நூறு தீபங்களின் நடனம்

குப்பைநவீன இலக்கிய முகாமில் கவிஞர் சாம்ராஜ் மலேசிய கவிதை குறித்து தனது பார்வையை முன்வைத்தார். அதில் ஜமுனா வேலாயுதம், அகிலன், ஏ.தேவராஜன், பச்சைபாலன், கருணாகரன் ஆகியோரது தொகுப்புகளை முழு முற்றாக நிராகரித்தார். இதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக கருணாகரன் தான் எழுதியவை தரமான கவிதைகள்தான் என முகநூலில் பதிவிட்டுவருவது தெரிகிறது. அதற்குச் சான்றாக ஏற்கனவே அத்தொகுப்புக்கு எழுதப்பட்ட சில மதிப்புரைகளை தன் முகநூலிலேயே பிரசுரித்தார். நட்பு பாராட்டும் பொருட்டு எழுதப்படும் மதிப்புரைகளுக்கு இலக்கிய விமர்சன தகுதி உருவாவதில்லை. மேலும் எம்.சேகரின் இலக்கியம் குறித்த பார்வையையும் விரிவாகவே விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் சிலர் கருணாகரன் கவிதைகள் தரமானவை என அவரது முகநூலில் பதிவிட்டுள்ளனர். இது ஆரோக்கியமானதே. ஆனால் அடுத்த நாளே மலேசிய படைப்பை எடைபோட தமிழக படைப்பாளியால் எப்படி முடியும் எனும் குரல்களும் எழத்தொடங்கியது. நான் இதை எதிர்ப்பார்த்தேன். காரணம், ஒருவரால் ஓர் இலக்கிய விமர்சனத்திற்கு அறிவார்த்தமாக பதில் கூற முடியவில்லையென்றால், அவர்கள் அதிலிருந்து விடுபட்டு சில்லரையான ஒரு பிரச்சினையை கையில் எடுப்பர். சில்லரை பிரச்சினைகளில் சுத்தி சுத்தி கம்பு வீசுவது எளிது. அப்படி கத்தும்போது கருணாகரனுடையது தரமான கவிதைகள்தான் என நிரூபிக்க முடியாத கூட்டம் இந்த சில்லரைத்தனத்தில் எளிதாகப் புகுந்து தாங்கள் செய்வதும் இலக்கிய விவாதம்தான் எனக் கூறிக்கொள்ளலாம்.
உண்மையில் யாராவது ஒருவர் சாம்ராஜ் நிராகரித்த அத்தொகுப்புகளை முன்வைத்து அவை ஏன் தரமான கவிதைகள் என விவாதத்தை முன்னெடுத்திருந்தால் அது ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச் செல்லும். இங்கு அது நிகழாது. ஆனால், மலேசியச் சூழல் நல்ல படைப்புகள் வரவேண்டும் என தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு இதுபோன்ற மேம்போக்கான ‘உங்கள் கவிதை ஆஹா ஓஹோ’ எனும் சத்தங்களுக்கு மத்தியில் அக்கவிதைகள் குறித்து பேசும் பொறுப்பு உண்டு. இந்தக் கட்டுரை அதற்கான முயற்சி. குழப்பத்தில் இருக்கும் இளம் தலைமுறை கவிதை வாசகர்களுக்கு சிறிய தெளிவு ஏற்பட்டாலும் மகிழ்ச்சி. கேள்விகள்/ மாற்றுக்கருத்துகள் இருந்தால் மின்னஞ்சல் அனுப்பலாம். valllinamm@gmail.com

***

பத்து ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களுடன் லங்காவி தீவில் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒருநாள் பயணம்தான். லங்காவியில் காண ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆனால் நுஃமான் அவர்கள் ஒவ்வொரு இடத்தையும் வெகுநேரம் நின்று நிதானித்து கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மசூரி நினைவிடம் அருகில் வாசிக்கப்பட்ட மலாய் பாரம்பரிய இசை கருவிகளை வெகுநேரம் நின்று ரசிக்கத் தொடங்கினார். நான் வாடகைக்கு எடுத்த காரை ஆறு மணிக்குக் கொடுக்க வேண்டும். இன்னும் பார்க்க ஏராளமான இடங்கள் இருந்தன. எனவே அவரை கொஞ்சம் அவசரப்படுத்தினேன். நுஃமான் கூறினார், “பயணம் என்பது புலன்களால் மட்டும் அடையும் இன்பமல்ல. நான் எத்தனை இடங்களைப் பார்த்தேன் என்பது எனக்கு முக்கியமே இல்லை. காட்சி அனுபவத்தைத் தாண்டிய ஒரு அனுபவம் உள்ளது. அதை அடைய வேண்டும். புலன் அனுபவத்தை விரும்புபவர்கள்தான் ஓடி ஓடி எல்லாவற்றையும் பார்த்துவிட துடிப்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பாருங்கோ, இது கவிதை வாசிப்புக்கும் பொருந்தும்.” என்றார்.

