்டும். இதைத்தான் சிறுகதையிலும், கட்டுரையிலும் நவீன் சார் சளைக்காமல் பதிவு செய்து வருகிறார். ராசன் சிறுகதையில் மனித வாழ்வியல் பார்வையில் பார்த்தால் பல பதில்கள் கிடைக்கும்.
புனிதவதி