என் வாழ்க்கை முழுவதும் இதுபோன்ற ஆசிரியர்கள் கிடைத்தது ஒருவகை நல்லூழ். அந்த விளக்கம் எனக்கு கவிதை ரசிப்பதற்கு பெரும் திறப்பை ஏற்படுத்தியது. எது நல்ல கவிதை; எது போலியானது எனக் கண்டடையவும் ஓரளவு உதவியது.

எது கவிதை? எதன் வழி கவிதை வெளிபடுகிறது? என்பதெல்லாம் தமிழில் பலகாலமாகவே பேசப்பட்டு வந்துள்ள ஒன்றுதான். மலேசியாவைப் பொறுத்தவரை அவை எவற்றையும் வாசிக்காமல் மூளையை ‘ஃபிரஷ்ஷாக’ வைத்துக்கொள்வதே சிறந்த வாசகனாகும் வழியென பலகாலமாகவே பிடிவாதமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொஞ்சம் மெனக்கெட்டு தமிழில் தோன்றிய முக்கியப் படைப்பாளிகள் கவிதைகள் குறித்து கூறியவற்றை வாசித்தாலே ஓரளவு நம்மால் எது நல்ல கவிதை என்பதை மதிப்பீடு செய்ய முடியும். மதிப்பீட்டை அதற்குறிய நுட்பங்களோடு விளக்கும்போது அது விமர்சனம் ஆகிறது. எதன் அடிப்படையில் ஒரு கவிதையை மதிப்பிடுகிறோம் என தெளிவாகக் கூறாவிட்டால் அந்த விமர்சனம் வெறும் மனப்பதிவு என்ற அளவில் நின்றுவிடும். மனப்பதிவும் கீழானது அல்ல. ஒரு தீவிர கவிதை வாசகன் தன்னளவில் இந்த மனப்பதிவின் அடிப்படையில் ஒரு தொகுப்பை ஏற்கவும் நிராகரிக்கவும் செய்கிறான். அவன் பிறரிடம் தன் முடிவுக்கான காரணத்தைக் கூறவேண்டிய அவசியமில்லை. அதுவரை சிறந்த கவிதைகளை வாசித்து அந்தரங்கமாக உருவாகியுள்ள ரசனை அவனை இயக்குகிறது. ஆனால் ஒரு நாட்டில் நல்ல கவிதைகளுக்கான அடையாளம் உருவாக வேண்டுமென நினைக்கையில் நமது மதிப்பீடுகள் குறித்து  விரிவாகப் பேச வேண்டியது கட்டாயமாகிறது.

அது அவ்வளவு சிக்கலானதுமல்ல;

உண்மையில் ஒரு கவிதையை மதிப்பிடுகையில் இந்தச் சிக்கல் எழுவதில்லை. காரணம், கவிதை நம்மை தன்னுள்ளே அழைத்துச் செல்கிறது. நுஃமான் சொன்னதுபோல புலன்களால் மட்டும் அறிய முடியும் ஒன்றைக் கடந்து அரூப மையத்தில் உள்ள அறிய முடியாத இடத்திற்குச் செல்கிறோம். அப்போது அடைந்ததை வேறுவகையில் சொல்ல முயல்கிறோம். ஆனால் அப்போதும் அது முழுமையடைவதில்லை. அது பலகோணங்களில் சிதறி சிதறி புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றது. ஆம் அப்படிச் சிதறக்கூடியதுதான் கவிதை.

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.

பிரமிள் எழுதிய இக்கவிதையை ரசனையற்ற உணவு விரும்பி ஒருவனிடம் காட்டுகையில் “இறகு கெடக்கட்டும் அந்தக் குருவி எப்ப கீழ விழும்?” எனக்கேட்கலாம். தர்க்க ரீதியாகச் சிந்திப்பவர் “இன்னும் கீழ விழாத சிறகுக்குள்ள யாரு மைய விட்டா?” என வாதிடலாம். கவிதைகளை வாசித்து பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே அதன் கவித்துவத்தை அடைய முடியும். நான் இந்தக் கவிதையை முதன் முறையாக வாசித்தபோது மொத்தப்பிரபஞ்சத்தில் என்னுடைய இருப்பு குறித்த கேள்வியே எழுந்தது. காற்றினுடைய தீராத பக்கங்கள் என சொல்லிச் சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.

இப்படிச் சொல்லலாம். ஒரு நல்ல கவிதை மெல்ல அசைந்து நடனமாடும் தீபம் போன்றது. தேர்ந்த வாசகன், தான் கொண்டுள்ள திரியில் அந்த தீபத்தை நனைத்து தான் அறிந்துகொண்ட தீபத்தின் நடனத்தை இன்னொருவரிடம் காட்ட நினைக்கிறான். இப்படி நூறுபேர் நூறு முறை ஒரே தீபத்தில் திரியை நனைத்தாலும் நூறு தீபமும் நூறுவிதமாய் நடனமாடுமே தவிர ஒன்றுபோல அசையாது. நல்ல கவிதைகள் வாசிக்கும் ஒவ்வொருவரின் மூலமும் அத்தனை பரிணாமம் எடுக்கக் கூடியதே.

ஆனால், கவிதையாகவே உருவாகாத ஒன்றை மதிப்பிடுவது மிகச் சவாலானது.

ஒரு தங்க வியாபாரி தன் அனுபவத்தின் வழியே கையில் கிடைக்கும் ஒரு தங்க நகையைத் தூக்கிப்பார்த்து எளிதாக மதிப்பிடுகிறான் (மனப்பதிவு). பின்னர் அதன் மதிப்பைத் தெளிவாகத் தீர்மாணிக்க தன்னிடம் உள்ள கருவிகள் வழி ஆராய்ந்து அதை நிரூபிக்கவும் செய்கிறான் (விமர்சனம்). அது தங்கம்தான் என ஒப்புக்கொண்டு சில சமயம் அதன் வடிவம், செய்முறை நுணுக்கம் ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தாலும் அதற்கொப்ப அதற்கு ஒரு விலைத் தீர்மாணிக்கிறான் (மதிப்பீடு). ஆனால் அவனிடம் நீங்கள் ஒரு செம்புக் குவளையை மதிப்பிடச்சொன்னால் கடைசிவரை அவனால் மதிப்பிட முடியாது. எவ்வளவு திறமையான நகை வியாபாரிக்கும் அது சாத்தியமற்றது. அது தங்கமே இல்லை என கத்துவான்; கதறுவான். ஆனாலும் அவனிடம் உள்ள கருவியைக் கொண்டு மதிப்பிடச்சொன்னால் அவனால் அது ஆகாத காரியமாக இருக்கும்.

எம்.கருணாகரனின் ‘கணங்களின் சந்திப்பு’ தொகுப்பை விமர்சனம் செய்வது அவ்வாறான சங்கடங்களைக் கொடுக்கக் கூடியதே. ஆனாலும் செம்பை மதிப்பிட வேறு சில கருவிகள் இருக்கவே செய்யும். அதை தங்கத்தை மதிப்பிடும் கருவியால் அளவிடச் சொல்லும்போதே சிக்கல் உண்டாகிறது.

எம்.கருணாகரன் தொகுப்பில் உள்ள முதன்மை சிக்கல் ஒரு போலியான மன எழுச்சிக்கு உள்ளாகி அதை உண்மையென்று அவரே நம்பி, அந்த உணர்ச்சியை சொற்களாகக் கோர்க்கிறார் என்பதுதான். கவிதை உணர்ச்சியின் வெளியீடு என பொதுவான ஒரு கருத்து உண்டு. கருணாகரனைப் போலவே மலேசியாவில் பல கவிஞர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் ஏதாவது ஒன்றைப் பார்த்து உணர்ச்சிகளை சொல் அடுக்குகளில் கொட்டிவிடுவதுண்டு. அப்படி கருணாகரனுக்கு அடுத்த படியாக உடனுக்கு உடனே உணர்ச்சிவசப்பட்டு வரிவரியாக எழுதுபவர் நா.பச்சைபாலன்.

மனிதன் எப்போதுதான் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் இருந்தான்? உணர்ச்சி என்பது சொல், செயல் மூலமாக ஒவ்வொரு தருணத்திலும் வெளிப்பட்டபடி உள்ளது. என்றால், கொட்டப்படும் உணர்ச்சியெல்லாம் கவிதையா என்ன? அடுத்த நிலைக்குச் சென்று உணர்ச்சி வழி தோன்றிய அனுபவத்தை அப்படியே வாசகனுக்குத் தோன்ற வைக்க வேண்டும் என்பவர்கள் உண்டு. பிரமிள் இதற்கு கூறும் விளக்கம் முக்கியமானது. ‘பிராணிவர்க்கம் ஒன்றின் உணர்ச்சி பிரிதொன்றுக்கு தொற்றிக்கொள்வதன் மூலமாகவே இயங்குகின்றன. எனவே இதோடு ஒத்த அனுபவ பரிவர்த்தனை கவிதை ஆகாது’ என்கிறார்.(கவிதை கோட்பாடும் பாரதி கலையும்)

கருணாகரனின் சில கவிதைகள் இவ்வாறு உள்ளன.

பால்ய சிறுமி

கதறுகிறாள்…

பக்கத்தில் அப்பன்

————————–

பக்கத்தில் காதலன்

கைப்பேசியில்

அவன்!

————————–

விண்வெளியில்

மலேசியா

குடிசையில் குப்புசாமி!

————————–

கரையான் தின்ற

தமிழ்ப்பள்ளி

வாழ்க அரசியல்வாதி!

_________________

நவீன விமான நிலையம்

மங்களம்

கழிவறை சுத்தம்

நீங்கள் ஒரு நடன அரங்குக்குச் செல்கிறீர்கள். உங்கள் நோக்கம் பரத நாட்டியத்தைக் கண்டு ரசிப்பது. அங்கு முழுமையான அலங்காரத்தோடு ஒரு நடனமணி மேடைக்கு நடுவில் நின்றுகொண்டு சிரிக்கிறாள், கண்ணீர் விட்டு அழுகிறாள், இறுதியில் கோபமாக கொச்சை வார்த்தையில் ஏசுகிறாள் என வைத்துக்கொள்வோம். அதை நீங்கள் நடனம் என ஏற்றுக்கொள்வீர்களா? உங்களை சமாதானப்படுத்த அவள், ‘ராமனைக் கண்டதும் ஏற்பட்ட காதல் மோகம், ராவணனால் கடத்தப்பட்டபின் ஏற்பட்ட சோகம், கடைசியாக ‘ஏன்டா நீ வந்த? ராமன வரச்சொல்லடா’ என அனுமனை திட்டிய உக்கிரம்’ என தான் இதுவரை செய்ததெல்லாம் நடனத்தின் முத்திரைகள் என்றால் சமாதானம் அடைவீர்களா? எந்தக் கலையும் அப்படி நேரடியாக வெளிப்படாது. அது குறியீடுகள் மூலமே தன்னை வெளிப்படுத்தும். கலைகள் அனைத்துமே குறியீடுகளால் ஆனவைதான். பாவனைகளின் குறியீடுகள் வழி நடனம் உருபெறுகிறது. வண்ணங்கள் கொடுக்கும் குறியீடுகள் வழி ஓவியம் உருகொள்கிறது. சப்தங்கள் குறியீட்டின் மூலம் இசை உருவாகிறது, சொற்களின் குறியீடுகள் மூலமே கவிதை உருகொள்கிறது.

குறியீடுகள் என்பது என்ன?

தனது நேரான பொருளைவிட மிகுதியாக உணர்த்தக்கூடியதைக் குறியீடு என்று சொல்லலாம். ஓரளவு மரபு இலக்கியங்களைக் கற்க முயலும் மாணவனாக சங்க இலக்கியம் முதலே குறியீடுகள் வழிதான் கவிதை இயங்கிவந்துள்ளது எனப்புரிந்துகொள்கிறேன்.

வாழி ஆதன், வாழி அவினி
நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
எனவேட் டோளே யாயே; யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க! எனவேட் டேமே!

தலைவியை விட்டு பரத்தையரை நாடியிருந்த தலைவன் திரும்புகிறான். தலைவியின் ஊடலை தோழி சொல்வதாக வரும் பாடல் இது. இதில் காஞ்சி மலர்களும், மீன்களையும் உடைய ஊரன் என்று பூவையும் புலாலையும் ஒன்றாக கூறியது, குலமகளையும் பொதுமகளையும் குறிக்கும் குறியீடு.

கானமுயலெய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது. (குறள்.772)

கானமுயலெய்த அம்பு, யானை எய்து பிழைத்த வேல் இரண்டுமே இங்கு குறியீடுகள்தான்.

நமக்கு நன்கு அறிமுகமான பாரதியின் கவிதை ஒன்று

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

இதில் அக்கினி குஞ்சு என்பதை புரட்சிக்கான வித்து, ஆன்மிக சிந்தனை என எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். இப்படி தொடர்ச்சியாக வந்த பிரமிள், ஆத்மாநாம், பசுவையா என பலரது கவிதைகளில் குறியீடுகள் எப்படி விரிவான அர்த்தங்களைக் கொடுக்கின்றன என்று கொஞ்சம் தேடி வாசித்தாலே புரிந்துவிடும். கருணாகரன் தன்னிடம் ஏற்படுத்திக்கொள்ளும் போலி உணர்வுகளை வாக்கியங்களை உடைத்துப்போடுவதன் வழி கவிதையென நிரூபிக்க முயல்கிறார். அதில்

  • சிறுமி தன் அப்பாவினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறாள்.
  • ஒரு இளம் பெண்ணுக்கு இரு காதல்கள்.
  • மலேசியா வளர்ச்சியடைந்துவிட்டது குப்புசாமி போன்ற தமிழர்கள் ஏழ்மையில் வாடுகிறார்கள்.
  • தமிழ்ப்பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கின்றன; அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தனத்தால்.
  • விமானநிலையத்தில் தமிழர்கள் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறார்கள்.

35988487_2053851221541259_7426122381770358784_nபோன்ற கோஷங்கள் உள்ளனவே தவிர கவிதை என எதுவும் இல்லை. கருணாகரன் இக்கருத்துகளை உரத்துச் சொல்வதில் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை. இவை தேய்வழக்கான புலம்பல்கள் என்பது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியை கவிதையில் விமர்சித்துவிட்டு ஏன் உங்கள் தொகுப்பிற்கு வாழ்த்துரையை அரசியல்வாதியிடம் பெற்றுள்ளீர்கள்? ஏன் அரசியல்வாதியை வைத்து இந்தத் தொகுப்பை வெளியிட்டீர்கள் என்றெல்லாம் கேட்டு சங்கடமாக்கப்போவதில்லை. காரணம் இவையெல்லாம் போலி உணர்ச்சியின் வெளிப்பாடு என நான் முன்பே கூறிவிட்டேன். என் அடிப்படையான கேள்வி இந்தக் கருத்துகளை இன்னும் விரிவாக வாக்கியங்களாக்கி கட்டுரைகளாகச் சொல்ல முடியும்போது ஏன் கவிதை எனும் வடிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? கவிதையின் பணி இப்படி கருத்துத்துணுக்கைச் சொல்லிவிட்டு செல்வதல்ல. தர்க்கத்தை மீறிய தீர்மானமற்ற அனுபவத்தை வழங்காதபோது எப்படி அவற்றைக் கவிதையாக ஏற்க முடியும்?

அப்படியானால் இதுவரை எழுதப்பட்ட நல்ல கவிதைகளில் கருத்துகள் இல்லையா? என்றொரு கேள்வி எழும்.

ஒரு நல்ல கவிதையில் உள்ளது அனுபவத்தின் தருணம். சாதாரணமாகச் சொல்லிவிட முடியாத ஒன்றை உணர்த்துதல் மூலம் சொல்லிவிடுவதற்கான ஒரு முயற்சி கவிதையில் நடக்கிறது. அந்த அனுபவத்தை வாசிப்பவர் கருத்துகளாக மாற்றிக்கொள்வார். கவிஞர் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை; மாறாக வாசகன் அதை அடைகிறான். ஆனால் அந்த கருத்து அந்த வாசகனுக்கானது. கவிதை அதைக்கடந்து வெகு தொலைவில் உள்ளது.

ஆத்மாநாமின்

கடவுளை கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி.

என்ற கவிதையை சில இடங்களில் சொல்லி நான் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

“ஏதாச்சும் கேட்டிருக்கலாமே…”, “அவரு கனவு கண்டதை சொல்லுறாரா?”, “கடவுள பாத்தாலே போதுமுல்ல” இப்படி பலவிதமான கருத்துத் தொகுப்புகள் வரும். இந்தக் கவிதை கொண்டுள்ள குறியீட்டின் வழியாக கிடைக்கும் அனுபவத்தை விளக்குதல் என்பது சிக்கலானது. காரணம் அனுபவம் அரூபமானது. நமது கல்விக்கூடங்களில் திருக்குறள் தொடங்கி பாரதியார் கவிதைகள் வரை கருத்துகள் உள்ளவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து போதிப்பதுண்டு. அவை குழந்தைகளுக்கானவை. அதை மட்டுமே வாசித்து அவர்களின் கவிதை உலகை புரிந்துகொள்வதென்பது அபத்தமானது.

இந்தத் தொகுப்பில் உள்ள கருணாகரனின் வரிகள் பலவும் இவ்வாறு சம்பவத்தைச் சொல்ல விளைபவை மட்டுமே. சம்பவத்தின் வழி கவிதையில் நிகழக்கூடிய பிரிதொன்றை அவரால் அடைய முடியவில்லை. அதற்குக் காரணம் அரூபமான எதையுமே படிமமாக்கும் கலைத்திறன் அவருக்குக் கைக்கூடவில்லை.

படிமம் என்பதற்கும் விளக்கம் சொல்லிவிடுதல் நலம். இது Image என்ற ஆங்கிலச்சொல்லின் தமிழாக்கம். தொடக்கத்தில் உருக்காட்சி என அழைக்கப்பட்டதும் உண்டு. சொற்களால் உணர்வுச்சித்திரத்தை அழிக்க முடிவது படிமம். அது கவிதையின் அலங்காரப்பொருளன்று. ஒரு கவிதையின் மூலமே அதை விளக்கலாம். நான் ஒரு சில கட்டுரைகளில் குறிப்பிட்ட நகுலனின் கவிதை இப்படி ஒலிக்கும்:

ராமச்சந்திரனா

என்று கேட்டேன்

ராமச்சந்திரன்

என்றார்

எந்த ராமச்சந்திரன்

என்று நான் கேட்கவுமில்லை

அவர் சொல்லவுமில்லை

இன்னொரு மனிதனிடம் இல்லாமல்போன நெருக்கம். மீண்டும் பெயர் மட்டும் நினைவிடுக்கில் தோன்ற, எளிய அறிமுகத்துடன் நிறைவுகொள்கிறது. அந்த அறிமுகத்துப்பின் மீண்டும் நெருக்கமாக விடாத வாழ்வின் கசகசப்பு. அவசரம். அதற்கு மேல் முகமன் தேவையில்லை. ஏற்கனவே அறிமுகமானவர்தான். பெயர்கூட தெரியும் ஆனால் அதற்குமேல் தெரிந்துகொள்ள வேண்டாம். எங்கோ மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும். இந்த மனிதர்கள் அந்நியப்பட்டு நிற்கும் உணர்வை இக்கவிதை மொத்தமுமே படிமமாகக் கொண்டுள்ளது.

தேவதச்சனின் ஒரு கவிதை

இந்த நீலநிற பலூன்

இந்த நீலநிற பலூன் மலரினும்

மெலிதாக இருக்கிறது. எனினும்

யாராவது பூமியை விட கனமானது

எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.

நீங்களாவது கூறுங்களேன், இந்த

நாற்பது வயதில் ஒரு பலூனை

எப்படி கையில் வைத்திருப்பது என்று…

பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது

காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது

பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.

எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்

பார்த்து விடுகிறார்கள்.

அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று

என்னை உரசியபடி வருகிறது. நான்

கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.

கவிதை முழுக்கவே ஒரு காட்சிதான். ஆனால் அந்தக் காட்சி வேறொரு அனுபவமாக நம் மனதில் நுழைகிறது. அதுதான் படிமத்தின் தன்மை. கவிதையை வாசித்து முடித்தப்பிறகு அதில் இருக்கும் எந்த பாத்திரமும் தனித்தனியாக நினைவில் இருக்காது. அவை ஒன்றாக இணைத்து அருவமான ஒன்றை விளக்க முற்படுகிறது. அதை அடைபவனே கவிதை வாசகன்.

கருணாகரன் உருவாக்கும் காட்சிகள் இவ்வாறு உள்ளன:

ஒரு துளி கருணை

நொறுங்கியக் காருக்குள்

உயிர் பிதுங்கி

கிடந்தவளின்

பெண்மை விலக

வக்கிரத்தில்

எக்கி எக்கி

களித்திருந்த கூட்டத்தில்

“டேய் நீங்க எல்லாம்

அக்கா தங்கச்சிங்களோட

பொறக்கலையாடா?”

சட்டை கழற்றி

பெண்மை மறைத்து

அனைத்து தூக்கியவனை

பார்த்தவளின்

விழிகளில்

நிறைந்திருந்தது

நன்றி.

விபத்து நடந்த காரில் உடை களைந்த பெண்ணின் மேல் தன் உடையை கிழித்துப்போடும் ஒரு காட்சி. நாம் எம்.ஜி.ஆர் படம் தொடங்கி அப்படியே ராமராஜனிடம் வந்து இன்று விஜய் வரை தொடர்வதை இப்படி உடைத்து உடைத்து எழுதி கருணாகரன் கவிதை என்பார். நாம் நம்ப வேண்டும் இல்லையா?

கருணாகரனிடம் உள்ள அடிப்படையான சிக்கலே கவிதையை அறியவும் அதன் ஆழம் செல்லவும் போதுமான பயிற்சி இல்லை என்பதுதான். எனக்குத் தெரிந்து இந்தப் பயிற்சி இல்லாதவர்களால் சிற்பங்களையும் ஓவியங்களையும் கூட ரசிக்க முடியாது. ஒரு நாவலைக்கூட அணுகி அறிய முடியாது. ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் குறித்து அவர் முன்தினம் எழுதிய பதிவில் ‘மலேசியாவின் (அன்றைய மலாயாவின்) இரண்டாம் உலகப் போரின் தரவுகளைக் கொண்டு மலேசிய வாழ்வியலை சொன்னவர்.’ என்ற வரியைப் படித்து கொஞ்ச நேரம் ஸ்தம்பித்துப்போனேன். மலேசியாவில் இப்படி நிறைய பேர் உண்டு. எதையும் வாசிக்காமல் எது முக்கியமென அறிந்துகொண்டு அந்த நூல்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். புயலிலே ஒரு தோணியை வாசித்த யாருமே இந்த விளக்கத்தைப் படித்ததும் கடும் மன உளைச்சல் அடையக்கூடும்.

இந்த விமர்சனம் கருணாகரனுக்கு மட்டுமானதல்ல. அதனால் இலக்கியச் சூழலுக்கு எந்தப் பயனும் இல்லை.  கருணாகரனின் இலக்கியத் தரத்தை சோதிப்பதால் எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் கவிதைகள் குறித்து எவ்வித உரையாடலும் உருவாகாத இந்நிலத்தில் அது குறித்து தெளிவு இல்லாத இளம் தலைமுறைகளை இன்னமும் போலியான கூச்சல்களால் ஏமாற்ற வேண்டாம்.

சுந்தர ராமசாமி சொன்னதை எப்போதும் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன். ‘நான் உருவாக்கும் விமர்சனக் கருத்துகள் என்னுடைய நடுத்தரமான படைப்புகளின் ஆயுளைக் கூட்டுவதற்காக உருவாக்கப்படுபவை அல்ல’

‘கணங்களின் சந்திப்பு; என்ற இந்தத் தொகுப்பில் உள்ளவை கருணாகரன் எழுதியுள்ள முழுமையற்ற வாக்கியங்கள். அவற்றை முழுமையாக்கினால் இதை ஒரு சமூகக்கட்டுரை தொகுப்பு என ஏற்றுக்கொள்ள எந்தச் சிக்கலும் இல்லை.

(Visited 742 times, 1 visits today)